பாஸ் செய்தால் மட்டும் போதுமா? (ஆன்மிகம்)

புராணங்களில், மகாபாரதம் ஐந்தாவது வேதம் என்று சொல்லப்பட்டுள்ளது. வாழ்க்கையின் நெறிமுறைகளை வேதங்களில் சொல்லியிருக்கின்றனர். மகாபாரதத்திலும் பல தர்மங்கள் சொல்லப்பட்டுள்ளன.
மகாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ள தர்மங்களில், “யஷப்ரச்னம்’ என்பதும் ஒன்று. இந்த, “யஷப்ரச்னம்’ என்பது தர்மராஜன், ஒரு கொக்கு உருவமாக ஒரு குளத்தில் இருந்து கொண்டு, தருமபுத்திரரை சில கேள்விகள் கேட்கிறார். எல்லாமே தர்ம சாஸ்திர சம்பந்தமான கேள்விகள். கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை தருமரும் அளிக்கிறார்.
“யார் பண்டிதன்?’ என்பது கேள்வி… “தராசு முனையால் எதிலும் சமநிலை பெற்று, எது அறம், எது மறம் என்று நன்கு அறிந்து அதன்படி தான் நடந்து, அண்டியவர்களுக்கும் வழி காட்டி, நல்லவைகளை உபதேசம் செய்து, எவன் தன் பிறவியைப் பயனுள்ளதாக செய்கிறானோ, அவனே பண்டிதன், அவனே ஆஸ்திகன்!’ என்றார்.
அடுத்து, “எவன் நாஸ்திகன்?’ என்பது கேள்வி! “புறக்கண்ணிற்குப் புலப்படும் பொருட்களை மட்டும் ஒப்புக் கொண்டு, மற்றவைகளை, “இல்லை’ என்றே சாதித்து, அதற்கு ஏற்ப நடந்து, பாவமாவது, புண்ணியமாவது, இதெல்லாம் பாமரர்களை ஏமாற்றும் வழி என்றெல்லாம் சொல்லி, தன் கண்ணையும் மூடிக் கொண்டு, மற்றவர்களின் கண்களையும் மூடிக் கொள்ளச் செய்து, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றிருப்பவன் நாத்திகன்; அவனே மூர்க்கன்;எதையும் நம்பாதவன்.
“மற்றொரு நாத்திகனும் உள்ளான். தெய்வம் உண்டு என்று சொல்வான்; ஆனால், தெய்வாம்சமாய் விளங்கி அருள் புரியும் மகான்களை மதியான்; அவர்களது நீதிப் போதனைகளையும் மதியான். அவர்களிடம் போகான். அடியார்களைக் கண்டாலே நிந்திப்பான். அவர்களிடம் உள்ள நற்குணங்களைப் பாரான். இவர்களிடம் என்ன குற்றம் குறை காணலாம் என்றே சிந்திப்பான். கற்பனையாகவாவது எதையாவது சொல்வான். அதில், அவனுக்கு ஒரு திருப்தி!’ என்றார்.
“ஒரு உவமானம் சொல்கிறார் திருமூலர். உயர்ந்த பனை மரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டு தன் கூரிய கண்களால் கீழே உற்றுப் பார்க்கிறது ஒரு பருந்து! மரத்தின் உச்சியில் இருப்பதால் இதுவும் உயர்ந்துள்ளது. ஆனால், அது கீழே எதைத் தேடுகிறது? ஏதாவது குப்பையில் அழுகிக் கிடக்கும் எலி இருக்குமா என்று தேடுகிறது.
“தனக்கு அருகில் உள்ள பனம் பழத்தை நினைப்பதில்லை; ருசிப்பதில்லை. அதுபோல் உயர்ந்த மனிதப் பிறவி கிடைத்தாலும் எண்ணமும், குணமும் கீழ்த்தரமானதாகவே இருக்கும். இப்படி சிலரும் உண்டு…’ என்று மேலும் சொல்கிறார் தருமர்.
தருமபுத்திரரை யஷஸ் பல கேள்விகள் கேட்டு ஒரு பரீட்சையே வைத்து விட்டது. அவரும் எல்லா கேள்விகளுக்குமே சரியான பதில் சொல்லி நூற்றுக்கு நூறு மார்க் வாங்கி பரீட்சையில் பாஸ் செய்துவிட்டார். நூற்றுக்கு 35 மார்க் வாங்கினாலே பாஸ்தான் என்று யஷஸ் சொல்லவில்லை; தருமபுத்திரரும் அப்படி சலுகை கேட்கவில்லை!

<span>%d</span> bloggers like this: