Daily Archives: ஜனவரி 31st, 2010

‘நோ பேன்ட் டே!’ -பேன்ட் இல்லாமல் பயணம்

நீங்கள் எப்போதாவது வெளிநாட்டுக்கு போனால், அங்கு ரயில்களில், பொது இடங்களில் பேன்ட் இல்லாமல், மேல் சட்டை, ஷூ மட்டுமே அணிந்து ஆண்களும், பெண்களும் செல்கின்றனர் என்றால் பயந்து விடாதீர்கள். அன்றைய தினம்,”நோ பேன்ட் டே’யாக இருக்கலாம்.
எல்லா நாளும் உர்ர்ர்…என்று இருந்தாலும், சிரிப்பே சிந்தாமல் இருந்தாலும், அன்று ஒரு நாளாவது சந்தோஷத்தை முழுமையாக பகிர்ந்து கொள்ளவே இந்த நாளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கொண்டாடுகின்றன.
மேற்கத்திய பணக்கார நாடுகளில் சில விசித்திரமான, “நாள்’களும் கொண்டாடப் படுகின்றன. வெறும் குஷிக்காக மட்டுமே கொண்டாடப்படும் நாட்களில் ஒன்று தான் இந்த, ” நோ பேன்ட் டே!’ பணக்கார நாடுகளின் தீபாவளி என்று கூட சொல்லலாம். அன்று விடுமுறை விடப்படுகிறது.
விமான, ரயில், பஸ் நிலையங்கள், பாதாள ரயில் நிலையம், பூங்காக்கள், மைதானங்களில்… இப்படி பொது இடங்களில், “நோ பேன்ட் டே’ விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பல அமைப்புகள் விழாக்களுக்கு ஏற்பாடு செய்கின்றன. அதுபோல, ஓட்டல்களும், சுற்றுலா நிறுவனங்களும், “ஈவன்ட்’ மேலாண்மை நிறுவனங்களும், “தண்ணி’ பார்ட்டி உட்பட எல்லா வித கேளிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்கின்றன. ஆனால், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யாரும், பேன்ட் அணியவே கூடாதுங்கோ.
கடந்த, 1986 ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆரம்பித்த இந்த, “நோ பேன்ட் டே’ ஆப்ரிக்க நாடுகள் வரை பரவிவிட்டது. மே மாதம் முதல் சனிக்கிழமையில் தான் இந்த நாள் முதன் முதலில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால், போகப்போக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தங்களுக்கு வசதியான நாளில் கொண்டாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த, “நோ பேன்ட் டே’யின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது தான், “நோ பேன்ட் சப்வே ரைடு’ என்ற நாள். இதுவும் முதன் முதலில் நியூயார்க் நகரில் ஆரம்பித்தது; இப்போது பிரிட்டன், சுவீடன் உட்பட பல பணக்கார நாடுகளில் பெரும்பாலும் இளைஞர் திருவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில், “பாதாள ரயில்களில் பேன்ட் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்; இதற்காக, பல அமைப்புகள் விருந்துகள், கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. அன்று, குறிப்பிட்ட பாதாள ரயில் நிலையத்தில், காதல் ஜோடிகள் குவிகின்றன; சிலர் குடும்பம், குடும்பமாகவும் குவிந்து விடுகின்றனர்.
பாதாள ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தவுடன், பாதாள ரயிலில் ஏறிக்கொள்வர். ஏறியவுடன், ஒரு அலாரம் அடிக்கும். அப்போது, எல்லாரும் பேன்ட்டை அவிழ்த்து விட வேண்டும். ஆண்களும் சரி, பெண்களும் சரி, கால் சட்டையை கழற்றி விட்டு ஆடலாம்; பாடலாம்; கும்மாளம் அடிக்கலாம். ரயிலில் ஒரே குஷி கோஷம் தான்.
ஒரு பக்கம் இசைக்கருவிகளுடன், வித, விதமான டிசைன்களில் தலைமுடியை கத்தரித்துக் கொண்டு இளைஞர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பர்; இன்னொரு பக்கம், வயதானவர்கள், பேன்ட்டை கழற்றி விட்டு, “பெக்’ அடித்தபடி உட்கார்ந்திருப்பர். வழக்கமாக, பணக்கார நாடுகளில் பாதாள ரயில்களில் கூட்டமே இருக்காது; ஆனால், அன்று மட்டும் இரவு வரை இப்படி கூட்டம் குவிந்திருக்கும்.
“இந்த சந்தோஷம் மற்ற நாட்களிலும் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த, “நோ பேன்ட் டே’யை கொண்டாடுகிறோம். இதுவரை எட்டாண்டுகள் கடந்துவிட்டன. நாங்கள், காதலர்களாக இருந்த போதே இதில் பங்கேற்று வருகிறோம்!’ என்று கால் சட்டை இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஜோடி கூறியது.
“நல்ல நோக்கத்துக்கு தான் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இப்போ தெல்லாம் எய்ட்ஸ் உட்பட தொற்று நோய் பரவுவது பொது இடங்களில்தான்; அதனால் தான், இப்போதெல்லாம் நான் பங்கேற்பதை விட்டுவிட்டேன்…’ என்றும் இளைஞனாக இருந்து நடுத்தர வயதுக்கு வந்து, மருத்துவ ஆராய்ச்சியாளராக இருக்கும் மாட் ஜெர்னட் கூறினார்.
காதலர் தினம் போல, இந்த கண்றாவி கொண்டாட்டமும், இந்தியாவுக்குள் வந்தாலும் வந்துவிடும். எதற்கும் தயாராக இருந்து கொள்ளுங்கள்.

வந்துவிட்டது செயற்கை கணையம்!

குழந்தைப்பருவத்தில் வரும் சர்க்கரை நோயை “டயபடீஸ் டைப் 1 என்பர். பெரியவர்களுக்கு ஏற்படும் “டயபடீஸ் டைப் 2′ ஐ விட இது மோசமானது.
இந்தியாவில், சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்ட பெரியவர்களைவிட, குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வருவது அடுத்த 15 ஆண்டில் பல மடங்கு அதிகரித்துவிடும்; உலகிலேயே இந்தியாவில் தான் சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகள் அதிகம் என்று சர்வதேச சர்வே ஒன்று இப்போதே எச்சரித்துள்ளது.
நம் உடலில், நரம்புகள், தசைகள், ரத்த ஓட்டம், எலும்புகள் செயல்பட, முக்கிய உறுப்புகள் இயங்க, எரிசக்தி முக்கியம். உணவுப் பொருட்களில் இருந்து எரிசக்தி கிடைக்கிறது. இந்த எரிசக்தி குறைவாக இருந் தாலும், அதிகமாக இருந் தாலும் ஆபத்து தான். இந்த எரிசக்தி தான் சர்க்கரை என்று சொல்லப்படுகிறது. சத்துள்ள உணவை சாப்பிடாவிட்டால், சக்தி குறைந்துவிடும்; அப்போது, உடலில் ரத்தசோகை உட்பட சில கோளாறுகள் வரும்.
எரிசக்தி அதிகமாகி விட்டால், அதை கட்டுப்படுத்துகிறது இன்சுலின் சுரப்பி. உடலில் இரைப்பை எனப்படும் கணையத்தில் இன்சுலின் சுரப்பி உள்ளது. நாம் சாப்பிட்டவுடன், இந்த சுரப்பி இயங்கி, சர்க்கரையை தேவைக்கு பயன்படுத்தி, அதை பிரித்து உடலில் முக்கிய உறுப்புகளுக்கும், ரத்தத்துக்கும் அனுப்புகிறது; அதிகமாக உள்ள சர்க்கரையை கழிவாக வெளியேற்றுகிறது. இப்படி ஆக்கலும், அழித் தலுமான பணிகளை செய்யும் இன்சுலின் சுரப்பியில் கோளாறு ஏற்பட்டால் சிக்கல் தானே… அப்போது, சர்க்கரை அளவில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
டயபடீஸ் டைப் 1 என்பது, கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பி அறவே வேலை செய்யாத நிலையில் ஏற்படும் சர்க்கரை நோய். குழந்தைகளுக்கு தான் இது வரும்; அதனால், 24 மணி நேரமும் குழந்தைகளை கண்காணித்த படியே இருக்க வேண்டும்;
ஒரு பக்கம் கண்காணித்து,இன்னொரு பக்கம், தேவைப்பட்டால் இன்சுலின் மருந்து செலுத்த வேண்டும்.
இதை தடுக்கவே, “ஜுவனைல் டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன்’ பல ஆய்வுகளை செய்து வருகிறது. அதன் வளர்ச்சி தான், செயற்கை கணையம் உருவாக்கும் திட்டம். இந்த திட்டத்தில், ஜான்சன் – ஜான்சன் கம்பெனியின் துணை நிறுவன மான அனிமாசும் ஈடு பட்டுள்ளது.
டயபடீஸ் பம்ப், ஊசி உட்பட உபகரணங்களை இந்த நிறுவனம் தயாரித்து விற்கிறது. செயற்கை கணையத்தை உருவாக்கும் ஆராய்ச்சிகளை பவுண்டேஷன் விஞ்ஞானிகள் செய்து சில முடிவுகளை எடுப்பர். அதன் அடிப் படையில், செயற்கை சாதனத்தை அனிமாஸ் நிறுவனம் தயாரிக்கும்.
குழந்தைகளுக்கு சர்க்கரை அளவை கண்காணிக்க செயற்கை சாதனம் உள்ளது; அதுபோல, இன்சுலின் செலுத்தும் சாதனமும் உள்ளது. ஆனால், இரண்டும் தனித்தனியாகத்தான் செயல்படும். இதை கண்காணித்து, உடலில் செலுத்திக்கொள்ளும் வகையில் தானியங்கி சாப்ட்வேர் சாதன இணைப்பு தரப்பட்டால், செயற்கை கணையம் முழு வெற்றி பெறும். ஆராய்ச்சி திட்டத்தின் நோக்கம் இது தான்.
அடுத்த மூன்றாண்டில் இந்த திட்டம் முழு பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, குழந்தைகளுக்கு டயபடீஸ் டைப் 1 பிரச்னை தீர வழி பிறக்கும்.

ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை

:ஒட்டகப் பால் தான் குடிக்கிறார்; கறுப்பு கவுதாரி வளர்க்கிறார்; வீட் டைச் சுற்றிலும் வேப்பமரம் வளர்க்கிறார்; யார் இப் படியெல்லாம் செய் றாங்க…? நீங்கள் கேட்பது புரிகிறது.ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பவும் கெட்ட சக்திகள் அணுகாமல் இருக்கவும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரிதான் இது மட்டுமல்ல, தினம் ஒரு ஆடு பலி கொடுத்தும் வருகிறார்.

பர்வேஸ் முஷாரப்புக்கும் சர்தாரிக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால், சர்தாரி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட் பொது மன்னிப்பு அளித்து விட்டது. இருந்தாலும், எந்தநேரத்திலும் ராணுவத்தால் தனக்கு ஆபத்து இருப்பதை சர்தாரி உணர்ந்திருக்கிறார்.இதனால், “கெட்ட சக்திகள் தன்னைப் பலி கொண்டுவிடாமல் இருக்க சில விசித்திரமான காரியங்களைச் செய்து வருகிறார்’ என்று பாகிஸ்தானிலிருந்து வரும் “டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு சர்தாரி தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சர்தாரி தான் பதவியேற்ற 2008லிருந்து தினமும் ஒரு கறுப்பு ஆட்டைப் பலியிட்டு வருகிறார். ஒட்டகம் மற்றும் ஆட்டுப் பால்தான் அருந்துகிறார். மறந்தும் மாட்டுப் பால் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை. ஒரு ஒட்டகம், ஒரு பசுமாடு, சில ஆடுகள் இவை அதிபர் மாளிகையில் ராஜ உபசாரத்தில் வாழ்கின்றன. இவைதான் சர்தாரிக்குப் பால் கொடுப்பவை.கறுப்பு கவுதாரி ஒன்றை வளர்த்து வருகிறார். அது இருக்கும் இடத்தில் நல்ல காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையால் அதை வளர்க்கிறார். தனது மாளிகையில் கிருமிநாசினியான வேப்பமரத்தை வளர்க்கிறார்.

அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் பர்கத்துல்லா பாபர் இது குறித்துக் கூறுகையில், “சர்தாரி இதுபோன்ற காரியங்களை ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருகிறார்’ என்றார்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.

6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.

8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது

9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.

11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

14. நேரத்திற்கு தூங்குங்கள்.

15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad
Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.

21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர் சொல்லியிருந்தால் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.