மலேரியாவை தடுக்கும் தாவரம்!

மரபணுக்களான ஜீன்களின் அமைப்பை பட்டியலிடுவதுதான் தற்போதைய அறிவியல் உலகின் தலைசிறந்த பணி. வருங்கால சந்ததிகளுக்கு பழையவற்றை நினைவுபடுத்தும் விதமாக எல்லா விஷயங்களையும் ஆவணப்படுத்துவோம். அதுபோலத்தான் ஜீன்களையும் பட்டியலிடுவதும்.

இதனால் வியாதிகளை முழுமையாக குணப்படுத்துவதற்கான வழிகளை கண்டுபிடிக்க முடியும். அதுமட்டுமல்லாது தாவரங்கள், உயிரினங்களில் தேவையான பண்பு மாற்றங்கள், இன மாற்றங்கள் செய்வதற்கும் இவை கைகொடுக்கும்.

இதனால் உலகையே புதுமையாக மாற்ற முடியும். இருந்தாலும் இயற்கைக்கு மாறான மாற்றங்களை உருவாக்குவதன் முலம் தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் இந்த முறைக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு.

இந்திய விஞ்ஞானிகள் கூட சமீபத்தில் மரபணு பட்டியல் தயாரித்து சாதனை படைத்தார்கள். இதுபோன்ற பணி உலகெங்கும் நடந்து வருகிறது. இதில் தாவரங்களின் மரபணுக்களை பட்டியலிட்டு ஆய்வு செய்தபோது மலேரியாவுக்கு ஒரு தாவரத்தில் இருந்து தீர்வு கிடைக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

அந்த தாவரத்தின் பெயர் ஆர்ட்டிமீசியா அன்னுயா. இந்த தாவரத்தின் மரபணுக்களை பட்டியலிட்ட யார்க் பல்கலைக்கழக ஆய்வுக்குழு இந்த உண்மையை கண்டறிந்துள்ளது.

மலேரியாவைத் தடுக்கும் இந்தச் செடிகள் குறைந்த அளவே உள்ளன. எனவே இவற்றை பதியமிட்டு அதிகளவில் உற்பத்தி செய்வதன் முலம் மலேரியாவுக்கு தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது. 2012-க்குள் இந்தச் செடியில் இருந்து சிறந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுக்கான நிதி வசதியை பில்கேட்ஸ் தம்பதியினர் வழங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: