எக்ஸெல் டிப்ஸ் -ஒரு கிளிக்கில் பல செல்கள்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஏதேனும் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்க, அந்த செல்லில் கிளிக் செய்தால், அந்த ஒரு செல் மட்டும் தேர்ந்தெடுக் கப்படாமல், பல செல்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலை ஏற்படுவதுண்டு. இது ஏன் ஏற்படுகிறது என்று ஆய்வு செய்வது எரிச்சலைத் தோற்றுவிக்கும். இதனைப் போக்க வேண்டுமானால், ஒர்க் ஷீட்டில் வேறு தொடர்பில்லாத இடத்தில் உள்ள செல்களைக் கிளிக் செய்திட வேண்டிய திருக்கும்.
இது போல ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். காரணங்களை ஆய்வு செய்திடும் முன், இதிலிருந்து விடுபடுவது எப்படி என்று பார்க்கலாம். உடனே மவுஸிலிருந்து கீ போர்டுக்கு மாறுங்கள். பல செல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மேல் அம்புக் குறி கீயினை ஒரு முறை அழுத்தவும். பின் கீழ் அம்புக் குறியினை அழுத்தவும். இன்னும் பல செல்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டால், அவை எல்லாம் மெர்ஜ் செய்யப்பட்டிருக்கின்றன என்று பொருள். இவற்றை மெர்ஜ் நிலையில் இருந்து நீக்க வேண்டும். அல்லது இவற்றைத் தனியே தேர்ந்தெடுக்க இயலவில்லை என்பதனை ஒப்புக்கொள்ள வேண்டும்.
செல்கள் மெர்ஜ் செய்யப்படவில்லை என்றால், எக்ஸ்டெண்டட் மோட் இயக்கப்பட்ட நிலையில் இருக்கலாம்.ஒர்க் ஷீட்டின் கீழாக,EXT என்ற எழுத்துக்கள் போல்டாகக் காணப்பட்டால், எக்ஸ்டெண்ட் மோட் இயக்கப்பட்டுள்ளது என்று பொருள். இதனை நீக்க அந்த எழுத்துக்கள் மீது டபுள் கிளிக் செய்திடுங்கள். அல்லது எப்8 அழுத்துங்கள். எக்ஸ்டெண்டட் மோட் இயக்கப்பட்டிருந்தால், செல் செலக்ஷனில் ஒரு மூலை நிலையாக்கப்பட்டு, உங்கள் கர்சர் செல்லும் செல்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படும்.
இதற்குப் பின்னும் செல்கள் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் காணப் பட்டால், உங்கள் ஹார்ட்வேரைச் சற்றுக் கவனிக்க வேண்டும். மவுஸை மாற்றி, வேறு ஒரு மவுஸை இயக்கவும். இதற்கும் சரியாகவில்லை என்றால், உங்கள் கீ போர்டிலும் பிரச்னை இருக்கலாம். ஷிப்ட் கீ அழுந்திய நிலையிலேயே இருந்தால், இது போல செல்கள் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். கீ போர்டை சுத்தப்படுத்த வேண்டும். அல்லது வேறு கீ போர்டு பயன்படுத்த வேண்டும்.

%d bloggers like this: