மீண்டும்… மீண்டும்… பரவும் நாசக்கார பயங்கரவாத பூதம்

மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின், மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் அடங்கி கிடந்த பயங்கரவாத பூதம், மீண்டும் தலை தூக்க துவங்கி விட்டது. மற்றொரு பக்கம், மாவோயிஸ்ட்களும் தங்களின் கைவரிசையை காட்ட ஆரம்பித்து விட்டனர். புனேயில் நடந்த குண்டு வெடிப்பு, மேற்கு வங்கம், பீகார் மாநிலங்களில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் போன்ற சம்பவங்களால், மத்திய அரசும், மாநில அரசுகளும் அதிர்ச்சியில் நிலைகுலைந்து போயிருக்கின்றன. வழக்கம்போல் இந்த இரு சம்பவங்களிலும், அப்பாவி மக்களும், பாதுகாப்பு படையினரும் பலியாகியுள்ளனர்.

இதையெல்லாம் மிஞ்சும் வகையில், “இந்தியாவுக்கு வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் விளையாட வரக்கூடாது’ என, பயங்கரவாதிகளும், “எங்களுக்கு எதிரான போலீஸ் வேட்டைக்கு, பழி வாங்குவதற்காகவே தாக்குதல் நடத்தினோம்’ என, மாவோயிஸ்ட்களும் பகிரங்கமாக சவால் விடுத்துள்ளது தான், பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2001 டிசம்பர் 13ல் பார்லிமென்ட் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அணு மின் நிலையங்கள், விமான நிலையங்கள், முக்கியமான அரசு கட்டடங்கள் ஆகியவற்றுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால், தங்களது தாக்குதல் திட்டங்களில் சில மாறுதல்களை செய்த பயங்கரவாதிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தங்கள் கைவரிசையை காட்டத் துவங்கினர். இதன் எதிரொலியாகவே, ஜெய்ப்பூர், பெங்களூரூ, டில்லி, மும்பை புறநகர் ரயில் என, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடந்தன.

மும்பையில் நடந்த நேரடி தாக்குதல்: இதன் தொடர்ச்சியாக, கடந்த 2008 நவம்பர் 26ல் மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியாயினர். பாகிஸ்தானில் இருந்து வந்த 10 பயங்கரவாதிகள் தான், இந்த தாக்குதலை நடத்தினர். இதற்கு முன் தாங்கள் அரங்கேற்றிய சதித் திட்டங்களை விட, மும்பையில் அவர்கள் நடத்திய தாக்குதல் மிகவும் வித்தியாசமானது. மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த இடங்களில் வெடி குண்டுகளை மறைத்து வைத்து, பின்னர் அதை வெடிக்கச் செய்வது தான், பயங்கரவாதிகள் முந்தைய சதித் திட்டங்கள். ஆனால், மும்பையில் நேரடியாகவே தாக்குதல்கள் நடத்தி கலங்கடித்தனர்.

தேசிய புலனாய்வு அமைப்பு: பயங்கரவாதிகள் தொடர் பான விஷயங்களை சற்று மென்மையாக கையாண்ட மத்திய அரசு, மும்பை சம்பவத்துக்கு பின் தனது அணுகுமுறையை முற்றிலும் மாற்றிக் கொண்டது. பயங்கரவாத சம்பவங்களை கையாளுவதற்காகவே, தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எந்த மாநிலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், அதற்காக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அனுமதி எதுவும் பெறாமல், நேரடியாகச் சென்று விசாரணை நடத்தும் அதிகாரம் இந்த புலனாய்வு அமைப்புக்கு வழங்கப்பட்டது. கடல் வழி பாதுகாப்பும், கடலோர கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டது. மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, இந்தியாவுக்கு வந்து சதித் திட்டம் தீட்டியது தெரியவந்ததால், வெளிநாடுகளில் இருந்து வரும் சந்தேகத்திற்குரிய நபர்கள் மீதான பிடியும் இறுகியது. இதனால், கடந்த ஒரு ஆண்டாக இந்தியாவில் பெரிய அளவிலான பயங்கரவாத சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.

அதிர்ந்தது புனே: பயங்கரவாத பீதியில் இருந்து மகாராஷ்டிரா மக்கள் முற்றிலும் மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். கடந்த 13ம் தேதி இரவு, மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் ஷாருக் கானின் “மை நேம் இஸ் கான்’ மாயையில் மூழ்கி இருந்தது. இந்த படத்தை திரையிட சிவசேனா எதிர்ப்பு தெரிவித்ததால், படம் வெளியான தியேட்டர்களுக்கு முன், போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீசாரின் முழு கவனமும் “மை நேம் இஸ் கான்’மீது திரும்பியிருந்த நேரத்தை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் பயங்கரவாதிகள். புனே நகரின் கோரேகான் பார்க் பகுதியில் ஓஷோ ஆசிரமம் உள்ளது. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும். இங்குள்ள ஜெர்மன் பேக்கரி தான், பயங்கரவாதிகளின் இலக்கானது. இங்கு பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில், 11 பேர் பரிதாபமாக பலியாயினர். இந்த பயங்கர தாக்குதலால், புனே மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த இந்திய மக்களுமே அதிர்ந்து போயினர். பயங்கரவாதிகளின் கரங்கள் இன்னும் சுதந்திரமாக செயல்படுகின்றன என்பதை புனே சம்பவம், நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

புனேயை குறி வைக்க காரணம் என்ன? அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு முன், புனே வந்து சென்றது ஏற்கனவேதெரிந்த விஷயம் தான். இதனால், தற்போதைய குண்டு வெடிப்பில் ஹெட்லிக்கு தொடர்பு இருக்க கூடும் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், புனேயை பயங்கரவாதிகள் குறி வைக்க முக்கிய காரணம், அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக வருவது தான். குறிப்பாக, அங்குள்ள சத்பாத் ஹவுஸ் என்ற இடத்துக்கு இஸ்ரேலை சேர்ந்தவர்கள் அதிகம் வருவர். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள், ஓஷோ ஆசிரமத்துக்கு வருவது வழக்கம். இதை திட்டமிட்டுத் தான், புனேயில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை உருப்படியான தகவல் எதுவும் கிடைத்ததாக தெரியவில்லை. இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு, இந்த சதித் திட் டத்தை நிறைவேற்றி இருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாவோயிஸ்ட் அச்சுறுத்தல்: பயங்கரவாதிகள், புனேயில் நடத்திய கொடூர தாக்குதலின் சோகம் அடங்குவதற்கு முன்பே, மாவோயிஸ்ட்களும் தங்கள் பங்கிற்கு வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர். இந்த முறை அவர்ககளின் தாக்குதலுக்கு இலக்கானது, மேற்கு வங்க மாநிலம். மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள சில்தா துணை ராணுவ முகாமை, கடந்த 15ம் தேதி, நூறுக்கும் மேற்பட்ட மாவேயிஸ்ட்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 23 வீரர்கள் உட்பட 24 பேர் பரிதாபமாக பலியாயினர். முகாமைச் சுற்றி, மாவோயிஸ்ட்கள் கண்ணி வெடிகளை மறைத்து வைத்திருந்ததால், ராணுவ வீரர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதல் நடந்தபோது, 50க்கும் மேற்பட்ட வீரர்கள் அதில் தங்கியிருந்தனர். மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதல்களில் இதுவே மிகப் பெரிய தாக்குதல்.

பழிக்கு பழி: இந்த தாக்குதலுக்கு மாவோயிஸ்ட் தலைவர் கிஷான்ஜி பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறுகையில்,”எங்களுக்கு எதிராக உள்துறை அமைச்சர் “ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ என்ற தாக்குதல் நடவடிக்கையை துவக்கியுள்ளார். “பாதுகாப்பு படையினர், மனித நேயமற்ற வகையில் எங்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளோம்’என, பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

பீகாரிலும் கைவரிசை: மாவோயிஸ்ட்கள், மேற்கு வங்கத்துடன் மட்டும் தங்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. பீகாரிலும் தங்களின் கை வரிசையை காட்டினர். கடந்த 18ம் தேதி, ஜமூய் மாவட்டத்தில் கசாரி கிராமத்தில், தாக்குதல் நடத்தினர். இதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 12 பேர் பலியாயினர். 125க்கும் அதிகமான மாவோயிஸ்ட்கள், பயங்கர ஆயுதங்களுடன் வந்து, இந்த தாக்குதலை நடத்தினர். அங்குள்ள குடிசைகளுக்கும் தீ வைத்தனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பலியாயினர். மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த எட்டு பேர், இந்த கிராமத்தினரால் சமீபத்தில் கொல்லப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் விதமாகவே, தற்போது மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். தாக்குதல் நடந்த இடத்தில் மாவோயிஸ்ட்கள் விட்டுச் சென்ற துண்டு பிரசுரங்களிலும் இந்த தகவல் இடம் பெற்றுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

விழிக்குமா மத்திய அரசு: பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களின் இந்த அதிரடி தாக்குதல்களின் எதிரொலியாக, மத்திய அரசு அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை, அனைவரும் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஆலோசனைக் கூட்டம், அமைச்சர்கள் விசிட், மாநில அரசுகளுக்கு உஷார் அறிவிப்பு, பயங்கரவாதிகளை முறியடிப்போம் என்ற அறிக்கை, என, ஒவ்வொரு தாக்குதலுக்கு பின்னும், நடக்கும் வழக்கமான நடைமுறைகள், புனே குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னரும் நடந்து வருகிறது. அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பின், அமெரிக்க அரசு விழித்துக் கொண்டது. பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருவோர், எவ்வளவு பெரிய வி.ஐ.பி.,க் களாக இருந்தாலும், கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காக, அமெரிக்க அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகள், வெளி உலகிற்கு கூட தெரியப்படுத்தப்படவில்லை. அந்த அளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதன் காரணமாக, உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு பின், இதுவரை பெரிய அளவிலான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதுவும் அமெரிக்காவில் நடக்கவில்லை. ஆனால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவருக்கு பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் பெரிய அளவில் கெடுபிடி காட்டுவது இல்லை. இதனால், இந்தியாவில் பயங்கரவாத சம்பவங்கள் தொடர் கதையாகின்றன. அதேபோல், மாவோயிஸ்ட் பிரச்னையும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதைத் தீர்ப்பதற்கும், உறுதியான நடவடிக்கைகளை அரசால் எடுக்க முடியவில்லை. இதனால், அப்பாவி மக்களும், பாதுகாப்பு படையினரும் தான் பலி கடா ஆக வேண்டியுள்ளது. பயங்கரவாதம், மாவோயிஸ்ட் ஆகிய அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு நசுக்காதவரை, இந்தியாவில் இதுபோன்ற கொடூரங்கள் அரங்கேறுவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இனியாவது விழித்துக் கொள்ளுமா மத்திய அரசு?

இரண்டு முறை எச்சரித்த உளவுத்துறை: மிட்னாபூர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மேற்கு வங்க அரசை, உளவுத் துறை இரண்டு முறை எச்சரித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் 23 மற்றும் கடந்த பிப்ரவரி 13 ஆகிய நாட்களில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால், இந்த எச்சரிக்கையை மாநில அரசு கோட்டை விட்டு விட்டது. இதுகுறித்து மேற்கு வங்க உள்துறை செயலர் அர்தென்டு சென் கூறுகையில், “உளவுத் துறையிடம் இருந்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது உண்மை தான். ஆனால், மாவோயிஸ்ட்கள் எந்த இடத்தில் தாக்குதல் நடத்தப் போகின்றனர் என்ற சரியான தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை’என்றார்.

இதிலும் அரசியலா? புனே குண்டு வெடிப்பு குறித்து அகில இந்திய பயங்கரவாத தடுப்பு முன்னணி தலைவர் எம்.எஸ்.பிட்டா கூறுகையில், “ஷாருக் கானின் “மை நேம் இஸ் கான்’ படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் முன் போலீசார் குவிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா போலீசாரின் முழு கவனமும், படத்தை திரையிட எந்தவித இடையூறும் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. இந்த வாய்ப்பை, பயங்கரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, புனேயில் குண்டு வெடிப்பை நிகழ்த்தி விட்டனர். தாக்குதலுக்கு பின், பாதுகாப்பை அதிகரிப்பது என்பது கேலிக் கூத்தான விஷயம். பிணங்களின் மீது அரசியல் நடத்துகின்றனர்’ என்றார்.

விளையாட்டு போட்டிகளுக்கும் சிக்கல்: சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அல்-குவைதா அமைப்பு முழு வீச்சில் களமிறங்கியுள்ளதாக தெரிகிறது. அந்த அமைப்பின் ஒரு பிரிவான ஹூஜி அமைப்பின் இலியாஸ் காஷ்மீரி விடுத்துள்ள மிரட்டலில்,”இந்தியாவில் நடக்கவுள்ள உலக கோப்பை ஹாக்கி, காமன்வெல்த் போட்டி, ஐ.பி.எல்., உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள, எந்த நாடும், தங்களது வீரர்களை அனுப்ப வேண்டாம். இந்த போட்டிகளை காண்பதற்கும் யாரும் இந்தியாவுக்கு செல்ல வேண்டாம். இதை மீறிச் சென்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’என,தெரிவித்துள்ளார். இதனால், இந்த போட்டிகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நன்றி தினமலர்


%d bloggers like this: