மாடக்கோவில்! (ஆன்மிகம்)

தமிழகத்தில் உள்ள கோவில்களை கூடக்கோவில், கொகுடிக்கோவில், மாடக்கோவில் என பலவகைகளாகப் பிரிப்பர். இவற்றில் மாடக்கோவில்களின் அமைப்பு வித்தியாசமானதாக இருக்கும். மற்ற கோவில்களில் சுவாமி சன்னதி நுழைவு வாயில்கள் மிகப்பெரிய அளவில் இருக்கும். ஆனால், மாடக்கோவில்களின் நுழைவு வாயில் குறுகலாக இருக்கும். யானைகள் இதற்குள் நுழைந்து விடக்கூடாது என்பது இதற்கு காரணம்.
கைலாயத்தில் புஷ்பதந்தன், மாலியவான் என்னும் சிவகணங்கள் இருந்தனர். தங்களில் யார் சிவன் மீது அதிக பக்தி செலுத்துகிறார் என்ற சர்ச்சை இவர்களுக்கிடையே அடிக்கடி எழும். இந்தப் பொறாமையின் விளைவாக மாலியவான், புஷ்பதந்தனை யானையாகவும், புஷ்பதந்தன், மாலியவானை சிலந்தியாகவும் பிறக்க சபித்துக் கொண்டனர். யானையும், சிலந்தியும் பூலோகத்தில் பிறந்தன.
அவை காவிரிக் கரையில், திரிசிராப்பள்ளி மலை (திருச்சி) அருகிலுள்ள திருவானைக்காவல் என்னும் தலத்தில் வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வந்தன. மழையில் சிவன் நனையக்கூடாதே என்பதற்காக அவருக்கு வலை கட்டி சிலந்தி பாதுகாத்தது. லிங்கத்தை வணங்க வரும் யானை, “ஏதோ ஒரு சிலந்தி இப்படி லிங்கத்தின் மீது அசுத்தம் செய்கிறதே!’ என அதை கலைத்து விட்டு சென்றுவிடும்.
இப்படி தினமும் நடக்க, கோபமடைந்த சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து அதைக் கடித்தது. யானை, தும்பிக்கையை தரையில் அடிக்க, சிலந்தி இறந்து விட்டது; சிலந்திக்கடியின் விஷம் தாளாமல் யானையும் இறந்தது.
சிலந்தி முதலில் யானையைக் கொல்ல நினைத்ததால் அதற்கு மறுபிறப்பை கொடுத்தார் இறைவன். சோழநாட்டை ஆண்டுவந்த அரசி கமலாவதியின் வயிற்றில் கரு ஜனித்தது. குறிப்பிட்ட நாளில் பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது, ஜோதிடர்கள் சிலர், “இந்தக் குழந்தை இன்னும் சிறிது நேரம் கழித்து பிறந்தால், உலகம் போற்றும் உத்தமனாக இருக்கும்…’ என்றனர்.
எனவே, அந்த நேரம் வரும் வரை தன்னை தலைகீழாகக் கட்டி தொங்கவிடச் சொன்னார் அரசியார். நேரம் வந்ததும், அவிழ்த்து விடச் சொல்லி, குழந்தை பிறந்தது; ஆனால், அரசியார் இறந்துவிட்டார். அரசியார் தலைகீழாகத் தொங்கியதால், குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. எனவே, குழந்தைக்கு கோச்செங்கண் என்ற பெயர் ஏற்பட்டது.
கோச்செங்கணார் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், முந்தைய நினைவுகள் வர, யானைகள் சன்னதிக்குள் நுழைய முடியாதபடி 70 சிவாலயங்களையும், மூன்று திருமால் கோவில்களையும் கட்டினார். இவ்வாறு கட்டப்பட்ட கோவில்கள், மாடக்கோவில்கள் எனப்பட்டன.
பக்தர்கள் குறுகலான படிகளில் ஏறிச்சென்று, மாடத்தில் இருக்கும் (மாடி) சன்னதிக்குள் நுழையும் வகையில் இவை இருக்கும். திருவானைக்காவலில் குறுகலான சன்னதிக்குள் நுழைந்து சுவாமியை வணங்கும் வகையில் அமைப்பு உள்ளது.
சிவாலயங்களில், கோச்செங்கணாருக்கு, மாசி சதயம் நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படும். மாடக்கோவில் என்ற கலைச்சிற்பம் நமக்கு கிடைக்க காரணமான அவரை அந்நாளில் நினைவு கொள்வோம்.

%d bloggers like this: