Daily Archives: ஜனவரி 21st, 2010

புகைத்தால் பார்வை பறிபோகும்

புகைத்தால் புற்றுநோய் மட்டுமல்ல பார்வையும் பறி போகிறதாம். சமீபத்திய ஆய்வின் எச்சரிக்கை இது.

தீய பழக் கங்கள் தீயைப்போல வேகமாகப் பரவுகின்றன. முலை முடுக்குகளிளெல்லாம் சிகரெட், பாக்கு வகைகள் விற்கும் பெட்டிக்கடை காட்சி அளிக்கின்றன. புகைப்பதால் ஏற்படும் தீமைகளும் நாம் அறியாதவைகள் இல்லை. இருந்தும் பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

புகைக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பின்னாளில் பார்வையும் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது புதிய ஆய்வு.

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக குழுவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 2 ஆயிரம் முதாட்டிகளை ஆய்வு செய்தனர். (அங்கு ஆண் பெண் பேதமில்லாமல் புகைப்பழக்கம் உண்டு) இவர்கள் 78 முதல் 83 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஆய்வு முடிவில் புகைப்பழக்கம் உடையவர்களுக்கு வயதான பிறகு பார்வை இழக்கும் ஆபத்து உயர்ந்திருந்தது தெளிவானது. இவர்கள் ஏ.எம்.டி. என்ற பார்வைக்கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஏ.எம்.டி. என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடாகும். மாக்யுலா எனப்படும் பார்வை செல்கள் மீண்டும் உற்பத்தி ஆவது 70 வயதுக்கு மேல் குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதில் புகைப்பழக்கம் உடையவர் களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.

ஆய்வின்படி புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட புகைப்பவர்களில் 11 சதவீதம் பேர் ஏ.எம்.டி. பாதிப்பால் பார்வை இழக்கிறார்கள்.

புகைப்பழக்கம் இருப்பவர்கள் 70 முதல் 80 வயதை கடக்கும்போது மற்றவர்களைவிட 5 மடங்கு வேகமாக ஏ.எம்.டி. பாதிப்புகள் ஏற்படுகிறது.

இத்தகைய கொடிய துன்பத்தைத் தரும் பழக்கத்தை ஆரம்பத்திலே கிள்ளி எறிவதுதான் சிறந்தது என்று டாக்டர்கள் மீண்டும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம்

* வங்கதேச நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதையடுத்து ஷேக் ஹசீனா தலைமை யிலான புதிய அரசு பதவியேற்றுக் கொண்டது.

* கடலோரக் காவலை வலுப்படுத்த 8 விமானங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீ பத்தில் கையெழுத்தானது.

* தரையிலிருந்து ஏவப்பட்டு தரை இலக் கைத் தாக்கும் பழமையான ஆர்.எஸ்.-18 ரக ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக சோதனை செய்தது. 105 டன் எடையும், 80 அடி உயரமும் கொண்ட இந்த ஏவுகணை சுமார் 9 ஆயிரத்து 600 கி.மீ. தொலை விலுள்ள இலக்கைத் தாக்க வல்லது

* இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு களால் இதுவரை 30 தீவுகள் மறைந்து விட்டன. தீவுகளின் கூட்டம் என்றழைக்கப் படும் இந்தோனேசிய நாட்டில் மொத்தம் 17,504 தீவுகள் இருந்தன. அந்நாட்டில் அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் இயற்கை சீற்றங்களினால் தற்போது 17,480 தீவுகள் மட்டுமே உள்ளன.

* சனிக்கிரகத்தைச் சுற்றிலும் வளையங்கள் இருக்கின்றன. அதேபோல சந்திரன்களில் ஒன்றான ரியாவுக்கும் அதைச் சுற்றிலும் வளையங்கள் உள்ளன. இதை நாசாவின் காசினி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. ரியா சனிக்கிரகத்தின் 2-—வது பெரிய சந்திரன் ஆகும்.

* உலகின் மிகச்சிறந்த நகரம் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் என நடத்தப் பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் சிறந்த நகரங்களை கண்டறிய மோனோகிள் என்ற பத்திரிகை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

* வடகொரியா போதிய முன்அறிவிப்பு ஏதும் இன்றி நீண்ட தொலைவு பறந்து சென்று தாக்கும் ஏவுகணையை சோதித்துப் பார்த்தது. “டாபோடாங்-2′ என்ற அந்த ஏவுகணை 7,000 கிலோ மீட்டர் தொலைவு வரை செல்ல வல்லது.

* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்த இந்தியா உட்பட 20 பெரிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற ஜி-20 மாநாடு நடை பெற்றது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை மற்றும் நெருக்கடி குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

* ஜப்பான் இயற்கை சீற்றங்களையும், போக்கு வரத்து நெரிசல்களையும் கண்காணிப்பதற் காக 100 மினி சாட்டிலைட்டுகளை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த சாட்டிலைட்டுகள் ஒவ்வொன்றும் 20 அங்குலம்தான் இருக்கும்.

* இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் பூக் களின் நறுமணம் குறைந்து வருவது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. இதில் காற்று மாசுபடுவதனாலேயே பூக்களின் நறுமணம் குறைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

* குவைத் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முறையாக 4 பெண்கள் வெற்றி பெற் றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் நடந்த 3-வது நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.

* ரஷ்யாவில் உள்ள யெக்டரின்பர்க் நகரில் ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நடத்திய உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் மன் மோகன் சிங் கலந்து கொண்டார். இந்த அமைப்பின் மாநாட்டில் இந்திய பிரதமர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

* இத்தாலியில் உள்ள அக்யூலா நகரில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர் கள் பங்கேற்ற ஜி-5 உச்சி மாநாடு நடந்தது. இதில் சர்வதேச அளவில் நிதி நிர்வாகத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜி-5 மாநாட் டில் முடிவு செய்யப்பட்டது.

* தைவான் நாட்டை “மொராக்கட்’ என்னும் கடும் சூறாவளி புயல் தாக்கியது. மணிக்கு 270 கிலோமீட்டர் வீசிய புயல் காற்று மற்றும் அதைத் தொடர்ந்து கொட்டிய பேய் மழையினால் தைவான் நாடே பேரழிவை சந்தித்தது. வெள்ளத்திலும், நிலச் சரிவிலும் சிக்கி 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

* ரஷ்யா எதிரிகளின் ஏவுகணைகளை நடு வானிலேயே தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 13 மீட்டர் நீளமுள்ள இந்த ஏவுகணை கண்டத்துக்குள் 7000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்கை தாக்க வல்லதும், நடுவானிலேயே எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்க வல்லதுமாகும்.

* ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் துபாய் நகரில் உலகின் மிகப்பெரிய ஏரி அமைக்கப் பட்டு வருகிறது. இது 40 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படுகிறது. இதில் மூன்று ஏரிகள் இருக்கும். ஒவ்வொன்றின் கொள்ளளவும் தலா ஆறு கோடி கேலன் ஆகும்.

* இலங்கையில் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் பத்திரிகையாளர் ஜெ.எஸ்.திசைநாயகத்துக்கு அமெரிக்கா வில் செயல்படும் 2 பன்னாட்டு அமைப்பு கள் விருது வழங்குவதாக அறிவித்துள்ளன.

* பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியை கில்ஜித் பல்திஸ்தான் என்ற பெயரில் புதிய மாகாணமாக அறிவித் துள்ளது பாகிஸ்தான். இதன்படி கில்ஜித் பல்திஸ்தான் என்று பெயரிடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தனியான உள்நாட்டு சுயாட்சி அதிகாரம் வழங்கப் படும்.

* இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, லண்டன் நகரில் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ்வை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர் கள் கூட்டு அறிக்கை வெளியிட்டனர். இதில் அணு ஆயுதங்களை குறைத்துக் கொள்வ தாக இருநாட்டு தலைவர்களும் அறி வித்தனர்.

* நேபாளத்தில் அரசியல் நெருக்கடி ஏற் பட்டது. இதனால் பிரதமர் பிரசண்டா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் உலகம் முழுவதிலிருந்தும் அமைச்சர்கள், விஞ்ஞானிகள், பத்திரிகை யாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

* மாலத்தீவில் கடலுக்கடியில் அமைச் சரவைக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர வைக்கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப் படுவது உலகிலேயே இதுவே முதல்முறை யாகும். புவியின் வெப்பநிலை அதிகரித்து வருவதை உணர்த்தும் வகையில் இக் கூட்டம் கடலுக்கடியில் நடத்தப்பட்டது.

* நானோ தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவதுறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன. இதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும். முடிவில் மரணமே ஏற்படாமல் தடுக்கமுடியுமென பிரிட்டன் விஞ்ஞானி கள் தெரிவித்துள்ளனர்.

* யுனெஸ்கோவின் உலக மொழிகள் பற்றிய ஆய்வு வெளியிடப்பட்டது. உலக அளவில் 2000 மொழிகள் அபாய கட்டத்தில் இருப்ப தாகவும், இந்தியாவில் மட்டும் 196 மொழிகள் அழியும் நிலையில் உள்ளதாக தெரி வித்துள்ளது.

* டென்மார்க் தலைநகர் கோபன் ஹேகனில் 15-வது பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 192 நாடு களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.வளரும் நாடுகளுக்கு நிதியுதவி கொடுப் பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை கண்டித்து கோபன்ஹேகன் மாநாட்டில் இருந்து மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென்ஜியா போவும் தங்கள் குழுவுடன் வெளிநடப்பு செய்தனர். இத னால் மாநாட்டில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.

* மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, பாக்கெட் கடிகாரம், தட்டு, குவளை, செருப்பு ஆகிய பொருட்கள் அமெரிக்காவில் உள்ள ஜேம்ஸ் ஓடிஸ் என்பவரிடம் இருந்தது. அவற்றை நியூ யார்க்கில் உள்ள ஆன்டிகுவாரம் ஆக் சனர்ஸ் நிறுவனம் ஏலம் விட்டது. ஏலத்தில் இந்திய தொழிலதிபர் சார்பில் கலந்து கொண்ட டோனி பேடி ரூ.9.3 கோடிக்கு ஏலம் எடுத்தார்.

* இலங்கை அரசு போர்க் குற்றங்கள் புரிந்த நாடு என அனைத்துலக குற்ற நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது. எனினும் ஐ.நா பாதுகாப்புச் சபை, இதுவரை இலங்கை மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யவில்லை.

பதப்படுத்திய உணவு விற்பனை வீழ்ச்சி!

கடந்த ஆண்டில், பதப்படுத்திய உணவுகளின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

`சிப்ஸ்’, `சாஸ்’, `நூடுல்ஸ்’, `சூப்’ பொடி, `ஜாம்’ போன்றவற்றில் விற்பனை குறிப்பிட்ட காலகட்டத்தில் குறைந்துள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான `ஐஎம்ஆர்பி’ இதைத் தெரிவித்துள்ளது.

காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் வாங்கும் திறனை அவை தடுத்ததால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம் என்பது நிபுணர்களின் கருத்து.

நாடு முழுவதும் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் மட்டுமே தற்போது கவனம் செலுத்துகின்றனர், பதப்படுத்திய உணவு போன்ற `எக்ஸ்ட்ரா’ உணவு வகைகளுக்குச் செலவழிப்பதை அவர்கள் குறைத்துக் கொண்டுள்ளனர் என்று ஐஎம்ஆர்பி நிறுவனம் தெரிவிக்கிறது.

பதப்படுத்திய பிரதான உணவுகளின் நுகர்வு 23 சதவீதம் குறைந்துள்ளது. `பாஸ்தா’ 9, `சாஸ்’ 7, `ஜாம்’ 6, `சூப்’ பொடிகள் 3 சதவீதம் என்ற அளவில் விற்பனை வீழ்ச்சி கண்டுள்ளன. 2009 ஜனவரி முதல் அக்டோபர் வரை 119 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அதேநேரம் 600 கிராமப்புறச் சந்தைகளில் பால் மற்றும் பால் சார்ந்த பானங்கள், உணவுப் பொருட்களின் விற்பனை 13 சதவீதம் குறைந்துள்ளது. வெண்ணை மற்றும் பாலாடைக்கட்டி 9, நூடுல்ஸ் 3 சதவீதம் என்ற அளவில் விற்பனைக் குறைவை அடைந்துள்ளன.

குழந்தைகளுக்கும் நாகரீக உடைகள்

குழந்தைகளுக்கு எந்த நேரத்தில் எப்படி நகைகள், உடைகள் போடனும் என்று நிறைய தாய்மார்களுக்கு தெரிவதில்லை.

திருமண விழக்களில்:

ஏற்ற உடை பட்டுபாவடை தான் அழகு. அந்த நேரங்களில் அவங்களுக்கு கழுத்தை ஓட்டி நெக் செயின்னும், ஒரு சிறிய காசு மாலை அல்லது செயின் போடவும்.

நெற்றிக்கு சின்ன நெத்திச்சுத்தி, கைக்கு , வளையல், கைகளுக்கு மெஹந்தி மேதிரம் செட், இடுப்புக்கு ஓட்டியாணம் போட்டால் ரொம்ப அழகாக இருக்கும்.

எந்த வகை நகையாக இருந்தாலும் ஒரே மாதிரி போடவும். பிளேன் நகைதான் திருமண விழாக்கு அழகாக இருக்கும்.

முடிந்த வரை குழந்தைகளுக்கு தங்க நகை போடாமல் 1கிராம் கோல்டு நகைகளை போடுவது நல்லது.
ரிசப்ஷனுக்கு:

மாலை நேர ரிசப்ஷனுக்கு குழந்தைகளுக்கு கல் நகைகள் அழகாக இருக்கும். அந்த நேரத்தில் அவங்களுக்கு ஏற்ற உடைகள் என்றால் காக்ராசோளி, அனார்கலி, சராரா போன்ற நல்ல ஓர்க் செய்த ஆடைகள் மிகவும் அழகாக இருக்கும். இந்த மாதிரி ஆடைகள் போடும் பொழுது டிரெஸ்க்கு மேட்ச்சாக நகைகள் போடவும். கைகள் நிறைய வளையல் போடவும். பிறந்தநாள் பார்ட்டி

அடிக்கடி போவது இங்கு தான். பார்ட்டிக்கும் போகும் பொழுது சிப்பிளா மார்டனான டிரெஸ் போடவும். அந்த டிரெஸ்க்கு மேட்ச்சாக மெல்லிய செயின், வளையல்,கம்மல் போடலாம். கைகளில் டாட்டூஸ் ஓட்டினால் அழகாக இருக்கும் குறிப்பு: நகைகள் அணிவது பிள்ளையினதும் உங்களினதும் விருப்பம் …….

செவ்வாய் பயணத்தில் கூடுதல் திட்டங்கள்


2012-ல் மனிதர்களின் செவ்வாய் பயணம் தொடங்குகிறது. அங்கு என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்பது பற்றிய விரிவான திட்டங்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

அங்கு கடல் இருக்கிறது. எனவே உயிரினங்களும் வசிக்கலாம் என்பது எதிர்பார்ப்பு. இதற்கேற்ப செவ்வாய்ப் பயணத்தில் மேலும் சில வித்தியாசமான ஆய்வுகளை நடத்தவும் தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக நாசா ஆய்வு மையத்தில் உள்ள செவ்வாய் அறிவியல் ஆய்வகத்தில் (Mars Science Laboratory& MSL) பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு செவ்வாயில் இருந்து சேகரிக்கப்பட்டு வந்த பாறைகள், மணல்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது.

2012ல் அங்கு விண்கலம் இறங்கியதும், விசேஷ ரோபோ உதவியுடன் மணல் பரப்பில் பல இடங்களிலும், பாறைகளை துளையிட்டு சில இடங்களிலும் மொத்தம் 72 விதங்களில் ஆய்வுக்குழாயில் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. அப்போது வெளிப்படும் வாயுக்களையும் சோதிக்கப்பட உள்ளது.

எவ்வாறு முலக்கூறுகள் உருவாகின்றன, அங்கு உயிர்க் காரணிகள் எதுவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும் இந்த ஆய்வு பெரிதும் பயன்படும். உயிர்க் காரணிகளுக்கு கார்பன் ஆதாரமும் மிக அவசியமாகும். ஆனால் வெப்ப அளவுக்கு ஏற்ப கார்பன் இணைப்பு மாறுபடுவதால் அதற்கான சாத்தியக்கூறுகளிலும் வித்தியாசம் இருக்கும் என்பதால் அங்குள்ள சூழல் வெகுவாக கவனிக்கப்படுகிறது.

கடந்த காலத்திலோ அல்லது தற்போதோ உயிரினங்கள் வசிப்பதற்கான தடயங்கள் உறுதி செய்யப்பட்டால், செவ்வாய் நிச்சயமாக மனிதர்கள் வாழ்வதற்கான சிறப்பு கிரகமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

ரத்த ஓட்டத்தை சீராக்கும் தக்காளி


லேசாக காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தாலோ அல்லது உடல் வலிக்கோ, தலைவலிக்கோ `ஆஸ்பிரின்’ மாத்திரை எடுத்துக்கொள்வது பலரது வழக்கம்.

அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் அவற்றில் இருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

ஆனால், இந்த ஆஸ்பிரின் மாத்திரைக்கு பதிலாக தக்காளியை சாப்பிடலாம் என்று ஒரு மருத்துவ ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

தக்காளி விதையில் இயற்கையாக ஜெல் போன்ற திரவம் காணப்படுகிறது.

அந்த திரவமானது ரத்தம் உறைவதை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதும், சீரான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதும் இந்த ஆய்வில் மேலும் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறும்போது, “ரத்த ஓட்டம் சீராகுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சிறிய அளவில் தினசரி ஆஸ்பிரின் மாத்திரையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அது, வயிற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தி அல்சர் ஏற்பட வழிவகுக்கும் தன்மை உடையது. ஆனால் தக்காளி சாப்பிடுவதால் அதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படாது” என்று தெரிவித்தனர்.

சமுதாய தளங்களின் இலக்கு மாறிய 2009

நடந்து முடிந்த 2009 ஆம் ஆண்டு, இணையத்தில் சமுதாய தளங்கள் என்று அழைக்கப்படும் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்திருந்தது. பேஸ்புக் மற்றும் ட்விட்டர் (twitter) போன்ற தளங்களின் அமைப்பிலும், உட்பொருளிலும் பெருத்த மாற்றங்களும் முன்னேற்றமும் ஏற்பட்டன.
அதுவரை என்ன பீட்ஸா சாப்பிட்டேன்; எந்த தேர்வில் பிரச்னை அதிகம் இருந்தது; தீம் பார்க்கில் ஏன் பெண்கள் கூட்டம் அதிகம் போன்ற கதைகள் இல்லாமல், உலகத்தைப் பாதித்த, பாதிக்கின்ற விஷயங்கள், அரசியல் மாற்றங்கள், விமான விபத்துக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவை அதிக இடம் பெற்றன.
பொதுவாக இளைஞர்களும், டீன் ஏஜ் கல்லூரி மாணவர்களும் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்த சோஷியல் தளங்களில் பல அனுபவஸ்தர்களும் எழுதத் தொடங்கினார்கள். இதனால் பழைய தலைமுறை அனுபவ வாதிகளுக்கும், புதிய இளைய தலைமுறைக்கும் இடையே நல்ல ஆரோக்கியமான நட்பு ஏற்பட்டது. ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் அம்மா, அப்பா ஏன் பாட்டி கூட ட்விட்டரிலும், பேஸ்புக்கிலும் இடம் பிடித்து கருத்துக்களைப் பரிமாறத் தொடங்கினர்.
இந்த தளங்களைப் பயன்படுத்தும் இணைய நேயர்களின் எண்ணிக்கை 2009ல் அதிகமாகியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேஸ்புக் தன் 35 ஆவது கோடி பயனாளியை அடையாளம் காட்டியது. ஏப்ரல் மாதத்தில் இந்த தளத்தின் பயனாளர்கள் 1390 கோடி நிமிடங்கள் தளத்தைப் பயன்படுத்தி உள்ளனர். இது சென்ற 2008 ஆம் ஆண்டைக் காட்டிலும் 700 சதவீதம் கூடுதலாகும்.
பேஸ்புக் நேயர்கள் எண்ணிக்கை உயர்ந்தது என்றால், நிச்சயம் வேறு ஒரு தளத்திலிருந்து இங்கு வந்தவர்களா கத்தான் இவர்கள் இருப்பார்கள். இவர்களில் பலர் மை ஸ்பேஸ் (space) தளத்திலிருந்து வந்தனர். சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் முன்னணி தளமாக, முதலில் வந்த சிலவற்றில் ஒன்றாகும் இது. ஆனால் 2009 ஆம் ஆண்டில், இதன் பங்கு 55 சதவிதத்திலிருந்து 30.26 சதவீதம் ஆகக் குறைந்தது.
இந்த ஆண்டில் இந்த இரு தளங்களும் தங்கள் வருமானத்தைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடும் எனத் தெரிகிறது. அதற்கான முயற்சிகளில் பல ஒப்பந்தங்களில் இவை ஈடுபட்டு வருகின்றன.

இலந்தைப் பழத்தின் நன்மை

இலந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி ப¦றும்.
எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு.
உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு.
கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.

டிவி க்களில் ஸ்கைப்

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.
இனி இந்த வகைத் தொடர்பினை, “டிவி’க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக “டிவி’க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த “டி.வி’க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.
இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை “டிவி’க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
வீடியோ அழைப்புகளை இந்த “டிவி’க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை “டிவி’க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன. இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது. ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன.
இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம்.

பருதேசியப்பருக்கு பால் காவடி!


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது கொள்ளிடம். இதன் வடகரையில் அமைந்துள்ள அழகிய கிராமம் – வல்லம்படுகை. இந்த ஊரில்தான் கோயில் கொண்டிருக்கிறார் பருதேசியப்பர்.
சனி பகவானின் பார்வை சிவனார் மீது பட வேண்டிய காலம் அது. ஆனால் சிவபெருமானை நெருங்குவதற்கே அஞ்சினார் சனி பகவான். அதேநேரம் இட்ட பணியை முடிக்க வேண்டுமே.. என்று தவித்து மருகினார்.
நாரதரைக் கேட்டால் வழிகாட்டுவார் என்ற முடிவுடன் அவரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார் சனி பகவான். கவலை வேண்டாம்; திருக்கயிலையில் சிவ சக்தியின் திருமணம் நடைபெற போகிறது. தேவர்கள் திரளாகக் கலந்து கொள்வர். நாமும் கல்யாணத்துக்குப் போவோம். அப்போது நீ சிவபெருமானின் உடலுக்குள் புகுந்து விடு என்றார் நாரதர்.
அதன்படி இருவருமாகச் சேர்ந்து திருமணத்துக்குச் சென்றனர். திருமணம் இனிதே நடந்தேறியது. சிவனாரும் பார்வதியும் அனைவரையும் வாழ்த்தினர். அப்போது புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மாவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார் நாரதர்.
உடனே பார்வதிதேவி பிரம்மாவின் ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொரு திசையில் தீபம் காட்டி நன்றி கூறுகிறோம் என்றாள். அதன்படி நான்கு திசைகளில் சிவனாரும், பார்வதிதேவியும் தீபம் காட்டி பிரம்மாவை வணங்கினர். நான்கு தலைக்கு நான்கு திசைகள் முடிந்தது; ஐந்தாவது தலைக்கு திசையின்றி தவித்தனர்!
அப்போது நாரதர் சைகை காட்டவும் சட்டென்று சிவபெருமானின் உடலில் புகுந்த சனிபகவான் தனது வேலையைத் துவக்கினார்! ஆத்திரத்துடன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்தார் சிவபெருமான். இதில் கோபம் கொண்ட பிரம்மன் உமது கையில் உள்ள என் தலை திருவோடாகட்டும்; பித்தனாக, பேயனாக சித்தம் கலங்கி பூலோகத்தில் பிச்சை எடுப்பாய்! என்று சாபமிட்டார். அதன்படி பரதேசிக் கோலத்தில் கையில் திருவோட்டுடன் பூலோகத்துக்கு வந்தார் ஈசன்.
ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுத்தார். அப்படிச் செல்லும் இடங்களிலெல்லாம் அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தினார். அப்படியே கொள்ளிடக் கரையில் இருக்கும் வல்லம்படுகை கிராமத்துக்கு வந்தார்.
ஊர் அடங்கிய வேளையில் பரதேசி கோலத்தில் வந்த சிவனாரை, ஊரின் காவல்காரரான பாவடைராயனுக்கு அடையாளம் தெரியவில்லை! சந்தேகக் கண் கொண்டு பார்த்தவர், சிவபெருமானை விலங்கிட்டு சிறையில் அடைத்தார். விடிந்ததும் விசாரித்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பி சென்றார் பாவாடைராயன்.
விடிந்ததும் வந்து பார்த்த பாவாடைராயனுக்கு சுயரூபத்தைக் காட்டினார் சிவபெருமான். நடுநடுங்கிப் போன பாவாடைராமன், ஐயனே! உங்களையா சிறை வைத்தேன் என்று பதறினார்.
என்னை மன்னியுங்கள். உங்களுக்கு அடியவனாக இருந்து பணிவிடை செய்ய விரும்புகிறேன். ஆகவே உங்களது சாபம் நிவர்த்தியாகும் வரை, இங்கேயே இருங்கள் ஸ்வாமி என்று கெஞ்சினார். சிவனாரும் சம்மதித்தார். பரதேசியப்பராக வல்லம்படுகை எல்லையிலேயே தங்கினார். இவரே பின்னாளில் பருதேசியப்பர் எனப்பட்டார். இவருக்குக் காவலாக, கீழ்ப்புறத்தில் பாவாடைராயனும் அங்கேயே ஐக்கியமானார்!
கோயிலின் கருவறையில் பரதேசிக் கோலத்தில் காட்சி தருகிறார் பருதேசியப்பர். கருவறை மண்டபத்துக்கு வெளியே வலப்பக்கம் வெற்றி விநாயகர், இடப்புறம் முருகன், கோயிலுக்கு வெளியே கிழக்குப் பகுதியில் முத்தாலம்மனும் மேற்கில் பேச்சியம்மன் மற்றும் முனீஸ்வரனும் உள்ளனர். ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள கொட்டகையில் முத்துநாச்சி, அரியநாச்சி சகிதமாக அமர்ந்திருக்கிறார் பாவாடைராயன். பருதேசியப்பர் சைவக் கடவுள்; ஆகவே பலியிடுவது எல்லாம் பாவாடைராயனுக்குத்தான்!
குழந்தையின்மை, திருமணத்தடை, கடன் தொல்லை முதலான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தீர்த்து வைப்பாராம் பருதேசியப்பர். பிள்ளைவரம் வேண்டுவோர் பருதேசியப்பர் சந்நிதிக்கு வந்து அம்மிக் குழவியை வைத்து பூப்போட்டு பூஜை செய்கின்றனர். பிறகு அந்தக் குழவியை குழந்தையாக பாவித்து மடியில் ஏந்தியவாறு தம்பதி சமேதராக கோயிலை மூன்றுமுறை வலம் வந்து வணங்குவதுடன் சாமிக்கு முன்னே அம்மியை வைத்துச் செல்கிறார்கள். இதனால் வெகு விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்குமாம்.
வருடந்தோறும் வைகாசி விசாகத்தையொட்டி 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் 9ஆம் நாளன்று விசாகம். அன்று, பருதேசியப்பருக்கும் பாவாடைராயனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 10ஆம் நாளன்று கொள்ளிடக் கரையில் இருந்து அலகு குத்தியும் பால்காவடி எடுத்தும் பருதேசியப்பரை தரிசிக்க ஊர்வலமாக வருவர். இதையடுத்து பருதேசியப்பருக்கு அபிஷேகங்கள் விமரிசையாக நடைபெறும்.
11ஆம் நாள் மஞ்சு விரட்டு, 12ஆம் நாளன்று பாவாடைராயனுக்கு கிடா வெட்டி பூஜைகள் நடைபெறுவதுடன் விழாவும் நிறைவடையும்.