Daily Archives: பிப்ரவரி 25th, 2010

மூலிகை கட்டுரை (நீர்மேல் நெருப்பு)-சொத்தை நகமும் சுத்தமாகும்-

விரல் நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு கூட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த விரல் நுனிகளை பாதுகாக்க இயற்கையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு கவசம்தான் நமது நகங்கள். நகங்களை பாதுகாப்பாக வைத்தால்தான் விரல்களையும் சக்தி குறையாமல் பாதுகாக்க முடியும்.
நகங்கள் சுண்ணம்பு, பாஸ்பரஸ், இறந்த புரதச் செல்களின் கலவையாகும். நாம் அதிகமாக உட்கொள்ளும் உலோகங்களும் நச்சுப்பொருள்களும்கூட உடலால் வெளியேற்றப்பட்டு, நகத்தால் சேமித்து வைக்கப்படுகின்றன. விரல் நுனிகளை வெப்பத்திலிருந்தும், குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாக்கும் நகங்களை வைத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை கணித்து விடலாம். சாம்பல் படிந்த வெள்ளைநிற புள்ளிகள் உளள நகங்கள் உலோகம் மற்றும் உப்புச்சத்து பற்றாக்குறையையும், வெளுத்துப்போன நகங்கள் ரத்த சோகையையும், கறுத்த நகங்கள் மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட கல்லீரல் மற்றும் நுரையீரல் பலஹீனத்தையும், வெடிப்புள்ள நகங்கள் வைட்டமின் குறைபாட்டையும், சொத்தையான நகங்கள் ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களையும் காட்டுவதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. நகங்களை பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் நகத்தில் ஏற்படும் சொத்தையானது விரல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் மற்றும் மன உறுதியை குலைத்துவிடுகின்றன. ஒவ்வாமை மற்றும் பலவித தோல் நோய்களால் தோன்றும் நக சீர்குலைவை சீர்செய்யும் அற்புத மூலிகை நீர்மேல் நெருப்பு.
அம்மானியா பேசிரொ என்ற தாவரவியல் பெயர் கொண்ட லித்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகளின் இலைகளிலுள்ள லாவ்சோன் என்னும் பொருள் நகத்தை தாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை கொல்லும் தன்மையுடையன. நீர்மேல் நெருப்பு மற்றும் மருதாணி இலைகளை நீர் விட்டுஅரைத்து நகத்தைச் சுற்றி தினமும் தடவி வர, நகச்சொத்தை மாறும். நீர்மேல்நெருப்பு இலைகளை எரித்து சாம்பலாக்கி, அந்த சாம்பலுடன் கால்பங்கு பொரித்த வெங்காரப்பொடி அல்லது போரிக் ஆசிட் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து நகச்சொத்தையுள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வர நகச்சொத்தை மறைய ஆரம்பிக்கும்.

வெறும் காலுடன் ஓடுவதே நல்ல பலன்தரும்!

ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு `ஷு’ (காலணி) முக்கியமான விஷயமாகத் தெரியும். பலர் `ஷு’ இல்லாமல் ஓடுவது தவறு என்று நினைத்து வருகிறார்கள். ஆனால் “வெறும் காலுடன் ஓடுவதே நல்லது. `ஷு’ அணிந்து ஓட்டப் பயிற்சி செய்வது உடலைப் பாதிக்கும்” என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஹார்வர்டு பல்கலைக்கழகம், தடகள வீரர்கள் ஓட்டப் பயிற்சியால் பெறும் சாதக, பாதகங்கள் பற்றி ஆராய்ந்தது. இதில் மேற்கண்ட முடிவு கிடைத்துள்ளது. முன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தடகள வீரர்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். உயர்ந்த குதிகால் (ஹீல்ஸ்) உடைய `ஷு’, மற்றும் `ஹீல்ஸ்’ இல்லாத `ஷு’ அணிந்து இரு பிரிவினரும். `ஷு’ இல்லாமல் வெற்றுக் காலுடன் ஒரு பிரிவினரும் கலந்து கொண்டனர்.

அவர்கள் சராசரியாக ஒரு மைல் தூரம் ஓட விடப்பட்டனர். இதில் அனைவரது கால்களும் சுமார் ஆயிரம் முறைக்கு மேல் மேலும் கீழுமாகப் போய் வந்தன. இதனால் ஹீல்ஸ் கொண்ட ஷுக்களை அணிந்தவர்களுக்கு தரையுடன் ஏற்பட்ட உராய்வால் அதிர்வலைகள் முட்டு மற்றும் உடல்பகுதிக்கு அதிகமாக கடத்தப்பட்டது. இதனால் உடல் வலி ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஹீல்ஸ் இல்லாத `ஷு’ அணிந்தவர்களுக்கும் அடிப்பாதத்தின் நடுப்பகுதி வழியாக குறைவான அதிர்வுகள் கடத்தப்பட்டன. `ஷு’ இல்லாமல் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

“நமது கால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்துள்ளது. எனவே அதுவே இயற்கையான `ஷு’. உண்மையில் வெறும் காலுடன் பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. மலைப்பாதை போன்ற கரடு முரடான பகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் வெற்றுக் காலில் பயிற்சி செய்யலாம்” என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்கள்.

செலவே இல்லாத தண்ணீர் சிகிச்சை!

உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர்.

ஏதோ உணவு, சிற்றுண்டி சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கில் பணம் கறந்து சொல்லித் தரப்படும் “வாட்டர் தெரபி’ உட்பட முலிகை தெரபிகளை நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள்.

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன்படாது. அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கியத் தேவை. தண்ணீர் சாப்பிட்டால், வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால்தான் சிறுநீரக பிரச்சினை, குடல் பிரச்சினை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு.

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒருவேளை மட்டும் பழங்களாக சாப்பிட்டால் மிகவும் நல்லது.

செயற்கை நியூரான்கள் தயாரிப்பு

மூளை வியாதிகளுக்கு விரைவில் தீர்வு! மூளை நமது உடலை இயக்கும் அதிகாரி. மூளையின் ஒரு செல் பாதிக்கப்பட்டாலும் அது தொடர்பான உடல் உறுப்புகளின் இயக்கமும் முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு மூளை செல்லும் முக்கியமானவை.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த மூளை செல்லை (நியூரான்) செயற்கையாக வளர்த்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். நியூரான் என்பது மூளைக்கும், உடலுக்கும் தகவலைக் கடத்தும் செல்களாகும். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி ஆய்வுக்குழுவினர் இந்த நியூரான் செல்லை உருவாக்கி உள்ளனர்.

உடலில் தோற்பரப்பின் அடியில் உள்ள செல்லை குறிப்பிட்ட 3 ஜீன்களைக் கொண்டு முடுக்கிவிட்டு நியூரான் செல்லாக உருமாற்றி உள்ளனர். இது வழக்கமான நியூரான்கள்போல உணர்வுகளை கடத்துவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. ஒரு வாரத்தில் 20 சதவீத அளவில் வேலைகளை வெற்றிகரமாக செய்யும் வகையில் முன்னேறியது.

இதற்கு முன்னோடியாக எலிகளின் செல்களில் குறிப்பிட்ட வைரசை உட்செலுத்தி மாற்றங்களை ஏற்படுத்தி நியூரான்களைப் போல செயல்பட வைத்தனர். அதில் வெற்றி கிடைத்த பின்னரே மனிதனில் சோதித்துப் பார்க்கப்பட்டது. தற்போது அதிலும் வெற்றி கிடைத்துள்ளது.

நியூரான் உற்பத்தி விஞ்ஞான உலகில் ஒரு அளப்பரிய சாதனையாக கருதப்படுகிறது. குறிப்பிட்ட செல்களை வேறு வகை செல்லாக மாற்ற முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் நிர்பணமாகி இருப்பதால் ஸ்டெம் செல் இல்லாமலும் பல வியாதிகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

சித்தம் கலங்கிய நிலை, அல்சைமர், பார்க்கின்சன் போன்ற ஞாபக மறதி வியாதிகள் உள்பட மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகளுக்கும் எதிர்காலத்தில் இந்த நியூரான் செல்கள் முலம் தீர்வு காண முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.