மூடி மறைக்கபடும் பாலியல் தொந்தரவுகள்!


`ருச்சிகா வழக்கு’ விஷயம் பரபரப்பாக அடிபடும் நேரம் இது. ஆனால் சம்பந்தபட்ட காவல்துறை முன்னாள் உயரதிகாரி தண்டனைக்கு உள்ளானாலும் (வெறும் ஆறு மாத சிறை!) அதில் அர்த்தம் இருக்காது. காரணம், ருச்சிகா இன்றில்லை.

நமது சமுகத்தில் வெளித் தெரியாமல் புரையோடி போயிருக்கும் அவலங்களில் ஒன்றை இது எடுத்துக்காட்டுவதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். மும்பையில் மட்டும் கடந்த 2009-ம் ஆண்டில் 356 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகிள்ளன. இது போல நாடு முழுக்க பெண்கள் மீதான சீண்டல்கள், தொந்தரவுகள், கற்பழிப்புகள் என்று கணக்கு பார்த்தால் அது மலைக்க வைக்கும் எண்ணிக்கையாக இருக்கும். பாதிக்கபட்ட பல பெண்கள், அவமானம், வழக்கு விசாரணை நடைமுறைகளுக்கு பயந்தே கண்ணீரோடு கசப்பை மறைத்து விடுகிறார்கள். அல்லது மறைக்க வைக்கபடுகிறார்கள்.

பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கொடுமைகள் அனைத்தும் `பெண்ணின் கவுரவத்துக்கு எதிரான இழைக்கபடும் தீங்கு’ என்று இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒரே பிரிவின் கீழ் கொண்டு வரபடுகின்றன.

புள்ளிவிவரங்கள் கூறும் அதிர வைக்கும் தகவலின்படி, நம் நாட்டில் 18 வயது பூர்த்தியாவதற்கு முன் மூன்று  பெண் குழந்தைகளில் ஒருவரும், ஐந்து பையன்களில் ஒருவரும் பாலியல் ரீதியான சீண்டலுக்கு உள்ளாகிறார்கள்.

“இவ்வளவு ஆண்டுகள் கடந்த பின்னும் ருச்சிகா குடும்பத்தினர் தங்களின் போராட்டத்தை விட்டுவிடவில்லை என்பது பாராட்டுக்குரிய விஷயம்” என்கிறார் பூஜா. இவர், குழந்தைகள் மீதான பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக போராடிவரும் `அர்பன்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர். “துரதிர்ஷ்டவசமாக, இது போன்ற பல சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருவதேயில்லை” என்கிறார் இவர்.

“மிகவும் குறைவான சம்பவங்கள் புகார் செய்யபடுகின்றன. இது மாதிரியான அத்துமீறல்களுக்கு பெரும்பாலும் நடவடிக்கையும் எடுக்கபடுவதில்லை” என்கிறார் பூஜா.

அவர் வருத்தத்தோடு தெரிவிக்கும் விஷயம், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளைத் தண்டிக்க `குறிப்பான, கடுமையான’ சட்டங்கள் ஏதும் இல்லை என்பது.

“இந்திய தண்டனைச் சட்டத்தின் 509-வது பிரிவு, பெண்களின் கவுரவத்துக்கு இழைக்கபடும் தீங்கைக் கவனிக்கிறது. 376-வது பிரிவு, கற்பழிப்புக்கான தண்டனையை வரையறுக்கிறது. அவற்றுக்கு இடையில் கவனிக்கபடாமல் விடபடும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன”

என்கிறார்.பாலியல் ரீதியாக பாதிக்கபட்ட பலர் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர உதவியுள்ள புஷ்பா வெங்கட்ராமன், பூஜாவின் கருத்தை ஒத்துக்கொள்கிறார்.

“தகாத இடங்களில் தொடுதல், நேரடித் தொடர்பில்லாத குற்றங்களான மோசமான பார்வை, ஆபாச பேச்சு, மோசமான படங்களை செல்போனில் அனுப்புதல் போன்றவை தற்போது அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால் அவை கவனிக்கபடுவது இல்லை” என்கிறார் புஷ்பா.

“பெண்களை பாலியல் ரீதியாகச் சீண்டும் விஷயங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் ஜாமீன் பெற்றுத் தப்பி விடுகிறார்கள் அல்லது வழக்கு விசாரணைக்கு வருவதற்கே பல்லாண்டுகள் ஆகின்றன அல்லது நீதிமன்றத்துக்கு வெளியிலேயே `சமரசம்’ என்று விஷயத்தை முடித்து விடுகிறார்கள்” என்று கூறும் புஷ்பாவின் குரலில் வருத்தம் இழையோடுகிறது.

“பாதிக்கபட்டவருக்கு நட்பான சூழல், விரைவான விசாரணை, துரிதமான நீதி ஆகியவைதான் தற்போதைய தேவை” என்று வலியுறுத்துகிறார் இவர்.

குற்றவாளிகள் தப்பிப்பதற்கு இந்திய சமுகச் சூழலும் ஒரு காரணமாக இருக்கிறது என்கிறார்கள், இவ்விஷயத்தில் கவனம் செலுத்தும் சமுக சேவகர்கள்.

“பெரும்பாலான நேரங்களில் பாலியல் தொந்தரவை நிகழ்த்துபவர் தெரிந்த நபராகத்தான் இருக்கிறார். அந்த மாதிரியான நேரங்களில் `குடும்ப கவுரவத்தை’க் கட்டிக் காப்பதுதான் பலருக்கு முக்கியமானதாகத் தோன்றுகிறது” என்கிறார் மனநல மருத்துவர் ரீட்டா டிசவுசா.

%d bloggers like this: