Daily Archives: பிப்ரவரி 21st, 2010

தலையில் முடி நீளமாக இருக்க வேண்டுமா !

தலையில் நீளமான முடி இருக்க வேண்டும் என்று ஒரு சாரார் விரும்பினாலும், முடி நீளமோ குட்டையோ, அது கருகருவென இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். கருகரு முடியை, இளமையின் அளவுகோலாக கருதுவதும், இதற்கு ஒரு காரணம். ஆனால், இன்று பலருக்கும் இளவயதிலேயே முடி நரைக்கும் பிரச்னை ஏற்படுகிறது.
இதற்கு, பரம்பரை, ரசாயன ஹேர்-டைகள் பயன்படுத்துவது, மனஅழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இதை போக்க, இதோ சில டிப்ஸ்கள்…
* முதலில் தலைமுடியை நன்கு பராமரிக்க வேண்டும். உணவில் சத்துள்ள கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வைட்டமின் பி12, வைட்டமின் இ, இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் காணப்படும், இறைச்சி, முட்டை, பால், மற்றும் பால் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
* தலை முடிக்கு பிளீச்சிங் போன்ற ரசாயன சிகிச்சை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
* நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சிகைக்காய் ஆகியவற்றை சமஅளவில் அரைத்து, அதை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம்.
* ஏற்கனவே நரை முடி ஏற்பட்டவர்கள், அதை மறைக்க, ஹென்னா மற்றும் நெல்லிக்காய் பவுடர்களை நான்கிற்கு ஒன்று என்ற வீதத்தில் கலந்து, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட டைகளை பயன்படுத்தலாம்.
* கறிவேப்பிலையை, தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, நரைமுடி ஏற்படுவதை தவிர்க்க உதவும். கறிவேப்பிலை மற்றும் புதினா ஆகியவற்றை சம அளவில் எடுத்து, அதனுடன், சிறிது பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிடலாம்.
* வாரம் ஒரு முறையாவது, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி, சூடான எண்ணெய் மசாஜ் செய்து கொள்ளலாம்.

மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்கள் அவசியமா ?

“பூச்சிக் கொல்லிகளையும், மரபணு மாற்று விதைகளையும் பயன்படுத்தியதால், விளைநிலங்கள் பாழ்… இதைத் தவிர்க்க, உயிர்தன்மையை காக்கும் இயற்கை விவசாயம் அவசியம்…’ – இந்த குரல்கள், நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. பூமியில் ஒவ்வொரு இரவும், ஏறத்தாழ பல லட்சம் பேர், உணவின்றி, பசித்த வயிறுடன் உறங்குகின்றனர். மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, உணவு உற்பத்தி பெருகவில்லை. விவசாயத்தில் நவீன தன்மையை பயன்படுத்தாததே இதற்கு காரணம்.

“விவசாயத்தில் நவீன தன்மையை, பூச்சிக் கொல்லிகளை, உரங்களை, இயந்திரங்களை, மரபணு மாற்று விதைகளை பயன்படுத்தாவிட்டால், உணவுப் பஞ்சம் வந்து விடும். மற்ற துறைகள் நவீனத்திற்குள் நுழைந்து விட்ட நிலையில், விவசாயமும், இந்த, “நவீன ஆடை’யை அணிந்தால் தான் உயிர் பெறும்; மக்கள் உயிர் வாழ வழி தரும் என்ற கருத்து, சாதாரண மனிதனையும் யோசிக்க வைக்கக்கூடியது. நவீனத்திற்கு மாறினால், உற்பத்தி பெருகும் என்ற, “லாஜிக்’ தான் இதற்கு காரணம். ஆனால், மற்ற தொழில் துறையும், விவசாயமும் ஒன்றா என்ற ஒப்பீடு எழுமானால், அது இந்த, “லாஜிக்’கை தகர்க்கக்கூடியதாக இருக்கும். உணவுப் பஞ்சம் வந்து விடும் என்பது கட்டுக்கதை என ஆதாரங்களை முன்வைத்து சண்டையிடுகிறது பிரான்சை சேர்ந்த, “பிரான்சஸ் மோரோ லேப்பி’ என்ற விஞ்ஞானியின் தலைமையிலான குழு.

அந்தக் குழுவின் அறிக்கை இப்படி சொல்கிறது…

* உலகில் வாழும் அனைத்து மக்களின் தேவைக் கும் உரிய தானியங்கள், காய்கறிகள் விளைகின்றன. தற்போதைய மொத்த விளைச்சலை, அப்படியே தலைக்கு இவ்வளவு என்று பிரித்தால், ஒவ்வொருவருக்கும், தினசரி 1.25 கிலோ தானியங்கள் மற்றும் பயிறு வகைகள், அரை கிலோ காய்கறி மற்றும் பழங்கள், கால் கிலோ பால், மாமிசம், முட்டை கிடைக்கும்.

* இவற்றின் மூலம், ஒவ்வொருவரும் 3,500 கலோரியை பெற முடியும். ஆனால், நன்கு வளர்ந்திருக்கும் ஒரு மனிதனின் தேவை 2,100 கலோரியில் இருந்து 2,500 கலோரி தான். தினசரி 3,500 கலோரி உணவை உட்கொண்டால், ஒவ்வொருவரும் உடல் பருமன் நோயில் சிக்கிக் கொள்ள வேண்டி வரும். எங்கே பிழை இருக்கிறது என யோசிக்க வைக்கிறது இந்த குழுவின் அறிக்கை. உலக மக்களிடையே பகிர்தலில் உள்ள முரண்பாடு தான், பஞ்சத்திற்கும், பட்டினிக்கும் காரணமாக அமைகிறது. அமெரிக்க சிறுவனுக்கும், எத்தியோப்பிய சிறுவனுக்கும் பாரபட்சமின்றி சமமாய் விளைவித்து தருகிறாள் பூமித்தாய். ஆனால், ஒரு புறம் வீசி எறியப்படும், “பீட்சா’க்களும், மறுபுறம் ரொட்டித் துண்டுகளுக்கு ஏங்கும் நிலையும் தொடர நாம் தான் காரணம் என்பது உறுதிப்படுகிறது. உணவுப் பஞ்சத்தை தவிர்க்க, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பது அடுத்த வாதமாக உள்ளது. முதல் வாதமே தோற்றுப் போன நிலையில், அடுத்த வாதமும் இப்படி நொறுங்கிப் போகிறது.

“புழு மற்றும் பூச்சிகளில் இருந்து பயிரைக் காப்பாற்றுவதற்காகவே, மரபணு மாற்றுப்பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. விளைச்சலை அதிகப்படுத்தும் தந்திரம் எதையும் செய்யவில்லையென, மரபணு மாற்று விதைகளை உற்பத்தி செய்யும் விதை நிறுவனங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. அப்படியிருக்க, உலக பசியைப் போக்க மரபணு மாற்று விதைகள் எப்படி உதவப் போகிறது?’ என்ற இயற்கை ஆர்வலர்களின் ஆதங்கம் எதிரொலிக்கிறது. இந்த மரபணு மாற்று விதைகளை நம்பாமல், இயற்கை விவசாயத்தில் சாதனைக் கொடி நாட்டியவர்களின் பட்டியலும் பிரமிக்க வைக்கிறது.

* பொலிவியா நாட்டில், ஒரு எக்டேருக்கு 4 டன்னாக இருந்த உருளைக்கிழங்கு உற்பத்தி, இயற்கை விவசாயத்தால் 15 டன்னாக உயர்ந்தது.

* கியூபாவில் காய்கறி விளைச்சல் இரு மடங்கானது.

* எத்தியோப்பியாவில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, 6 டன்னில் இருந்து 30 டன்னானது.

* கென்யா மக்காச்சோள விளைச்சல், 2.25 டன்னிலிருந்து 9 டன்னாக உயர்ந்தது.

* பாகிஸ்தானில் மாம்பழ விளைச்சல், 7.5 டன்னிலிருந்து 22 டன்னாக உயர்ந்தது.

* ஆந்திராவில் நாகரத்தின நாயுடு என்பவர், ஒற்றை நாத்து இயற்கை விவசாயம் மூலம், ஏக்கருக்கு 6,900 கிலோ நெல் விளைவித்து, சாதனை படைத்துள்ளார்.

இவையனைத்தும், ஐக்கிய நாடுகள் சபையின் உழவு மற்றும் உணவு அமைப்பின் ஆய்வு தகவல். சாதாரண பொதுமக்களுக்கு, இந்த விவாதங்களின் மேல் பெரிதாய் அக்கறை இருந்ததில்லை. ஆனால், அவர்களையும் இந்த விவகாரம் சென்றடைய காரணமாய் அமைந்து விட்டது பி.டி., கத்தரிக்காய். பார்லிமென்டில் துவங்கி, தமிழக சட்டசபை வரை இந்த விவகாரம் பேசப்பட்டு, “கத்தரிக்காய் முற்றினால், கடைக்கு வந்து தானே ஆகணும்’ என்பது போல, தெருவோர டீக்கடை வரை இந்த விவகாரம் அலசப்படும் பொருளாகிவிட்டது. பி.டி., கத்தரிக்காய் குறித்து கருத்து கேட்பதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு விவசாயிகளிடம் கிடைத்த, “வரவேற்பு’ ஆள்பவர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அதனால், கொஞ்ச நாளைக்கு இந்த விவகாரத்தை ஒத்திப் போடுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

“பி.டி., கத்தரிக்காயை முழுமையாக தடை செய்யவில்லை; தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இது குறித்த ஆராய்ச்சிகளின் முடிவில், இறுதி முடிவெடுப்போம்’ என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கத்தரிக்காய் விவகாரம் இத்தோடு முடிந்து விடப் போவதில்லை எனத் தெரிகிறது. மத்திய அமைச்சரின் வார்த்தைகளையே தமிழக அரசும் ஒப்பிக்கிறது. “பி.டி., கத்தரிக்காய்க்கு அனுமதி கொடுக்கவில்லை’ என்று, தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஒருபுறம் சொன்னாலும், “பி.டி., கத்தரிக்காயை விளைவித்து, சோதனை நடத்தியதில், எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை’ என, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சான்றளித்துள்ளதையும், சட்டசபையில் அமைச்சர் அழுத்தமாக பதிவு செய்துள்ளார். இதை விட ஒருபடி மேலாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகமே, தனியாக மரபணு மாற்று விதைகளை தயாரித்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் பதிவு செய்தால், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைவர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கும், விவசாயிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. பல கோடி ரூபாய் அரசின் பணத்தை கொண்டு நடத்தப்படும் ஆராய்ச்சிகளின் பலன், விவசாயிகளுக்கு கிடைப்பதே இல்லை. ஒவ்வொரு ஆய்வறிக்கையும், சில லட்சங்களை விழுங்கி விட்டு, ஆவணங்களாகி, அதன் மூலம் குறிப்பிட்ட பேராசிரியரின் பெயருக்கு பின்னால் சில எழுத்துக்களை சேர்க்க மட்டுமே உதவி வருகிறது. மேற்கத்திய நாட்டின் விவசாயிகளும், விஞ்ஞானிகளும் சொல்லும் விஷயங்களே பல்கலைக்கு பிரதானமாக உள்ளது. அவர்கள் மட்டுமே மேதாவிகள், அறிவாளிகள் என்ற உளுத்துப்போன சிந்தனை, பல்கலைக் கழகம் முழுவதும் பரவி இருக்கிறது. பாட்டன் காலம் முதல் நாங்கள் பயன்படுத்திய விவசாய முறைகளை அறிந்து கொள்வதிலோ, அவற்றின் நன்மைகளையோ பல்கலை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்களை பொறுத்தவரை, பல்கலையிடம் இருந்து விவசாயிகள் கற்றால் போதும் என்ற ஒரு வழி சிந்தனை தான். விவசாயிகளுக்கான பல்கலைக் கழகத்தின் முதல் எதிரியே, இயற்கை விவசாயிகள் தான் என்ற, “கோரஸ்’ கருத்து, நான் சந்தித்த பல விவசாயிகளிடமும் எதிரொலித்தது.

நமது பூமி பரப்பில், 2 சதவீதம் மட்டுமே விளைநிலம். விளைச்சலை முடிவு செய்வது, நிலத்தின் உயிரோட்டமுள்ள மேல் மண் பகுதியே. இந்த மண்ணை மாசுபடுத்தி, மலடாக்கும் மரபணு மாற்று விதைகளை அனுமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இயந்திரமயமான, ரசாயன விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவும், 6 கிலோ மண்ணின் உயிர்த்தன்மையை அழித்து விளைகிறது. அமெரிக்காவை பின்பற்றும் மூன்றாம் உலக நாடுகளிலோ, 12 கிலோ மண்ணின் உயிர் தன்மையை அழித்து, ஒரு கிலோ உணவு பெறப்படுகிறது. முழுமையான நவீனத்துக்குள், இந்திய விவசாயம் செல்லும் முன்பே ஏகப்பட்ட குளறுபடிகள். கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு அரசு வாரி வழங்கினாலும், விவசாயிகள் தற்கொலை சம்பவங்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது.

அப்படி இருக்கையில், மரபணு மாற்று விதைகளை அடிப்படையாகக் கொண்ட, மேற்கத்திய விவசாய முறையில், இந்திய விவசாயம் அமையுமானால், அது ஏற்படுத்தும் விளைவுகளை கற்பனைக்குள் கொண்டு வர முடியவில்லை. விளைநிலத்தோடு விளையாடும் முன், உலகமும், அரசும், அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும், மேதாவிகளும் யோசிக்கட்டும். expressboy007@yahoo.com

– எஸ்.கோவிந்தராஜ், பத்திரிகையாளர்

நன்றி தினமலர்

மீண்டும்… மீண்டும்… பரவும் நாசக்கார பயங்கரவாத பூதம்

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின், மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் அடங்கி கிடந்த பயங்கரவாத பூதம், மீண்டும் தலை தூக்க துவங்கி விட்டது. மற்றொரு பக்கம், மாவோயிஸ்ட்களும் தங்களின் கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டனர். புனேயில் நடந்த குண்டு வெடிப்பு, மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் போன்ற சம்பவங்களால், மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயிருக்கின்றன. வழக்கம்போல் இந்த இரு சம்பவங்களிலும், அப்பாவி மக்களும், பாதுகாப்பு படையினரும் பலியாகியுள்ளனர்.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில், “இந்தியாவுக்கு வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் விளையாட வரக்கூடாது’ என, பயங்கரவாதிகளும், “எங்களுக்கு எதிரான போலீஸ் வேட்டைக்கு, பழி வாங்குவதற்காகவே தாக்குதல் நடத்தினோம்’ என, மாவோயிஸ்ட்களும் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது தான், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2001 டிசம்பர் 13ல் பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அணு மின் நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கியமான அரசு கட்டடங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், தங்களது தாக்குதல் திட்டங்களில் சில மாறுதல்களை செய்த பயங்கரவாதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டத் துவங்கினர். இதன் எதிரொலியாகவே, ஜெய்ப்பூர், பெங்களூரூ, டில்லி, மும்பை புறநகர் ரயில் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடந்தன.

மும்பையில் நடந்த நேரடி தாக்குதல்: இதன் தொடர்ச்சியாக, கடந்த 2008 நவம்பர் 26ல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். பாகிஸ்தானில் இருந்து வந்த 10 பயங்கரவாதிகள் தான், இந்த தாக்குதலை நடத்தினர். இதற்கு முன் தாங்கள் அரங்கேற்றிய சதித் திட்டங்களை விட, மும்பையில் அவர்கள் நடத்திய தாக்குதல் மிகவும் வித்தியாசமானது. மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் வெடி குண்டுகளை மறைத்து வைத்து, பின்னர் அதை வெடிக்கச் செய்வது தான், பயங்கரவாதிகள் முந்தைய சதித் திட்டங்கள். ஆனால், மும்பையில் நேரடியாகவே தாக்குதல்கள் நடத்தி கலங்கடித்தனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு: பயங்கரவாதிகள் தொடர் பான விஷயங்களை சற்று மென்மையாக கையாண்ட மத்திய அரசு, மும்பை சம்பவத்துக்கு பின் தனது அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக் கொண்டது. பயங்கரவாத சம்பவங்களை கையாளுவதற்காகவே, தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எந்த மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி எதுவும் பெறாமல், நேரடியாகச் சென்று விசாரணை நடத்தும் அதிகாரம் இந்த புலனாய்வு அமைப்புக்கு வழங்கப்பட்டது. கடல் வழி பாதுகாப்பும், கடலோர கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டது. மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இந்தியாவுக்கு வந்து சதித் திட்டம் தீட்டியது தெரியவந்ததால், வெளிநாடுகளில் இருந்து வரும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மீதான பிடியும் இறுகியது. இதனால், கடந்த ஒரு ஆண்டாக இந்தியாவில் பெரிய அளவிலான பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

அதிர்ந்தது புனே: பயங்கரவாத பீதியில் இருந்து மகாராஷ்டிரா மக்கள் முற்றிலும் மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கடந்த 13ம் தேதி இரவு, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஷாருக் கானின் “மை நேம் இஸ் கான்’ மாயையில் மூழ்கி இருந்தது. இந்த படத்தை திரையிட சிவசேனா எதிர்ப்பு தெரிவித்ததால், படம் வெளியான தியேட்டர்களுக்கு முன், போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசாரின் முழு கவனமும் “மை நேம் இஸ் கான்’மீது திரும்பியிருந்த நேரத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் பயங்கரவாதிகள். புனே நகரின் கோரேகான் பார்க் பகுதியில் ஓஷோ ஆசிரமம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இங்குள்ள ஜெர்மன் பேக்கரி தான், பயங்கரவாதிகளின் இலக்கானது. இங்கு பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில், 11 பேர் பரிதாபமாக பலியாயினர். இந்த பயங்கர தாக்குதலால், புனே மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த இந்திய மக்களுமே அதிர்ந்து போயினர். பயங்கரவாதிகளின் கரங்கள் இன்னும் சுதந்திரமாக செயல்படுகின்றன என்பதை புனே சம்பவம், நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

புனேயை குறி வைக்க காரணம் என்ன? அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன், புனே வந்து சென்றது ஏற்கனவேதெரிந்த விஷயம் தான். இதனால், தற்போதைய குண்டு வெடிப்பில் ஹெட்லிக்கு தொடர்பு இருக்க கூடும் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், புனேயை பயங்கரவாதிகள் குறி வைக்க முக்கிய காரணம், அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வருவது தான். குறிப்பாக, அங்குள்ள சத்பாத் ஹவுஸ் என்ற இடத்துக்கு இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அதிகம் வருவர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஓஷோ ஆசிரமத்துக்கு வருவது வழக்கம். இதை திட்டமிட்டுத் தான், புனேயில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை உருப்படியான தகவல் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு, இந்த சதித் திட் டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்: பயங்கரவாதிகள், புனேயில் நடத்திய கொடூர தாக்குதலின் சோகம் அடங்குவதற்கு முன்பே, மாவோயிஸ்ட்களும் தங்கள் பங்கிற்கு வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்த முறை அவர்ககளின் தாக்குதலுக்கு இலக்கானது, மேற்கு வங்க மாநிலம். மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள சில்தா துணை ராணுவ முகாமை, கடந்த 15ம் தேதி, நூறுக்கும் மேற்பட்ட மாவேயிஸ்ட்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 23 வீரர்கள் உட்பட 24 பேர் பரிதாபமாக பலியாயினர். முகாமைச் சுற்றி, மாவோயிஸ்ட்கள் கண்ணி வெடிகளை மறைத்து வைத்திருந்ததால், ராணுவ வீரர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதல் நடந்தபோது, 50க்கும் மேற்பட்ட வீரர்கள் அதில் தங்கியிருந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல்களில் இதுவே மிகப் பெரிய தாக்குதல்.

பழிக்கு பழி: இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்ட் தலைவர் கிஷான்ஜி பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறுகையில்,”எங்களுக்கு எதிராக உள்துறை அமைச்சர் “ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ என்ற தாக்குதல் நடவடிக்கையை துவக்கியுள்ளார். “பாதுகாப்பு படையினர், மனித நேயமற்ற வகையில் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளோம்’என, பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பீகாரிலும் கைவரிசை: மாவோயிஸ்ட்கள், மேற்கு வங்கத்துடன் மட்டும் தங்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. பீகாரிலும் தங்களின் கை வரிசையை காட்டினர். கடந்த 18ம் தேதி, ஜமூய் மாவட்டத்தில் கசாரி கிராமத்தில், தாக்குதல் நடத்தினர். இதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 12 பேர் பலியாயினர். 125க்கும் அதிகமான மாவோயிஸ்ட்கள், பயங்கர ஆயுதங்களுடன் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். அங்குள்ள குடிசைகளுக்கும் தீ வைத்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாயினர். மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த எட்டு பேர், இந்த கிராமத்தினரால் சமீபத்தில் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் விதமாகவே, தற்போது மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். தாக்குதல் நடந்த இடத்தில் மாவோயிஸ்ட்கள் விட்டுச் சென்ற துண்டு பிரசுரங்களிலும் இந்த தகவல் இடம் பெற்றுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

விழிக்குமா மத்திய அரசு: பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களின் இந்த அதிரடி தாக்குதல்களின் எதிரொலியாக, மத்திய அரசு அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை, அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஆலோசனைக் கூட்டம், அமைச்சர்கள் விசிட், மாநில அரசுகளுக்கு உஷார் அறிவிப்பு, பயங்கரவாதிகளை முறியடிப்போம் என்ற அறிக்கை, என, ஒவ்வொரு தாக்குதலுக்கு பின்னும், நடக்கும் வழக்கமான நடைமுறைகள், புனே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னரும் நடந்து வருகிறது. அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பின், அமெரிக்க அரசு விழித்துக் கொண்டது. பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருவோர், எவ்வளவு பெரிய வி.ஐ.பி.,க் களாக இருந்தாலும், கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக, அமெரிக்க அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள், வெளி உலகிற்கு கூட தெரியப்படுத்தப்படவில்லை. அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் காரணமாக, உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு பின், இதுவரை பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதுவும் அமெரிக்காவில் நடக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவருக்கு பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் பெரிய அளவில் கெடுபிடி காட்டுவது இல்லை. இதனால், இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர் கதையாகின்றன. அதேபோல், மாவோயிஸ்ட் பிரச்னையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதைத் தீர்ப்பதற்கும், உறுதியான நடவடிக்கைகளை அரசால் எடுக்க முடியவில்லை. இதனால், அப்பாவி மக்களும், பாதுகாப்பு படையினரும் தான் பலி கடா ஆக வேண்டியுள்ளது. பயங்கரவாதம், மாவோயிஸ்ட் ஆகிய அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு நசுக்காதவரை, இந்தியாவில் இதுபோன்ற கொடூரங்கள் அரங்கேறுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இனியாவது விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு?

இரண்டு முறை எச்சரித்த உளவுத்துறை: மிட்னாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மேற்கு வங்க அரசை, உளவுத் துறை இரண்டு முறை எச்சரித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் 23 மற்றும் கடந்த பிப்ரவரி 13 ஆகிய நாட்களில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையை மாநில அரசு கோட்டை விட்டு விட்டது. இதுகுறித்து மேற்கு வங்க உள்துறை செயலர் அர்தென்டு சென் கூறுகையில், “உளவுத் துறையிடம் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது உண்மை தான். ஆனால், மாவோயிஸ்ட்கள் எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப் போகின்றனர் என்ற சரியான தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை’என்றார்.

இதிலும் அரசியலா? புனே குண்டு வெடிப்பு குறித்து அகில இந்திய பயங்கரவாத தடுப்பு முன்னணி தலைவர் எம்.எஸ்.பிட்டா கூறுகையில், “ஷாருக் கானின் “மை நேம் இஸ் கான்’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா போலீசாரின் முழு கவனமும், படத்தை திரையிட எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. இந்த வாய்ப்பை, பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, புனேயில் குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டனர். தாக்குதலுக்கு பின், பாதுகாப்பை அதிகரிப்பது என்பது கேலிக் கூத்தான விஷயம். பிணங்களின் மீது அரசியல் நடத்துகின்றனர்’ என்றார்.

விளையாட்டு போட்டிகளுக்கும் சிக்கல்: சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்-குவைதா அமைப்பு முழு வீச்சில் களமிறங்கியுள்ளதாக தெரிகிறது. அந்த அமைப்பின் ஒரு பிரிவான ஹூஜி அமைப்பின் இலியாஸ் காஷ்மீரி விடுத்துள்ள மிரட்டலில்,”இந்தியாவில் நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி, காமன்வெல்த் போட்டி, ஐ.பி.எல்., உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள, எந்த நாடும், தங்களது வீரர்களை அனுப்ப வேண்டாம். இந்த போட்டிகளை காண்பதற்கும் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம். இதை மீறிச் சென்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’என,தெரிவித்துள்ளார். இதனால், இந்த போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நன்றி தினமலர்


திருகுவலியாகும் முதுகுவலி..!

சத்தமின்றி நமது மொத்த உடலையும் பாதுகாப்பது முதுகுதான் என்றாலும், அதில் வரும் பிரச்சினைகளை நாம் மறந்தே ஒதுக்கி விடுகிறோம். மற்ற நோய்களை விட அதிகமான பாதிப்பை தருவது முதுகு வலிதான்! இன்றைக்கு எல்லாமே சேரில் உட்கார்ந்து செய்யும் வேலையாகி போனதால், அனைவருக்குமே முதுகு வலி என்பது அழையா விருந்தாளி தான் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

அதிகநேரம் சேரில் உட்கார்ந்திருப்பவர்கள், அதிகம் பயணிப்பவர்கள், ஓயாமல் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் குழந்தைகள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி தாக்கும் நோய்களில் முதலிடம் வகிப்பதும் முதுகுவலி தான். முதுகு விஷயத்தில் அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

தோள்பட்டை, மார்பு, இடுப்பு, வயிறு என எல்லாபகுதி தசைகளும் முதுகோடு இணைந் திருக்கின்றன. அரக்க பரக்க வேலை செய்யும் போது இந்த தசைகள் இறுகி விடுகின்றன. வேலை முடிந்து ரிலாக்ஸ் ஆகும் போது இவை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்ப பார்க்கின்றன. இதன் விளைவே முதுகு வலி.

முதுகுவலி வந்துவிட்டால் அதற்கு பல கார ணங்கள் இருக்கும். அதன் தாக்கமும் பல விதத்தில் இருக்கும். ஆதலால் சரியான நிபுணர்களிடம் சென்று, சிகிச்சை பெறுவதே சிறந்த வழி. மேலும் வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது, கவுன் சிலிங் ஆகியவைதான் இந்த முதுகு வலிக் கான சிகிச்சை. அதே போல் அளவுக்கு மீறிய வேலைகளைச் சுமந்து கொண்டு மன அழுத் தத்தால் பாதிக்கபடுகிறவர்களுக் கும் முதுகு வலி வரும்.

முதுகுவலியில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகளும் உண்டு.

மல்லாந்து, கவிழ்ந்து படுக்காமல் ஒருபுறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. முழங்காலை வளைத்து முன்னே கொண்டு வரவும். சிலருக்கு குப்புறபடுத்தால் தான் தூக்கம் வரும். அப்படி படுக்கும்போது தலையணையை தலைக்கு வைக்காமல், இடுப்புக்கு கீழே வைத்து படுப்பது சிறந்தது. அதிக கடினமாகவும், அதிக மென்மையாகவும் இல்லாத மெத்தையை பயன்படுத்துவது நல்லது.

முதுகுவலி ஏற்படாமல் இருக்க, உட்காருவது மிகவும் முக்கியம். நாற்காலியில் உட்காரும்போது முதுகு நன்றாக நாற்காலியோடு ஒட்டும்படி அமரவும். கீழே சின்னதாக ஒரு பலகை போட்டு அதன்மீது இரண்டு கால்களையும் வைக்கவும். இப்படி செய்வதன் முலம் முழங்கால் முட்டு இடுப்பை விட உயரமான நிலையில் இருக்கும். உட்காருவதில் இதுதான் சிறந்த முறை. தொடர்ந்து பல மணி நேரம் உட்காராமல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை எழுந்து சில நிமிடங்கள் நடப்பது நல்லது.

எல்லா பொருட்களையும் மேஜையில் எட்டக்கூடிய இடத்தில் வைக்கவும். இடுப்பை அடிக்கடி திருப்ப வேண்டாம். அப்படி ஒரு சூழல் அமைந்தால், உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களையும் அதாவது உடம்பு முழுவதையும் திருப்பவும். அதேபோல் கனமான பொருட்களை தூக்கும்போது இடுப்பை வளைக்காமல் தூக்கவும். எபோதும் தலையை நிமிர்த்தி நடக்க வேண்டும். நடக்கும்போது கால் விரல்களும் நேராக இருக்க வேண்டும். மிருதுவான, மெல்லிய குஷன்களை கொண்ட காலணிகளை அணிவது நல்லது. மிகவும் உயரமான ஹீல்ஸ் காலணி முதுகுவலியை உண்டாக்கும்.

நீண்ட நேரம் நிற்பது கூடாது. அப்படியே நிற்க நேர்ந்தாலும், பாதங்களில் ஒன்றை மற்றதை விட உயரமாக வைக்கவும். அடிக்கடி நிற்கும் நிலையை மாற்றவும். கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். சாதாரண முதுகுவலிக்கு ஓய்வும், உடற்பயிற்சியும்தான் தீர்வு.

சீன உணவு சிறந்ததா?

உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவைக் குறிப்பிடுகின்றனர் பலர். இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என்று கூறுகின்றனர் உணவு ஆய்வாளர்கள்.

நமது உடம்பில் ஆரோக்கியத்தை முடக்குவதில் அதிக பங்கு வகிப்பது கொழுப்புதான் என்பது மருத்துவர்களின் கருத்து.

கொலஸ்ட்ரால் ஏற்பட காரணம் பல உண்டு என்றாலும், நாம் சாப்பிடும் உணவால் தான் ஏற்படுகிறது.

உடல் பருமனை அளவிடுவதில் ஒரு முக்கிய விஷயத்தை டாக்டர்கள் கவனத்தில் கொள்கின்றனர். தொந்தி பெருத்தாலும், கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதாகவோ, சர்க்கரை வியாதி வரும் என்றோ கூற முடியாது.ஆனால், அடிவயிறு பெருத்தால் தான் ஆபத்து. முதலில், வளையம் போல கோடு விழும். அதன்பின், வெளிப்படையாக அடிவயிறு பெருத்திருப்பது தெரியும். இதை தெரிந்து கொண்டால், உடனே டாக்டரிடம் போய் சோதனை செய்து கொள்வது மிக நல்லது.இந்தியர்களை பொறுத்தவரை, அடிவயிற்று கொழுப்பு அளவை வைத்தே, அவர்களுக்கு பாதிப்பை மதிப்பிட்டு விடலாம் என்று டாக்டர்கள் கருதுகின்றனர்.

ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் என்பவர் தனது ஆய்வின் முலம் பல உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளார். அதன் முலம் தங்களது உணவான சீன உணவே சிறந்தது என்கிறார்.

சீனர்கள் ஹாங்காங், சிட்னி, சான்பிரான்ஸிஸ்கே ஆகிய நகரங்களில் பெருமளவில் வாழ்கின்றனர். பத்து ஆண்டுகள் மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றிய சீனர்களை அல்ட்ரா சவுண்டு முலம் பரிசோதித்ததில் இவர்களின் ரத்தக்குழாய்களில் 5ல் ஒரு பங்கு என்ற விதத்தில் தடிப்பாகிவிட்டது தெரிந்தது. எனவே, இவர்கள் இதயநோய் அபாயத்தில் உள்ளனர்.

வெளிநாடு சென்று கடந்த பத்தாண்டுகளுக்குப்பிறகு சீனா திரும்பிய 417 பேர் இதய நோய் அபாயத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

டாக்டர் ஊ, சீனர்களின் மெயின்லாண்ட் பகுதி மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் பாதி இறைச்சியாகவும், மிகச்சிறிய அளவிலேயே பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதையும் கண்டு பிடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “சீனர்கள் தங்களின் மரபு வழி உணவுத் திட்டத்தையே பின்பற்ற வேண்டும். சோயா தயிரில் உள்ள `லெசித்தின்’ என்னும் நார்ப்பெருள் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இதய நோய் அபாயம் இல்லை. உடலும் கொழுத்து பருமனாக உருவாகாது” என்கிறார்.

மேலும் கூறுகையில், “ஹாங்காங்கில் வறுத்த கோழிக்கறி என்ற மேற்கத்திய உணவால் இங்குள்ள சீனர்கள் குண்டாக உள்ளனர். செல்வச் செழிப்பான சிங்கப்பூரில் வாழும் சீன இளைஞர்கள் 25 வயதுக்குள்ளேயே ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இதய நோய்கள் போன்ற அபாயத்தில் உள்ளனர்” என்கிறார் டாக்டர் ஊ.

கிரீன் டீக்கும், நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது.   சீனர்கள் அப்படி என்னதான்
சாப்பிடுகிறார்கள்? பால் சேர்க்காத கிரீன் டீயை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர். சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர். மேற்கத்திய பாணி உணவு முறையில் அவ்வப்போது கோழி வறுவல் அல்லது மீன் வறுவல் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிடுகின்றனர். காலையில் முட்டை ஆம்லேட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகளை சேர்த்துவிடுகின்றனர். இதுவே காலை நேரத்திற்கும், பகல் உணவிற்கும் ஏற்ற ஒரே உணவாகும். மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர். இவர்கள் அடிக்கடி விரும்பியும், போற்றியும் குடிக்கும் கிரீன் டீயில் இதயத்துக்குப் பாதுகாப்பு வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் உள்ளது.

நாய்கள் வாலாட்டுவது நன்றிக்காக அல்ல; மகிழ்ச்சிக்காக!

நாய் நன்றியுள்ள பிராணி. நாம் உணவிட்டால் நன்றியுடன் வாலாட்டும், வீட்டைப் பாதுகாக்கும் என்று கூறி வருகிறோம். நாய் வாலாட்டுவது குறித்து ஒரு ஆராய்ச்சி நடந்தது. ஆய்வாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா… நாய்கள் வாலாட்டுவது (நன்றிக்காக அல்ல) மகிழ்ச்சிக்காக. அதுவும் எந்த திசையில் வாலாட்டுகிறது என்பதில்தான் விஷயமே உள்ளது. நாய்கள் இடது பக்கமாக வாலாட்டினால் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று அர்த்தம். 56 சதவீத நாய்கள் இப்படித்தான் வாலாட்டுகிறதாம். 21 சதவீத நாய்கள் எப்போதும்போல் வாலாட்டாமல் இருக்கின்றன அல்லது எப்போதாவது வலதுபக்கமாக வாலாட்டுகின்றன. தன்னை வளர்ப்பவர்களைப் பார்த்ததும் 41 சதவீத நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டு கின்றன. தன்னை வளர்ப்பவர்களைப் பார்த்ததும் 41 சதவீத நாய்கள் இடதுபக்கமாக வாலாட்டுகின்றன. நாய்கள் வாலாட்டுவது வேதித்தன்மையின் வெளிப்பாடாக இருக்கவும் வாய்ப்புள்ளது. நாம் அதற்கு தேவையானதை வழங்கிவிடுவதால் அவை நம்முடன் மிக நெருக்கமாகிவிடுகின்றன. நாய்களின் வாலை வெட்டிவிடுவதன் முலம் அவை மற்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் திறனை தகர்த்துவிடுகிறோம்.

இதுகுறித்து ஆய்வு செய்தது ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் ஆகும்.