Daily Archives: பிப்ரவரி 9th, 2010

டுவிட்டர் ஜனத்தொகை 7.5 கோடி

சமுதாய இணையதளமாக இயங்கும் ட்விட்டர் தளத்தைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 7 கோடியே 50 லட்சமாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த தளத்தில் சேரும் புதியவர்களின் எண்ணிக்கை உயர்வு குறைந்து கொண்டு வருகிறது. மேலும் இதில் உறுப்பினரான பலர் எந்த செயல்பாட்டினையும் இதில் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர் என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. கடந்த ஜூலையில் தான் ட்விட்டர் தளத்தில் புதியதாய்ச் சேருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமானது. அப்போது 78 லட்சம் பேர் சேர்ந்தனர். அடுத்த மாதங்களில் இந்த எண்ணிக்கை 60 லட்சம் என்ற அளவில் இருந்தது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் மொத்த ட்விட்டர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் சேர்ந்துள்ளனர். ஆனால் சேருபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு சிறிய செய்தி கூட அனுப்புவதில்லை. தொடர்ந்து குறுஞ்செய்திகளை இந்த தளத்தில் போடுபவர்களின் எண்ணிக்கை 10 அல்லது 15 லட்சம் பேர் தான்.

அறிவுள்ள குழந்தைக்காக கருவிலேயே பாட்டு!

தங்கள் குழந்தைகள் புத்திசாலியாக வரவேண்டும், முதன்மையானவர்களாக திகழ வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களும் விரும்புவார்கள். அதற்காக கருவிலிருந்தே பயிற்சி கொடுக்கலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதற்கான ஒரு புதுமையான முயற்சி இது.

குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பல விஷயங்களை கற்றுக் கொள்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. கேட்கும் திறனும், அறிவுத்திறனும் வேகமாக வளர்கிறது.

கருவில் 17 வார வளர்ச்சி உடைய குழந்தை ஒரு செயலை எதிர்நோக்கு விளைவுடன் கவனிக்கத் தொடங்குகிறதாம்.

அதேபோல் இசையானது கருவில் இருக்கும் குழந்தையின் முளைத்திறனை அதிகரிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

எனவே தாயும், குழந்தையும் சேர்ந்து இசை கேட்பதன் முலம் அறிவுள்ள குழந்தையை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

இதற்காக நவீன கருவி வடிவமைக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் வயிறு- இடுப்பில் எளிதாக பொருத்திக் கொள்ளும் `பெல்ட்’ வடிவில் இந்த கருவி அமைந்துள்ளது. இதில் 2 வரிசைகளில் ஸ்பீக்கர் மற்றும் இயர்போன் இணைந்திருக்கும். குழந்தையின் தலைப்பகுதி எந்தப்பக்கம் இருந்தாலும் பாட்டு கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இதை தயாரித்துள்ளது. விற்பனைக்கு வந்துவிட்ட இதன் விலை சுமார் ரு600 ஆகும்.

பாலியல் தளங்களுக்குத் தடா

இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும் அதே நேரத்தில் பாலியல் தொடர்பான தளங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே வீடுகளிலும் பள்ளிகளிலும், குழந்தைகளை இது போன்ற பாலியல் தளங்களையும், ஏமாற்றும் தளங்களையும் அடையாளம் கண்டு பாதுகாப்பது சிரமமான காரியமாக உள்ளது.
இணையத்தில் கே9 வெப் புரடக்ஷன் (K9 Web Protection) என்ற பெயரில் இது போன்ற தளங்களை வடிகட்டும் சாப்ட்வேர் ஒன்று தரப்பட்டுள்ளது. இதன் தளத்தில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினை எப்படி டவுண்லோட் செய்து பயன்படுத்துவது என்று படிப்படியாக விளக்கப்பட்டுள்ளது.
முதலில் http://www.k9webprotection.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இந்த சாப்ட்வேர் புரோகிராமினை டவுண்லோட் செய்திடுங்கள். டவுண்லோட் செய்திடும் முன் உங்கள் பெயர், முகவரி போன்ற பெர்சனல் தகவல்கள் கேட்கப்பட்டு படிவம் ஒன்றில் நிரப்பி இணையத்தில் அனுப்ப வேண்டும். பின் கே9 தளம் நீங்கள் தந்த இமெயில் முகவரிக்கு ஒரு அஞ்சல் அனுப்பும். அதில் இந்த சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த ஒரு கீ தரப்படும். சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்த பின், அதனை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இந்த புரோகிராம் தானாகவே பாலியல் தகவல்கள் கொண்டுள்ள தளங்களைத் தடுத்துவிடுகிறது. இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் தளம் இடம் பெற்றால், அதனை அந்த பட்டியலில் இருந்து நீக்கிவிடலாம். தடை செய்யக் கூடிய பொருட்கள் குறித்த பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.
கே 9 வெப் புரடக்ஷன் சாப்ட்வேர் இந்த வகையில் மிகவும் பயனுள்ள புரோகிராமாக உள்ளது. குழந்தைகள் மோசமான தளங்களைப் பார்ப்பதிலிருந்து தடுக்கிறது.

மலேரியாவை தடுக்கும் தாவரம்!

மரபணுக்களான ஜீன்களின் அமைப்பை பட்டியலிடுவதுதான் தற்போதைய அறிவியல் உலகின் தலைசிறந்த பணி. வருங்கால சந்ததிகளுக்கு பழையவற்றை நினைவுபடுத்தும் விதமாக எல்லா விஷயங்களையும் ஆவணப்படுத்துவோம். அதுபோலத்தான் ஜீன்களையும் பட்டியலிடுவதும்.

இதனால் வியாதிகளை முழுமையாக குணப்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடிக்க முடியும். அதுமட்டுமல்லாது தாவரங்கள், உயிரினங்களில் தேவையான பண்பு மாற்றங்கள், இன மாற்றங்கள் செய்வதற்கும் இவை கைகொடுக்கும்.

இதனால் உலகையே புதுமையாக மாற்ற முடியும். இருந்தாலும் இயற்கைக்கு மாறான மாற்றங்களை உருவாக்குவதன் முலம் தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் இந்த முறைக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு.

இந்திய விஞ்ஞானிகள் கூட சமீபத்தில் மரபணு பட்டியல் தயாரித்து சாதனை படைத்தார்கள். இதுபோன்ற பணி உலகெங்கும் நடந்து வருகிறது. இதில் தாவரங்களின் மரபணுக்களை பட்டியலிட்டு ஆய்வு செய்தபோது மலேரியாவுக்கு ஒரு தாவரத்தில் இருந்து தீர்வு கிடைக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

அந்த தாவரத்தின் பெயர் ஆர்ட்டிமீசியா அன்னுயா. இந்த தாவரத்தின் மரபணுக்களை பட்டியலிட்ட யார்க் பல்கலைக்கழக ஆய்வுக்குழு இந்த உண்மையை கண்டறிந்துள்ளது.

மலேரியாவைத் தடுக்கும் இந்தச் செடிகள் குறைந்த அளவே உள்ளன. எனவே இவற்றை பதியமிட்டு அதிகளவில் உற்பத்தி செய்வதன் முலம் மலேரியாவுக்கு தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது. 2012-க்குள் இந்தச் செடியில் இருந்து சிறந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக்கான நிதி வசதியை பில்கேட்ஸ் தம்பதியினர் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருடப்பட்ட பாஸ்வேர்ட்

என்னதான் பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாத்தாலும், சில ஹேக்கர்கள் பாஸ்வேர்ட்களைக் கண்டறிந்து, திருடுவதிலும், நாசம் செய்வதிலும் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இவ்வாறு பாஸ்வேர்ட் திருடப்பட்ட கம்ப்யூட்டர் களை ஆய்வு செய்த போது மிகவும் பிரபலமான பாஸ்வேர்ட் ஒன்று பெரும்பா லானவர்களால் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. அந்த பாஸ்வேர்ட் 1234356. 3 கோடியே 20 லட்சம் திருடப்பட்ட பாஸ்வேர்ட்களை ஆய்வு செய்திடுகையில் இந்த தகவல் தெரிய வந்தது. பாஸ்வேர்டை நினைவு வைப்பதில் உள்ள சோம்பேறித்தனமும், அதனை எளிதாக டைப் செய்திட வேண்டும் என்கிற ஆசையுமே இந்த பாஸ்வேர்டைப் பலர் பயன்படுத்த இடம் அளித்துள்ளது.
பொதுவாக சிறிய பாஸ்வேர்ட்கள், சிறிய பெரிய எழுத்துக்களையும் எண்களையும் கலந்திடாத பாஸ்வேர்ட், டிக்ஷனரியில் உள்ள சிறிய சாதாரண சொற்கள் ஆகியவை பாஸ்வேர்ட்களாக இருந்தால் ஹேக்கர்கள் மிக எளிதாக அவற்றைக் கண்டறிந்து விடுகின்றனர். இந்த ஆய்வில் இன்னும் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்துள்ளன.
110 முறை முயற்சி செய்தால், நிச்சயம் ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு பாஸ்வேர்டைக் கண்டறியலாம். ஆயிரம் அக்கவுண்ட்களை உடைத்தெறிய ஒருவருக்கு 17 நிமிடங்களே ஆயின. கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் 30% பேர் மிகச் சிறிய, ஆறு எழுத்துக்களுக்கும் குறைவாக, பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்துகின்றனர். 60 சதவீதம் பேர் பயன்படுத்தும் எழுத்துக்கள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன.
50 சதவீதம் பேர் பெயர்கள், வழக்குச் சொற்கள், அகராதியில் உள்ள சில குறிப்பிட்ட சொற்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
இதனால் தான் ட்விட்டர் போன்ற தளங்கள் நூற்றுக் கணக்கான சொற்களை, பாஸ்வேர்ட்களாகப் பயன்படுத்தக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது.
பாஸ்வேர்ட்களை எப்படி அமைக்க வேண்டும் என்ற அறிவுரையைப் பெற விரும்புகிறீர்களா! http://www.imperva.com/ docs/WP_Consumer_Password_ Worst_Practices.pdf என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.

நந்தி அவதார ஸ்தலம்!

பிப்., 7 – ஸ்ரீசைலம் பிரம்மோற்சவம் துவக்கம்!
ஆந்திர மாநிலத்திலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இத்தலத்தில் நடைபெறும் பிரம்மோற்சவம் விசேஷமானது.
ஸ்ரீசைலம் மலையில் வசித்த சிலாதர் என்ற ரிஷி, குழந்தை வரம் வேண்டி சிவனை வணங்கி வந்தார். அவருக்கு நந்தி, பர்வதன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், சிலாதரிடம், “உங்களுக்கு பிறந்திருக்கும் நந்தி சில காலம் தான் பூமியில் வாழ்வார்…’ என்றனர். வருந்தினார் சிலாதர். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, “சிவனைக் குறித்து கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்!’ என்று சபதம் செய்து, தவத்தை துவங்கினார்.
சிவபெருமானும் மனம் ஒருமித்த அந்த பிரார்த் தனையை ஏற்று, நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னை காண முடியாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார். அவருக்கு அருள்புரிந்த சிவன், மல்லிகார்ஜுனர் என்ற பெயரில் இங்கு அருளுகிறார். நேரடியாக பக்தர்களே இவருக்கு பூஜை செய்யலாம் என்பது விசேஷம்.
பிரதேஷசத்தன்று நம் ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், பிறப்பற்ற நிலையை அடையலாம் என்பது நம்பிக்கை.
முக்கிய சிவத்தலங்களில், இமயமலையிலுள்ள கைலாயம் முதலிட மும், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடமும் வகிக்கிறது. குரு�க்ஷத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் இரண்டாயிரம் முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ, அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது.
நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து, அதன் மீது சிவன் ஆட்சி புரிவதாகவும் ஐதீகம். இக்கோவிலிலுள்ள நந்தி மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
இங்குள்ள அம்பிகை பிரமராம்பாள் எனப்படுகிறாள். 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. சிவன் சன்னதி கீழே இருக்க, அம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது மற்றொரு விசேஷம்.
மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்சபாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடமும் இங்குள்ளது. பாறை ஒன்றில் பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் பக்தர்கள் தங்க சத்திரங்கள் உள்ளன. திங்கள், வெள்ளியில் கூட்டம் அதிகமாக இருக்கும். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரே தலம் இது தான்.
***

காலை 5.00 மணி முதல் – மதியம் 3.00 மணி வரையும், மாலை 5.30- முதல் இரவு 10.00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும். காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு பக்தர்கள் பூஜை செய்ய அனுமதியுண்டு. கட்டணம்,700 ரூபாய்.
சென்னையில்இருந்து ரயிலில் செல்பவர்கள் ஓங்கோல் சென்று, அங்கிருந்து பஸ்சில் ஸ்ரீசைலம் செல்லலாம்.
பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி சென்று, கர்நூல் செல்லும் பஸ்சில் நந்தியாலில் இறங்கி, ஸ்ரீசைலம் செல்லலாம். மலைப்பகுதியை சுற்றி பார்க்க ஜீப் வசதி உள்ளது. தனியார் வாகனங்கள் இரவு 8.00 மணியிலிருந்து காலை 6.00 மணிவரை மலைப் பாதையில் செல்ல அனுமதி கிடையாது; அரசு பஸ்கள் மட்டுமே செல்லும்.

உட்டியானா

கால்களை ஓரடி அகற்றி நின்றுகொள்ளவும். உடலை வாந்தி செய்வது போல முன் வளைந்து கைகளை தொடையில் வைத்துக் கொள்ளவும். மூச்சை முழுவதுமாக வெளியே விட வேண்டும். வயிற்றை எக்கி கைகளை தொடையில் அழுத்தி குடலை படத்தில் காட்டியபடி ஏற்றவும். இவ்வாசனத்தை மிக மெதுவாக அவசரப்படாமல் செய்ய வேண்டும். 5 வினாடிகள் நிறுத்தி இளைப்பாறவும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யலாம்.

உட்டியானா வெறும் வயிற்றில் காலையில்தான் செய்ய வேண்டும். ஆகாரம் உண்டு 8 மணி நேரத்திற்குப் பிறகு செய்ய வேண்டும்.

பலன்கள்:

வயிற்றுப் பகுதி உள் உறுப்புகள் வீரியமடையும். விந்து கட்டிப்படும். அல்சர், குடல்புண், வயிற்று வலிகள் நீங்கும். ஜீரண சக்தி அதிகமாகி இளமை மேலிடும். சொப்பன ஸ்கலிதம் நீங்கும். தொந்தி, ஊளைச்சதை கரையும்.