சண்டிகேஸ்வரர்! (ஆன்மிகம்)

சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன் – பவித்திரை தம்பதியர் வசித்தனர். இவர்களது புதல்வர் விசாரசருமன். சிறுவயதிலேயே சிவபக்தி கொண்ட இவர், பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டார். பசுக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டதால், பசுக்கள் இவரை தங்கள் உயிராகக் கருதின.
மாடு மேய்க்கச் செல்லும் இடத்தில், மணலைக் குழைத்து சிவலிங்கம் வடிப்பார். மேயச்செல்லும் பசுக்கள், தங்கள் பாலை அதன் மேல் சுரந்து அபிஷேகம் செய்யும். சிவசேவை செய்த பசுக்கள், வீட்டுக்கு வந்த பிறகும், தங்கள் எஜமானர்களுக்கு தேவைக்கதிகமாகவே பாலைக் கொடுத்தன.
ஒருமுறை அவ்வூர் இளைஞன் ஒருவன், சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததைப் பார்த்து விட்டு, ஊருக்குள் போய், விசாரசருமனின் செய்கை பற்றி சொல்லிக் கொடுத்து விட்டான். எஜமானர்கள், இது குறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனைக் கண்டித்து வைக்கும்படி கூறினர்.
உண்மையை அறிய, ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்திற்கு வந்து மறைந்திருந்து கவனித்தான் எச்சதத்தன். அந்த இளைஞன் சொன்னது போலவே, மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலைச் சொரிந்தன. விசாரசருமன், லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.
எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது.
வேகமாக மகன் அருகே வந்து அவனை உதைத்துக் கண்டித்தான். தன் தந்தையிடம்,
“இங்கே பசுக்கள் எவ்வளவு பாலைச் சுரந்தாலும், எஜமானர்களின் வீட்டுக்கும் போதுமான பாலைத் தருகின்றன. சிவபூஜையைக் கெடுக்காதீர்கள்…’ என்றான் விசாரசருமன். மகன், தன்னை எதிர்த்துப் பேசுவதாக கருதிய எச்சதத்தன், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்து விட்டான். கோபமடைந்த மகன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவனருளால் மழுவாக(கோடரி) மாறி, அவரது காலை காயப்படுத்தியது.
தன் மேல் இந்தளவு அன்பு கொண்ட பக்தன் முன் பார்வதியுடன் தோன்றினார் சிவபெருமான். எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தார். விசாரசருமனுக்கு சிவகணங்களை நிர்வாகம் செய்யும் சண்டேச பதவியை வழங்கினார். தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் என அருள்பாலித்தார். இப்போதும், சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கு அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது.
சிவாலயங்களுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரரை வணங்காமல் சென்றால், அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நீண்ட கால நம்பிக்கை. மனிதனாகப் பிறந்து தெய்வநிலைக்கு உயர்ந்த இவரது குருபூஜை, தை மாத உத்திரம் நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது. சண்டிகேஸ்வரரை வணங்குபவர்களுக்கு மனஉறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும்.

One response

  1. why clapping hands while pray sandigeshwarar?

%d bloggers like this: