ஆசை நெருப்புகள்

புலன்கள் நெருப்பை போன்றவை. நமது வாழ்க்கையும் நெருப்பை போன்றதுதான். நெருப்பாகிய புலன்களில் எதை போட்டாலும் அவை எரிகின்றன. சில நெருப்புகள் மாசுபடுத்துகின்றன, மற்றவை நம்மை தூய்மைபடுத்துகின்றன. நெருப்பின் வகையை அடையாளம் காணக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய புலன்கள் நல்லவற்றில் ஈடுபட்டிருந்தால், நீங்கள் வெளிச்சத்தையும், நறுமணத்தையும் ஏற்படுத்துவீர்கள்.   மனது, உபயோகமற்ற கெட்ட பழக்கங்களில் ஊறி இருக்கும்போது, இரடு விதமான எணங்கள் ஏற்படுகின்றன. ஒன்று, பழைய வழக்கமான எண்ணங்கள். அவற்றால் நீங்கள் சோர்வடைவீர்கள். உங்களையே நீங்கள் குறை கூறி வருத்தபடுவீர்கள். இரண்டாவது, இந்த பழக்கங்களை மனக்கட்டுபாடு கொள்வதற்கு ஏற்ற சந்தர்பங்களாக நினைப்பீர்கள். புலனடக்கம் இல்லாவிட்டால் வாழ்க்கை சுகபடாது.   உங்களால் ஒரு பழக்கத்தை விட்டு விடுபட முடியாதபோது, அந்த இயலாமை உங்களுக்கு ஒரு உறுத்தலாக இருக்கும். அதனால் ஏற்படும் வேதனையை ஆழமாக உணரும்போது அதுவே உங்களை அந்த கெட்ட பழக்கத்திலிருந்து விடுவித்துவிடும். உங்களுடைய குறை, குற்றங்களுக்காக உங்களுக்குள் வேதனை ஏற்பட்டால் நீங்கள் உண்மையை தேடுகிறீர்கள் என்று அர்த்தம். அந்த வேதனையே தீய பழக்கத்திலிருந்து உங்களை வெளிக் கொண்டு வரும்.   ஆசைகள் மகிழ்ச்சியை அளிக்கிறது. எல்லா ஆசைகளின் இலக்கும் மகிழ்ச்சிதான். எப்போதெல்லாம் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மறைந்து விடுகிறதோ, அப்போது உங்களுக்குள் ஆழ்ந்து பார்த்தால் அதுவும் ஆசையால் தான் என்பதை உணரமுடியும். நீங்கள் ஆசைகளைக் கொண்டிருக்கும்போது உண்மையான ஆனந்தம் கிடைக்காது. உண்மையில் ஆசையால் உண்மையான ஆனந்தத்தை கொடுக்க முடியாது. ஆசை என்பது மாயையின் பொய்த்தோற்றம்.   மகிழ்ச்சியான அனுபவத்தின் நினைவாலோ, அல்லது கடந்த கால மன பதிவுகளாலோ ஆசை எழுகிறது. சில மனிதர்களின் சேர்க்கையினாலோ, அல்லது சில இடங்களை பொறுத்தோ ஆசை எழுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. விதி அல்லது சந்தர்ப்பவசத்தால் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்கவேண்டியிருந்தால் அது உங்களுக்குள் ஆசையைத் தூண்டிவிடலாம். எல்லோருக்கும் ஆசை இப்படித்தான் உருவாகிறது.   சந்தேகம் என்பது மனத்தின் `இரண்டும் கெட்ட’ குழப்பநிலை. சந்தேகம் என்பது ஏதோ ஒன்றிலிருந்து விடுபட விரும்புவது. இதுவொரு தற்காலிகமான நிலை என்பதை புரிந்து கொள்ளுங்கள். சந்தேகம் ஏற்படும்போது மனதில் பதட்டம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் சந்தேகத்தின் இரண்டு நிலையிலும் குழம்பாமல் ஏதாவது ஒன்றை ஏற்றுக் கொள்ளுங்கள். குழப்பமில்லாத இடத்தில் தீர்மானிக்கவும் தேவையிருக்காது. எனவே சந்தேகத்தை முழுவதுமாக ஒழித்துவிடுங்கள்.   இன்பமும், துன்பமும் நம் உடலின் அதி தீவிர உணர்ச்சிகளாகும். எப்போது நாம் இன்பம், துன்பம் இரண்டிலும் அகப்படாமல் இருக்கிறோமோ, அப்போது உண்மையாகவும், ஆத்மார்த்தமாகவும் நம் உள்ளம் இருக்கும். அனைத்து விருப்பும், வெறுப்பும், ஆசைகளும், சந்தேகங்களும் எப்பொழுது உங்களை விட்டு விலகுகின்றனவோ, அந்த நேரத்தில் இந்த உலகமே உங்களுடையதாகி விடும்.   எதற்கும் பயபடாதீர்கள். அனுபவங்களின் எண்ண பதிப்புகளே பயம். பயம் ஏற்படுவதற்கு காரணம், அன்பு தலைகீழாக மாறி விடுவதே. எனவே அன்பை பற்றி கூறபடுபவை அனைத்தையும் பயத்திற்கும் கூறலாம். ஒரு குழந்தை, தன் தாயை இறுகக் கட்டிபிடித்துக் கொள்வது, அன்பினாலோ அல்லது பயத்தினாலோ இருக்கலாம். இந்த அடிப்படை குணமான பய உணர்வை, தெய்வீகமான அன்பை உணர்வதன் முலம் முற்றிலுமாக மாற்றலாம்.   மனிதன் இயல்பை அறிவதாலும், மெய்யுணர்வு நிலையை அறிவதாலும் நிகழ்ச்சிகளை பரந்த கண்ணோட்டத்தோடு நோக்கும் விவேகத்தினாலும் குற்ற உணர்விலிருந்து விடுபட்டு மேலே எழமுடியும். உங்கள் தவறுகளிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொள்ள முடியும். ஆனால் கற்பது என்பது அறிவாற்றலுடன் தொடர்புடையது. உறுத்தலை உணர்வது, உணர்ச்சியோடு தொடர்புடையது. உணர்ச்சியின் ஓட்டம் என்பது அறிவாற்றலை விட பலம் வாய்ந்தது.   நீங்கள் தனித்து இருக்கும்போது, கூட்டத்தில் இருப்பது போல் உணர்ந்தால், அது அறியாமை. ஆனால் எல்லோரும் ஒன்றே என்ற உணர்வுடன் கூட்டத்தில் நீங்கள் இருந்தால் அது விவேகத்தின் அடையாளம். கூட்டத்தில் இருக்கும்போதும் தனித்த உணர்வுடன் தன்னுள் தான் ஒன்றி இருப்பதுதான் ஞானசித்தி.

%d bloggers like this: