மாறாதையா மாறாது!

‘ கோடை காலம் அது. ஊரை ஒட்டி இருந்த குளம் நிறைந்திருந்தது. இரவு நேரத்தில் தவளைகள் கூச்சலிட்டன.

அப்போது ஒரு ஆண் தவளை தன்னுடைய ஜோடியிடம் சொன்னது.

`நம்முடைய இரவு நேர பாடல்கள் கரையில் இருக்கும் வீட்டில் வசிப்பவர்களுக்கு தொந்தரவா இருக்குமோன்னு நான் பயப்படுகிறேன்’

அதற்கு பெண் தவளையோ, `அவர்களின் பேச்சுகூட நம்முடைய பகல் நேரத்து அமைதியைக் கெடுக்கிறதே’ என்றது.

`நாம் இரவில் நீண்ட நேரம் பாடுகிறோம் என்பதை மறக்கலாமா?’ ஆண்தவளை மீண்டும் கேட்டது.

`அவர்களும் பகல் நேரத்துல நம்ம நிம்மதியைக் கெடுக்கும்படியாக உரத்த குரல்ல பேசுறாங்க. அதையும் நாம மறந்துடக்கூடாது. உரக்கப் பேசும் தன்மை கொண்ட சிலர் வானமே அதிர்கிற அளவுக்கு முழங்குகிறார்களே, அதுவும் கொஞ்சம் கூட இனிமையே இல்லாத கரடு முரடான குரல்கள்ல…’ பெண் தவளை விட்டுக் கொடுக்காமல் பேசியது.

`நாம இந்த மனிதர்களைவிட நல்லவர்களா இருக்கணும். இரவு நேரங்களில் அமைதியா இருப்போம். நாம யாருக்கும் இடைஞ்சல் பண்ணக்கூடாது. நமது காதல் கீதங்களை இதயங்களுக்குள்ளேயே வச்சிக்குவோம்’ என்றது ஆண் தவளை.

`சரிங்க… உங்க ஈரமான இதயத்தின் பரந்த தன்மையை என்னால புரிஞ்சிக்க முடியுது. ரொம்ப நல்ல விஷயம். நானும் அதற்கு சம்மதிக்கிறேன்’ பெண் தவளை சமாதானத்துக்கு வந்தது.

அன்று முதல் இரவில் தவளைகள் சத்தமிடுவதை நிறுத்திக் கொண்டன. 3 நாட்கள் கடந்தது. நான்காவது நாள் பகலில் ஒரு பெண், மற்றொருத்தியிடம் இப்படிக் கூறினாள்.

“கடந்த 3 நாள் இரவுகளிலும் நான் உறங்கவேயில்லை. தவளைச் சத்தம் காதுல விழுந்து கொண்டிருந்தபோது நான் சுகமா தூங்கினேன். இப்போ என்னவோ நடந்திருக்கு. இரவு தவளைகள் சத்தமே போடுறதில்ல. நானும் உறங்க முடியாம பைத்தியக்காரி மாதிரி ஆயிட்டேன்”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஆண் தவளை, பெண் தவளையிடம் சொன்னது. “உண்மைதான். நாம அமைதியா இருந்தது நமக்கும் பைத்தியம் பிடித்த மாதிரித்தான் இருக்குதுல்ல”

`ஆமா இரவு நேர அமைதி எவ்வளவு பயங்கரமானதா இருக்கு. நாம பாட்டை நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை. சுகத்தை விரும்புகிறவர்கள் தங்களை அமைதியின் சத்தத்தால் நிறைத்துக் கொள்ள வேண்டியதுதான்’ என்று பெண் தவளையும் ஆமோதித்துக் கூறியது.

%d bloggers like this: