மனதில் உறுதி வேண்டும்! (ஆன்மிகம்) -ஜன., 23 – பீஷ்மாஷ்டமி!

வாழ்வில் வெற்றி பெற மனிதனுக்கு மனஉறுதி வேண்டும். இதற்கு, உதாரண புருஷனாகத் திகழ்ந்தவர் பீஷ்மர். இவரது மறைவு தினத்தை பீஷ்மாஷ்டமி என்ற பெயரில் அனுஷ்டிக்கின்றனர். இது ஒரு முக்கிய தினம். பொதுவாக, தாய், தந்தையை இழந்தவர்கள் தான், அவர்கள் இறந்த திதியன்று தர்ப்பணம் செய்வது வழக்கம்; ஆனால், பீஷ்மர் மறைந்த நாளில், அனைவருமே அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது விதி. காரணம், அவர் பெற்ற தந்தையின் சுகத்துக்காக, தன் சுகங்களை அர்ப்பணித்தவர். தந்தைக்காக திருமணம் செய்யாமல் காலம் கழித்தவர். அந்த பிதாமகருக்கு பிள்ளைகளாக இருந்து தர்ப்பணம் செய்வது நமது கடமை.
கங்காதேவியை விரும்பி திருமணம் செய்தான் சந்தனு என்னும் மன்னன். திருமணத்தின் போது, “நான் என்ன செய்தாலும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது; அந்த மனதிடம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்!’ என நிபந்தனை விதித்தாள் கங்காதேவி. கங்காதேவியின் அழகில் லயித்த சந்தனுவும் இதற்கு சம்மதித்தான். பெற்ற குழந்தையை ஆற்றில் வீசினாள் கங்காதேவி. சந்தனுவுக்கோ, நிபந்தனையால் அவளைத் தட்டிக் கேட்க முடியவில்லை.
எட்டாவது பிள்ளையை அவள் ஆற்றில் எறிய முயன்ற போது, அவளைத் தட்டிக் கேட்டான். நிபந்தனையை மீறியதால், குழந்தையுடன் வெளியேறினாள் கங்காதேவி. தான் எறிந்த குழந்தைகள் தேவலோகத்தைச் சேர்ந்தவை என்றும், ஒரு சாபத்தால் அவர்கள் தன் வயிற்றில் பிறந்து, பிறவியை உடனே முடித்துக்கொண்டனர் என்றும் கூறிய அவள், எட்டாவது குழந்தையை தன் பொறுப்பிலேயே வளர்த்து, வாலிபனானதும் சந்தனுவிடம் ஒப்படைப்பதாகக் கூறி தண்ணீரில் மறைந்தாள். அந்தக்குழந்தை, தேவவிரதன் எனப்பட்டான்.
வாலிபனானதும் தந்தையிடம் திரும்பினான். வயதாகி விட்டாலும், சந்தனுவுக்கு இளமை வேகம் குறையவில்லை. அவன் யோஜனகந்தி என்ற பெண்ணை விரும்பினான். பெண்ணின் தந்தையோ, தன் மகளுக்கு பிறக்கும் குழந்தைக்கே பட்டம் சூட்ட வேண்டுமென்றும், தேவவிரதனுக்கு பட்டம் சூட்டக் கூடாதென்றும் நிபந்தனை விதித்தான்.

ஒருவேளை, தேவவிரதனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை பதவிக்கு முயற்சிக்கலாம் என்ற பேச்சு எழுந்த போது, தன் தந்தைக்காக திருமணமே செய்ய மாட்டேன் என்றும், யோஜனகந்திக்கு பிறக்கும் மகனே அரசன் ஆவான் என்றும் உறுதியளித்தான். தன் தந்தையின் சுகமே தன் சுகம் என்று, வயதான காலத்திலும் காதல் கொண்ட தந்தைக்காக தன் சுகங்களைத் தியாகம் செய்தான். இப்படிப்பட்ட தியாக உள்ளம் கொண்ட பிள்ளையின் மீது தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்; “பீஷ்மன்’ என்ற பட்டத்தை வழங்கினர். பீஷ்மன் என்றால், மனஉறுதி கொண்டவன் எனப்பொருள். அவர் நினைத்தால் மட்டுமே மரணம் வரும் என்ற வரத்தையும் கொடுத்தனர்.
இந்த தியாகச் செம்மல், பாரதப்போரில் கவுரவர்களுக்காக போரிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முடிவில், அர்ஜுனனின் பாணத்துக்கு அடிபட்டு அவர் மரணப்படுக்கையில் இருந்தார். மனிதனாகப் பிறந்தவன் மரணமடைய வேண்டும் என்ற நியதிக்கு கட்டுப்பட்டு, வடக்கு நோக்கி சூரியன் பயணத்தைத் துவங்கும் தை மாதத்தில் உயிர்விட தீர்மானித்தார். தை மாதம் வளர்பிறை அஷ்டமி திதியன்று மறைந்தார் என்பதால், பிள்ளையற்ற இவருக்கு, பிள்ளைகளாக இருந்து நாமெல்லாம் அந்நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், பாபநாசம் போன்ற தீர்த்தக்கரைகளுக்குச் சென்று அனைவரும் தர்ப்பணம் செய்து, அந்த பிதாமகரின் தியாக உள்ளம் நமக்கும் வர பிரார்த்திப்போம்.

2 responses

  1. nanri, arya(vendiya) thagaval.

  2. nanri, arya(vediya) thagaval.

%d bloggers like this: