Daily Archives: ஜனவரி 23rd, 2010

செயற்கை தமனி தயார்!

விஞ்ஞான வளர்ச்சியால் மருத்துவ உலகில் எல்லாம் செயற்கை மயமாகி வருகிறது. செயற்கை சுவாசம், டயாலிசிஸ் போன்ற உயிர்காக்கும் சிகிச்சை முறை முதல், செயற்கை உறுப்புகள் வரை பலவும் கண்டுபிடித்தாகிவிட்டது.

செயற்கையாக வாழ்வளிக்க முடியுமா? என்ற ஆய்வுகூட 2010-ல் சோதித்துப் பார்க்கப்பட உள்ளது. இப்படி உயிரோட்டமான மருத்துவ வளர்ச்சியில், சமீபத்திய நவீன கண்டுபிடிப்பு செயற்கை தமனி.

ரத்தத்தை எடுத்துச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய் தமனி. பைபாஸ் ஆபரேசன் செய்து கொள்ளும் பலருக்கு தமனி தேவை ஏற்படும். தமனி சேதம் மற்றும் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த செயற்கை தமனியால், அதுபோன்ற ஆபத்துகளை தடுக்க முடியும். லண்டனைச் சேர்ந்த ராயல் பிரீ மருத்துவமனை டாக்டர் ஹாமில்டன், இந்த செயற்கை தமனியை வடிவமைத்து உள்ளார்.

நெகிழும் தன்மை கொண்ட பாலிமர் மற்றும் பல்வேறு பொருட்களைச் சேர்த்து இது தயாரிக்கப்பட்டு உள்ளது. எளிதில் சேதம் அடையாது, நெகிழும் தன்மை உடையது. வழக்கமான தமனிகள்போல ரத்தத்தை கடத்தும். நாடித்துடிப்பை அறியவும் உதவும்.

இதில் உள்ள ஒரே குறைபாடு நீளம்தான். 8 மில்லிமீட்டர் நீளமே இருப்பதால் நீளமான தமனி தேவைப்படுபவர்களுக்கு இதைப் பொருத்த முடியாது. இதை சரி செய்யவும் முயற்சிகள் நடந்து வருகிறது.

குளிர் காலத்தில் பானம்?

குளிர்காலத்தில் புளிப்பான பானங்களை அதிகம் அருந்தக்கூடாது என்று சொல்வது எதற்காக? கோடையில் உடம்புக்கு ஏற்றுக் கொள்ளும் இயற்கையான குளிர்பானங்களான நீர் மோர், பானகம் போன்றவை கூட குளிர்காலத்தில் அருந்தினால் கெடுதலா?
சாத்தூரில் இருந்து எழிலரசு கேட்டிருக். அவரின் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறார் மத்திய சித்த – ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு மருத்துவர் ஜெகஜோதி பாண்டியன்.
புளிப்பான பானங்களில் அமிலத்தன்மை அதிகம் என்பதால் பொதுவாகவே குளிர்காலத்தில் ஆஸ்துமா, சைனஸ், சளித்தொல்லை உள்ளவர்களுக்கு அவை ஒத்துக் கொள்வதில்லை. வெயில் காலங்களில் உடம்புக்கு ஒத்துக் கொள்ளும் சில பானங்கள், உணவுகள் குளிர்காலத்தில் ஒத்துக் கொள்ளாததற்கு முக்கிய காரணம் நம் உடம்பின் செயல்பாடும் கால நிலைகளுக்கு ஏற்ப மாறிக் கொண்டிருப்பதுதான்.
போதிய வாகன வசதி இல்லாத முந்தைய காலங்களில் நெடுந்தூரம் வெயிலில் நடந்தே பயணம் செய்து களைப்புடன் வரும் விருந்தினர்களுக்கு நீர்மோர், பானகம் தந்துதான் முதலில் உபசரிப்பார்கள். அதில் மருத்துவ ரீதியான காரணமும் இருக்கிறது. வெயில் காலங்களில் நம் உடம்பில் இருந்து வெளியேறும் வேர்வையுடன் அல்கலைன் சிட்ரைட் என்ற அமிலமும் அதிக அளவில் வெளியேறும். புளிப்புச் சுவையுடைய நீர் மோர், பானகம் போன்ற பானங்களை அருந்தினால் அந்த இழப்பு ஈடு செய்யப்பட்டு நீர்க்கடுப்பு போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.
ஆனால் குளிர்காலத்தில் நமக்கு வியர்வையே அதிகமாக வெளியேறாத சூழ்நிலையில் இத்தகைய பானங்களை அரந்தினால் அல்கலைன் சிட்ரைட் போன்ற அமிலங்களின் அளவு உடம்பில் அதிகமாகி, மார்புச்சளி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற உபாதைகளை அதிகப்படுத்திவிடும். அதனால்தான் குளிர்காலத்தில் புளிப்புச் சுவையுள்ள பானங்கள் மட்டுமல்ல, பழங்களைக்கூட தவிர்ப்பதே நல்லது! வைட்டமின் சி இருப்பதாகச் சொல்லப்படும் குளிர்பானங்கள்கூட குளிர்காலத்தில் ஏற்புடையதல்ல

தைராய்டு தரும் பகீர்..!

நமது உடம்பில் பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. ஹார்மோன்களை உற்பத்தி செய்து உடலில் உள்ள செல்களுக்கு அதை செலுத்தி, அந்த செல்களை வேலை செய்ய வைப்பதே அவற்றின் பணி. அதில் ஒன்றுதான் தொடை பகுதியில் இருக்கும் தைராய்டு சுரப்பி.

இந்த சுரப்பி சுரக்கும் தைராக்ஸின் ஹார்மோன்தான் நமது உடலின் சீதோஷ்ணநிலையை சீராக வைத்திருக்கும். தோலின் மென்மைத்தன்மையை பாதுகாப்பது, மாதவிடாயை ஒழுங்கு படுத்துவது, முடி வளரும் வேகம், குழந்தைகளின் வளர்ச்சி இவை அனைத்தையும் பராமரிக்கும். இந்த தைராய்டு சுரப்பியில் கட்டிகள் இருந்தால் குறைவாக சுரக்கும். அல்லது அதிகமாக சுரக்கும். இதனால் உடல் நலம் பாதிக்கும்.

தைராக்ஸின் குறைந்தால் உடல் எடை அதிகரிப்பு, அதிக ரத்த போக்கு, முறையற்ற மாதவிடாய், தோலின் மிருதுத் தன்மை குறைவு, அதிகமான முடி உதிர்தல், மலச்சிக்கல், உடல் வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இப்படி உடலில் பிரச்சினைகள் ஏற்படும்போது மருத்துவரிடம் சென்று முறையான சிகிச்சை பெறாவிட்டால், உடல் எடை அதிகரித்து இதயத்தை சுற்றியுள்ள பையில் நீர் சேர்ந்து, நாடித்துடிப்பு குறைந்து, மன அழுத்தம் முற்றிய நிலைக்குச் செல்லக் கூடும். கோமா நிலைகூட ஏற்படலாம்!

அதிகமான தைராய்டு சுரந்தால் எடை குறையும்! இதயத்துடிப்பு அதிகமாகும், கோபம், தூக்கமின்மை, மாதவிடாய் கோளாறுகள், வயிற்று போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும்.

பிரசவ காலத்தில் பெண்களுக்கு மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி பாதிக்கபட்டு, சங்கிலித்தொடர் நிகழ்வாக தைராய்டு சுரப்பியும் பாதிக்கபடலாம். அதனாலும் தைராய்டு பிரச்சினை ஏற்படலாம். பிரசவத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில மாதங்கள் கழித்தும் முறைபடி மாதவிடாய் வராவிட்டால்… மருத்துவரிடம் சென்று தைராய்டு பரிசோதனை மேற்கொள்வது அவசியம்.

குழந்தையின்மைக்கு தைராய்டும் ஒரு காரணம் என்பதால், பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதேபோல் மெனோபாஸ் காலத்திற்கு பின்னரும் தைராய்டு பிரச்சினை தோன்றும். ஆனால் அதற்கான அறிகுறிகள் அதிகம் தெரியாது. ஆதலால், ஐம்பது வயது கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக் கொள்வது அவசியம்.

கூந்தல் திருடன்!


திருடுபவர்கள் எதை வேண்டுமானாலும் திருடுவார்கள். அமெரிக்காவில் ஒருவர் அழகான பெண்களின் கூந்தலைத் திருடி வந்திருக்கிறார். ஒரிகான் போர்ட்லாண்டை சேர்ந்த அவர், புத்தாண்டுக்கு முதல் நாள் பஸ்சில் சென்றபோது, தனக்கு முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் கூந்தலை வெட்டியெடுக்க முயன்றபோது கையும் முடிமாக பிடிபட்டார்.

வெஸ்டன் வால்டர் என்ற அந்நபரிடம் ஒரு வாரத்தில் மட்டும் முன்று பேர் கூந்தலை இழந்திருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு `குற்றம்’ தொடர்பான `வாரண்ட்’, வாஷிங்டனில் ஏற்கனவே வால்டர் மீது இருப்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கூந்தல் மீது வால்டருக்கு அப்படியென்ன பிரியம் அல்லது வெறுப்பு என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

தண்ணீருக்குள் குறிப்பெடுக்க…

சிலர் எல்லா நேரங்களிலும் பரபரப்பாக இருப்பார்கள். அவர்களுக்கு உதவும் குறிப்பேடுதான் `வாட்டர் புருப் நோட்ஸ்’.

இந்த குறிப்பேடை குளியலறை முதல்கொண்டு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தண்ணீர் பட்டாலும் எழுத்துக்கள் அழியாது. தாளும் கிழியாது. இதற்கான விசேஷ தாள் மற்றும் பென்சில் தயாரிக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலும் இந்த குறிப் பேடு ஆய்வாளர்களுக்கு உப யோகப்படும். எப்போதும் உங்கள் குறிப்புகள் அழியாமல் இருக்க விரும்பினால் நீங்களும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

சேலையில வீடு கட்டவா?

பெண்களின் அழகை நல்ல முறையில் வெளிக்காட்டும் ஆடைகளில் சேலை முதலிடம் பிடிக்கிறது. அழகை சிறந்த முறையில் வெளிக்காட்டுவது மட்டுமின்றி, சிறப்பானதொரு தோற்றபொலிவையும் சேலை தருகிறது. பெரும்பாலும் திருமணமான பெண்களே சேலைகளை விரும்பி அணிகின்றனர். கைக்குழந்தை உள்ள பெண்களுக்கு சேலை மிகச்சிறந்த வரபிரசாதமாகும்.

இந்தியாவில் மட்டுமே சேலை உடுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாகத் தென்இந்தியாவில் சேலைகளின் பயன்பாடு மிக அதிகம். தயாரிக்கபடும் இடத்தை பொறுத்தும், பயன்படுத்தும் இடத்தை பொறுத்தும் சேலைகள் பல வகைபடுகின்றன.

பிரின்டட் சேலைகள், பிளெய்ன் சேலைகள், எம்ராய்டரி சேலைகள் என பொதுவாக சேலைகளை வகைபடுத்தினாலும், சற்று ஆழ்ந்து நோக்கினால் தான் இந்தியா முழுவதும் பலவிதமான சேலைகள் பயன்படுத்தபட்டு வருவது நமக்குத் தெரியும்.

பனாரஸ் சில்க் என்று அழைக்கபடும் வாரணாசி பட்டு உயர்தரமான பட்டு நுலால் தயாரிக்கபடுகிறது. இவைகளை திருமணம், விழாக்கள் போன்றவற்றிற்கு அணிந்து சென்றால் விசேஷ தோற்றத்தைத் தரும். பார்டர், முந்தானை போன்றவை சிறப்பாக டிசைன் செய்யபட்டிருக்கும். காஞ்சீபுரம் பட்டு தமிழகத்தில் பழங்காலத்தில் இருந்தே தயாரிக்கபட்டு வருகிறது. கையால் நெய்யபடுவதால் நல்ல தரமாக இருக்கும்.

காஞ்சீபுரம் பட்டுச்சேலைகளின் முந்தானை டிசைன் உலக அளவில் புகழ் பெற்றது.

டசர் சில்க் மத்திய பிரதேசத்தில் அதிகமானவர்களால் விரும்பி அணியபடுகிறது. அதிக எடை இல்லாமல் லேசாக இருபதே இந்தச் சேலையை பெரும்பாலானவர்கள் விரும்பி அணியக் காரணமாகும். பஷ்மினாவுடன் கம்பளி சேர்த்து நெய்யபடுவதே டசர் எனபடும். பிரின்டட் செய்யபட்டவை, எம்ராய்டரி செய்யபட்டவை என இரண்டு விதமான டசர் சில்க்குகள் உள்ளன.

சில்க் மற்றும் காட்டன் கலந்து நெய்யபடும் வல்தா சேலைகள் அனைவராலும் விரும்பபடுகின்றன. இந்த சேலைகளில் பினிஷிங் நன்றாக இருக்கும். மேலும் பிளாக் பிரிண்டிங் செய்யபட்டிருக்கும்.

ஒரிசாவின் `இக்கத்’ சேலைகளில் அதிக கைவேலைபாடுகள் காணபடும். எம்ராய்டரி செய்யபட்ட இத்தகைய சேலைகள் பிரபலமானவை. ஆரஞ்சு, மஞ்சள் போன்ற வண்ணங்கள் அதிகமாக பயன்படுத்தபட்டிருக்கும். காஷ்மீரின் மொஷிதாபாத் சேலைகள், சைனா சில்க்கை போன்று பினிஷிங்காக இருக்கும். இதை `பெங்காலி சில்க்` என்றும் கூறுவர். காஷ்மீரின் பாரம்பரிய உடையான இதில் காஷ்மீர் டிசைன்கள் நிறைந்திருக்கும்.

ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் `பந்த்னி’ சேலைகள் தயாரிக்கபடுகின்றன. பெரும்பாலும் வெள்ளை நிற சேலைகளே அதிகமாக இருக்கும். அதில் நுல் வேலைபாடு செய்யபட்டிருக்கும். பாத்திக் வகை சேலைகளில் மெழுகு பயன்படுத்தபட்டிருக்கும். இந்த சேலைகளை அணிந்தால் வடஇந்தியத் தோற்றத்தைக் கொடுக்கும். பிங்க், மெஜந்தா, ஆரஞ்சு போன்ற கலர்கள் அதிகம் பயன்படுத்தபட்டிருக்கும். சில சமயங்களில் மெல்லிய தங்கக் கம்பியைக் கொண்டும் எம்ராய்டரி செய்யபட்டிருக்கும்.

ஜாம்தானிஷ் வகை சேலைகளில்அதிக நுல் வேலைபாடுகள் இருக்கும்; வேலைபாடு இல்லாதவைகளும் உண்டு. மயில் கலரில் அமைந்த இந்த வகையான சேலைகள் பெரும்பாலானவர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. பெங்காலின் பாலுச் வகை சேலைகள் விலங்குகள் மற்றும் கட்டிடக்கலையின் சிறப்பை விளக்கும் விதத்தில் வடிவமைக்கபட்டிருக்கும். முந்தானைகளில் ராமாயணம், மகாபாரதம் போன்ற சரித்திரக் கதைகளை விளக்கும் படங்கள் இடம் பெற்றிருக்கும்.

`போம்கய்ஸ்’ சேலைகள் ஒரிசாவில் தயாராகின்றன. இதில் அதிகமாக நுல் வேலைபாடுகள் காணப்படும். ஒரிசாவின் பாரம்பரிய உடையான இதில் பெரும்பாலும் வெளிர் நீலம், வெளிர் பிங்க், பச்சை போன்ற வணங்கள் பயன்படுத்தபட்டிருக்கும். ராஜஸ்தானின் கோட்டோ நோரியோ சேலைகள் வலை போன்று வடிவமைக்கபட்டிருக்கும். சுத்தமான காட்டனில் தயாராகும் இந்த உடைகள் சில நேரங்களில் பாலியஸ்டரிலும் தயாராகின்றன. சந்தேரி சேலைகள் மத்திய பிரதேசத்தில் தயாரிக்கபடுகின்றன. மிகவும் லேசான எடை கொண்ட இந்த சேலைகள் பெரும்பாலும் பிளெய்னாகவே இருக்கும். பார்டர் மற்றும் முந்தானைகளில் டிசைன் செய்யபட்டிருக்கும்.

கர்நாடகாவின் பன்கடி சேலைகள் விலை குறைவானவை. தினமும் பயன்படுத்தும் விதத்தில் இவை இருக்கும். இல்கல் சேலைகள் கர்நாடகாவில் தயாரிக்கபடுகின்றன. லேசாகவும், பளபளபாகவும் இருக்கும். முந்தானை சில்க்கால் வடிவமைக்கபட்டிருக்கும். வெங்கட்கிரி சேலைகள் ஆந்திராவில் தயாரிக்கபடுகின்றன. இவை குறைவான எடை கொண்டவை. எளிய பேட்டன்ஸ் மற்றும் டிசைன்ஸ் இருக்கும். ஆந்திராவின் மற்றொரு தயாரிப்பான குடூர் சேலைகள் கிராமத்து பெண்களால் அதிக அளவில் அணியபடுகின்றன. இவை அடர்த்தியான கலர்களில் இருக்கும். அகலமான பார்டர் உடையது. பாரம்பரிய நடனம் ஆடும்போது இந்த சேலைகளை உடுத்திக் கொள்வர்.

ஆந்திராவின் போச்சம்பள்ளி சேலைகள் அதிக எடை கொண்டதாய் இருக்கும். அந்த அளவுக்கு கைவேலைபாடுகள் மிகுந்திருக்கும். மங்கல் கிரி சேலை களும் அங்கு தயாரிக்கபடுகின்றன. இந்த வகை சேலைகளில் பார்டர் டிசை னுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக் கபட்டிருக்கும்.

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் சேலை களில் பினிஷிங் நன்றாக இருக்கும். பெரும்பாலும் காட்டன் பயன்படுத்தபட் டிருக்கும். காஞ்சீபுரம் காட்டன் சேலை களில் கோவில்கள் தொடர்பான படங் கள் இடம் பெற்றிருக்கும். முந்தானை பலவகையான வண்ணங்களால் வடிவமைக்கபட்டிருக்கும். உலக அள வில் சிறந்த புடவைகள் தயாராகின்றன

`செல்போன்’ ஆராய்ச்சி…!

இன்றைக்கு பலருக்கும் செல்போன் அவர்களது உடம்பின் ஓர் அங்கமாகவே ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் ஒருநாளை ஓட்டுவதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. உலக அளவிலான ஓர் ஆய்வு அதை உறுதிபடுத்துகிறது. பலர், தங்கள் செல்போனை இழப்பதைவிட பர்ஸை இழக்கவும் தயார் என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட, சந்தை ஆய்வு நிறுவனமான `சைனோவேட்’, இன்று வாழ்க்கைக்கான `ரிமோட் கண்ட்ரோலாக’ செல்போன் உள்ளது என்று தெரிவித்துள்ளது. தற்போது செல்போன் எல்லா இடங்களிலும் காணபடும் ஒன்றாக ஆகிவிட்டது, ஒன்றுக்கும் மேற்பட்ட செல்போன் வைத்திருப்பவர்களும் அதிகரித்து வருகின்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் கனடா, டென்மார்க், பிரான்ஸ், மலேசியா, ஆலந்து, பிலிபைன்ஸ், ரஷியா, சிங்கப்பூர், தைவான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 11 நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பேர் பதில் கூறினர். அவர்களில் முக்கால்வாசி பேர், தங்களுடன் எப்போதும் செல்போனை எடுத்துச் செல்வதாகத் தெரிவித்தனர். குறிப்பாக ரஷியர்களும் சிங்கப்பூர்காரர்களும் செல்போனை பிரிவதே இல்லை என்ற தகவல் ஆச்சரியமானது.

சிங்கப்பூர்காரர்களிடமும் தைவான் மக்களிடமும் இந்த ஆய்வை மேற்கொண்டபோது அந்த நாட்டு மக்களில் நான்கில் ஒருவர், தங்கள் பர்ஸை விட செல்போன் தொலைந்தால்தான் அதிகக் கவலைபடுவோம் என்று தெரிவித்துள்ளனர். முன்றில் இரண்டு பங்கினர், தாங்கள் செல்போனுடன்தான் படுக்கைக்கு போவதாகவும், அதை `ஸ்விட்ச் ஆப்’ செய்வதே இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். `ஸ்விட்ச் ஆப்’ செய்ய நினைத்தாலும், தாங்கள் ஏதாவது முக்கியமான அழைப்பை `மிஸ்’ செய்துவிடுவோமோ என்ற பயத்தில் அணைப்பதில்லை என்று கூறிள்ளனர்.

“சில நேரங்களில் செல்போன் நேரடியாக பார்த்து பேசுவதை விடச் சிறந்ததாக உள்ளது. அவை எங்களின் வாழ்க்கைக்கான தொடர்புகள் ஆகும்” என்று தைவானைச் சேர்ந்த சைனோவெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜென்னி சாங் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

செல்போனை பயன்படுத்துவோரில் ஏறக்குறைய பாதி பேர், தாங்கள் விரும்புபவரை தங்கள் ஆசை வலையில் விழ வைக்க எஸ்.எம்.எஸ்.-ஐ பயன்படுத்துவதாகக் கூறிள்ளனர். `டேட்டிங்’குக்கான ஒப்புதலை பெற பலர் செல்போனை பயன்படுத்துவதாகவும், அதே அளவு எண்ணிக்கையிலானோர் தங்கள் காதலை முறித்துக்கொள்ள செல்போனை உபயோகிப்பதாகவும ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

செல்போன்கள் அவற்றின் பிரதான உபயோகமான பேசுவது, குறுந்தகவல் அனுப்புவது தவிர, அதிகமாக பயன்படுத்தபடுவது அலாரம் வைக்க, படம் பிடிக்க மற்றும் `கேம்ஸ்’ விளையாட ஆகும். மின்னஞ்சல் மற்றும் இணைய வசதியை பொறுத்தவரை 17 சதவீதம் பேர் தங்கள் செல்போன்களில் அதை பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர். இவ்விஷயத்தில் முன்னணியில் இருப்பவர்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டு மக்கள். பத்தில் ஒருவர், செல்போன் வழியாகத் தினமும் சமுக நட்பு இணையதளங்களான `பேஸ்புக்’, `மைஸ்பேஸ்’ ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

“செல்போன்களில் வசதிகள் பெருக பெருக, பல தொழில்களும் பெரும் சவாலை எதிர்நோக்க ஆரம்பித்திருக்கின்றன. அதேநேரம், செல்போன் தயாரிப்பாளர்களுக்கும், செல்போன் சேவை அளிப்பவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன” என்கிறார், சைனோவெட் நிறுவனத்தின் சர்வதேச ஊடகத் தலைவர் ஸ்டீவ் கார்ட்டன்.

செல்போன்களில் வசதிகள் அதிகரித்தாலும், அதை பயன்படுத்துவோரில் 37 சதவீதம் பேர் தங்கள் செல்போனில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தத் தெரியாது என்று கூறிள்ளனர்.

நீங்களும் செல்போன் உபயோகிப்பவராகத்தான் இருப்பீர்கள்.

ஒரு நாளாவது செல்போனை `ஆப்’ செய்து ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு இருந்து பாருங்கள். நிச்சயம் உங்களால் முடியவே முடியாது. பளிச் பளிச் என்று அவ்வபோது வந்து விழும் எஸ்.எம்.எஸ். தகவல்களை படித்த உங்கள் கண்களுக்கும்… அடிக்கடி மிஸ்டு கால் கொடுத்த கஞ்ச நபர்களை செல்லமாக திட்டித் தீர்த்த உங்கள் உதடுகளுக்கும்… அது என்னவோ போல் இருக்கும்.

அதுவும், காதலர்கள் என்றால்… அவர்களால் செல்போனை பிரிந்து ஒரு மணிநேரம்கூட இருக்க முடியாது. சிலநேரங்களில் அன்பு மழையை கொட்டிக்கொண்டும், பலநேரங்களில் கிளுகிளுப்பை சேர்த்துக் கொண்டும் வந்து சேரும் எஸ்.எம்.எஸ்.களை பார்த்து, படித்து, ரசித்து பழக்கபட்டவர்கள், செல்போன் இல்லை என்றால் திண்டாடித்தான் போவார்கள்.

சிலர் இருக்கிறார்கள்… ஏ.டி.எம். கார்டு பாஸ் வேர்டு முதல் கேர்ள் பிரெண்ட் அட்ரஸ் வரை எல்லாவற்றைம் தங்கள் மொபைலில் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.

இவர்களால் தகவல் களஞ்சியமாக மாறிபோன செல் `மிஸ்’ ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? தலையே வெடித்து விடும்போல் இருக்குமா இல்லையா?

இதாவது பரவாயில்லை. இன்னும் சிலரோ, தங்களது படுக்கையறை அந்தரங்கங்களைக்கூட செல்போனில் படம் பிடித்து பதிவு செய்து வைத்துக்கொண்டு அவ்வபோது பார்த்து ரசிக்கிறார்கள். இந்த அந்தரங்க காட்சிகளைக் கொண்ட செல்போன் `மிஸ்’ ஆகி, அந்த காட்சிகள் உலகம் முழுவதும் உலா வந்துவிட்டால்… மானம் போய் விட்டால்…
இதை தவிர்க்க என்ன செய்யலாம்?

“இப்போதெல்லாம் மாமனாரிடம் தலை தீபாவளி, தலை பொங்கலுக்கு எந்த மருமகனும் காரோ, பைக்கோ எதிர்பார்பதில்லை. மார்க்கெட்டில் புதிதாக வந்து இறங்கியிருக்கும் செல்போனையே கேட்டு `டிமாண்ட்’ செய்கிறார்கள்.

விதவிதமான செல்போன்களின் வருகையால் இன்றைய காதலர்களுக்குத்தான் கொண்டாட்டம். கிளாசைக்கூட கவனிக்காமல் எங்கோ இருக்கும் காதலனுக்கு மெஸேஜ் அனுப்புவதும், எங்கோ இருக்கும் முகம் தெரியாத ரகசிய சிநேகிதிக்கு மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருபதும் இன்றைய பேஷனாகி போய்விட்டது. தன்னை மறந்து, உலகத்தை மறந்து, மொட்டை மாடியில் நடந்தபடியே மணிக்கணக்காக செல்போன் முலமாக பேசி இன்றைய காதலர்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி, எல்லாவற்றுக்கும் காரணமான செல்போன் தொலைந்துபோய்விட்டால்…? சொல்லும்போதே தலை சுற்றுகிறதே… ஒருவர் அவரது செல்போன் தொலைந்துபோய்விட்டது தெரிய வந்தால் பாதி பைத்தியக்காரனாகி விடுவார். எங்கே வெச்சோம்? அதன்பிறகு எங்கே போச்சு? என்று மீண்டும் மீண்டும் யோசிப்பார். குட்டி போட்ட பூனையாக அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருவார். நேரம் ஆக ஆக எரிச்சல் வரும்… கோபம் வரும்… உச்சக்கட்ட டென்ஷனுக்கு சென்று விடுவார். முக்கியமான தொடர்புகள் எல்லாம் போச்சே என்று மனிதர் புலம்ப ஆரம்பித்துவிடுவார். அவரது நம்பருக்கு அவரே தொடர்பு கொள்ள, `நீங்கள் தொடர்பு கொண்ட நம்பர் சுவிட்ச் ஆப் செய்யபட்டுள்ளது’ என்று பதில் வரும். அதிலேயே அவர் நொந்துபோய் விடுவார்.

என்னதான் புது மொபைல் பின்னர் வாங்கி உபயோகித்தாலும், கொஞ்ச நாட்களுக்காவது முதலில் பயன்படுத்திய மொபைலின் புராணத்தையே பாடிக் கொண்டிருபார். நமது வாழ்க்கையில் முதல்ல நடக்கும் எந்தவொரு விஷயத்தையும் மறக்க முடியாது இல்லியா..?”

இது ஒருபுறம் இருக்க… பாய் பிரெண்ட்களை விட செல்போன் மீதுதான் இன்றைய பெண்களுக்கு காதல்-மோகம் அதிகம் என்று கூறி திகைக்க வைக்கிறது ஆஸ்திரேலியாவில் நடத்தபட்ட ஒரு ஆய்வு.

பாய் பிரெண்ட்களை பிரிவதால் ஏற்படும் சோகத்தைவிட, மொபைல் `மிஸ்’ ஆனால் ஏற்படும் சோகமே அதிகம் என்று, அந்த ஆய்வில் கலந்துகொண்ட பெண்கள் கூறி, ஆய்வாளர்களையே திக்குமுக்காட வைத்திருக்கிறார்கள்.

இந்த உலகிலேயே உங்களுக்கு பிடித்தமானது எது? என்ற கேள்விக்கு, தங்களது அம்மாதான் என்று கருத்து தெரிவித்துள்ள பெரும்பாலான பெண்கள், இரண்டாவது இடத்தை தங்களது புகைபடங்களுக்கும், முன்றாவது இடத்தை மொபைல் போனுக்கும் கொடுத்திருக்கிறார்கள். தங்களது கேர்ள் பிரெண்டுக்கு நான்காவது இடத்தை அளித்துள்ள அவர்கள், பாய் பிரெண்ட்களுக்கு அதற்கு அடுத்த இடத்தையே கொடுத்து சப்பு கொட்டியுள்ளனர்.

செல்போன் பயன்படுத்துவதைக் காட்டிலும், அதை பாதுகாப்பாக வைத்திருப்பது இன்னும் முக்கியமான விஷயம்.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பது ஏன்?

எப்போதும் `ஸ்லிம்’ ஆக இருக்க வேண்டும் என்று உடல் அழகை கட்டுக்கோப்பாக வைக்கும் பெண்கள்கூட, திருமணத்திற்கு பிறகு எக்குதப்பாக சதை போட்டுவிடுகிறார்கள். அதுவும், ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இன்னமும் கூடுதலாக குண்டாகிவிடுகிறார்கள்.

ஏன்… ஒரு பெண் திருமணம் ஆனபிறகு மட்டும் குண்டாகிறாள்? என்கிற நோக்கில் ஆஸ்திரேலியாவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

10 வருடங்களாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 18 முதல் 23 வயதுவரை உள்ள சுமார் 6,500 ஆஸ்திரேலிய பெண்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

அவர்கள் திருமணத்திற்கு முன்பு என்ன உடல்நிலையில் இருந்தார்கள்? திருமணத்திற்கு பிறகும், குழந்தை பிறந்த பிறகும் அவர்களது உடல்நிலையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? என்று பல விஷயங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவில், திருமணம் செய்து கொள்ளாத பெண்கள் 10 ஆண்டுகளில் 11 பவுண்டும் (ஒரு பவுண்ட் என்பது சுமார் 450 கிலோகிராம்), திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள் 15 பவுண்டும், திருமணமாகி குழந்தையும் பெற்றுக்கொண்ட பெண்கள் 20 பவுண்டும் கூடுதல் உடல் எடை பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு என்ன காரணம் என்பது குறித்து, ஆய்வை மேற்கொண்ட டாக்டர் ஜே.பிரவுன் கூறியதாவது :

ஒரு பெண்ணின் அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பு, அவள் திருமணம் செய்து கொண்ட பின்னர்தான் ஆரம்பமாகிறது. முதல் குழந்தை பிறந்த பிறகு அவளது உடல் எடை இன்னும் அதிகமாகிறது.

அதே பெண் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளும்போதும் அவளது உடல் எடை அதிகரிக்கிறது. ஆனால், இந்த உடல் எடை முதல் குழந்தை பெற்றபோது அதிகரித்த உடல் எடையைவிட சற்று குறைந்ததாகும்.

இந்த உடல் எடை அதிகரிப்பு, அந்த பெண்களுக்கு எதிர்கால வாழ்க்கையில் பல பிரச்சினைகளை கொண்டு வந்துவிடுகிறது. அதை தவிர்க்க வேண்டும் என்றால் அவர்களது உணவு பழக்கவழக்கத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.

இப்போதெல்லாம், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் பாஸ்ட் புட் வகைகளைத்தான் பெண்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் அவர்களது உடல் எடை அதிகப்படியாக கூடுதலாகிறது.

மேலும், இன்றைய பெண்களுக்கு உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. அதிக நேரம் தூங்குகிறார்கள். இதுவும் அவர்களது உடல் எடை அதிகரிக்க மற்றொரு முக்கிய காரணம்.

அதனால், தினமும் முன்றுவேளை உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதோடு, தேவையான உடற்பயிற்சியையும் தினமும் செய்து வந்தால், அதிகப்படியான உடல் எடையை குறைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.
மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.
இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம் சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.
ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

வேர்டு: டிப்ஸ் டிப்ஸ் -23.1.2010

பைலின் பெயரை இணைக்க
வேர்ட் டாகுமெண்ட் பைல் ஒன்றை உருவாக்குகிறீர்கள். அதை சேவ் செய்தவுடன், அந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு போல்டரில், ஒரு டிரைவில் பதிந்து வைக்கப்படுகிறது. இந்த பைலின் பெயர் மற்றும் பதியப்பட்டு வைக்கும் இடம் டாகுமெண்ட்டில் குறிப்பிட்ட இடத்தில் காட்டப்பட்டால் நல்லது எனத் திட்டமிடுகிறீர்கள். நீங்களாக இதனை டைப் செய்திட வேண்டாம். அதற்கென செட்டிங்ஸ் ஒன்றை அமைத்துவிட்டால் போதும். இதனை டாகுமெண்ட்டில் உள்ள புட்டரில் கூட அமைத்துவிடலாம். அச்செடுக்கையில் பைலின் பெயர் கீழாகக் காட்டப்படும் அல்லவா! இனி எப்படி இதனை செட் செய்திடலாம் என்று பார்க்கலாம்.
1. எந்த இடத்தில் பைலின் பெயர் அமைக்கப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும்.
2. அடுத்து மெனுபாரில் இன்ஸெர்ட் (Insert) அழுத்தவும்.
3. இதில் பீல்டு என்னும் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு மேலாக Please Choose a Field என்று ஒரு பிரிவு இருக்கும். அதிலேயே அடுத்த பிரிவாக Field Names என்று இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இதில் File Name என்பதில் கிளிக் செய்க.உடன் அருகில் ஒரு பாக்ஸ் காட்டப்படும். அதில் பைல் பெயர் எப்படிக் காட்டப்பட வேண்டும் என்பதற்கு பெரிய(கேப்பிடல்) எழுத்துக்கள், சிறிய எழுத்துக்கள், அல்லது வழக்கமான சொற்கள் போல என்ற பிரிவுகளில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இது Field Properties என்ற பிரிவில் காட்டப்படும்.
6. இதனை அடுத்து Field Options என்ற பிரிவைப் பார்க்கலாம். அதில் சிறிய கட்டம் ஒன்றுடன் Add path to File Name என்று இருக்கும். இதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தினால், உங்கள் பைல் எந்த டிரைவில், எந்த போல்டரில் உள்ளது என்ற விவரங்களுடன் பைல் பெயர் இடம் பெறும்.
உங்களிடம் வேர்ட் 2007 இருந்தால் கீழ்க்கண்டபடி செட் செய்திடவும்.
1. டாகுமெண்ட்டைத் திறந்து எந்த இடத்தில் பைல் பெயர் வேண்டுமோ அந்த இடத்தில் கர்சரை வைத்திடவும்.
2. அடுத்து ரிப்பனில் இன்ஸெர்ட் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. டெக்ஸ்ட் குரூப்பில் Quick Parts என்னும் டூலில் கிளிக் செய்திடவும்.
4. Field என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் பீல்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
5. இதில் கிடைக்கும் கேடகிரி லிஸ்ட்டில் (Document Information) டாகுமெண்ட் இன்பர்மேஷன் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
6. பின் File Name என்பதை Insert Field Type லிஸ்ட்டில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
7. இப்போது என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் உடனே டயலாக் பாக்ஸ் டிஸ்பிளேயை மாற்றும்.
8. இதில் Options என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Field Options என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
9. அடுத்து Field Specific என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.
10. இப்போது \p என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் பைல் உள்ள டைரக்டரிக்கான பாத் என்னும் வழி முழுவதையும் தேர்ந்தெடுக்க அமைக்கக் கட்டளை தரப்படுகிறது.
11. அடுத்து Add to கிளிக் செய்திடவும்.
12. அடுத்து பீல்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடவும்.
13. மீண்டும் ஒருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

எழுத்து தொடர்பான ஷார்ட் கட் கீகள்
எழுத்தை மாற்ற CTRL+SHIFT+F

எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P

எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+>

எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<

எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+]

எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[

பெரிய சிறிய எழுத்தாக மாற்ற SHIFT+F3

அனைத்தும் பெரிய எழுத்துக்களாக மாற்ற CTRL+SHIFT+A

எழுத்தை போல்ட் செய்திடவும் மாற்றவும் CTRL+B

அடிக்கோடினை அமைக்க, நீக்க CTRL+U

சொற்களை மட்டும் (ஸ்பேஸ் இல்லாமல்) அடிக்கோடிட/நீக்க CTRL+SHIFT+W

சாய்வெழுத்து அமைக்க / }UP CTRL+I

எழுத்தை சிறிய கேபிடல் எழுத்தாக அமைக்க CTRL+SHIFT+K

தொகுப்பை மூட ALT+F4

அனைத்து விண்டோவினையும் சுருக்கி வைக்க W logo key+M
டெக்ஸ்ட் இரு கோடுகளில் அடிக்கோடிட CTRL+SHIFT+D

டெக்ஸ்ட்டை மறைக்க மீண்டும் கொண்டுவர CTRL+SHIFT+H

பைல் போல்டர் கண்டுபிடிக்க WINDOWS+F

ஆட்டோமேடிக் ஸ்பேஸிங் அமைக்க CTRL+=

தற்போதைய வேலையை நீக்க ESC

சிம்பல்(அடையாளக் குறி) எழுத்துக்கு மாற CTRL+SHIFT+Q
அச்சில் வராத குறிகளைக் காண CTRL+SHIFT+*