இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பவரா?உஷார் மனஅழுத்தமும் அதிகமாகலாம்

இன்டர்நெட்டில் அதிகநேரம் செலவழிப்பவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது.

பிரிட்டனில் உள்ள லீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் காத்ரியோனா மோரிசன் என்பவர் இதுகுறித்து “டெய்லி மெயில்’ பத்திரிகையில் கூறியதாவது:இந்த ஆய்வு இணையதளத்தில் கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் மூலம் நடத்தப்பட்டது. இதில், 1,319 பேர் பதிலளித்துள்ளனர். 16 வயதிலிருந்து 51 வயது வரை அவர்களுக்கு ஏற்ப கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அவர்கள் அளித்த பதிலிலிருந்து மன அழுத்தப் பாதிப்பு கணக்கிடப்பட்டது.இன்றைய நவீன உலகில் இன்டர்நெட் பல பயன்களை அளித்த போதும், அவை மற்றொரு இருளான பக்கத்தையும் கொண்டிருக்கின்றன. தினசரி, தாங்கள் வாங்கிய பொருட்களுக்குக் கட்டணம் கட்டுவதிலிருந்து பொழுதுபோக்கிற்காக விளையாடுவது வரை இன்டர்நெட்டில் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றோம் என்பதே தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.மன அழுத்தத்துக்கும் இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் நெருங்கிய பிணைப்பு இருக்கிறது.

செலவழிக்கும் நேரம் அதிகம் ஆக ஆக மன அழுத்தமும் அதிகமாகிறது. இவர்களில், 18 பேர் ஒரு நாளைக்கு மிக அதிக நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கின்றனர். இவர்களை “இன்டர்நெட்டுக்கு அடிமையானவர்கள்’ என்று வகைப்படுத்தலாம்.சாதாரண மக்களை விட இன்டர்நெட்டில் நேரம் அதிகமாக செலவழிப்பவர்களின் மன அழுத்தம் ஐந்து மடங்கு அதிகமாக இருக்கிறது. சராசரியாக 21 வயதுடையவர்கள், ஆபாச தளங்கள், விளையாட்டுத் தளங்கள், ஆன்-லைன் விவாதக் குழுத் தளங்கள் இவற்றில் தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.இவ்வாறு மோரிசன் தெரிவித்தார்.

<span>%d</span> bloggers like this: