‘நோ பேன்ட் டே!’ -பேன்ட் இல்லாமல் பயணம்

நீங்கள் எப்போதாவது வெளிநாட்டுக்கு போனால், அங்கு ரயில்களில், பொது இடங்களில் பேன்ட் இல்லாமல், மேல் சட்டை, ஷூ மட்டுமே அணிந்து ஆண்களும், பெண்களும் செல்கின்றனர் என்றால் பயந்து விடாதீர்கள். அன்றைய தினம்,”நோ பேன்ட் டே’யாக இருக்கலாம்.
எல்லா நாளும் உர்ர்ர்…என்று இருந்தாலும், சிரிப்பே சிந்தாமல் இருந்தாலும், அன்று ஒரு நாளாவது சந்தோஷத்தை முழுமையாக பகிர்ந்து கொள்ளவே இந்த நாளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கொண்டாடுகின்றன.
மேற்கத்திய பணக்கார நாடுகளில் சில விசித்திரமான, “நாள்’களும் கொண்டாடப் படுகின்றன. வெறும் குஷிக்காக மட்டுமே கொண்டாடப்படும் நாட்களில் ஒன்று தான் இந்த, ” நோ பேன்ட் டே!’ பணக்கார நாடுகளின் தீபாவளி என்று கூட சொல்லலாம். அன்று விடுமுறை விடப்படுகிறது.
விமான, ரயில், பஸ் நிலையங்கள், பாதாள ரயில் நிலையம், பூங்காக்கள், மைதானங்களில்… இப்படி பொது இடங்களில், “நோ பேன்ட் டே’ விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பல அமைப்புகள் விழாக்களுக்கு ஏற்பாடு செய்கின்றன. அதுபோல, ஓட்டல்களும், சுற்றுலா நிறுவனங்களும், “ஈவன்ட்’ மேலாண்மை நிறுவனங்களும், “தண்ணி’ பார்ட்டி உட்பட எல்லா வித கேளிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்கின்றன. ஆனால், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யாரும், பேன்ட் அணியவே கூடாதுங்கோ.
கடந்த, 1986 ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆரம்பித்த இந்த, “நோ பேன்ட் டே’ ஆப்ரிக்க நாடுகள் வரை பரவிவிட்டது. மே மாதம் முதல் சனிக்கிழமையில் தான் இந்த நாள் முதன் முதலில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால், போகப்போக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தங்களுக்கு வசதியான நாளில் கொண்டாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த, “நோ பேன்ட் டே’யின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது தான், “நோ பேன்ட் சப்வே ரைடு’ என்ற நாள். இதுவும் முதன் முதலில் நியூயார்க் நகரில் ஆரம்பித்தது; இப்போது பிரிட்டன், சுவீடன் உட்பட பல பணக்கார நாடுகளில் பெரும்பாலும் இளைஞர் திருவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில், “பாதாள ரயில்களில் பேன்ட் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்; இதற்காக, பல அமைப்புகள் விருந்துகள், கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. அன்று, குறிப்பிட்ட பாதாள ரயில் நிலையத்தில், காதல் ஜோடிகள் குவிகின்றன; சிலர் குடும்பம், குடும்பமாகவும் குவிந்து விடுகின்றனர்.
பாதாள ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தவுடன், பாதாள ரயிலில் ஏறிக்கொள்வர். ஏறியவுடன், ஒரு அலாரம் அடிக்கும். அப்போது, எல்லாரும் பேன்ட்டை அவிழ்த்து விட வேண்டும். ஆண்களும் சரி, பெண்களும் சரி, கால் சட்டையை கழற்றி விட்டு ஆடலாம்; பாடலாம்; கும்மாளம் அடிக்கலாம். ரயிலில் ஒரே குஷி கோஷம் தான்.
ஒரு பக்கம் இசைக்கருவிகளுடன், வித, விதமான டிசைன்களில் தலைமுடியை கத்தரித்துக் கொண்டு இளைஞர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பர்; இன்னொரு பக்கம், வயதானவர்கள், பேன்ட்டை கழற்றி விட்டு, “பெக்’ அடித்தபடி உட்கார்ந்திருப்பர். வழக்கமாக, பணக்கார நாடுகளில் பாதாள ரயில்களில் கூட்டமே இருக்காது; ஆனால், அன்று மட்டும் இரவு வரை இப்படி கூட்டம் குவிந்திருக்கும்.
“இந்த சந்தோஷம் மற்ற நாட்களிலும் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த, “நோ பேன்ட் டே’யை கொண்டாடுகிறோம். இதுவரை எட்டாண்டுகள் கடந்துவிட்டன. நாங்கள், காதலர்களாக இருந்த போதே இதில் பங்கேற்று வருகிறோம்!’ என்று கால் சட்டை இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஜோடி கூறியது.
“நல்ல நோக்கத்துக்கு தான் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இப்போ தெல்லாம் எய்ட்ஸ் உட்பட தொற்று நோய் பரவுவது பொது இடங்களில்தான்; அதனால் தான், இப்போதெல்லாம் நான் பங்கேற்பதை விட்டுவிட்டேன்…’ என்றும் இளைஞனாக இருந்து நடுத்தர வயதுக்கு வந்து, மருத்துவ ஆராய்ச்சியாளராக இருக்கும் மாட் ஜெர்னட் கூறினார்.
காதலர் தினம் போல, இந்த கண்றாவி கொண்டாட்டமும், இந்தியாவுக்குள் வந்தாலும் வந்துவிடும். எதற்கும் தயாராக இருந்து கொள்ளுங்கள்.

ஒரு மறுமொழி

%d bloggers like this: