சூர்ய சக்தி -ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

குழந்தைகளுக்குத் தாய் ஸ்தன்யபானம் பண்ணுவிக்கிற மாதிரி லோகமாதா அத்தனை ஜீவராசிகளுக்கும், தாவரங்களுக்குங்கூட சூர்ய சந்திரர்களின் கிரண தாரைகளால் பாலூட்டுகிறாள். தாவரங்களுக்கும் ஜீவன் உண்டு. ஜகதீஷ் சந்திரபோஸ் இந்த (சென்ற) நூற்றாண்டு ஆரம்பத்தில் இதை ஸபன்ஸ்படி நிரூபித்துக் காட்டுவதற்கு ரொம்ப முன்னால், வேத காலத்திலிருந்தே தாவஙர்களுக்கு உயிரும் உணர்ச்சியும் உண்டு என்பதை நமக்குத் தெரியும்.
சூர்ய சந்திரர்களின் பிரகாசத்தால் உணவூட்டுகிறாள்; உயிரூட்டுகிறாள் என்றால் என்ன அர்த்தம்? தாவரங்கள் நேராகத் தாங்களே. ஜீவ சத்தை சூர்யனிடமிருந்து பெறுகின்றன. அதோடு நிற்காமல் பரோபகாரமாக இப்படி நேரே சூர்யனிடமிருந்து ஜீவ சத்தைப் பெற முடியாத நமக்காகவும் தாவரங்களே நாம் அடுப்பு முட்டிச் சமைக்கிற மாதிரி சூர்ய உஷ்ணத்தில் அந்த சூர்ய சக்தியையே நமக்கு ஜீர்ணமாகிற மாதிரி ரூபத்தில் சேமித்து வைத்துக் கொள்கின்றன.
சூர்ய சக்தியாலேயே biosphere என்கிறதாக இந்த லோகம், ஜீவ லோகமாக இருக்கிறது. சூர்யனுடைய வெளிச்சத்திலே ஓயாமல் ரீலீஸாகிக் கொண்டேயிருக்கும் சக்தி ஸகல அணுக்களுக்குள்ளேயும் வியாபித்தும், தாவர வர்க்கத்தில் மேலே சொன்னாற்போல ஃபோட்டோஸிந்தஸிஸ் உண்டாக்கியுந்தான் ஜீவ ப்ரபஞ்சத்தை நடத்துகிறது என்று இப்போது ஸயன்ஸில் சொல்வதை எத்தனையோ யுகம் முந்தியே நம்முடைய வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. தாவரம் மாதிரியே நாமும் நேரே அந்த சக்தியைப் பெறுகிறதற்குத்தான் காயத்ரி முதலான மந்த்ரங்களைக் கொடுத்திருக்கிறது. பல படி மேலே போய் தேஹ சக்தியோடு நிறுத்திக் கொள்ளாமல் புத்தி சக்தி, பரமார்த்திகமான ஸாதண சக்தி ஆகியவற்றையும் அவனிடமிருந்து க்ரஹித்துக் கொள்வதற்கு காயத்ரியைக் கொடுத்திருக்கிறது. அங்கே ஸவிதா, ஸாவித்ரி என்று நம்மைப் பெற்றெடுத்து வாழ்வு தருகிற ப்ரியமான தாயாகவே சூர்ய சக்தியைச் சொல்லியிருக்கிறது. இந்த சக்தியும் ஆதிசக்தியான பராசக்தி என்ற மூலமான தாயாரின் அங்கந்தான் – பாலூட்டும் அங்கந்தான் – என்கிறார் ஆசார்யாள்.
– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

%d bloggers like this: