மூலிகை கட்டுரை (நீர்மேல் நெருப்பு)-சொத்தை நகமும் சுத்தமாகும்-

விரல் நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு கூட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த விரல் நுனிகளை பாதுகாக்க இயற்கையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு கவசம்தான் நமது நகங்கள். நகங்களை பாதுகாப்பாக வைத்தால்தான் விரல்களையும் சக்தி குறையாமல் பாதுகாக்க முடியும்.
நகங்கள் சுண்ணம்பு, பாஸ்பரஸ், இறந்த புரதச் செல்களின் கலவையாகும். நாம் அதிகமாக உட்கொள்ளும் உலோகங்களும் நச்சுப்பொருள்களும்கூட உடலால் வெளியேற்றப்பட்டு, நகத்தால் சேமித்து வைக்கப்படுகின்றன. விரல் நுனிகளை வெப்பத்திலிருந்தும், குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாக்கும் நகங்களை வைத்தே ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை கணித்து விடலாம். சாம்பல் படிந்த வெள்ளைநிற புள்ளிகள் உளள நகங்கள் உலோகம் மற்றும் உப்புச்சத்து பற்றாக்குறையையும், வெளுத்துப்போன நகங்கள் ரத்த சோகையையும், கறுத்த நகங்கள் மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட கல்லீரல் மற்றும் நுரையீரல் பலஹீனத்தையும், வெடிப்புள்ள நகங்கள் வைட்டமின் குறைபாட்டையும், சொத்தையான நகங்கள் ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களையும் காட்டுவதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. நகங்களை பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் நகத்தில் ஏற்படும் சொத்தையானது விரல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் மற்றும் மன உறுதியை குலைத்துவிடுகின்றன. ஒவ்வாமை மற்றும் பலவித தோல் நோய்களால் தோன்றும் நக சீர்குலைவை சீர்செய்யும் அற்புத மூலிகை நீர்மேல் நெருப்பு.
அம்மானியா பேசிரொ என்ற தாவரவியல் பெயர் கொண்ட லித்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகளின் இலைகளிலுள்ள லாவ்சோன் என்னும் பொருள் நகத்தை தாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை கொல்லும் தன்மையுடையன. நீர்மேல் நெருப்பு மற்றும் மருதாணி இலைகளை நீர் விட்டுஅரைத்து நகத்தைச் சுற்றி தினமும் தடவி வர, நகச்சொத்தை மாறும். நீர்மேல்நெருப்பு இலைகளை எரித்து சாம்பலாக்கி, அந்த சாம்பலுடன் கால்பங்கு பொரித்த வெங்காரப்பொடி அல்லது போரிக் ஆசிட் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து நகச்சொத்தையுள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வர நகச்சொத்தை மறைய ஆரம்பிக்கும்.

%d bloggers like this: