Daily Archives: பிப்ரவரி 2nd, 2010

பயர்பாக்ஸ் 3.6 இறுதிச் சோதனை தொகுப்பு

மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் 3.6 பதிப்பிற்கான, இறுதிச் சோதனைத் தொகுப்பினை அண்மையில் எந்த விளம்பர ஆரவாரமின்றி வெளியிட்டுள்ளது. இது இரண்டாவது ரிலீஸ் கேண்டிடேட் தொகுப்பாகும். (புதிய அப்ளிகேஷன் தொகுப்பு வெளியிடும் முன் இறுதியாக வெளியிடப்படும் சோதனைத் தொகுப்பினை ரிலீஸ் கேண்டிடேட் (Release Candidate) எனப் பெயரிட்டு வெளியிடுவது வழக்கம்) இந்த சோதனைத் தொகுப்பு விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்கள் அனைத்திற்கும் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன் எந்த குறிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த இரண்டாவது தொகுப்பினை மிகவும் பாதுகாப்பானது மற்றும் ஸ்திரமானது என்று மொஸில்லா கூறியுள்ளது. இதனை http://www.mozilla.com/firefox/allrc.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயர்பாக்ஸ் 3.6 பதிப்பின் சோதனைத் தொகுப்பைப் பயன்படுத்தி அதன் நிறை குறைகள் குறித்து தெரிவித்து வருகின்றனர். பயர்பாக்ஸ் பிரவுசரை மொத்தத்தில் 30 கோடிக்கும் மேலானவர்கள் தங்கள் பிரவுசராகப் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய சோதனைத் தொகுப்பில் கூடுதலாக “பெர்சனாஸ்’ தரப்பட்டுள்ளது. இதன் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் விருப்பத்திற்கே படங்களை அமைத்து இதன் தோற்றத்தை அமைத்துக் கொள்ளலாம். பாதுகாப்பினைப் பொறுத்தவரை, நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டருக்குள் ஊடுருவ முயற்சிக்கும் தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தொகுப்புகளைத் தடுக்கும் வகையில் இதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால் பயர்பாக்ஸ் பிரவுசரை கிராஷ் செய்திட மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முறியடிக்கப்படுகின்றன.
பயர்பாக்ஸ் இயங்கத் தொடங்க வெகு நேரம் ஆகிறது என்ற குற்றச்சாட்டு பலவாறாக இருந்து வருகிறது. இதனைப் போக்கும் வகையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜாவா ஸ்கிரிப்ட் இயக்கமும் துரிதப்படுத்தப்பட்டு ட்யூன் செய்யப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் -பேட்ச் பைல் வெளியானது

கூகுள் நிறுவன சீன சர்வர்களில் ஹேக்கர்கள் புகுந்து மெயில்களைத் திருடியதால் ஏற்பட்ட உலகளாவிய பரபரப்பில், மைக்ரோசாப்ட் உடனடியாக விழித்துக் கொண்டு, அதற்கான பேட்ச் பைலை சென்ற ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த பேட்ச் பைலுடன் வேறு சில உண்மைகளும் வெளிவந்து நம்மை அட! அப்படியா!! என வியக்க வைக்கின்றன.
ஹேக்கர்கள் எளிதாகக் கண்டறிந்து, பயன்படுத்திக் கொண்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள பிழை குறித்து, ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குத் தெரியும் என்பது வெளியாகியுள்ளது. சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதமே இந்த மோசமான பிழை ஒன்று இருப்பதாக இஸ்ரேலிய இன்டர்நெட் பாதுகாப்பு அமைப்பு அறிவித்திருந்தது. இதனை செப்டம்பர் மாதத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உறுதி செய்ததாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு மைய நிர்வாகி ஜெர்ரி கூறியிருக்கிறார்.
செப்டம்பரில் உறுதி செய்த பிழைக்கு உடனே தீர்வு கண்டிருந்தால், சீன கூகுள் பிரச்னையைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் மைக்ரோசாப்ட் இது ஒன்றும் வருந்தத்தக்க தாமதம் இல்லை என்றும் கூறி உள்ளது. பொதுவாக பிழை ஒன்றினைத் தீர்க்க இந்த கால அளவினை மைக்ரோசாப்ட் எடுத்துக் கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் பிழை ஒன்று இருப்பதாக ஹேக்கர்கள் அறிந்தாலும், அதனைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் வழி கண்டறிய பல வாரங்கள் ஆகும் என்றும் மைக்ரோசாப்ட் கருத்து தெரிவித்துள்ளது. எனவே தான் பிழையைச் சரி செய்திட மைக்ரோசாப்ட் நிதானமான ஒரு கால அளவை எடுத்துக் கொண்டு செயல்படுகிறது.
ஆனால் இந்த முறை ஹேக்கர்கள் முந்திக்கொண்டனர். மைக்ரோசாப்ட்டின் தொழில் நுட்ப நிர்வாகம் மெத்தனமாக இருந்துவிட்டது. விளைவு இன்டர்நெட் உலகில், இரண்டு பெரிய சக்திகளுக்கிடையே உறவில் விரிசல்.
உங்கள் கம்ப்யூட்டரில் நீங்கள் ஆட்டோமேடிக் அப்டேட் வைத்திருந்தால், இந்த பேட்ச் பைல் தானாக இறங்கி இன்ஸ்டால் ஆகியிருக்கும். நீங்களாக இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடக் கீழ்க்காணும் தளத்தினை அணுகவும் http://www.update.microsoft.com/windowsupdate/v6/thanks.aspx?ln=en&&thankspage=5
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இந்த பேட்ச் பைலை இறக்கிப் பதிய, உங்கள் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5 அல்லது அதற்குப் பிந்தையது இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.
பிற பிரவுசர்களின் மூலம் டவுண்லோட் செய்திட முயன்றால் நீங்கள் செல்ல வேண்டிய முகவரி: http://go.microsoft.com /fwlink/?linkid=10678 அல்லது தானாக அப்டேட் செய்திடும் வசதியை இயக்கி வைத்திருக்க வேண்டும்.

குழந்தை குண்டாகி விட்டதா?

கொழுகொழு குழந்தை அழகுதான். ஆனால் சிறுவர், சிறுமியர் அளவுக்கு அதிகமான எடையோடு இருப்பது ஆரோக்கியக் குறைவு. உங்கள் குழந்தை குண்டாயிருக்கிறதா? பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்… குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து என்பது பெரியவர்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையில்தான் அமைய வேண்டும். குழந்தைகளுக்கும் பெரியவர்களை போன்று வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு அவசியம். குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தில் ஒரே வித்தியாசம், பல்வேறு வயதுகளில் தேவைபடும் ஊட்டச்சத்துகளின் அளவு மாறுபடும் என்பதுதான். ஆனால் தற்போது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தில் அதிகம் கவனம் செலுத்தபடுவதில்லை. குழந்தைகள் `நன்றாக’ சாப்பிட்டால் போதும் என்று பெற்றோர் நினைக்க, குழந்தைகள் குண்டாகவும், ஆரோக்கியக்குறைவாகவும் ஆகி வருகிறார்கள். குழந்தைகளின் தினசரி வழக்கத்தில் மெதுவான மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை நீண்டகால பழக்கமாக்கலாம். உதாரணத்துக்கு, சாப்பிடும்போது டிவியை அணைப்பது, குளிர்பானங்களுக்கு பதிலாக பால் அல்லது தண்ணீர் குடிக்க பழக்குவது, `டின்னருக்கு’ பிறகு குடும்பத்தோடு ஒரு `வாக்கிங்’ போவது போன்றவை. அதிக உப்பு சேர்த்த `துரித உணவுகளை’ குழந்தைகள் அதிகம் சாப்பிட விடாதீர்கள். எந்த அளவு உணவு சரியாக இருக்கும் என்றும், அதிக `கலோரி’ நொறுக்குத்தீனிகளை முக்கியமான விசேஷங்களின்போதுதான் சாப்பிட வேண்டும் என்றும் குழந்தைகளை பழக்குங்கள். குழந்தைகளுக்கு முழுத் தானிய நொறுக்குத்தீனிகள், தானிய வகைகளைக் கொடுங்கள். முழுத் தானியங்களின் நார்ச்சத்து திருப்தியான உணர்வையும், தானியங்கள் உங்கள் குழந்தைக்குச் சக்தியையும் அளிக்கும். இளம் கேரட், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை கொழுப்பில்லாத `யோகர்ட்’ போன்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களும் நல்லது. ஊட்டச்சத்துகள் செறிந்த நிலக்கடலை, வெண்ணை `சான்ட்விச்’களும் நல்ல நொறுக்குத்தீனியாக அமையும். இனிப்பை விரும்பும் உங்கள் குழந்தைகளுக்கு கொழுப்பில்லாத இனிப்பு வகைகள், உறைந்த யோகர்ட், கொழுப்பில்லாத யோகர்ட்டுடன் பழங்கள் கொடுக்கலாம். ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் தயாரிப்பதற்கு உங்கள் குழந்தையையே பழக்குங்கள். குறைந்த கொழுப்பு பாலாடைக்கட்டியை வெட்டி கோதுமை நொறுக்குத்தீனிகளை அலங்கரிப்பதற்கு பழக்குங்கள். குழந்தைகளுக்கு ஆர்வமு ட்டும் வகையில் வெவ்வேறு வடிவில் வெட்டும் `கட்டர்களை’ கொண்டு முழுத்தானிய `பிரெட்’டை வெட்டி குழந்தைகளுக்கு அளிக்கலாம். பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு வேடிக்கையான முகங்களை உருவாக்கி அளியுங்கள். `புரு ட் கெபாப்’பும் அவர்களுக்கு பிடிக்கும். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது. பச்சையாக உண்ணுவதற்கு ஏற்ற காய்கறிகளை குழந்தைகள் எடுத்து உண்ணும் வகையில் எப்போதும் பிரிஜ்ஜில் வைத்திருங்கள். வெளியே செல்லும்போது குழந்தைகள் சாப்பிடுவதற்கு யோகர்ட், சுவையான காய்கறிகள், பழங்கள், தானிய கேக்குகளை கொடுத்து விடுங்கள். குழந்தைகளை சுறுசுறுப்பாக இருக்கச் செய்வது ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும். அவர்களை விளையாட்டு, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது அவர்களுக்கு பிடித்தமான செயலில் ஈடுபடுத்துங்கள்.

விண்டோஸ் 7 சில வசதிகள்….

சென்ற வாரம் புதியதாக அறிமுகமாகித் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் விண்டோஸ் 7 தரும் சில சிறப்பு வசதிகள் குறித்த டிப்ஸ்கள் இந்த பகுதியில் தரப்பட்டன. அதன் தொடர்ச்சி இங்கே தரப்படுகிறது.
விண்டோவை கீகள் மூலம் செட் செய்திட:
விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்பில், விண்டோ மானிட்டர் ஸ்கிரீனில் இடம் பெறுவதனை எளிதாக கீ போர்டின் கீகள் மூலமே மாற்றி அமைக்கலாம். அப்போதைய விண்டோவினைச் சிறிதாக அல்லது பெரிதாக அமைக்கலாம். வலது அல்லது இடது ஓரத்திற்குத் தள்ளலாம். இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோக்களில் இயங்குகையில், அதிகம் தேவைப்படாத விண்டோவினைச் சுருக்கி ஓரம் தள்ளலாம். இதனால் இரண்டு விண்டோக்களில் இயக்கத்தினை மேற்கொள்வது எளிதாகும். இதற்கான ஷார்ட்கட் கீகளைப் பார்க்கலாம்.
விண்டோஸ் கீ + மேல் அம்புக் குறி கீ: அப்போதைய விண்டோவினைப் பெரிதாக்கும். விண்டோஸ் கீ + கீழ் அம்புக் குறி கீ: பெரிதாக்கிய விண்டோவினைப் பழைய நிலைக்குக் கொண்டு வரும்.
விண்டோஸ் கீ + இடது அம்புக் குறி கீ: இடது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும்.
விண்டோஸ் கீ + வலது அம்புக் குறி கீ: வலது பக்கம் விண்டோவினைக் கொண்டு செல்லும்.
எக்ஸ்புளோரரில் டிக் செய்து தேர்ந்தெடுக்க:
விண்டோஸ் 7 சிஸ்டத்தின் எக்ஸ்புளோரர் புரோகிராமில், அது காட்டும் பைல்களை, டிக் செய்து தேர்ந்தெடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.
பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரர் புரோகிராமில், பைல்கள் மற்றும் போல்டர்களை ஒரே நேரத்தில் இயக்க, அவற்றைத் தேர்ந்தெடுக்கப் பல வழிகள் உள்ளன. இந்த வழிகள் மூலம் தேர்ந்தெடுத்த பின் அவற்றை மொத்தமாக பெயர் மாற்றலாம், அழிக்கலாம், காப்பி செய்திடலாம், ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கலாம், இன்னொரு இடத்திற்கு அப்படியே நகர்த் தலாம். இவற்றைத் தேர்ந்தெடுக்கையில் கண்ட்ரோல் கீயை அழுத்தினால், அடுத்தடுத்து இல்லாத பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம். மொத்தத்தில் முதல் பைலைத் தேர்ந்தெடுத்து பின் ஷிப்ட் கீ அழுத்தி பின் இறுதி பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், வரிசையாக, தொடர்ச்சியாக பைல்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
அல்லது மவுஸ் மூலம் ஒரு செவ்வகமாகக் கோடு வரைவது போலக் கொண்டு சென்று, இவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
1. ஸ்டார்ட் பட்டன் மீது கிளிக் செய்திடவும்.
2. பின் Folder Options என டைப் செய்து கிடைக்கும் Folder Options லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
3. அடுத்து Folder Options என்ற பல டேப்கள் அடங்கிய விண்டோ கிடைக்கும்.
4.இதில் View என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.
5. பின் Use check boxes to select items என்பதில் டிக் செய்திடவும்.
6. பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸ்களை மூடவும்.
இதன் பின்னர் எக்ஸ்புளோரர் விண்டோவில் உள்ள பைல்களை, அதன் முன் உள்ள சிறிய கட்டங்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கலாம்.
விண்டோஸ் டாஸ்க் மேனேஜர்:
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கிடைக்கும் டாஸ்க் மேனேஜர் டிஸ்பிளே விண்டோ வினைப் பெரிதாகத் தெரியும்படி அமைக்கலாம். இதனால் இதில் கிடைக்கும் வரைபடம் பெரிதாகத் தெரியும். அல்லது இயக்கத்தில் என்ன நடக்கிறது என்ற செயல்பாடு இன்னும் சற்றுத் தெளிவாகக் கிடைக்கும்.
டாஸ்க் மேனேஜரை எப்படிக் கொண்டு வருவது? விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Start Task Manager என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது கண்ட்ரோல் +ஷிப்ட்+எஸ்கேப் (Ctrl + Shift + Esc) கீகளை அழுத்தவும்.
டாஸ்க் பார் மேனேஜர் டிஸ்பிளேயில் இரு முறை கிளிக் செய்தால் அது விரிந்து கொடுக்கும். விரிந்த நிலையிலோ அல்லது விரியாத நிலையிலோ கீழ்க்காணும் கீகளைப் பயன் படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள வேலைப்பாடினை மேற்கொள்ளலாம்.
Ctrl + Tab அடுத்த டேப் செல்லும்.(சுழற்சியில் தொடக்கத்திற்குச் செல்லும்)
Ctrl + Shift + Tab: முந்தைய டேபிற்குச் செல்லும். (சுழற்சியில் இறுதி டேப்பிற்குச் செல்லும்)
Ctrl + Right: அடுத்த டேபிற்குச் செல்லும்.
Ctrl + Left: முந்தைய டேபிற்குச் செல்லும்.

சண்டிகேஸ்வரர்! (ஆன்மிகம்)

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன் – பவித்திரை தம்பதியர் வசித்தனர். இவர்களது புதல்வர் விசாரசருமன். சிறுவயதிலேயே சிவபக்தி கொண்ட இவர், பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டதால், பசுக்கள் இவரை தங்கள் உயிராகக் கருதின.
மாடு மேய்க்கச் செல்லும் இடத்தில், மணலைக் குழைத்து சிவலிங்கம் வடிப்பார். மேயச்செல்லும் பசுக்கள், தங்கள் பாலை அதன் மேல் சுரந்து அபிஷேகம் செய்யும். சிவசேவை செய்த பசுக்கள், வீட்டுக்கு வந்த பிறகும், தங்கள் எஜமானர்களுக்கு தேவைக்கதிகமாகவே பாலைக் கொடுத்தன.
ஒருமுறை அவ்வூர் இளைஞன் ஒருவன், சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததைப் பார்த்து விட்டு, ஊருக்குள் போய், விசாரசருமனின் செய்கை பற்றி சொல்லிக் கொடுத்து விட்டான். எஜமானர்கள், இது குறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனைக் கண்டித்து வைக்கும்படி கூறினர்.
உண்மையை அறிய, ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்திற்கு வந்து மறைந்திருந்து கவனித்தான் எச்சதத்தன். அந்த இளைஞன் சொன்னது போலவே, மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலைச் சொரிந்தன. விசாரசருமன், லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.
எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது.
வேகமாக மகன் அருகே வந்து அவனை உதைத்துக் கண்டித்தான். தன் தந்தையிடம்,
“இங்கே பசுக்கள் எவ்வளவு பாலைச் சுரந்தாலும், எஜமானர்களின் வீட்டுக்கும் போதுமான பாலைத் தருகின்றன. சிவபூஜையைக் கெடுக்காதீர்கள்…’ என்றான் விசாரசருமன். மகன், தன்னை எதிர்த்துப் பேசுவதாக கருதிய எச்சதத்தன், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்து விட்டான். கோபமடைந்த மகன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவனருளால் மழுவாக(கோடரி) மாறி, அவரது காலை காயப்படுத்தியது.
தன் மேல் இந்தளவு அன்பு கொண்ட பக்தன் முன் பார்வதியுடன் தோன்றினார் சிவபெருமான். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தார். விசாரசருமனுக்கு சிவகணங்களை நிர்வாகம் செய்யும் சண்டேச பதவியை வழங்கினார். தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் என அருள்பாலித்தார். இப்போதும், சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.
சிவாலயங்களுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் சென்றால், அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நீண்ட கால நம்பிக்கை. மனிதனாகப் பிறந்து தெய்வநிலைக்கு உயர்ந்த இவரது குருபூஜை, தை மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது. சண்டிகேஸ்வரரை வணங்குபவர்களுக்கு மனஉறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும்.