சருமத்தை அழகாக்கும் உணவுகள்

செயற்கையாக தயாரிக்கப்பட்ட கிரீம்களைக் கொண்டுதான் சருமத்தை அழகாக்க வேண்டும் என்பது இல்லை. இயற்கையில் கிடைக்கும் உணவு வகைகளை தொடர்ந்து உட்கொண்டு வந்தாலே சருமத்தை அழகாக வைத்துக்கொள்ளலாம். அதற்கு சில டிப்ஸ் : கீரைகளில் இல்லாத சத்துக்களே கிடையாது. உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கு அது மிகவும் முக்கியமாகிறது. அதனால் எல்லா வகை கீரைகளையும் ஒரு பிடி பிடிக்கலாம். குறிப்பாக, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு மற்றும் துத்தநாகச் சத்து இருக்கிறது. இந்த கீரைகளுடன் விட்டமின் – சி சத்துள்ள உணவுகளை சேர்த்து சாப்பிடும்போது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும். இதன் முலம் கண்களில் கருவளையம் ஏற்படுவதை தவிர்க்கலாம். முகத்தில் பருக்கள் வருவதும் குறையும். அதிகமாக வறண்ட சருமம் கொண்டவர்கள், உணவில் கொழுப்புச்சத்து நிறைந்த ஆலீவ் ஆயில், நல்லெண்ணெய், கடலை எண்ணெய், நெய் உணவுகளை உடல் நலனுக்கு ஏற்ற வகையில் சேர்த்துக்கொள்ளலாம். ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் தக்காளியில் ஆண்டி ஆக்ஸிடெண்ட்களான வைட்டமின் – ஏ மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் தக்காளியை அடிக்கடி சேர்த்து வந்தால் தோல் மினுமினுப்பாவதுடன், சருமம் கருப்பாவதையும் தடுக்கலாம். சிலருக்கு இளமையிலேயே முதுமை தோற்றம் வந்து விடுகிறது. இதை தவிர்க்க விரும்புபவர்கள், ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரி பழங்களையோ அல்லது 3 நெல்லிக்காயையோ தொடர்ந்து சாப்பிடவும். இதன் முலம் இளமை அழகுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். இளமை அழகையும் தக்க வைத்துக்கொள்ளலாம்.

%d bloggers like this: