வாடிக்கையாளரின் வசதிக்கேற்ப அடுக்குமாடிக் குடியிருப்புகள்!

வீடு, அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவனங்கள் தற்போது ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன- ஒவ்வொரு வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பங்கள், தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. குறிப்பாக ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகளை உருவாக்கிவரும் நிறுவனங்கள் தனிப்பட்ட வாடிக்கையாளரின் விருப்பங்களுக்கு அதிக மதிப்பளிக்க அளிக்க ஆரம்பித்திருக்கின்றன.

`சானிட்டரிவேர்’, சமையலறை உபகரணங்கள், அலங்கார விளக்குகள், மரப் பொருட்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் தற்போது தங்கள் விருப்பம்போல் தேர்வு செய்ய அனுமதிக்கின்றன சில நிறுவனங்கள். இதனால், அடுக்குமாடிக் குடியிருப்பு அல்லது ஒரே நிறுவனத்தால் கட்டி விற்கப்படும் வரிசையான வீடுகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்ற நிலை மாறி வருகிறது.

குடியிருப்புகளின் வெளித்தோற்றம் ஒரே மாதிரி இருந்தாலும் உள்ளே நிறைய மாறியிருக்கும்.

ஒரு முன்னணி குடியிருப்பு நிறுவனமானது, வாடிக்கையாளர்கள் தத்தமது வீட்டு உள்ளமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்குக் கட்டிட வடிவமைப்பாளர்களின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. குளியலறை அமைப்புகள், தளம், அமைப்பில் சிறு சிறு மாற்றங்களைச் செய்துகொள்ளலாம்.

“ஒரு தனித்தன்மையான வசிப்பிட அனுபவத்தைக் கொடுப்பதுதான் எங்கள் எண்ணம். எனவே ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனை, விருப்பங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம்” என்று ஓர் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு நிறுவனத்தின் முதுநிலை அலுவலர் தெரிவிக்கிறார்.

இதே போன்ற வசதியை மற்றொரு முன்னணி வீட்டு வசதி நிறுவனம் அளிக்கிறது. “வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வகையில் நாங்கள் நான்கு விதமான உள்ளமைப்பு வடிவங்களை வழங்குகிறோம்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஹேமந்த் ஷா தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் இந்த யோசனைக்கு வரக் காரணம், எங்கள் நிறுவனத்தின் குடியிருப்புத் திட்டங்களில் வீடு வாங்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட, மகிழ்ச்சிகரமான அனுபவமாக அது இருக்க வேண்டும் என்பதுதான்” என்கிறார்.

அதேநேரம் இத்துறை நிபுணர்கள், “வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுக்கும் அதேவேளையில், தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தாங்கள் கோரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறார்களா என்று மட்டும் பார்க்காமல் வாடிக்கையாளர்களும் தரத்தில் கவனமாக இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கைக் குறிப்பை அளிக்கின்றனர்.

பெருநகரங்களில் பெருமளவில் குடியிருப்புகளை உருவாக்கிவரும் மற்றொரு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது வீட்டின் உள்ளமைப்பை மாற்றியமைக்க வேண்டியிருக்கிறது. அதனால் செலவு அதிகரிக்கிறது. ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் `பிளாட்’ வாங்குவோருக்கு சிறிது தொகை உயர்ந்தால் கவலை ஏற்படாது இருக்கலாம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரை அப்படிக் கூற முடியாது. அவர்களைப் பொறுத்தவரை முதலாவதும், முக்கியமானதுமான விஷயம் விலைதான்” என்கிறார்.

சிங்கப்பூரை இருப்பிடமாகக் கொண்ட மற்றொரு நிறுவனம் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினருக்கான குடியிருப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. அந்நிறுவனம் நடுத்தட்டு மக்களுக்கும் தனிப்பட்ட விருப்பத்தின்படி மாற்றங்களைச் செய்துகொடுக்க முடிவெடுத்திருக்கிறது.”நாங்கள், முன்னதாக வடிவமைக்கப்பட்ட திட்டமிடப்பட்ட `பிளாட்’களை கட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட தளமாகப் பிரித்து விற்பனை செய்வோம். அங்கே எத்தனை அறைகள், எங்கே, எந்த அளவில் வர வேண்டும் என்று வாடிக்கையாளரே முடிவெடுத்துத் தெரிவிக்கலாம்” என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஷீஸ் பல்லா தெரிவிக்கிறார்.

தற்போது புதுடெல்லி அருகே குர்கானில் 5 ஆயிரம் வீடுகளைத் தயார் செய்திருக்கும் இந்நிறுவனம், இவற்றுக்கு நல்ல கிராக்கி இருப்பதாகக் கூறுகிறது. இவற்றின் விலை சதுர அடிக்கு 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் வரையாக உள்ளது. “வடிவமைப்பை வாடிக்கையாளர்கள் தங்கள் இஷ்டப்படி மாற்றிக்கொள்ளலாம் என்பதுதான் எங்களின் தனிப்பட்ட சிறப்பம்சம்” என்று கூறுகிறார் பல்லா.

`பிளாட்’களின் சராசரி அளவு சமீபத்திய வருடங்களில் குறைந்து கொண்டே வருகிறது. `பிளாட்’ அளவிலும் வாடிக்கையாளர்களுக்கு `சாய்ஸ்’ வழங்கப்படும் என்று இந்நிறுவனம் கூறுகிறது. வாடிக்கையாளர் தேவைக்கேற்ப மாற்றம் செய்யும் `டிரெண்ட்’ ஏறக்குறைய எல்லா குடியிருப்பு நிறுவனங்களையும் தொற்றிக் கொண்டுள்ளது என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம் வேறு சில நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்குத் தாங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று தெரிவிக்கின்றன. அது மாதிரியான எந்தத் திட்டமும் தங்களுக்கு இல்லை என்று நடுத்தர மக்களுக்கான குடியிருப்பு வசதிகளில் கவனம் செலுத்திவரும் ஒரு நிறுவனத்தின் திட்டமிடல் மேலாளர் ஆர். நாகராஜு தெரிவிக்கிறார். அவ்வாறு மாற்றம் செய்வதன் லம் விலை ஏறிவிடக் கூடாது என்பதில் குறிப்பிட்ட நிறுவனங்கள் கவனமாக இருக்கின்றன என்பது தெரிகிறது

%d bloggers like this: