Daily Archives: பிப்ரவரி 23rd, 2010

மதுரையில் ஒரு திருமணம்! (ஆன்மிகம்)

எந்தப் பிறவியில் என்ன புண்ணிய – பாவம் செய்துள்ளோமோ அதைப்பொறுத்தே அவரவர் வாழ்க்கை அமையும் என ஆன்மிக நூல்களில் சொல்லப்பட்டுள்ளன. மகான்களும் இதை ஆமோதிக்கின்றனர். ஆனால், இந்தப் பிறவியில் புண்ணியம் செய்திருந்து, அதற்குரிய பலனை உடனே அனுபவிக்க வேண்டுமானால், நாம் வழிபட வேண்டிய தெய்வம், இம்மையில் நன்மை தருவார். “இம்மை’ என்றால் இப்பிறவி.
இவரை, “இன்மையில் நன்மை தருவார்’ என்றும் சொல்வதுண்டு. “இன்மை’ என்றால் இல்லை என்று பொருள். கடந்த பிறவியில், புண்ணியமே சேர்த்து வைக்காமல் போயிருந்தாலும் கூட, அதற்காக பிராயச்சித்தம் கேட்டு பிரார்த்தித்தாலும், அவர்களுக்கு இப்போதே நன்மை அருளும் பரமதயாளன் இவர். மதுரையில் குடியிருக்கும் இவருக்கும், இவரது தேவி மத்தியபுரி நாயகிக்கும் மாசி மாதத்தில் பிரம்மோற்சவமும், திருக்கல்யாணமும் நடத்தப்படும்.
பிறவிகளிலேயே உயர்ந்தது மனிதப்பிறவி. இந்தப் பிறவியின் மூலமே நாம் முக்தியை அடைய முடியும். அதற்கு பாலமாக இருப்பது பக்தி. சிவபெருமானே சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் மனிதப் பிறவியாக வந்து, சிவலிங்க பூஜை செய்ததன் மூலம், முக்திக்கான வழியை தன் பக்தர்களுக்கு இத்தலத்தில் அருளியுள்ளார். கருவறையில் சிவனும், மத்தியபுரிநாயகியும் பீடத்தில் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. இவர்கள் லிங்கபூஜை செய்வதாக ஐதீகம். இத்தகைய வடிவமைப்புடைய கோவில்கள் மிக அபூர்வமாகவே தமிழகத்தில் காணப்படுகின்றன.
சக்தியும், சிவனும் மானிட வடிவெடுத்து மீனாட்சியாகவும், சுந்தரேஸ்வரராகவும் மதுரை வந்தனர். அவர்கள் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பைக் கையில் எடுத்தனர். பட்டாபிஷேகம் நடக்கும் முன், இறைவனை வழிபட எண்ணினர். சிவன் மானிடப்பிறவியாக வந்து விட்டதால், லிங்க பூஜையின் மகிமையை உலகுக்கு வெளிப்படுத்தும் விதத்தில், தனக்குத்தானே பூஜை செய்வதற்காக லிங்கம் ஒன்றை வடித்தார். அந்த லிங்கத்துக்கு பூஜை செய்ய கையில் மலர் ஏந்தியுள்ளார். இவரது அருகிலுள்ள அம்பிகை கையில் மலர் வைத்திருக்கிறாள். இப்போதும், ஆவணி மாதத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன், இந்தக் கோவிலுக்கு வந்து லிங்கபூஜை செய்யும் வழக்கம் இருக்கிறது.
மத்தியபுரி நாயகி கருணை மிக்கவள். திருமணத் தடையுள்ள கன்னிப்பெண்கள், இவளுக்கு மாங்கல்யம் அணிவித்து வணங்கினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதே நேரம், இவளை கண்டிப்பானவள் என்றும் சொல்வதுண்டு. நம்மிடம் யாரேனும் நீதி தவறி நடந்து கொண்டாலோ, ஏமாற்றினாலோ, பிறவகையில் துன்பம் செய்தாலோ இவளிடம் முறையிட்டால் போதும்… தக்க தண்டனையை அந்த நபர்களுக்கு கொடுத்து விடுவாள்.
இப்படி கருணையும், கண்டிப்பும் மிக்க மத்தியபுரி நாயகிக்கும், இம்மையில் நன்மை தருவாருக்கும் நடக்கும் திருமணத்தைக் காண்பவர்கள் இந்தப் பிறவி எடுத்த பயனை இப்போதே அடைவர். வாழும் காலத்தில் நிறைந்த செல்வமும், வாழ்வுக்குப் பிறகு மோட்சமும் பெற்று சிறப்படைவர். கிளம்பி விட்டீர் களா மதுரைக்கு!

* நார் சத்துன்னா…? * என்ன தான் இருக்கு அதுல

நோஞ்சானாக இருந்தாலும், அடிக்கடி எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதாக எண்ணினாலும், ரத்த சோகை ஆபத்து உள்ளதாக தெரிந்தாலும், டாக்டர் சொல்லும் ஒரே அட்வைஸ்,”நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்க’ என்பது தான்.
அதென்ன, நார்ச்சத்து உணவுகள்? இப்போதெல்லாம், இட்லி முதல் சாம்பார் வரை எல்லாமே, பாக்கெட் உணவு தானே. நல்லவேளை, காய்கறிகளை பதப்படுத்தி, கூட்டு, கறி என்று பாக்கெட் போட்டு விற்பனை செய்யவில்லை. அப்படி வந்து விட்டால் போதும், காய்கறி கடைப்பக்கமே பலரும் போக மாட்டார்கள்.
உணவு வகைகளில் உள்ள பல சத்துக்கள், சமைப்பதன் மூலமும், எண்ணெய் விட்டு “ப்ரை’ ஆக்குவதன் மூலமும் சத்துக்கள் குறைந்தும், அடியோடு போயும் விடுகின்றன. ஆனால், நார்ச்சத்துள்ள உணவுகளில் உள்ள சத்துக்கள், உடலுக்கு கிடைப்பதுடன், மற்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் சத்துக்களை தசைகள் உட்பட பல உறுப்புகளுக்கும் போய்ச்சேர்க்கும் உதவியை செய்கிறது.
35 கிராம் தேவை
ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் மிகாமல் பார்த்துக்கொள்ளவும் நார்ச்சத்துக்கள் முக்கியம். உடலில் இயல்பாகவே நார்ச்சத்து உள்ளது. அத்துடன் உணவுகள் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், ஜீரண சக்தியை ஏற்படுத்தவும் செய்கிறது. ஒரு நாளைக்கு 35 கிராம் நார்ச்சத்து தேவை. காய்கறி, பழங்கள் மூலம் அவற்றை பெறலாம். இவற்றை அப்படியே சாப்பிடலாம்; சத்து குறையாமல் வேகவைத்தும் சாப்பிடலாம்.
கவர்ச்சி பாக்கெட்
இப்போது “மால்’ கலாசாரம் வந்து விட்டது; எல்லா வகை உணவுகளும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கிடைக்கிறது. பதப்படுத்தப்பட்டும் கிடைக்கிறது. ஆனால், இப்படி கிடைக்கும் நார்ச்சத்து, முழு அளவில் இருக்காது என்பது தான் நிபுணர்கள் கருத்து. நேரடியாக காய்கறி, பழங்களை வாங்கித்தான் பயன்படுத்த வேண்டும். அதில் தான் 100 சதவீதம் சத்துக்கள் உள்ளன.
அளவு மிஞ்சினால்
எதுவுமே அளவு மிஞ்சக்கூடாது என்பர் டாக்டர்கள். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், எந்த ஒரு உணவையும் சாப்பிடலாம்; ஆனால், அளவு மிஞ்சாமல் இருந்தால் எந்த பிரச்னையும் இல்லை.
அதுபோலத்தான், நார்ச்சத்தும்; உணவே சாப்பிடாமல், பழங்கள், காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் போய் விட்டு விடும். வழக்கமான உணவுகளுடன், சாலட், பழங்கள் சேர்த்துக்கொண்டாலே போதும்.
என்ன சாப்பிடலாம்
“ஒயிட் பிரட்’டுக்கு பதில், கோதுமை பிரட் சாப்பிடுங்கள்; கேக், பிஸ்கட், சுவீட்களை தவிர்த்து, பச்சை கேரட், கடலை, பட்டாணி போன்ற தானிய வகைகள், பழங்களை சாப்பிடலாம்.
ஆப்பிள், ஆரஞ்சு, கொட்டையில்லா சாறு உள்ள பழங்கள், காலிபிளவர், ஓட்ஸ், பேரிக்காய், பட்டாணி, வாற்கோதுமை, கொடி முந்திரிப்பழம், அத்திப்பழம், கேரட் போன்றவற்றில் அதிக நார்ச்சத்து உள்ளது. இதுபோல, பலவகை தானியங்கள், கொட்டை வகைகள், பாப்கார்ன், கோதுமை பிரட், பிரவுன் அரிசி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம்.
அவங்களுக்கு “நோ’
நார்ச்சத்து என்றால், எல்லாரும் சாப்பிட வேண்டும் என்பதல்ல. உடலில் போதிய சத்தில்லாதவர்கள், சில வகை நோயுள்ளவர்கள், கர்ப்பிணிகள் போன்றவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி தான் நார்ச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
நார்ச்சத்து உள்ள உணவுகள், பசியை போக்குமே தவிர, போதுமான கலோரியை தராது. அதுபோல, நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவோர், கண்டிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் சாப்பிட
* பழங்கள் அல்லது கேரட், வெள்ளரி, வெங்காயம், தக்காளி சேர்த்த சாலட் சாப்பிடலாம்.
* பழ ஜூஸ் குடிக்கலாம்; தவறில்லை; ஆனால், பழத்தை அப்படியே சாப்பிட்டால் தான் அதிக சத்து.
* ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை தோல் நீக்கி சாப்பிடுபவரா? முதல்ல அதை விடுங்க; அப்படியே கடித்து சாப்பிடுங்க.
* சூப் சாப்பிடுவதென்றால், அதிக காய்கறிகளை சேருங்க.
* உலர்ந்த பழங்களை தினமும் ஏதாவது ஒரு வேளை சாப்பிடலாம், நொறுக்குத்தீனியாக.