Daily Archives: பிப்ரவரி 5th, 2010

வேலை தேடுவோருக்கு நற்செய்தி!

வேலை தேடுவோருக்கு மகிழ்ச்சியான விஷயம் இது. மீண்டும் வேலைவாய்ப்புகள் பெருகத் தொடங்கியுள்ளன என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு கடைசியுடன் ஒப்பிடுகையில், 2009 கடைசியில், ஊழியர் நியமனம் 8.38 சதவீதம் அதிகரித்துள்ளது என்று `நாக்ரி ஜாப்ஸ்பீக்’ தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு இணையதளமான `நாக்ரி.காம்’-ன் துணை அமைப்பாகும் இது.

வேலைவாய்ப்பில் சாதகமான சூழல் ஏறக்குறைய எல்லா துறைகளிலும், எல்லா நகரங்களிலும் காணப்படுகிறது. குறிப்பாக காப்பீட்டுத் துறையில் சிறப்பான வேலைவாய்ப்புச் சூழல் காணப்படுகிறது. அது கடந்த நவம்பரில் ஆயிரத்து 33 `வேலைப் புள்ளி’களுடன் முன்னணியில் இருந்தது. காப்பீட்டுத் துறையில் ஆட்கள் சேர்ப்பு 22.98 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு துறையிலும் மாதந்தோறும் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அடிப்படையில் `வேலைப் புள்ளி’ கணக்கிடப்படுகிறது. ஆயிரம் வேலைப் புள்ளிகளுடன் 2008 ஜூலை மாதம் அடிப்படை மாதமாகக் கொள்ளப்படுகிறது. தொடர்ந்து வரும் மாதங்களின் புள்ளிவிவரம் 2008 ஜூலை விவரத்துடன் ஒப்பிடப்படுகிறது.

மோட்டார் வாகன, அது சார்ந்த தொழில் துறை, தொலைத்தொடர்புத் துறை ஆகியவற்றில் ஆட்கள் நியமனம் அக்டோபரில் குறைந்திருந்திருந்தது. அது நவம்பரில் முறையே 17.38 சதவீதம், 19.29 சதவீதம் என்று அதிகரித்துள்ளது. `சாப்ட்வேர்’ மற்றும் `ஹார்டுவேர்’ துறைகளிலும் கூட முறையே 5 சதவீதம் மற்றும் 18.35 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

“இப்போது சாதாரணமாக 60 முதல் 70 சதவீதம் வரையிலான ஆட்கள் நியமனம் இருக்கும். அடுத்த ஆண்டு தகவல் தொழில்ட்பத் துறையில் 30 ஆயிரம் பேரிலிருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நியமனம் பெறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். பழைய பொற்காலத்தைப் போல அது இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று இன்போசிஸ் நிறுவனத்தின் மனித வளத் துறைத் தலைவர் டிவி. மோகன்தாஸ் கூறுகிறார்.

மாநகர வாரியாகப் பார்த்தாலும் ஆட்கள் நியமனத்தில் நாடு முழுவதும் நல்ல சூழல் காணப்படுவது தெரிகிறது. நாடு முழுவதிலும் உள்ள 13 முக்கிய நகரங்களில் 9 நகரங்களில் ஆட்களை அமர்த்துவது அதிகரித்துள்ளது. ஊழியர் நியமனம் குறைந்துள்ள ஒரே பெருநகரம் சென்னையாகும். சில இரண்டாம் நிலை நகரங்களிலும் ஆட்கள் அமர்த்தம் குறைந்துள்ளது.

குரங்குகள் தயாரித்த குறும்படம்!

ஆச்சரியமாக இருக்கிறதா! உண்மைதான் குரங்குகள் தாங்களாகவே நடித்து ஒரு குறும்படத்தை தயாரித்து உள்ளன.

விலங்குகள் விசேஷ குணம் மற்றும் திறன் கொண்டவை. இதில் குரங்குகள் அனேக விஷயங்களில் மனிதனை ஒத்திருக்கும். குறிப்பாக கற்றுக் கொடுக்கும் விஷயங்களை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவதில் மற்ற விலங்குகளைவிட குரங்குகள் முன்னணியில் உள்ளன.

அப்படி பயிற்சி அளித்ததில் தேர்ச்சி பெற்ற குரங்குகள் ஒரு குறும்படத்தை தயாரித்தன. இந்தப் படம் சில அடி நீளமே இருக்கிறது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் மிருகக் காட்சி சாலையில் உள்ள குரங்குகள் இதை நடித்து, தயாரித்துள்ளன.

இந்தப் படத்தில் 11 சிம்பன்சி குரங்குகள் இடம் பெறுகின்றன. குரங்குகளுக்கென்று விசேஷமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு கேமரா முலம் ஒரு குரங்கு காட்சிகளை பதிவு செய்தது.

பல ஒத்திகை முயற்சிகளுக்குப் பிறகு கடுமையாக போராடியே காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. இதில் குரங்குக் கடி மற்றும் சண்டைகள், சேட்டைகள் தத்ருபமாக படம்பிடிக்கப்பட்டு உள்ளன.

சிம்ப்கேம் என்ற இந்த திட்டத்தில் பயிற்சி அளித்த ஹெரல்கோ என்பவர் கூறும்போது, காட்சிகளை படம் பிடிக்கும் கேமிராவை கையாளுவதில் மட்டுமே குரங்குகள் சிரமம் எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார். இந்த குறும்படம் காட்டு விலங்குகளின் வாழ்க்கையை நெருக்கமாக படம்பிடித்த சான்றாக திகழும் எனவும் கூறினார்.

1800 அமெரிக்க டாலர் செலவில் இந்தப் படம் தயாரானது. இந்த குறும்படம் பி.பி.சி.2 சேனலில் பனானாவிஷன் என்ற பெயரில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

செவ்வாயில் இப்போதைய பருவகாலம் ?

செவ்வாய்க் கிரகம் இப்போது உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. அங்கு கடல் இருப்பது விஞ்ஞானிகளின் ஆவலைத் தூண்டி உள்ளது.

பல நாடுகளும் செவ்வாயை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இங்கிலாந்து விஞ்ஞானிகள் சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகள் புவியியல் விஞ்ஞான பத்திரிகை ஒன்றில் வெளியாகி இருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ள சில முக்கியமான விஷயங்கள் வருமாறு:- செவ்வாயில் தற்போது நிலவும் ஈரப்பதம் மற்றும் குளிர்ந்த சூழல் ஹெஸ்பேரியன் ஈபோக் எனப்படுகிறது. இது பூமியில் நிலவும் பனிக்காலம் போன்ற சூழலைக் கொண்டது. செவ்வாயின் மத்திய ரேகைக்கு அருகில் 20 கிலோமீட்டர் அகலமுள்ள ஏரி இருந்துள்ளது. 3 பில்லியன் (100 கோடிகள் சேர்ந்தது ஒரு பில்லியன்) ஆண்டுகளுக்கு முன் பனிப்பாறைகள் உருகி இந்த ஏரி உருவாகி இருக்கக்கூடும். இந்த ஏரியின் ஆயுளை வைத்துப் பார்க்கும்போது, செவ்வாயில் தற்போது காணப்படும் உலர்ந்த பருவமாற்றம், ஏற்கனவே கணிக்கப்பட்ட காலத்துக்கு பிறகே நிகழ்ந்திருக்க வேண்டும். அதாவது 3.8 முதல் 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் செவ்வாய் இத்தகைய மாற்றங்களை அடைந்திருக்கும்.

இங்கிலாந்தின் இம்பீரியல் கல்லூரி மற்றும் நாசாவின் செவ்வாய் ஆய்வுக்குழு இணைந்து இந்த ஆய்வை நடத்தி உள்ளன. ஆய்வுக்குழுவின் தலைவரான இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த நிக்கோலஸ் வார்னர் கூறும்போது, `செவ்வாயின் தற்போதைய பருவகாலம் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. இதுதான் செவ்வாயில் பனிப்படலம் உருவாகியதற்கான காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எங்கள் ஆய்வு முடிவு செவ்வாய் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும்’ என்றார்.

அழகான கழுத்துக்கு …

சிலர் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், அவர்களது கழுத்துப் பகுதி மட்டும் கருத்துப்போய் காணப்படும். வெயிலில் அலைவது கூட இதற்கு காரணமாக இருக்கலாம்.

அதனால், முகத்திற்கு பயன்படுத்தும் மேக்-அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.

அதற்கு சில டிப்ஸ் : கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயிறு – இந்த முன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும். பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் – இதில் ஏதாவது ஒன்றைய் நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம். முட்டைக்கோசை அரைத்து அந்த சாரையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம். இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும். பயத்த மாவு, ஆலீவ் ஆயில், ரோஸ் வாட்டர் – இவற்றை ஒன்றாக கலந்து கழுத்தில் பூசினாலும் கருமை நிறம் மறையும். சிலருக்கு செயின் போட்டு, அதனால் பின் கழுத்து கருத்துப் போய் இருக்கும். அதனை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். கடலை மாவு தயிர் கலந்தும் தடவலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கான பயிற்சிகள்

சர்க்கரை நோயாளிகள் சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், அந்த நோயை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கலாம். அந்த உடற்பயிற்சிகள் :

1. கெண்டைக்கால் சதையை நீட்டுதல்

முழங்கை மடங்காமல் கைகளை நீட்டி, உள்ளங்கைகளை சுவரில் பதிக்க வேண்டும். கால்கள், சுவரில் இருந்து சிறிது தூரத்தில் இருக்கும் நிலையில் உள்ளங்கால்களால் தரையைக் கெட்டியாக அழுத்தியபடி நிற்க வேண்டும். பின்னர் கைகளை மடித்து, நீட்ட வேண்டும். அதேசமயம் உடல், கால்கள், பாதங்கள் நேராக இருக்கும்படியும் வைத்து முன்னும் பின்னும் அசைய வேண்டும். இந்த பயிற்சியை 10 முறை செய்ய வேண்டும். இந்த பயிற்சியால் கெண்டைக்கால் பிடிப்பு நீங்கும். கால் மரத்துப் போகாது.

2. நாற்காலி பயிற்சி

ஒரு நாற்காலியில் உட்கார வேண்டும். கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு நாற்காலியில் இருந்து எழுந்து உட்கார வேண்டும். இவ்வாறு 10 முறை செய்ய வேண்டும்.

3. கால் வீசுதல்

ஒரு ஸ்டூலில் ஏறி நின்று கொள்ள வேண்டும். அருகில் உள்ள ஏதேனும் ஒரு பிடிமானத்தை பிடித்துக்கொண்டு ஒரு காலை ஸ்டூலில் இருந்து எடுத்து முன்னும் பின்னுமாக வேகமாக ஆட்ட வேண்டும். இதுபோன்று 10 முறை செய்ய வேண்டும். இன்னொரு காலுக்கும் இதேபோல் பயிற்சி கொடுக்க வேண்டும்.

4. வாக்கிங்

தினமும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை வாக்கிங் செல்ல வேண்டும். வேகமாகவும் இல்லாமல், மிகவும் மிதமாகவும் இல்லாமல் ஓரளவுக்கு வேகமாக அதிக முச்சு வாங்காமல் நடக்கவேண்டும். நடக்கும் தூரத்தைப் படிப்படியாக அதிகரிக்க முயற்சி செய்வது நல்லது.

5. மாடிப்படி பயிற்சி

பாதத்தின் முன்பகுதியை மட்டும் ஊன்றியபடி மாடிப்படிகளில் மிதமான வேகத்தில் ஏறி இறங்க வேண்டும். அவ்வாறு ஏறி இறங்கும்போது கவனம் தேவை.

6. நுனி விரல்கள் பயிற்சி

ஒரு நாற்காலியை பின்புறமாக நின்று பிடித்தபடி நின்ற இடத்திலேயே கால் விரல்களை மட்டும் உயர்த்தி பின்னர் தாழ்த்த வேண்டும்.

7. முழங்கால் வளைத்தல்

ஒரு நாற்காலியைக் கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். முதுகை வளைக்காமல் நேராக வைத்துக்கொண்டு முழங்காலை 10 முறை மடக்க வேண்டும்.

இன்னொரு முறையிலும் இதேப் பயிற்சியை செய்யலாம்.

கால்களை நீட்டி தரையில் உட்கார வேண்டும். பின்னர் உள்ளங்கைகளைத் தரையில் பதித்து, சிறிது பின்னால் சாய்ந்தபடி உட்கார வேண்டும். காலை உயர்த்தி முன்னும், பின்னுமாகவும், பக்கவாட்டிலும் அசைக்க வேண்டும். கால் பிடிப்பு நீங்கும் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.

8. குதிகாலை உயர்த்துதல்

பாதத்தின் முன்பகுதியை அழுத்தி குதி காலை உயர்த்தி, அதாவது மேல்நோக்கி நின்றபடியே எழுந்து தாழ்த்த வேண்டும். இதுபோல் 20 முறை செய்யவேண்டும்.

பின்குறிப்பு : சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் வயது, உடல்நிலைக்கு ஏற்றபடி இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். செய்ய இயலாத பயிற்சிகளை செய்ய வேண்டாம்.பயிற்சியை தொடங்கும் முன்பு மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.

வேர்ட் டேபிள் டிப்ஸ்

விரும்பிய வகையில் கலரில் பார்டர் அமைக்க வேர்ட் டேபிளில் விரும்பிய கலரிலும் வகையிலும் பார்டர்களை அமைக்கலாம். Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். இதற்கு View மெனுவிலிருந்து Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்பதைத் தேர்ந்தெடுத்தால் இந்த மெனு திரைக்கு வரும். லைன் ஸ்டைல் என்ற பீல்டில் கிடைக்கும் ட்ராப் டவுண் லிஸ்ட்டில் உங்களுக்குப் பிடித்த பார்டர் Line Style ஐத் தேர்ந்தெடுக்கவும். பார்டருக்கான கலர் தேர்ந்தெடுக்க Border Color என்பதில் கிளிக் செய்திடவும். இனி Draw Table என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் பென்சில் போன்ற கர்சரின் துணை கொண்டு நீங்கள் விரும்பிய பார்டர் லைனை தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அமைக்கலாம். மேலே கூறிய வழிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து டேபிளில் பார்டர்களை அமைக்கலாம்.

டேபிளில் பார்டர்களை நீக்க
வேர்டில் டாகுமெண்ட் இடையே டேபிள் ஒன்றை உருவாக்கும்போது, வேர்ட் அந்த டேபிளில் பார்டர் கோடுகளை நீங்கள் விரும்பும்படி கோடுகளை செல்களைச் சுற்றிலும் அமைத்துத் தரும். ஏதேனும் காரணத்தினால் இந்த கோடுகள் உங்களுக்குத் தேவையில்லை என்று எண்ணினால் அதனை நீக்கலாம். இதற்கான பல வழிகளில் எளிய வழி ஒன்று உள்ளது. கண்ட்ரோல் + ஆல்ட் +யு (Ctrl+Alt+U) கீகளை அழுத்தினால் பார்டர் கோடுகள் நீக்கப்படும். இந்த கீகளை அழுத்தும் முன் கர்சர் ஏதேனும் ஒரு செல்லில் இருக்க வேண்டும்.

டேபிளை முழுமையாகத் தேர்ந்தெடுக்க
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில் அமைக்கப்பட்ட டேபிள் ஒன்றை முழுவதுமாகத் தேர்ந்தெடுக்க முயற்சிக்கையில் சில சிக்கல்கள் நேரலாம். டெக்ஸ்ட் மட்டும் தேர்ந்தெடுக்கப்படலாம். அல்லது உள்ளே அமைக்கப்பட்டுள்ள பார்மட்டிங் சமாச்சாரங்கள் கிடைக்காமல் போகலாம். இவற்றைத் தவிர்க்கக் கீழே தந்துள்ள குறிப்பின்படி செயல்படவும். தேர்ந்தெடுக் கப்படவுள்ள டேபிளின் உள்ளாகக் கர்சரை முதலில் நிறுத்தவும். நம் லாக் கீ இயங்காமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும். பின் ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு நியூமெரிக் கீ பேடில் 5 என்ற எண் உள்ள கீயை அழுத்தவும். மவுஸ் பயன்படுத்தி டேபிளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு, டேபிளில் எங்காவது கர்சரை வைத்து மவுஸை இருமுறை கிளிக் செய்திடவும்.

டேபிளை இரண்டாகப் பிரிக்க
டேபிள் ஒன்றை உருவாக்கியபின் அதனைப் பிரிக்க எண்ணுகிறீர்களா? அதனைச் சாதாரணமாகக் கர்சர் கொண்டு சென்று பிரிக்க முயற்சித்தால், குறிப்பிட்ட படுக்கை வரிசை அகலாமவதைத்தான் பார்ப்பீர்கள். அதற்குப் பதிலாக, புதிதாய் அமைக்கப்பட வேண்டும் என விரும்பும் டேபிளில் முதல் வரிசையாய் எந்த வரிசை இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த வரிசையில் கர்சரை வைத்துப் பின் டேபிள் மெனு செல்லவும். அங்கு ஸ்பிளிட் டேபிள் என்பதில் கிளிக் செய்திடவும். டேபிள் இப்போது பிரிக்கப்பட்டு தனி டேபிள் ஒன்று காணப்படும்.

சமமான அளவில் டேபிள் செல்கள்
வேர்ட் டேபிள் அமைக்கையில் சமமான அளவில் செல்களை அமைக்க முடியவில்லை என வருந்துகிறீர்களா? ரூலரில் கர்சரைக் கொண்டு சென்று இழுத்தால் வித்தியாசமாகவே வருகிறதா? இதற்கான வழியை வேர்ட் தருகிறது. முதலில் உங்கள் டேபிளை, அதன் செல்கள் முன்னே பின்னே இருக்கும்படி அமைத்துக் கொள்ளுங்கள். இப்போது சம அளவில் அமைக்க வேண்டிய செல்களை முதலில் மனதில் குறித்துக் கொள்ளுங்கள். முதல் செல்லுக்குக் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். பின் மேலே இருக்கும் ரூலரில் தெரியும் செல் பார்டருக்கான சிறிய சதுரத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று ஆல்ட் கீயுடன் அழுத்துங்கள். இப்போது அந்த செல்லின் அகலம் எவ்வளவு என்று தெரியும். நீங்கள் செல்லின் அகலத்தைத் தேவையான அளவு வைத்துக் கொண்டு பின் அதே அளவில் இதே முறையில் மற்ற செல்களின் அகலத்தையும் அமைத்துவிடலாமே. இதே போல உயரத்தையும் அமைக்கலாம்.

டேபிள் செல்களில் எண்கள்
வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் அமைக்கப்படும். ஆனால் செல்களில் உள்ள டெக்ஸ்ட் அமைத்து அதில் என்டர் தட்டி வரிசையாக டெக்ஸ்ட் அமைத்திருந்தால் எண்கள் சற்று தாறுமாறாக வரலாம்.