பருதேசியப்பருக்கு பால் காவடி!


கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது கொள்ளிடம். இதன் வடகரையில் அமைந்துள்ள அழகிய கிராமம் – வல்லம்படுகை. இந்த ஊரில்தான் கோயில் கொண்டிருக்கிறார் பருதேசியப்பர்.
சனி பகவானின் பார்வை சிவனார் மீது பட வேண்டிய காலம் அது. ஆனால் சிவபெருமானை நெருங்குவதற்கே அஞ்சினார் சனி பகவான். அதேநேரம் இட்ட பணியை முடிக்க வேண்டுமே.. என்று தவித்து மருகினார்.
நாரதரைக் கேட்டால் வழிகாட்டுவார் என்ற முடிவுடன் அவரைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னார் சனி பகவான். கவலை வேண்டாம்; திருக்கயிலையில் சிவ சக்தியின் திருமணம் நடைபெற போகிறது. தேவர்கள் திரளாகக் கலந்து கொள்வர். நாமும் கல்யாணத்துக்குப் போவோம். அப்போது நீ சிவபெருமானின் உடலுக்குள் புகுந்து விடு என்றார் நாரதர்.
அதன்படி இருவருமாகச் சேர்ந்து திருமணத்துக்குச் சென்றனர். திருமணம் இனிதே நடந்தேறியது. சிவனாரும் பார்வதியும் அனைவரையும் வாழ்த்தினர். அப்போது புரோகிதராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்த பிரம்மாவுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார் நாரதர்.
உடனே பார்வதிதேவி பிரம்மாவின் ஒவ்வொரு தலைக்கும் ஒவ்வொரு திசையில் தீபம் காட்டி நன்றி கூறுகிறோம் என்றாள். அதன்படி நான்கு திசைகளில் சிவனாரும், பார்வதிதேவியும் தீபம் காட்டி பிரம்மாவை வணங்கினர். நான்கு தலைக்கு நான்கு திசைகள் முடிந்தது; ஐந்தாவது தலைக்கு திசையின்றி தவித்தனர்!
அப்போது நாரதர் சைகை காட்டவும் சட்டென்று சிவபெருமானின் உடலில் புகுந்த சனிபகவான் தனது வேலையைத் துவக்கினார்! ஆத்திரத்துடன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டித்தார் சிவபெருமான். இதில் கோபம் கொண்ட பிரம்மன் உமது கையில் உள்ள என் தலை திருவோடாகட்டும்; பித்தனாக, பேயனாக சித்தம் கலங்கி பூலோகத்தில் பிச்சை எடுப்பாய்! என்று சாபமிட்டார். அதன்படி பரதேசிக் கோலத்தில் கையில் திருவோட்டுடன் பூலோகத்துக்கு வந்தார் ஈசன்.
ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுத்தார். அப்படிச் செல்லும் இடங்களிலெல்லாம் அற்புதங்கள் பலவற்றை நிகழ்த்தினார். அப்படியே கொள்ளிடக் கரையில் இருக்கும் வல்லம்படுகை கிராமத்துக்கு வந்தார்.
ஊர் அடங்கிய வேளையில் பரதேசி கோலத்தில் வந்த சிவனாரை, ஊரின் காவல்காரரான பாவடைராயனுக்கு அடையாளம் தெரியவில்லை! சந்தேகக் கண் கொண்டு பார்த்தவர், சிவபெருமானை விலங்கிட்டு சிறையில் அடைத்தார். விடிந்ததும் விசாரித்துக் கொள்ளலாம் என்று அங்கிருந்து கிளம்பி சென்றார் பாவாடைராயன்.
விடிந்ததும் வந்து பார்த்த பாவாடைராயனுக்கு சுயரூபத்தைக் காட்டினார் சிவபெருமான். நடுநடுங்கிப் போன பாவாடைராமன், ஐயனே! உங்களையா சிறை வைத்தேன் என்று பதறினார்.
என்னை மன்னியுங்கள். உங்களுக்கு அடியவனாக இருந்து பணிவிடை செய்ய விரும்புகிறேன். ஆகவே உங்களது சாபம் நிவர்த்தியாகும் வரை, இங்கேயே இருங்கள் ஸ்வாமி என்று கெஞ்சினார். சிவனாரும் சம்மதித்தார். பரதேசியப்பராக வல்லம்படுகை எல்லையிலேயே தங்கினார். இவரே பின்னாளில் பருதேசியப்பர் எனப்பட்டார். இவருக்குக் காவலாக, கீழ்ப்புறத்தில் பாவாடைராயனும் அங்கேயே ஐக்கியமானார்!
கோயிலின் கருவறையில் பரதேசிக் கோலத்தில் காட்சி தருகிறார் பருதேசியப்பர். கருவறை மண்டபத்துக்கு வெளியே வலப்பக்கம் வெற்றி விநாயகர், இடப்புறம் முருகன், கோயிலுக்கு வெளியே கிழக்குப் பகுதியில் முத்தாலம்மனும் மேற்கில் பேச்சியம்மன் மற்றும் முனீஸ்வரனும் உள்ளனர். ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள கொட்டகையில் முத்துநாச்சி, அரியநாச்சி சகிதமாக அமர்ந்திருக்கிறார் பாவாடைராயன். பருதேசியப்பர் சைவக் கடவுள்; ஆகவே பலியிடுவது எல்லாம் பாவாடைராயனுக்குத்தான்!
குழந்தையின்மை, திருமணத்தடை, கடன் தொல்லை முதலான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் தீர்த்து வைப்பாராம் பருதேசியப்பர். பிள்ளைவரம் வேண்டுவோர் பருதேசியப்பர் சந்நிதிக்கு வந்து அம்மிக் குழவியை வைத்து பூப்போட்டு பூஜை செய்கின்றனர். பிறகு அந்தக் குழவியை குழந்தையாக பாவித்து மடியில் ஏந்தியவாறு தம்பதி சமேதராக கோயிலை மூன்றுமுறை வலம் வந்து வணங்குவதுடன் சாமிக்கு முன்னே அம்மியை வைத்துச் செல்கிறார்கள். இதனால் வெகு விரைவில் வீட்டில் தொட்டில் சத்தம் கேட்குமாம்.
வருடந்தோறும் வைகாசி விசாகத்தையொட்டி 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் 9ஆம் நாளன்று விசாகம். அன்று, பருதேசியப்பருக்கும் பாவாடைராயனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். 10ஆம் நாளன்று கொள்ளிடக் கரையில் இருந்து அலகு குத்தியும் பால்காவடி எடுத்தும் பருதேசியப்பரை தரிசிக்க ஊர்வலமாக வருவர். இதையடுத்து பருதேசியப்பருக்கு அபிஷேகங்கள் விமரிசையாக நடைபெறும்.
11ஆம் நாள் மஞ்சு விரட்டு, 12ஆம் நாளன்று பாவாடைராயனுக்கு கிடா வெட்டி பூஜைகள் நடைபெறுவதுடன் விழாவும் நிறைவடையும்.

One response

  1. […] நன்றி – பருதேசியப்பருக்கு பால் காவடி! […]

%d bloggers like this: