குளிரும் நளிரும் கூடிய காய்ச்சலா?-மூலிகை மிளகரணை

குளிரும் நளிரும் கூடிய காய்ச்சலா?
நாம் என்ன தான் கவனமாக இருந்தாலும்கூட கிருமித் தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்கும்பொழுது நமது நோய் எதிர்ப்பு சக்தியால் கிருமிகளின் ஊடுருவலை தடுக்க முடிவதில்லை. ஆனால், நுழைந்த கிருமிகளை நமக்கு அடையாளம் காட்டுவதற்காக, நம் உடல் காட்டும் பல்வேறு குறிகுணங்களில் முதன்மையானது காய்ச்சலே.
காய்ச்சல் சிறிது, சிறிதாக அதிகரித்து தலை, கண் மற்றும் உடல் முழுவதும் ஒருவித வெப்பம் பரவி, கண்களில் எரிச்சல், நாக்கசப்பு, ருசியின்மை ஆகியன தோன்றும். பின் திடீரென வியர்வை உற்பத்தியாகி சுரம் தணிந்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், மீண்டும் உடல்வெப்பம் அதிகரித்து பலநாட்கள் நீடிக்கும் தன்மையுடன் காணப்படும். பெரும்பாலும் கடுங்குளிர் மற்றும் நளிரென்னும் நடுக்கமும் உண்டாகும். சூடான திரவங்களையோ, உணவுகளையோ அல்லது காய்ச்சலை நீக்கும் மருந்துகளையோ உட்கொண்டவுடன் சுரம் தணிந்து, நடுக்கம் குறைந்து, பின் குளிரும் கொஞ்சங்கொஞ்சமாக குறைந்து, நன்கு வியர்த்து பின், இயல்பான உடல்நிலை ஏற்படும். ஆனால், இந்நிலை நீடிக்காமல் 6 முதல் 24 மணி நேர இடைவெளியில் மீண்டும் உடல்வெப்பம் அதிகரித்து குளிரும், நளிரும் உண்டாகும். டைபாய்டு, மலேரியா போன்ற நோய்களில் கால, நேரம் தவறாமல் காய்ச்சல் உண்டாகும். இதுபோன்ற குறிகுணங்களை கொண்ட காய்ச்சலே, முறைசுரம் என்றழைக்கப்படுகிறது.
கிருமித்தொற்றால் ஏற்படும் முறைசுரத்தை நீக்கி, கிருமிகளை வெளியேற்றும் அற்புத மூலிகை மிளகரணை. டொடலியா ஏசியாட்டிகா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரூட்டேசியே குடும்பத்தைச் சார்ந்த மிளகரணையில் ஆல்கலாய்ட்ஸ், டொடாலின், டொடாலினின், ஸ்கிமியானைன், கௌமாரின், பிம்பினெல்லின், டொடாலோலேக்டும் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன. இவை நுரையீரல், குடல், சிறுநீர்ப்பாதை போன்றவற்றில் தங்கியுள்ள நுண்கிருமிகளை அழித்து, வெளியேற்றி, சுரம் வராமல் காக்கின்றன.
மிளகரணை இலைத்தண்டு மற்றும் வேரை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து, 10 கிராமளவு எடுத்து 500 மி.லி., நீரில் போட்டு கொதிக்கவைத்து, 50 மி.லி.,யாக சுண்டியபின் வடிகட்டி காலை, மாலை உணவுக்கு முன் குடிக்க முறைசுரம் நீங்கும். மிளகரணை இலைகளை நீரில் போட்டு கொதிக்கவைத்து, ஆவி பிடிக்க அல்லது அந்த ஆவியை உடலில் படும்படி செய்ய வியர்வை அதிகரித்து சுரம் தணியும்.

%d bloggers like this: