பொடுகே போ… போ..

பொடுகுத் தொல்லை இன்றைய சூழலில் பலருக்கு பெருந்தொல்லையாக உள்ளது. தலை முடியை தலையாய பிரச்சினையாக கருத்தில் எடுத்துக்கொள்ளாவிட்டால் இந்த தொல்லையை நீங்களும் சந்திக்கலாம்.

பொடுகுத் தொல்லை அப்போதுதான் ஆரம்பித்து இருந்தால் எளிதில் தடுத்துவிடலாம். கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் முதலில் தலைமுடியில் இருந்து ஒருவித வாடை வரும். அதன்பின் அரிப்பு, புண், எரிச்சல், முடி உதிர்தல்… என்று தொல்லைகள் நீண்டு கொண்டே போகும்.

பொடுகினை இரண்டு வகையாக பிரிப்பார்கள். ஒன்று… கூந்தல் வறண்டு செதில் செதிலாக வெள்ளையாக இருப்பது. இரண்டு… எண்ணெய் பசையுடன் இருப்பது.

முதல் வகையினை கவனிக்காமல் விட்டால் அது சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இதன் முலம் நெற்றியில் சின்ன சின்ன பருக்கள் வந்து முக அழகும் பாழாகிவிடும்.

இரண்டாம் வகையில் முடி உதிர்தல் அதிகமாக நிகழும். தலையில் இருந்து ஒருவித துர்நாற்றமும் வரும். இதன் முலம் முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக தெரிந்து அழகு `மிஸ்’ ஆகிவிடும்.

இந்த தொல்லைகளை நீங்களும் அனுபவிக்க வேண்டுமா என்ன?

சரி… பொடுகு வர என்னதான் காரணம்?

இதற்கு முக்கிய காரணங்கள் ஹார்மோன் கோளாறு, தலை முடியை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுதல், தவறான உணவு பழக்கம், டென்ஷன் மற்றும் பரம்பரைத் தன்மை.

– இவை எல்லாம் சரியாக இருந்தால் பொடுகை வராமல் தடுத்துவிடலாம்.

ஒருவேளை பொடுகு வந்துவிட்டால்…

அதை தடுக்க சில டிப்ஸ் : வாரத்திற்கு 2 முறை தலைக்கு ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு குளியுங்கள். நீங்கள் வாங்கும் ஷாம்பு அல்லது சீயக்காய் பவுடர் தரமானதாக இருக்கட்டும். பொடுகு வந்த பின்பு தலையில் அரிப்பு அதிகமாக ஏற்படும். அதனை விரல் நகம் வைத்து சுரண்டக் கூடாது. முக்கியமாக, கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட கிரீம்களை வாங்கி தலைக்கு தேய்க்கக் கூடாது. அதிகமாக தண்ணீர் குடிக்கவும். எண்ணெய் அதிகம் உள்ள உணவு பண்டங்களை தவிர்த்து விடுங்கள். தலையணை உறைகள் மற்றும் தலையணையை சுத்தமாக வைத்து பயன்படுத்தவும். சீப்பு, தலை துடைக்கும் டவல், ஹேர் கிளிப்… என்று தலைக்கு பயன்படுத்தும் அனைத்தையுமே தனியாக பயன்படுத்தவும். அடுத்தவர்கள் பயன்படுத்தியதை எக்காரணம் கொண்டும் உபயோகிக்காதீர்கள். சீப்பை 3 நாளுக்கு ஒரு முறை வெந்நீரில் போட்டு அலசிய பின்பு பயன்படுத்துங்கள். கோபம் வரவே கூடாது. மீறி வந்தால் உடனே கட்டுப்படுத்தி விடுங்கள். வாரம் ஒரு முறை ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கவும். எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு, வெள்ளை முள்ளங்கி சாறு – இவற்றில் ஏதாவது ஒன்றை தலையில் தேய்த்து குளிப்பதும் நல்லது.

– இவற்றை பின்பற்றி வந்தால் பொடுகுத் தொல்லை இல்லவே இல்லை, உங்களுக்கு!

ஒரு மறுமொழி

  1. பயனுள்ள பதிவு. நன்றி.

%d bloggers like this: