Daily Archives: பிப்ரவரி 16th, 2010

பூண்டு – அப்படி என்னத்தான் இருக்கு?

உணவில் பூண்டு சேர்க்கும் பழக்கம் உண்டா உங்களுக்கு? இல்லையெனில், இனியாவது சேருங்கள்; பூண்டில் இல்லாத சத்துக்களே இல்லை. உங்கள் குடும்ப டாக்டர் பில் குறையணும்; இருமல், காய்ச்சல் வராமல் இருக்க வேண்டுமானால், பூண்டை விட சிறந்தது வேறில்லை.
கடுகு, மிளகு, தனியா போன்ற அன்றாட உணவு தானியங்களில் ஆரம்பித்து, நாம் பல ஆண்டாக பின்பற்றும் தானியங்களில் இல்லாத சத்துக்களே இல்லை. அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் சரி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களிலும் சரி, இந்த தானியங்கள் தான் சுவை சேர்க்கின்றன.
எளிய முறையில் பயன்படுத்தக்கூடிய இந்த உணவு தானியங்களில் உள்ள மகிமை, இப்போதுள்ள தலைமுறையினருக்கு தெரிவதில்லை என்பது வேதனை தான். இந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் பட்டியலிட முடியாதவை. சீனாவில் யுன்னான் மாகாணத்தில் தான் முதன் முதலில் பிறந்தது இந்த வெங்காய குடும்ப வகையை சேர்ந்த பூண்டு.
சீனாவை அடுத்து அதிகமாக உற்பத்தி செய்வது இந்தியா தான். மருத்துவ, உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது என்றாலும், இப்போது தான் பூண்டு மகிமை பலருக்கு தெரிகிறது.
* தினமும் மூன்று பூண்டு விழுதுகளை கடித்து சாப்பிட்டாலே போதும்; ஜலதோஷம் முதல் தொற்றுக்கிருமிகள், வயிற்று பிரச்னைகள் எதுவும் வராது.
* பூண்டு சாப்பிட்டால், மூச்சு விட்டாலும், அதன் மணம் தான் வீசும். மூக்கை பிடிக்க வைக்கும் வாசனை தான் பலரையும் சாப்பிட விடாமல் பயமுறுத்துகிறது.
* பாக்டீரியா, வைரஸ் மூலம் பரவும் காய்ச்சல், இருமல், தொற்றுநோய்கள், காயங்கள் எதுவும் பூண்டு சாப்பிட்டு வந்தால் வரவே வராது. வந்தாலும் உடனே பறந்து விடும்.
* உணவில் சேர்த்தால் நல்லது தான்;ஆனால், அதில் சத்துக்கள் குறைந்து விடுகின்றன; அதனால், அப்படியே கடித்து விழுங்குவது நல்லதே.
* தொண்டை கரகரப்பா? கவலையே வேண்டாம்; டாக்டரிடம் போக வேண்டாம்; நான்கு பூண்டு விழுதுகளை கடித்து விழுங்கி விடுங்கள்.
* சர்க்கரை நோயுள்ளவர்கள் பூண்டு உட்கொண் டால், சர்க்கரை அளவை சீராக்குகிறது; இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது.
* ஐந்து மாதம் தொடர்ந்து பூண்டு சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் குறைந்து விடும்.
* பூண்டில் , அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
* கழலை, மரு போன்றவை நீங்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது. இரவு தூங்கும் முன், சிறிது அரைத்து அதன் மீது பூசினால் போதும், நாளடைவில் மரு காணாமல் போய்விடும்.
* அலர்ஜியை விரட்ட அருமையான மருந்து பூண்டு; மூன்று வாரம் தொடர்ந்து ஒரு நாளைக்கு மூன்று பூண்டு விழுது சாப்பிட்டு வந்தால் போதும், அலர்ஜி போய் விடும்.
* பல்வலியா, அதற்கும் பூண்டு போதும். ஒரு விழுதை கடித்து அதன் ரசம் பட்டால் போதும், பல்வலி போய்விடும்.
சரியான “மேனியா’வா?
அநியாயத்துக்கு சிலருக்கு, அர்த்தமே இல்லாமல் கடுங்கோபம் வரும்; இந்த அனுபவம் உண்டா உங்களுக்கு? இப்படிப்பட்டவர்களை சரியான “மேனியா’வாக இருக்கிறாரே மனுஷன்…என்று அழைப்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
மேனியா என்றால் என்ன தெரியுமா? சாதாரண மனிதராக இல்லாமல், அடிக்கடி கோபம், தேவையில்லாமல் சீற்றம், எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள தயாரில்லா குணம் கொண்டவர் என்று பொருள். மனோரீதியான பிரச்னை உள்ளவர். சாதா மேனியாவாக உள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு சில மணி நேரம், சில நாள், சில மாதம் தான் இப்படிப்பட்ட நிலை நீடிக்குமாம். ஆனால், மாதக்கணக்கில் நீடித்தால், மனோதத்துவ நிபுணரை பார்க்கத்தான் வேண்டும்.
யாருக்கு வருகிறது மேனியா? அதன் அறிகுறி என்ன?
* பகட்டாக தான் இருப்பர்; ஆனால், எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்; எதிர்வாதம் எப்போதும் உண்டு. உச்சமாக சண்டையும் போடுவர்.
* திடீரென உணர்ச்சிவசப்படுவர்; “நீ சொல்றது தப்பு, உனக்கு ஒண்ணும் தெரியாது’ போன்ற வசனங்கள் அடிக்கடி வரும்.
* அதிகமாக செலவழிப்பர்; ஆடம்பரம் பிடிக்கும்; செக்ஸ் போக்கு அதிகமாக இருக்கும்.
* தூங்குவது குறைவாகத்தான் இருக்கும்; ஆனால் சோர்வே தெரியாது.
* எதிலும் திட்டமிடாத நிலை உள்ளதால், இவர்கள் கடனாளி ஆவதுண்டு. அதனால், மது, போதைக்கும் அடிமையாகிவிடுவர்.
* எந்த ஒரு சிறிய சண்டையும் விர்ர்ர்ரென தலைக்கு ஏறி விடும் என்பதால், எந்த விளைவுகளும் இவர்களுக்கு வந்து சேரும்.
* நார்மலான மனிதர்கள் அல்ல என்பதால், இவர்கள் சாப்பிடுவதிலும், சிரிப்பதிலும், அழுவதிலும் மிகவும் அதிகமாகவே இருப்பர். இவர்கள் எல்லா நடவடிக்கையும் நார்மலுக்கு மாறாகவே இருக்கும்.

வேர்ட் பேட் – நோட்பேட்

எம்.எஸ். வேர்ட் சில வேளைகளில் இயங்காமல் தொல்லை கொடுக்கையில், அல்லது எளிய முறையில் சில சிறிய டெக்ஸ்ட்டை அமைக்க முயற்சிக்கையில், புரோகிராமிங் வரிகளை அமைக்கையில் நாம் நோட்பேட் புரோகிராமினை இயக்கி வேலை பார்க்கிறோம்.
நோட்பேடிலிருந்து சில கூடுதல் வசதிகளுடன் நமக்குக் கிடைப்பது வேர்ட் பேட். இது வேர்ட் புரோகிராம் அளவிற்கு அனைத்து வசதிகளும் கொண்டது இல்லை என்று தெரிந்தாலும், எந்த வகைகளில் இவை வேறுபட்டுள்ளன என்று இங்கு பார்க்கலாம்.
நோட்பேட் மற்றும் வேர்ட் பேட் – ஆகிய இரண்டும் டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களாகும். இவை அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இணைந்தே கிடைக்கின்றன. உங்களிடம் எம்.எஸ். வேர்ட் போன்ற புரோகிராம்கள் இல்லை என்றால், இவற்றில் இரண்டையும் அல்லது ஒன்றைப் பயன்படுத்தலாம். அது எந்த வகையான டாகுமெண்ட்டை நீங்கள் உருவாக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
நோட்பேடில் வெறும் அடிப்படை டெக்ஸ்ட் மட்டும் அமைக்கலாம். வேர்ட் பேட் அதற்கும் மேலாக ஒரு வேர்ட் ப்ராசசர் வரை செல்லும். நோட்பேட் ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டர் ஆகும். எனவே அதனை ஒரு வெப்சைட்டை உருவாக்கும் சாதனமாகப் பயன்படுத்தலாம். ஆனால் வேர்ட்பேடினை ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டராக இயக்க முடியாது. இன்னும் சில வேறுபாடுகளை இங்கு பட்டியலிடலாம்.
1. பார்மட்டிங் / பேஜ் செட் அப்
நோட்பேட் அடிப்படையில் ஒரு டெக்ஸ்ட் எடிட்டர் மட்டுமே. ஒரு எழுத்து வகையினைத் தேர்ந்தெடுத்து, முழு டாகுமெண்ட்டிற்கு டேப் இடைவெளியினை இடைச் செருகலாம். பாராக்களை வேறு வகையில் பார்மட் செய்திட முடியாது. மேலும் இந்த எழுத்து வகை டாகுமெண்ட்டுடன் சேவ் ஆகாது. அந்த பாண்ட் இல்லாத இன்னொரு கம்ப்யூட்டரில் அந்த டாகுமெண்ட்டைப் பார்க்கும் போது, எந்த பாண்ட் இருக்கிறதோ அதில் காணலாம்.
வேர்ட் பேடில் பல வேர்ட் ப்ராசசிங் திறன்கள் இணைந்து தரப்பட்டுள்ளன. பாராக்களை ஒழுங்கு வரிசைப்படுத்தலாம். நோட்பேடில் இருப்பது போல் அல்லாமல், வேர்ட் பேடில் டாகுமெண்ட் ஒன்றை சேவ் செய்கையில், அதன் பார்மட் சமாச்சாரங்களும் சேர்த்து சேவ் செய்யப்படும். எனவே எப்படி டாகுமெண்ட்டை உருவாக் கினீர்களோ, அதே வடிவில் டாகுமெண்ட் களைப் பிற வேர்ட் ப்ராசசரில் காணலாம்.
வேர்ட்பேட், நோட்பேட் ஆகிய இரண்டும் அடிப்படை பக்க அமைப்புகளைக் கொண்டுள்ளன. புட்டர்களையும் ஹெடர் களையும் இணைக்கலாம்; மார்ஜின்களை அமைக்கலாம். நெட்டாகவோ, படுக்கை வகையிலோ அச்சடிக்குமாறு வரையறை செய்திடலாம்.
2. கிராபிக்ஸ்:
நோட்பேடில் கிராபிக்ஸை இடைச் செருக முடியாது. ஆனால் வேர்ட்பேடில் எந்த கிராபிக்ஸையும் செருகி அமைக்க முடியும். அவற்றை எடிட் செய்திடவும் முடியும்.
3. டெக்ஸ்ட் பைல்கள்:
நோட்பேட் அதன் பைல்களை டெக்ஸ்ட் பைல்களாக சேவ் செய்கின்றன. இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமும் இதனைப் படித்துக் காட்ட முடியும். அதே நேரத்தில் மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் மற்ற பார்மட்களைப் படித்தறிய முடியாது.
4. இணைய தளங்கள்:
இங்கு தான் நோட்பேட் ஜொலிக்கிறது. தங்கள் இணைய தள வடிவமைப்பில், எச்.டி.எம்.எல். (HTML–Hyper Text Markup Language) பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், நோட்பேடினை ஒரு பயனுள்ள எடிட்டராகக் காண்கின்றனர். ஸ்பெஷலாக பார்மட்டிங் மேற்கொள்பவர்கள், வேறு ஒரு எச்.டி.எம்.எல். எடிட்டரை நாடுவார்கள். சுருக்கமாகவும் முடிவாகவும் கூறுவதென்றால், நீங்கள் ஓர் எளிய டாகுமெண்ட் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள் என்றால், அல்லது ஒரு இணையப் பக்கத்தினை எடிட் செய்கிறீர்கள் என்றால் நீங்கள் நோட்பேடினைப் பயன்படுத்தலாம். ஆனால் கூடுதல் பார்மட்டிங் வழிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றால், நீங்கள் வேர்ட் பேடினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நோட்பேடினைத் திறக்க, Start >> Programs >> Accessories சென்று அடுத்து Notepad என்பதில் இடது கிளிக் செய்திடவும்.
வேர்ட் பேடினைத் திறக்க Start >> Programs >> Accessories சென்று அடுத்து Wordpad என்பதில் இடது கிளிக் செய்திடவும்.
இந்த இரண்டு புரோகிராம்களுமே அளவில் சிறிய பைல்களைக் கொண்டிருப்பதால், இரண்டும் வெகு சீக்கிரம் இயக்கப்பட்டு, செயல்பாட்டிற்குத் தயாராய் இருக்கும்.

அந்தரத்தில் கண்ணாடிக்கூடம்!

உலகில் உயரமான கட் டிடங்கள் பல உள்ளன. கண்ணாடியால் ஆன கட்டி டங்களும் உள்ளன. ஆனால் உலகில் மிக உயரமான கட்டிடத்தில் அமைக்கப்பட் டிருக்கும் விசேஷமான கண்ணாடிக்கூடம் இது வாகும்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீயர்ஸ் டவர் கட்டிடத்தில் 103-வது மாடியில் இந்த கண் ணாடிக்கூடம் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான 4 கண்ணாடிப் பெட்டி களால் இது உருவாக்கப் பட்டுள்ளது. 1353 அடி பரப்பளவு கொண்ட பால்கனி தளம் வலையில் தொங்குவது போல் காணப்படுகிறது. கீழே இருந்து பார்த்தால் அந்தரத்தில் மிதப்பது போல் தோன்று கிறது.

உயரத்தைக் கண்டு அஞ்சுபவர்கள் இங்கு தங்க முடியாது. அருகில் உள்ள படத்தில் இருப்பது, கானே என்ற சிறுவன் ஹாயாக பால்கனியில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த காட்சி. படத்தைப் பார்த்தாலே தெரிகிறது அங்குள்ள குழந்தைகள் பயப்படாது என்று!

விண்வெளியில் இந்தியாவின் நவீன ஆயுதம்!

வளர்ந்து வரும் இந்தியா, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இந்த வளர்ச்சி ஒருபுறம் சில நாடுகளிடையே காழ்ப்புணர்ச்சி ஏற்படவும் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக நம்மை எப்போதும் எதிரியாக நினைக்கும் பாகிஸ்தான், சீண்டிப் பார்க்கும் சீனா, இந்தப் பக்கம் இலங்கைகூட இந்தியாவின் பொறுமையை சோதித்து வருகிறது.

எல்லைப்பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில்தான் நாட்டின் பாதுகாப்பும், வளர்ச்சியும் இருக்கிறது. அந்த வகையில் இந்தியாவிடம் சிறப்பான படைபலமும், ஆயுதபலமும் இருக்கத்தான் செய்கிறது.

இதற்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக தற்போது நவீன போர்க்கருவி ஒன்றின் தயாரிப்பு பணி வெற்றிகரமாக முடிந்துள்ளது. `கில் வெகிகிள்’  எனப்படும் இந்த லேசர் கருவி எதிரிகளை எல்லைக்கு வெளியிலேயே வீழ்த்தும் நவீன வகையைச் சார்ந்தது. எனவே எதிரிகளின் ஏவுகணைகள், விமானங்களை இந்திய வான் எல்லைக்கு வெளியிலேயே இது வீழ்த்திவிடும்.

ஏற்கனவே தரைதளத்தில் இருந்து எதிரிகளின் இலக்கை அழிப்பது, ஏவுகணைகளை வழிமறித்து தாக்குவது போன்ற போர் ஏவுகணைகள் இந்தியா வசம் உள்ளது. இதுபோன்ற ஏவுகணைகள் பல்வேறு நாடுகளிடமும் இருக்கிறது. 2007ம் ஆண்டு சீனா, தரையில் இருந்து நெடுந்தூரத்திலேயே வழிமறித்து தாக்கும் ஏவுகணையை தயாரித்தது. 2008-ம் ஆண்டு அமெரிக்கா கப்பல் தளத்தில் இருந்து வழிமறித்து தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியது.

தற்போது இந்தியா தயாரித்திருக்கும் `கில் வெகிகிள்’ இவற்றைவிட சக்தி வாய்ந்தது. விண்ணில் இருந்து செயற்கைகோள் உதவியுடன் இதை இயக்க முடியும். இதனால் எதிரிகளின் வியூகத்தை இந்திய வான் எல்லைக்கு வெளியில் வைத்தே யூகித்து சமாதியாக்க முடியும்.

என்னென்ன பழங்களில் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?

இன்றைக்கு நமக்கு வரும் பல நோய்களுக்கும் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மாறியிருப்பது தான். இயற்கை உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டாலே பாதி நோய்களிலிருந்து தப்பி விடலாம். இயற்கையிலேயே கிடைக்கும் பழங்களை உட்கொண்டாலே ஆரோக்கியமாக இருக்க முடியும். காட்டில் வாழ்ந்த சித்தர்கள் நூறு வயதை கடந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் இயற்கையில் கிடைக்கும் பழங்களை உட்கொண்டது தான்.

ஆப்பிள் : இருதய நோய், இரத்தக் கொதிப்பு, மூட்டுவலி, தலைவலி போன்றவை வராமல் தடுக்கும்.

திராட்சை : பசியின்மை, மலச்சிக்கல், சிறுநீரக கல் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கும்.

ஆரஞ்சு : காய்ச்சல், எலும்பு நோய்கள், முகப்பரு வராமல் தடுக்கும். வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பழத்தை அதிக அளவில் கொடுக்கலாம்.

மாதுளை : வயிற்றில் பூச்சி, அஜீரணக்கோளாறு, பித்தப்பை, சிறுநீரகக்கல், புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும்.

வாழைப்பழம் : மூட்டுவலி, சிறுநீரகக்கோளாறு, காசநோய், அலர்ஜி

பப்பாளி : பசியின்மை, வயிற்றுப்பூச்சி, ஈரல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும், மேனியை பளபளப்பாக்கும்.

நெல்லிக்கனி : நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தூக்கமின்மை, உடல்கொழுப்பு குறைய, இளநரை, முடி உதிர்வு நிற்க உதவும்.


இது பொம்மையல்ல, குழந்தை!

படத்தில் நீங்கள் பார்ப்பது பொம்மையல்ல. நிஜ குழந்தைதான். இப்படிப் பொட்டலமாகப் போட்டு குழந்தையை எங்கே கொண்டு போகிறார்கள்?

இப்போது சீனாவில் வசந்தகாலம். இதையொட்டி வசந்தகால திருவிழா 40 நாட்கள் நடைபெறும். திருவிழாவுக்கு ரெயிலில் செல்ல நம்மு ர் போலவே கூட்டம் அலைமோதும். 40 நாட்களில் 21 கோடி பேர் வந்து செல்வார்கள் என்று ரெயில்வே நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

அந்த நெரிசலில் குழந்தை சிக்காமல் இருக்கவும், வழிதவறிச் செல்லாமல் இருக்கவும்தான் குழந்தையை இப்படி கூடையில் பொட்டலம்போல பொதிந்து வைத்திருக்கிறார் ஒரு பெண். ரெயில் வரவும், ஜன்னல் வழியாக குழந்தையை வீசி இடம்பிடிக்காமல் இருந்தால் சரிதான் என்கிறீர்களா? அதெல்லாம் நம்ம ஊ ர் ஸ்டைலுங்க!

மாடக்கோவில்! (ஆன்மிகம்)

தமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொகுடிக்கோவில், மாடக்கோவில் என பலவகைகளாகப் பிரிப்பர். இவற்றில் மாடக்கோவில்களின் அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால், மாடக்கோவில்களின் நுழைவு வாயில் குறுகலாக இருக்கும். யானைகள் இதற்குள் நுழைந்து விடக்கூடாது என்பது இதற்கு காரணம்.
கைலாயத்தில் புஷ்பதந்தன், மாலியவான் என்னும் சிவகணங்கள் இருந்தனர். தங்களில் யார் சிவன் மீது அதிக பக்தி செலுத்துகிறார் என்ற சர்ச்சை இவர்களுக்கிடையே அடிக்கடி எழும். இந்தப் பொறாமையின் விளைவாக மாலியவான், புஷ்பதந்தனை யானையாகவும், புஷ்பதந்தன், மாலியவானை சிலந்தியாகவும் பிறக்க சபித்துக் கொண்டனர். யானையும், சிலந்தியும் பூலோகத்தில் பிறந்தன.
அவை காவிரிக் கரையில், திரிசிராப்பள்ளி மலை (திருச்சி) அருகிலுள்ள திருவானைக்காவல் என்னும் தலத்தில் வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தன. மழையில் சிவன் நனையக்கூடாதே என்பதற்காக அவருக்கு வலை கட்டி சிலந்தி பாதுகாத்தது. லிங்கத்தை வணங்க வரும் யானை, “ஏதோ ஒரு சிலந்தி இப்படி லிங்கத்தின் மீது அசுத்தம் செய்கிறதே!’ என அதை கலைத்து விட்டு சென்றுவிடும்.
இப்படி தினமும் நடக்க, கோபமடைந்த சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து அதைக் கடித்தது. யானை, தும்பிக்கையை தரையில் அடிக்க, சிலந்தி இறந்து விட்டது; சிலந்திக்கடியின் விஷம் தாளாமல் யானையும் இறந்தது.
சிலந்தி முதலில் யானையைக் கொல்ல நினைத்ததால் அதற்கு மறுபிறப்பை கொடுத்தார் இறைவன். சோழநாட்டை ஆண்டுவந்த அரசி கமலாவதியின் வயிற்றில் கரு ஜனித்தது. குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, ஜோதிடர்கள் சிலர், “இந்தக் குழந்தை இன்னும் சிறிது நேரம் கழித்து பிறந்தால், உலகம் போற்றும் உத்தமனாக இருக்கும்…’ என்றனர்.
எனவே, அந்த நேரம் வரும் வரை தன்னை தலைகீழாகக் கட்டி தொங்கவிடச் சொன்னார் அரசியார். நேரம் வந்ததும், அவிழ்த்து விடச் சொல்லி, குழந்தை பிறந்தது; ஆனால், அரசியார் இறந்துவிட்டார். அரசியார் தலைகீழாகத் தொங்கியதால், குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. எனவே, குழந்தைக்கு கோச்செங்கண் என்ற பெயர் ஏற்பட்டது.
கோச்செங்கணார் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், முந்தைய நினைவுகள் வர, யானைகள் சன்னதிக்குள் நுழைய முடியாதபடி 70 சிவாலயங்களையும், மூன்று திருமால் கோவில்களையும் கட்டினார். இவ்வாறு கட்டப்பட்ட கோவில்கள், மாடக்கோவில்கள் எனப்பட்டன.
பக்தர்கள் குறுகலான படிகளில் ஏறிச்சென்று, மாடத்தில் இருக்கும் (மாடி) சன்னதிக்குள் நுழையும் வகையில் இவை இருக்கும். திருவானைக்காவலில் குறுகலான சன்னதிக்குள் நுழைந்து சுவாமியை வணங்கும் வகையில் அமைப்பு உள்ளது.
சிவாலயங்களில், கோச்செங்கணாருக்கு, மாசி சதயம் நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படும். மாடக்கோவில் என்ற கலைச்சிற்பம் நமக்கு கிடைக்க காரணமான அவரை அந்நாளில் நினைவு கொள்வோம்.