Daily Archives: பிப்ரவரி 8th, 2010

இலவச அவாஸ்ட் ஆண்ட்டி வைரஸ் – புதிய பதிப்பு

இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தக் கூடிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் மிகவும் பிரபலமானது அவாஸ்ட் (avast!) தொகுப்பாகும். இது தற்போது அதன் பதிப்பு 5க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் புதிய யூசர் இன்டர்பேஸ் மற்றும் நவீன வசதிகள் தரப்பட்டுள்ளன. இந்த புதிய பதிப்பு ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் கிடைக்கிறது. இதில் இணைக்கப்பட்டுள்ள புதிய வசதிகள்:
1. ஸ்பைவேர் தொகுப்புகளைக் கண்டறிய புதிய அப்ளிகேஷன்
2. அவாஸ்ட் இன்டெலிஜன்ட் ஸ்கேனர்
3. சைலண்ட்/கேமிங் வசதி
4. புதிய கிராபிகல் யூசர் இன்டர்பேஸ்
5. வைரஸ் இயங்கும் விதம் அறிந்து பாதுகாப்பு
6. மிக வேகமாக அப்டேட் பைல்கள் ஏற்பு
7. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் ஸ்கேனிங் என இன்னும் பல வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பதிப்பு மைக்ரோசாப்ட் விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் இயங்குகிறது.
ஏறத்தாழ 10 கோடிப் பேருக்கும் மேலாக,இலவச ஆண்ட்டி வைரஸ் அவாஸ்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.avast.com/freeantivirusdownload என்ற முகவரியில் உள்ள தளத்தினை அணுகவும்

ஐ பேட் – புதிய டிஜிட்டல் ஆப்பிள்

ஒவ்வொருமுறை ஆப்பிள் ஒரு புதிய சாதனத்தைக் கொண்டு வருகையில், இந்த உலகம் அதனை வியந்து பார்க்கிறது. சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆப்பிள் ஐ–போனைக் கொண்டு வந்த போது, ஆச்சரியப்பட்ட விழிகள் இன்று மீண்டும் விரியத் தொடங்கி உள்ளன.
மேக் கம்ப்யூட்டர், ஐபாட் மியூசிக் பிளேயர் மற்றும் ஐ போன் மொபைல் என முற்றிலும் புதிய சாதனங்களால், டிஜிட்டல் உலகில் புரட்சி ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனம், சென்ற ஜனவரி 27ல் ஐ–பேட் (iPad) என்ற பெயரில் இன்னொரு டிஜிட்டல் அதிசயத்தைக் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் போனுக்கும் லேப் டாப் கம்ப்யூட்டருக்கும் இடைப்பட்ட சாதனமாக இது இயங்குகிறது. இருந்தாலும் இரண்டினையும் தன் திறமையில் ஓரம் கட்டும் சாதனமாக உள்ளது. நெட்புக் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஆனால் முற்றிலும் புதுமையான அனுபவத்தினைத் தரும் சாதனமாக இது இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் இறுதியில் விற்பனைக்கு பொது மக்களுக்குக் கிடைக்க இருக்கும் ஐ–பேட், ஆப்பிள் நிறுவனம் தன் திறமையைக் காட்ட வெளியிட்ட அதிரடி சாதனமாகும். ஆறு மாடல்களில் வெவ்வேறு திறனுடன் இது வெளி வருகிறது. இணையத்தைப் பிரவுஸ் செய்திடவும், அன்றாட வேலைகளான இமெயில், பாட்டு, படங்களைக் கையாளவும் மொபைல் போன் போதுமானதாக இல்லை; ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று அதிகமானது. எனவே தான் இடையே ஒரு சாதனத்தைக் கொண்டால் என்ன என்ற எண்ணத்தில், ஆப்பிள் நிறுவனம் ஐ–பேட் உருவாகியுள்ளது. இதில் ஐ–போன் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் இயக்கலாம்.
சிறிது வளர்ந்த ஐ–போன் போலத் தோற்றமளிக்கும் இதன் பரிமாணம் 243 x 190 x 13mm. வை–பி போன் 680 கிராம்; வை–பி + 3ஜி இணைந்த ஐ–பேட் 730 கிராம். இதன் தொடுதிரை அனைத்து மாடல்களிலும் 9.7 அங்குல அகலத்தில் 1024 x 768 ரெசல்யூசனைக் கொண்டது. வை–பி, புளுடூத் 2.1., ஜி.பி.எஸ்., காம்பஸ், மைக், ஸ்பீக்கர், ஆப்பிள் வடிவமைத்த 1எஏத் வேகத்தில் இயங்கும் ஆப்பிள் 4 ப்ராசசர், யு.எஸ்.பி. இணைப்பு எனப் பல வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் பேட்டரி 10 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.
ஐ–பேட் பயன்படுத்தி இணையத்தை உலா வரலாம்; கேம்ஸ் விளையாடலாம்; இசையை ரசிக்கலாம்; போட்டோ பார்க்கலாம்; காலண்டர், மேப் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஐ ட்யூன்ஸ் ஸ்டோர் பெற்று தேவைப்படும் மியூசிக் மற்றும் வீடியோ பைல்களை வாங்கி ரசிக்கலாம். ஒரு 3ஜி போனாகப் பயன்படுத்தலாம். இணையப் பக்கங்களை இதில் பார்ப்பது மிகவும் தெளிவாக உள்ளது. போர்ட்ரெய்ட் அல்லது லேண்ட்ஸ்கேப் என எந்த தோற்றத்தில் பார்த்தாலும் வண்ணங்களும், எழுத்துக்களும் மிகவும் துல்லியமாக உள்ளன. விரல்களால் தொட்டு இணையப் பக்கங்களில் மேலும் கீழும் செல்ல முடிகிறது. போட்டோக்களைச் செல்லமாகக் கிள்ளினால் விரிகிறது, சுருங்குகிறது. ஐ–பேடை அழகான டிஜிட்டல் போட்டோ பிரேமாகப் பயன்படுத்தலாம்.
இமெயில்களைப் பார்ப்பது தனி அனுபவம். லேண்ட்ஸ்கேப் வகையில் திறந்திருக்கும் மெயிலும், மெயில் இன்பாக்ஸும் தெரிகின்றன. ஐ–பேடை போர்ட்ரெய்ட் வகைக்குத் திருப்பினால், பார்த்துக் கொண்டிருக்கின்ற மெசேஜ் மட்டும் திரை முழுவதும் தெரிகிறது. மெசேஜ் டெக்ஸ்ட் அமைப்பது எளிது; அதே போல ஒரு விரலால் தட்டினால் மெயிலை அழிக்கவும் முடிகிறது. யாஹூ மெயில், ஜிமெயில், ஹாட் மெயில் என அனைத்து பெரிய மெயில் தளங்களுடனும் இது செயல்படுகிறது.
வீடியோக்களின் தெளிவு பிரம்மிக்க வைக்கிறது. குறிப்பாக யு–ட்யூப் எச்.டி. வீடியோக்கள் அழகாகவும் ஆழமாகவும் காட்சி அளிக்கின்றன.
ஐ–பாட் மியூசிக் பிளேயர் இதில் இணைந்துள்ளது. மியூசிக் ஆல்பம், பாடல், பாடியவர், பாடல் வகை எனப் பல வகைகளில் வகைப்படுத்திப் பார்க்க முடிகிறது. இதில் உள்ள திறன் கொண்ட ஸ்பீக்கரிலும் கேட்கலாம்; புளுடூத் வயர்லெஸ் ஹெட்போன் மூலமாகவும் கேட்கலாம்.
ஐ–ட்யூன்ஸ் ஸ்டோர் ஒரு விரல் தட்டில் கிடைக்கிறது. பாடல்கள், வீடியோக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றை வேகமாக பிரவுஸ் செய்திடலாம். பாடல்களை வாங்கும் முன் சிறிது கேட்டு பின் தேர்ந்தெடுக்கலாம். பின் வாங்கலாம். உங்களிடம் ஏற்கனவே உள்ள பாடல்களை இதில் இணைக்கலாம்.
ஆப்பிள் ஸ்டோரும் இதே போல எளிதாகக் கிடைக்கிறது. கேம்ஸ், பிசினஸ் அப்ளிகேஷன் புரோகிராம் மற்றும் அனைத்து வகைகளிலும் புரோகிராம்கள் குவிந்து கிடக்கின்றன. 140,000 அப்ளிகேஷன்கள் விற்பனைக்கு உள்ளன.
எந்த ஐ–புக்கையும் இதில் படிக்கலாம். ஸ்டோரிலிருந்து விலைக்கு வாங்கலாம். வாடகைக்குப் பெற்று படிக்கலம்.
உலகின் அனைத்து பகுதிகளின் சாட்டலைட் இமேஜ்களைத் தெருவாரியாகப் பெறலாம். இவற்றையும் உணவு விடுதி, பள்ளிகள், திரை அரங்குகள் என வகை வகையாய்ப் பிரித்துப் பெறலாம். இதில் உள்ள காலண்டரைப் பயன்படுத்தி, நம் வேலைக்கான அட்டவணையை அமைக்கலாம்.
நாம் அழைக்க வேண்டிய தொடர்புகளைப் பெயர், தொலைபேசி எண்கள் மற்றும் முக்கிய தகவல் அடிப்படையில் பிரித்துக் காணலாம். ஒரு தொடர்பினைக் காண்கையில் மற்றவற்றின் பட்டியலும் அருகே காட்டப்படுகிறது. இதில் உள்ள ஸ்பாட் லைட் என்னும் தேடல் வசதி மூலம் மெயில், காலண்டர், காண்டாக்ட்ஸ், ஐபாட், நோட்ஸ் ஆகிய அனைத்தையும் ஒருங்கே வைத்துத் தேட முடிகிறது.
ஐ–பேட் சாதனத்தில் ஒரு நேரத்தில் ஒரு அப்ளிகேஷனை மட்டுமே இயக்க முடியும். இது ஒரு பிரச்னைதான். இதில் கீ போர்டு இல்லை. ஆனால் அகலமான திரையில் உள்ள விர்ச்சுவல் கீ போர்டு எளிதாக இயக்கும் வகையில் உள்ளது. தனியே வாங்கி இணைத்துப் பயன்படுத்த கீ போர்டு ஒன்றினை ஆப்பிள் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. கேமரா இணைக்கப் படவில்லை. மெமரி கார்ட் இணைப்பு இல்லை.இன்ப்ரா ரெட் இணைப்பு இல்லை. ஜாவா இல்லை. ஐ–பேட் சாதனத்தின் தொடக்க விலை 499 டாலர். மக்களுக்கு எட்டும் தொலைவில் உள்ளது. ஆனால் இதன் பலவகை திறன் கொண்ட ஆறு மாடல்களுக்கு இடையே உள்ள விலை வேறுபாடு மலைக்க வைக்கிறது. அதிகபட்ச விலை 829 டாலர். இந்த வேறுபாட்டினை நீக்கி ஆப்பிள் ஏதேனும் ஒரு அறிவிப்பினை வெளியிட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

வெளியானது பயர்பாக்ஸ் 3.6

உலகின் மிகச் சிறந்த பிரவுசர் என்ற உரையுடன் மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த பிரவுசரின் முதல் சோதனைத் தொகுப்பு வெளியான ஐந்தாவது மாதத்தில் இது வெளியாகியுள்ளது. எப்படியும் ஒரு நல்ல பிரவுசரைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் மொஸில்லா உழைத்தது, இந்த பிரவுசரின் இயக்கத்தில் தெரிகிறது.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்கங்களுக்கான பிரவுசர்கள் மொஸில்லாவின் தளத்தில் கிடைக்கின்றன. பன்னாட்டளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன என்பது மொஸில்லாவின் உலகளாவிய பார்வையினைக் காட்டுகிறது. இந்த புதிய தொகுப்பினை http://www.mozilla. com/enUS// என்ற முகவரியில் உள்ள மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இந்த புதிய பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்குவது துரிதப்படுத்தப்பட்டு, இணையதளங்கள் மிக வேகமாக இறங்குகின்றன. முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம் வேகம் இருப்பதாக இதனைச் சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர். சோதித்துப் பார்த்ததில் 15 சதவீதம் கூடுதல் வேகம் தெரியவந்தது. ஆப்பரா பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகத்தில் இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளது. ஆனால் மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.
இந்த பிரவுசரின் அடுத்த முக்கிய அம்சமாக பிளக் இன் சோதனையைக் கூறலாம். பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்களை பாதுகாப்பு அடிப்படையில் முற்றிலுமாகச் சோதனை செய்த பின்னரே இந்த பிரவுசர் ஏற்றுக்கொள்கிறது. இதனால் தேர்ட் பார்ட்டி புரோகிராம்களால், பிரவுசரில் கிராஷ் ஏற்படாது. மேலும் ஏற்கனவே ஏதேனும் ப்ளக் இன் புரோகிராம் அமைக்கப்பட்டிருந்தால் (பிளாஷ், குயிக்டைம் போன்ற) அதற்கான புதிய பதிப்பு ஏதேனும், அதன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதா என்று பயர்பாக்ஸ் சோதனை செய்து அறிவித்து, புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறது. ஏனென்றால் ஹேக்கர்கள் பழைய பதிப்புகள் மூலமே தங்கள் நாசவேலையை மேற்கொள்கின்றனர். புதிய பிரவுசர் வீடியோவினை முழுத் திரையில் காட்டுகிறது. Oணிஞ் ஙணிணூஞடிண் என்னும் பார்மட்டில் அமைந்துள்ள வீடியோவை இவ்வாறு காணலாம். இதனைச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றால் http://en.wikipedia.org /wiki/File:Bus_Ride_ Through_Downtown_ Seattle_ %28Timelapse%29.ogv என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த பார்மட்டில் அமைந்துள்ள வீடியோ வினை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்க்கவும். இயங்கும் போது அதன் மீது ரைட் கிளிக் செய்து, முழுத்திரைக்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த பிரவுசரில் இணைய தளங்கள் வேகமாக இயங்குகின்றன. இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அடுத்ததாக புதிய ஸ்கின்களை (பெர்சனாஸ்) இந்த பிரவுசர் ஏற்றுக் கொண்டு அவற்றைச் சிறப்பாக வடிவமைக்கிறது. பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஏறத்தாழ 35,000 டிசைன்களில் பெர்சனாஸ் கிடைக்கிறது. இவற்றை http://www.getpersonas.com/enUS/ என்ற முகவரியில் காணலாம். இந்த பிரவுசரில் இவற்றை நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது. பெர்சனாஸ் காலரி (http://www.getpersonas.com/enUS/gallery/) சென்று, அதில் ஒரு பெர்சனாவின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம். அல்லது மற்றவற்றைச் சோதனை செய்து பார்க்கலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனாஸ் பதியப்பட்டால், அவை மெனுவாகக் கிடைக்கின்றன. தேவைப் பட்டதனைத் தேர்ந்தெடுத்தால் அது உடனே அமைக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் முதலில் அறிமுகமானபோது யு–ட்யூப் வீடியோ தளம் இல்லை. குயிக் டைம், விண்டோஸ் மீடியா அல்லது ரியல் பிளேயரின் துணையை நாட வேண்டியதிருந்தது. யு–ட்யூப் வீடியோ தளம் வந்த பின்னர் அதனை ஒருங்கிணைக்கும் வகையில் பிரவுசர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் இதன் மூலம் இன்டர்நெட் பார்க்கும் ரசிகர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப தளங்களை எளிதாக அமைக்கவும் மாற்றவும் முடிகிறது. பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரில் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது.
பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதன் ஆட் ஆன் புரோகிராம்கள் பிரசித்தி பெற்றவை. இதன் கட்டமைப்பு ஓப்பன் சோர்ஸ் என அனைவரும் அறியும் வகையில் அமைந்திருப்பதால், திறமை கொண்ட பல புரோகிராமர்கள் இதற்கான ஆட் ஆன் தொகுப்புகளை இலவசமாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றனர். பயர்பாக்ஸ் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இன்டர்நெட் பிரவுசர்களின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனை உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் முதல் இடத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன. இணைய தளங்களை வடிவமைப் பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது,புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம், டவுண்லோட் செய்யக் கூடிய எழுத்து வகைக்கு சப்போர்ட், ஆப் லைன் அப்ளிகேஷன் சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன. இவை இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும், இணைய தளங்களை வடிவமைப்போருக்கும் மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளன.

குளிரும் நளிரும் கூடிய காய்ச்சலா?-மூலிகை மிளகரணை

குளிரும் நளிரும் கூடிய காய்ச்சலா?
நாம் என்ன தான் கவனமாக இருந்தாலும்கூட கிருமித் தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கும்பொழுது நமது நோய் எதிர்ப்பு சக்தியால் கிருமிகளின் ஊடுருவலை தடுக்க முடிவதில்லை. ஆனால், நுழைந்த கிருமிகளை நமக்கு அடையாளம் காட்டுவதற்காக, நம் உடல் காட்டும் பல்வேறு குறிகுணங்களில் முதன்மையானது காய்ச்சலே.
காய்ச்சல் சிறிது, சிறிதாக அதிகரித்து தலை, கண் மற்றும் உடல் முழுவதும் ஒருவித வெப்பம் பரவி, கண்களில் எரிச்சல், நாக்கசப்பு, ருசியின்மை ஆகியன தோன்றும். பின் திடீரென வியர்வை உற்பத்தியாகி சுரம் தணிந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், மீண்டும் உடல்வெப்பம் அதிகரித்து பலநாட்கள் நீடிக்கும் தன்மையுடன் காணப்படும். பெரும்பாலும் கடுங்குளிர் மற்றும் நளிரென்னும் நடுக்கமும் உண்டாகும். சூடான திரவங்களையோ, உணவுகளையோ அல்லது காய்ச்சலை நீக்கும் மருந்துகளையோ உட்கொண்டவுடன் சுரம் தணிந்து, நடுக்கம் குறைந்து, பின் குளிரும் கொஞ்சங்கொஞ்சமாக குறைந்து, நன்கு வியர்த்து பின், இயல்பான உடல்நிலை ஏற்படும். ஆனால், இந்நிலை நீடிக்காமல் 6 முதல் 24 மணி நேர இடைவெளியில் மீண்டும் உடல்வெப்பம் அதிகரித்து குளிரும், நளிரும் உண்டாகும். டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களில் கால, நேரம் தவறாமல் காய்ச்சல் உண்டாகும். இதுபோன்ற குறிகுணங்களை கொண்ட காய்ச்சலே, முறைசுரம் என்றழைக்கப்படுகிறது.
கிருமித்தொற்றால் ஏற்படும் முறைசுரத்தை நீக்கி, கிருமிகளை வெளியேற்றும் அற்புத மூலிகை மிளகரணை. டொடலியா ஏசியாட்டிகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரூட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த மிளகரணையில் ஆல்கலாய்ட்ஸ், டொடாலின், டொடாலினின், ஸ்கிமியானைன், கௌமாரின், பிம்பினெல்லின், டொடாலோலேக்டும் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. இவை நுரையீரல், குடல், சிறுநீர்ப்பாதை போன்றவற்றில் தங்கியுள்ள நுண்கிருமிகளை அழித்து, வெளியேற்றி, சுரம் வராமல் காக்கின்றன.
மிளகரணை இலைத்தண்டு மற்றும் வேரை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து, 10 கிராமளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்கவைத்து, 50 மி.லி.,யாக சுண்டியபின் வடிகட்டி காலை, மாலை உணவுக்கு முன் குடிக்க முறைசுரம் நீங்கும். மிளகரணை இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆவி பிடிக்க அல்லது அந்த ஆவியை உடலில் படும்படி செய்ய வியர்வை அதிகரித்து சுரம் தணியும்.

மூளைக்கு பலம் சேர்க்கும் `ஜாகிங்’

ஓட்டப் பயிற்சி உடலுக்கு நல்லது என்பது நமக்குத் தெரியும். ஓடும்போது உடலின் அனைத்து பாகங்களும் இயங்குவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

`ஜாகிங்’ (மெல்லோட்டம்) செய்வதும் சிறந்த பயிற்சிதான். இதனால் முளை பலம்பெறுகிறது என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தினமும் ஜாகிங் செல்வதால் அதிகளவில் புதிதாக மூளை செல்கள் உற்பத்தி ஆகிறது என்கிறார்கள்.

சுவாசப் பயிற்சியால் மூளையின் கார்டெக்ஸ் பகுதி தூண்டப்படுகிறது. ரத்த ஓட்டமும் அதிகரிக்கிறது. ஹார்மோன்களும் சுறுசுறுப்பாகின்றன. ஜாகிங் செய்யும்போதும் இதே மாற்றங்கள் நிகழ்கின்றன.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஒரு ஆய்வை நடத்தினார்கள். எலிகளை நகரும் சக்கரத்தில் ஓட்டப் பயிற்சியில் ஈடு படுத்தினார்கள். தொடர்ந்து சில நாட்கள் பயிற்சி பெற்றதும் அந்த எலிகளில் சில மாற்றங்களை கண்டறிந்தனர்.

பயிற்சியில் ஈடுபட்ட எலி, பயிற்சி செய்யாத எலி இரண்டிற்குமான முளைப் பதிவுகள் கணினி முலம் பரிசோதிக்கப்பட்டது. இதில் பயிற்சி செய்த எலிகளுக்கு புதிதாக மூளை செல்கள் உருவாகி இருந்தன.

எலிகள் சுமாராக ஒரு நாளைக்கு 15 மைல் அளவுக்கு ஓடி இரை தேடுகின்றன. இதனால் ஒரு சில நாட்களில் ஆயிரக்கணக்கில் புதிய முளை செல்கள் உருவாகின்றன. ஆய்வுக்கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்ட எலிகளுக்கு சுமார் 6 ஆயிரம் மூளை செல்கள் புதிதாக உற்பத்தி ஆகி இருந்தன.

ஜாகிங் செய்வது, சுவாசத்தை துரிதப்படுத்துவதன் முலம் கார்டிசோல் என்னும் ஹார்மோன் செயல்பட்டு அதிகப்படியான மூளை செல்கள் உற்பத்தியாக துணைபுரிகிறது.

வேண்டும், சான்றோர் நட்பு! (ஆன்மிகம்)

தார்மீக விஷயங்களையும், தெய்வீக,வேதாந்த விஷயங்களையும் தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் சிரத்தையும், பிறகு பொறுமையும் இருக்க வேண்டும்.
“இதெல்லாம் நமக்கு வேண்டாம்பா…’ என்று சிலர் சொல்லலாம். பின்னே எது தான் வேண்டும்? எது, வாழ்க்கைக்கு உதவக் கூடியது; எது, அறிவை வளர்ப்பது; எது, மன நிம்மதியை அளிக்கக் கூடியது? மற்ற விஷய சுகங்களெல்லாம் மன சஞ்சலத்தை உண்டு பண்ணக் கூடியவையே! நிதானமாக சிந்தித்தால் இது தெரியும்.
பருத்தி பளபளப்பாக உள்ளது போல் சான்றோர் வாழ்க்கையும் ஒளி வீசுகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமையால் சுவையற்றது. பருத்தி, பல கஷ்டங்களுக்கு உட்பட்டாலும் நம் உடலை மறைக்கும் துணியாகிறது. சான்றோரும் மற்றவர்களின் குறை, குற்றங்களை மறைக்க (நீக்க) பல இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
சான்றோர் நட்பு (சத் சங்கம்) கிடைத்தால் காக்கை குயிலாகவும், வாத்து அன்னமாகவும் மாறிவிடும் தன்மை பெறுகின்றன. காக்கை, வாத்து போல் குறை உள்ளவர்களும் சான்றோரின் நட்பால் உயர்வு பெறலாம்.
வேடரான வால்மீகி, நாரதரின் தொடர்பால் ராம நாம உபதேசம் பெற்று வால்மீகி முனிவரானார். ஒரு வேலைக்காரியின் புதல்வராக இருந்த நாரதர், மகான்களின் சேர்க்கையால் ஞானம் பெற்று அடுத்த பிறவியில் பிரம்மாவின் புதல்வரானார். சத்சங்கத்தின் மூலமே இவர்களுக்கு உயர்வு ஏற்பட்டது.
சத்சங்கத்தின் மூலம் தான் அறிவு, புகழ், முன்னேற்றம், செல்வம், மங்களம் ஆகியவற்றை எந்த இடத்திலும், எந்த காலத்திலும் பெற முடியும். சான்றோர் நட்பின்றி விவேகம் வராது; விவேகம் இன்றி பக்தி வராது; பக்தி இன்றி ஆண்டவன் அருள் கிடைக்காது; அருள் இன்றேல் சித்திகள் ஏற்படாது.
சாதுக்கள் சலனமற்ற மனம் உடையவர்கள். அவர்களுக்கு நண்பன், பகைவன் என்று யாரும் கிடையாது. மலரானது எப்படி வலது, இடது என்று வேற்றுமை இல்லாமல் இரு கைகளுக்கும் மணம் அளிக்கிறதோ, அப்படி சான்றோர் எல்லாரிடமும் அன்பு காட்டுவர்.
சான்றோர் தூய உள்ளம் கொண்டவர்கள்; உலக நன்மையை நாடுபவர்கள்; உலக நன்மைக்கு எதிராக அவர்கள் எதையும் விரும்ப மாட்டார்கள்; உலகம் ஷேமமாக இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவர்.
நாமெல்லாம் எப்படியோ? சான்றோர் வரிசையில் சேர முடியுமா?

கோணாசனம்

நேராக நின்று கொண்டு கால்களை 2 அடி அகற்றி வைக்கவும். கைகளைப் படத்தில் காட்டியபடி தலைக்கு மேலே தூக்கிக் கோத்துக் கொள்ள வேண்டும். முதலில் வலப்பக்கம் உடல் திருகாமல் வளைய வேண்டும். 20 எண்ணிக்கை ஆசன நிலையில் இருந்து பின் இடப் பக்கம் சாய வேண்டும். 3 முறை செய்யலாம்.

பலன்கள்:

விலா எலும்புகள் பலப்படும். கபநோய் நீங்கும். இடுப்பு வலிகள் குறையும். பெண்கள் இவ்வாசனத்தைச் செய்வதால் இடுப்பு, பிருஷ்டம் இவற்றில் சதை போடாமல் தடுக்கலாம்