Daily Archives: ஜனவரி 26th, 2010

மூலிகை கட்டுரை -கபத்தை கரைக்கும் கருந்துளசி

சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது, சளித்தொல்லையானது நமது மூச்சுப்பாதையை பாடாய் படுத்திவிட்டுத்தான், நம்மைவிட்டு அகலுகிறது. அந்நாட்களில், நமக்கு தோன்றும் உபாதைகளோ ஏராளம்.
சளித்தொல்லையை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் காசநோய், நிமோனியா போன்றவற்றின் பாதிப்பு உண்டாகிவிடும். பாக்டீரியா, பூஞ்சை கிருமிகளினால் உண்டாகும் ஒவ்வாமை, மற்றும் தொற்றினால் ஏற்பட்ட சளித் தொல்லை மருந்துகளுக்கு கட்டுப் பட்டாலும், வைரஸ் கிருமிகளால் ஏற்பட்ட சளித்தொல்லை மருந்துகளுக்கு கட்டுப்படாமல், கடும் வேதனையை உண்டாக்குகிறது. சில நேரங்களில் மூளையையும் தாக்கி, உயிருக்கு ஆபத்தை உண்டாக்குகிறது.
நுரையீரலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதற்காக இயற்கையாக படைக்கப்பட்ட சளியானது தன் அளவிற்கு மீறி, பல்கி, பெருகி, வேதனையை உண்டாக்கும் போது, பெருகிய சளியை வெளியேற்றி, மீண்டும் ஒவ்வாமையினால் சளி உண்டாகாமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மஞ்சள், மிளகு, சிற்றரத்தை, பூண்டு, மல்லி, சிறிய வெங்காயம் ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகப்படுத்தும் இயற்கை உணவுகள். இவற்றை அன்றாட உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.
அடிக்கடி தோன்றும் சளித் தொல்லையை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பால், தயிர் போன்ற உணவுகளையும் நன்கு எடுக்குமளவுக்கு, நுரையீரலுக்கு வலுவை தரும் அற்புத மூலிகை கருந்துளசி.
“ஆசிமம் டெனியுபுளோரம் டைப்பிகா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும்பத்தைச் சார்ந்த கருந்துளசி செடிகளின் இலைகள் கபத்தை நீக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். சளியை கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று கருந்துளசி இலைகளை பசும்பாலில் போட்டு காய்ச்சி குடிக்க, பாலின் ஒவ்வாமையால் ஏற்பட்ட கபம் நீங்கும். இதை நீரில் போட்டு, கொதிக்கவைத்து ஆவிபிடிக்க, சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி நீங்கும். அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை, ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி, பின் இலைகளை மென்று சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகாலையில், இரண்டு முதல் நான்கு கருந்துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர ஒவ்வாமை மற்றும் கிருமித் தொற்றினால் ஏற்படும் சளித்தொல்லையிலிருந்து காத்துக் கொள்ளலாம். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலின் அபிஷேகப் பொருளான துளசியை, கபப்பொருட்களின் ஒவ்வாமையால், தோன்றும் சளித் தொல்லையை நீக்க பயன்படுத்தலாம்.

ஆசை நெருப்புகள்

புலன்கள் நெருப்பை போன்றவை. நமது வாழ்க்கையும் நெருப்பை போன்றதுதான். நெருப்பாகிய புலன்களில் எதை போட்டாலும் அவை எரிகின்றன. சில நெருப்புகள் மாசுபடுத்துகின்றன, மற்றவை நம்மை தூய்மைபடுத்துகின்றன. நெருப்பின் வகையை அடையாளம் காணக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய புலன்கள் நல்லவற்றில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் வெளிச்சத்தையும், நறுமணத்தையும் ஏற்படுத்துவீர்கள்.   மனது, உபயோகமற்ற கெட்ட பழக்கங்களில் ஊறி இருக்கும்போது, இரடு விதமான எணங்கள் ஏற்படுகின்றன. ஒன்று, பழைய வழக்கமான எண்ணங்கள். அவற்றால் நீங்கள் சோர்வடைவீர்கள். உங்களையே நீங்கள் குறை கூறி வருத்தபடுவீர்கள். இரண்டாவது, இந்த பழக்கங்களை மனக்கட்டுபாடு கொள்வதற்கு ஏற்ற சந்தர்பங்களாக நினைப்பீர்கள். புலனடக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை சுகபடாது.   உங்களால் ஒரு பழக்கத்தை விட்டு விடுபட முடியாதபோது, அந்த இயலாமை உங்களுக்கு ஒரு உறுத்தலாக இருக்கும். அதனால் ஏற்படும் வேதனையை ஆழமாக உணரும்போது அதுவே உங்களை அந்த கெட்ட பழக்கத்திலிருந்து விடுவித்துவிடும். உங்களுடைய குறை, குற்றங்களுக்காக உங்களுக்குள் வேதனை ஏற்பட்டால் நீங்கள் உண்மையை தேடுகிறீர்கள் என்று அர்த்தம். அந்த வேதனையே தீய பழக்கத்திலிருந்து உங்களை வெளிக் கொண்டு வரும்.   ஆசைகள் மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லா ஆசைகளின் இலக்கும் மகிழ்ச்சிதான். எப்போதெல்லாம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மறைந்து விடுகிறதோ, அப்போது உங்களுக்குள் ஆழ்ந்து பார்த்தால் அதுவும் ஆசையால் தான் என்பதை உணரமுடியும். நீங்கள் ஆசைகளைக் கொண்டிருக்கும்போது உண்மையான ஆனந்தம் கிடைக்காது. உண்மையில் ஆசையால் உண்மையான ஆனந்தத்தை கொடுக்க முடியாது. ஆசை என்பது மாயையின் பொய்த்தோற்றம்.   மகிழ்ச்சியான அனுபவத்தின் நினைவாலோ, அல்லது கடந்த கால மன பதிவுகளாலோ ஆசை எழுகிறது. சில மனிதர்களின் சேர்க்கையினாலோ, அல்லது சில இடங்களை பொறுத்தோ ஆசை எழுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. விதி அல்லது சந்தர்ப்பவசத்தால் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்கவேண்டியிருந்தால் அது உங்களுக்குள் ஆசையைத் தூண்டிவிடலாம். எல்லோருக்கும் ஆசை இப்படித்தான் உருவாகிறது.   சந்தேகம் என்பது மனத்தின் `இரண்டும் கெட்ட’ குழப்பநிலை. சந்தேகம் என்பது ஏதோ ஒன்றிலிருந்து விடுபட விரும்புவது. இதுவொரு தற்காலிகமான நிலை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சந்தேகம் ஏற்படும்போது மனதில் பதட்டம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் சந்தேகத்தின் இரண்டு நிலையிலும் குழம்பாமல் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொள்ளுங்கள். குழப்பமில்லாத இடத்தில் தீர்மானிக்கவும் தேவையிருக்காது. எனவே சந்தேகத்தை முழுவதுமாக ஒழித்துவிடுங்கள்.   இன்பமும், துன்பமும் நம் உடலின் அதி தீவிர உணர்ச்சிகளாகும். எப்போது நாம் இன்பம், துன்பம் இரண்டிலும் அகப்படாமல் இருக்கிறோமோ, அப்போது உண்மையாகவும், ஆத்மார்த்தமாகவும் நம் உள்ளம் இருக்கும். அனைத்து விருப்பும், வெறுப்பும், ஆசைகளும், சந்தேகங்களும் எப்பொழுது உங்களை விட்டு விலகுகின்றனவோ, அந்த நேரத்தில் இந்த உலகமே உங்களுடையதாகி விடும்.   எதற்கும் பயபடாதீர்கள். அனுபவங்களின் எண்ண பதிப்புகளே பயம். பயம் ஏற்படுவதற்கு காரணம், அன்பு தலைகீழாக மாறி விடுவதே. எனவே அன்பை பற்றி கூறபடுபவை அனைத்தையும் பயத்திற்கும் கூறலாம். ஒரு குழந்தை, தன் தாயை இறுகக் கட்டிபிடித்துக் கொள்வது, அன்பினாலோ அல்லது பயத்தினாலோ இருக்கலாம். இந்த அடிப்படை குணமான பய உணர்வை, தெய்வீகமான அன்பை உணர்வதன் முலம் முற்றிலுமாக மாற்றலாம்.   மனிதன் இயல்பை அறிவதாலும், மெய்யுணர்வு நிலையை அறிவதாலும் நிகழ்ச்சிகளை பரந்த கண்ணோட்டத்தோடு நோக்கும் விவேகத்தினாலும் குற்ற உணர்விலிருந்து விடுபட்டு மேலே எழமுடியும். உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் கற்பது என்பது அறிவாற்றலுடன் தொடர்புடையது. உறுத்தலை உணர்வது, உணர்ச்சியோடு தொடர்புடையது. உணர்ச்சியின் ஓட்டம் என்பது அறிவாற்றலை விட பலம் வாய்ந்தது.   நீங்கள் தனித்து இருக்கும்போது, கூட்டத்தில் இருப்பது போல் உணர்ந்தால், அது அறியாமை. ஆனால் எல்லோரும் ஒன்றே என்ற உணர்வுடன் கூட்டத்தில் நீங்கள் இருந்தால் அது விவேகத்தின் அடையாளம். கூட்டத்தில் இருக்கும்போதும் தனித்த உணர்வுடன் தன்னுள் தான் ஒன்றி இருப்பதுதான் ஞானசித்தி.

ஜிமெயிலில் சிக்கலாமா?

இன்று உலக அளவில் இமெயில் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதனை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். அதனை அவ்வளவாகப் பயன்படுத்தாதவர்களும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பதறிப் போய்விடுவார்கள்; அது சரியாகிக் கிடைக்கும் வரை புலம்பித் தவித்துவிடுவார்கள். ஆனால் கூகுள் மெயிலை வேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம்.
கூகுள் மெயில் மூன்று வழிகளில் இயங்குகிறது. அவை ஸ்டாண்டர்ட், எச்.டி.எம்.எல். மற்றும் மொபைல் (standard, HTML and mobile) ஸ்டாண்டர்ட் வகையில் எர்ரர் காட்டப்பட்டு பிரச்னை இருந்தாலும், மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஸ்டாண்டர்ட் வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளைகளில் எப்படி மற்ற வகைகளில் ஜிமெயிலைப் பெறலாம் என்று பார்க்கலாம்.
முதலாவதாக எச்.டி.எம்.எல். வகையில் சென்று பெறுவது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரி http://mail.google.com/mail/?ui=html இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை உங்கள் புக்மார்க் / பேவரிட் தளப் பட்டியலில் வைத்துக் கொண்டால், ஸ்டாண்டர்ட் ஜிமெயில் பிரச்னைக் குள்ளாகுகையில் இதனைப் பயன்படுத்தலாம்.
இரண்டாவதாக, கூகுள் மெயிலின் மொபைல் பதிப்பை நாடுவது. இது நம் மொபைல் போன்களுக்கானது. இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இதனைப் பெற உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும். இதன் வடிவமும் எலும்புக் கூடு போலக் காட்சி அளிக்கும். ஆனால் இது டெக்ஸ்ட் மட்டுமே காட்டுவதால், விரைவில் உங்கள் மெயில்கள் கிடைக்கும். இதனைப் பார்த்து நீங்கள் அசௌகரியப்பட்டால், ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறலாம். இதனைப் பெற http://mail.google.com/mail/x/gdlakb/gp/ / என்ற முகவரியினை டைப் செய்திடவும். இறுதியாக நமக்குக் கிடைக்கும் ஐகூகுள் வசதி. நீங்கள் igoogle பயன்படுத்தாதவராக இருந்தாலும் அதன் தளத்தின் மூலம் ஜிமெயில்களைப் பெறலாம். இன்னும் சொல்லப் போனால், ஐ கூகுள் தளத்தில் மூலம் நீங்கள் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் காண முடியும். ஜிமெயில் மட்டுமே பயன்படுத்தும் அனைவருக்கும் ஐ கூகுள் மிகச் சிறந்த தளமாகும். இதனைப் பெற http://www.google.com/ig/gmailmax என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். மேலே காட்டப்பட்டுள்ள நான்கு வழிகளிலும் நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பெறலாம். சரி, இந்த நான்கு வழிகளிலும் பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது? உங்கள் டெஸ்க் டாப் மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் நமக்கு இந்த வகையில் உதவிடும். ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம் உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை http://mail.google.com/support /bin/answer.py?hl=en&answer=12103 என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் உங்களுக்குப் படிப்படியாக விளக்கும். எனவே ஜிமெயில் என்றைக்கும் எப்போதும் கை கொடுக்கும் என்பதே இன்றைய நிலை.

பனிக்காலத்தில் உடலை பாதுகாப்பது எப்படி?


மார்கழி மாதத்தில் பெய்யும் பனியினால் பல நோய்கள் நம்மை தாக்குகின்றன. சூரிய ஔ குறைவான நேரமே இருப்பதால் சூடு சற்று குறைவாகவே இருக்கும்.

நம்மை சுற்றியுள்ள காற்று மண்டலத்தில் பல நோய்கிருமிகள் இருக்கின்றன. இவை இயற்கையான சூரிய ஒளியின் வெப்பத்தால் அழிந்து விடுகின்றன. சூரிய ஒளியின் வெப்பம் குறைவாக இருப்பதால் நோய்கிருமிகள் வீரியம் அதிகம் பெற்று அதிலும் குறிப்பாக “வைரஸ்” நோய் கிருமிகள் அதிகம் தாக்கக்கூடும்.

இந்த பனிக்காலத்தில்தான், நெஞ்சில் சளி, தொடையில் டான்ஸில் வீக்கம், இருமல், ஆஸ்துமா போன்ற முச்சுத்திணறல் நோய்கள் அதிகரிக்கின்றன. இன்னும் இன்புளுயன்ஸா காய்ச்சல், நிமோனியா ஜூரம், ஒற்றைத் தலைவலி ஆகிய பல வியாதிகள் காணப்படுகிறது. அதோடு இந்த மாதிரியான பனிக்காலத்தில் பலருக்கும் ஜீரண சக்தி குறைவாக ஆகி விடுகிறது.

காற்றில் பிராணவாயு குறைவாக இருப்பதால் முச்சிறைப்பு நோய் அதிகம் வாட்டும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, கை, கால் குடைச்சல், எரிச்சல் போன்றவைகளும் ஏற்படலாம். சிலருக்கு வாந்தி, பேதி, மஞ்சள்காமாலை, டைபாய்டு போன்ற வியாதிகள் வரும். தற்போது வெகுவாக பரவி வரும் சிக்குன்குனியா, ஜப்பான் ஜூரம், முளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், போன்றவைகள் மாசு படிந்த காற்றில் உள்ள நோய் கிருமிகளால் இந்த பனிக்காலத்தில் அதிகம் தோன்றுகின்றன.

சரி, நம் உடலை எப்படி பாதுகாப்பது?

1. நல்ல காற்றோட்டமான இடங்களில் இருங்கள்.

2. வெதுவெதுபான சுடுதண்ணீரில் குளிக்கவும்.

3. பனி பொழியும் அதிகாலையிலும், பின் இரவுகளிலும், வெளியில் செல்லும்போது காதுக்கு பஞ்சு வைத்துக் கொண்டு, பனிக்குல்லாய் போட்டுக் கொள்ளுங்கள்.

4. முக்கை கைகுட்டையால் முடிக் கொள்ளுங்கள்.

5. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கடிபாக தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள்.

6. இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது வாயைத் திறந்து பேசிக்கொண்டே வண்டி ஓட்டாதீர்கள்.

7. தும்மும் போதும் இருமும் போதும் சிறு துகள்களாக வெளியே வரும் எச்சிலிலும், முக்கிலிருந்து வடியும் நீரிலும் அதிக அளவு நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும். இவை உடனே அருகில் இருக்கும் நபர்களைத் தாக்கி பரவும். மற்றவர்கள் நலன் கருதி, கைகுட்டை, கைதுண்டு இல்லாமல் இருக்காதீர்கள்.

பொதுவாக மழைக்காலம் முடிந்து, பனிக்காலம் வருவதால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கும். இதற்காக கொசுவிரட்டிகள் வைத்தால் அதன் புகையாலும், நெடியாலும் சுவாசக் கோளாறுகள் ஏற்படும்.

கம்பளியினாலான கையுறை அணியுங்கள். மாலை ஆனதும் காலுறை அணியுங்கள். சற்று இறுக்கமான ஆடைகள் அணிந்து கொள்ளுங்கள்.

மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் எதையும் சாப்பிடாதீர்கள்.

பனிக்காலத்தில் அதிகம் மசால் சேர்த்த உணவுகளைத் தவிர்த்து விடுங்கள். காரம், புளிப்பு இவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். குடிக்க, குளிக்க வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரை பயன்படுத் துங்கள்.

பன், பிரெட் போன்ற பேக்கரி ஐட்டங்களையும், சுவீட்களையும் வாங்கிய அன்றே உண்ண வேண்டும். இல்லையெனில் அதன் மேல் உருவா கும் பூஞ்சக்காளான்களால் வாந்தி,பேதி உண்டாகும்.

பொதுவாக பனிக்காலத்தில் தோல் வறண்டு விடும்.

உதடுகள் வெடிக்காமலிருக்க வெண்ணெய், நெய், கிளிசரின், பாலேடு, லிகார்டு போன்றவற்றை உதட்டில் பூசலாம்.

பனிக்காலத்தில் வியர்வை குறைவாக இருக்கும். அதனால் சிறுநீர் அடிக்கடி செல்ல வேண்டியிருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு முறையும், சிறுநீர் கழித்த பின்னர் உடலை சுத்தபடுத்திக் கொள்ள பழக்குங்கள். முச்சுபயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 45 நிமிடங்கள் ஒதுக்குங்கள்.

காது குடையும் பழக்கம் ஆபத்தானதா?


நம்மில் பலரிடம் பொதுவாகக் காணப்படும் பழக்கம், காது குடைவது. சிலர் காது குடைவதில் அலாதி சுகம் காண்கின்றனர்.
இந்த பழக்கம் நல்லதா? அல்லது இதனால் ஏதேனும் கேடு ஏற்படுமா?

ஐம்புலன்களில் ஒன்று செவிப்புலன். காது மனிதனுக்கு மிகவும் முக்கியமான உறுப்பாகும். காதின் உள்ளே செல்லும் குழாயில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சுரப்பிகள் உள்ளன. இவை சுரக்கும் மெழுகு போன்ற திரவம் தான் காதிற்குள் தூசி, அழுக்கு செல்லாமல் பாதுகாக்கிறது.

காதின் நடுவில் மெல்லிய ஜவ்வு போன்ற தடுப்பு உள்ளது. இது செவிப்பறையாகும். இது தான் காற்றில் வரும் ஒலி அதிர்வுகளை வாங்கி உள்ளே அனுப்புகிறது.

சிலர் காதிற்குள் ஹேர்ப்பின், தீப்பெட்டிக் குச்சி போன்றவற்றால் குடைவார்கள். இது செவிப்பறையில் பட்டால், ஜவ்வில் ஓட்டை விழுந்து கிழிந்து விட வாய்ப்புள்ளது. எனவே இத்தகைய பழக்கம் காதுக்கு ஆபத்தாக முடியும்.

காது ஒரு மெல்லிய உறுப்பு. இதை பத்திரமாகப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

தம்பதியர் ஒற்றுமை! (ஆன்மிகம்) ஜன., 30 – தைப்பூசம்!

ஜன., 30 – தைப்பூசம்!

தம்பதியர் ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகக் கொண்டாடப்படும் விழா தைப்பூசத்திருநாள். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் தனித்து நடனமாடுவார் சிவபெருமான். நடன நிலையிலுள்ள சிவனை, “நடராஜர்’ என்று அழைக்கிறோம். தைப்பூசத் திருநாளில் அவர் உமாதேவியுடன் இணைந்து நடனமாடுகிறார். சிவனின் இந்த நிலையை, “உமா மகேஸ்வரர்’ என்பர். அவன் அசைந்தால் தான் உலகம் அசையுமென்ற நியதியை எடுத்துச் சொல்வதே நடன தத்துவம். ஐந்துவித தொழில்களை நடத்துகிறான் இறைவன். அவை: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல். இதன் மூலம் அவன் உலக உயிர்களுக்கு சொல்வதைக் கேளுங்கள்.
“உயிர்களே… நான் ஆடுகிறேன் என்றால், நீங்களும் ஆடுகிறீர்கள். இந்த ஆட்டத்தின் போது உங்களை நான் படைக்கிறேன். படைத்த உங்களைக் காப்பதற்காக எல்லா வசதிகளையும் இந்த உலகத்தில் தந்துள்ளேன். உங்கள் வாழ்வை முடிப்பவனும் நானே. முற்பிறவியில் நீங்கள் செய்த செயல்களை மறைத்து, அதற்குரிய பலனை மட்டும் அனுபவிக்கச் செய்யும் மறைத்தல் (மறக்கச் செய்தல்) தொழிலைச் செய்கிறேன். உங்களை பிறவியில்லா நிலைக்கு ஆளாக்கி, என்னுடன் கலக்க அருளுகிறேன். இவற்றையே நான் துணைவியுடன் இணைந்தாடும் ஆட்டத்தில் வெளிப்படுத்துகிறேன்…’ என்கிறான். இந்த உலகத்தை இறைவனும், இறைவியும் சேர்ந்து இயக்குகின்றனர் என்பதையும் இந்த நாட்டியம் உணர்த்துகிறது. உலகத்தை இயக்க எப்படி இந்த தம்பதியர் இணைந்திருக்கின்றனரோ, அதுபோல ஆணும், பெண்ணும், பிற உயிர்களும், தங்கள் குடும்பத்தை இயக்க தம் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்பட வேண்டும். கருத்தொருமித்து செயல்பட்டால், வாழ்க்கை வெற்றிப்பாதையை நோக்கிச் செல்லும்; குடும்பம் நல்ல முறையில் இயங்கும் என்பதையும் இது வெளிக்காட்டுகிறது.
உயிர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் இந்த நடனத்தை தன் தேவியுடன் இணைந்து நடத்த அவன் தேர்ந்தெடுத்த நட்சத்திரம் பூசம். பூசம் ஒரு உயர்ந்த நட்சத்திரம். தை மாதம், சூரியன் மகர வீட்டிலும், தைப்பூச நாளில் அவருக்குரிய சொந்த வீடான கடகராசியிலும் சஞ்சரிக்கிறார். அப்போது சூரியனின் ஏழாம் பார்வை சந்திரன் (கடகம்)வீட்டிலும், சந்திரனின் ஏழாம் பார்வை மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்தநிலை.
சூரியனால் ஆத்மபலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. எனவே, இதை வழிபாட்டுக்குரிய நாளாக தேர்வு செய்தனர். மேலும், சூரியன் சிவாம்சம்; சந்திரன் சக்தியின் அம்சம். எனவே தான் இருவரும் இணைந்து நடனமாடுவதாக ஐதீகம். இந்நாளில் சிவாலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. குறிப்பாக, தீர்த்தங்கள், ஆறுகளில் நீராடி சிவவழிபாடு செய்யும் தலங்களில் அம்பாளையும், சுவாமியையும் வழிபட்டால் விரும்பியவை நடக்கும்.
முருகப்பெருமானுக்கும் பூசம் உகந்தது. அவர் பூச நட்சத்திரத்தில் தான் வள்ளியை மணந்து கொண்டார். இந்நாளில் முருகனுக்கு காவடி எடுப்பதுண்டு. அகத்தியர் தந்த சிவகிரி, சக்திகிரி என்ற மலைகளை காவடி போல் கட்டி தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன். அவனை தடுத்து நிறுத்தி, அந்த மலைகளை ஆட்கொண்டார் முருகபெருமான். “மலை போன்ற துன்பங்கள் உனக்கு வரலாம்; ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்து விடு. நீ உன் பாதையில் செல்…’ என்பதே காவடி தத்துவம். இதற்காகத்தான், முருகன் கோவில்களில் பக்தர்கள் காவடி எடுப்பர்.
தைப்பூசம் நன்னாளில் தம்பதி சமேதரராக சிவாலயங்களுக்கும், முருகன் கோவில்களுக்கும் சென்று, எந்த சந்தர்ப்பத்திலும் பிரியாத வரம் வேண்டி வருவோம்.

பாதஹஸ்தாசனம்

பாதங்கள் சேர்த்து நிமிர்ந்து நிற்கவும். மூச்சை வெளியே விட்டபடி உடலைத் தளர்த்திக் குனிந்து கைகளால் கால்களின் பெருவிரலைப் பிடித்துக் கொள்ளவும். முழங்கால் கொஞ்சமும் வளையக் கூடாது. கால்களை விறைப்பாக வைத்துக் கொள்ளவும். முகத்தை முழங்காலை நோக்கி அணுகச் செய்யவும். ஆரம்பத்தில் கால் விரலைப் பிடிக்க வராது. கைகளை இரு கால்களில் முழங்காலுக்குப் பின்னால் கட்டி, கிட்டிபோட்டு முகத்தை காலுக்குள் தொட முயற்சிக்க வேண்டும். ஓரிரு வாரங்களில் படத்தில் காட்டியபடி முழுநிலை அடையலாம். ஒரு முறைக்கு 10 முதல் 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.

பலன்கள்:

முதுகுத் தசைகள் நன்றாக இளக்கப்பட்டு பலம் பெறும். அடிவயிற்று உறுப்புகள் அழுத்தப்பட்டு புத்துணர்வு பெறும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லா நோயும் நீங்கும்.

நீரிழிவு, மலட்டுத்தனம், வயிற்றுவலி, அஜீரணம், தலைவலி, மூலக்கடுப்பு, முதுகுவலி, இடுப்பு வலி, நரம்பு பலவீனம், இரத்த வியாதி, பசியின்மை, மலேரியா கட்டி, பித்த சோகை, வாதங்கள், மாதவிடாய் சம்பந்தமான நோய் நீங்கும். இளமை உண்டாகும்.