Advertisements

Daily Archives: மார்ச் 1st, 2010

லப்… டப்…’ டென்ஷன்! விழிப்புணர்வு இன்னும் இல்லே

பல பேருக்கு இதயக்கோளாறு என் றாலே, மாரடைப்பு என்று தான் தெரியும். கொலஸ்ட்ரால் காரணமாக இதயத்தின் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் மூலம் இது ஏற்படுகிறது என்று மட்டும் தான் தெரியும்.
ஆனால், இதயக்கோளாறுகள் பல வகையில் நேருகின்றன. குறிப்பாக, இதயத்துக்கு ரத்தம் செலுத்தும் முறையில் கோளாறு ஏற்பட்டால் திடீர் விபரீதம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இதயத்துடிப்பு குறைவாகவோ, அதிகமாகவோ அடித்தால் என்ன தெரியப்போகிறது? ஆனால், அதில் தான் ஆபத்தே உள்ளது. இதயத்துக்கு ரத்தம் செலுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டால், நுரையீரல் மற்றும் மற்ற திசுக்களுக்கு ரத்தம் செல்வது பாதிக்கப்படுகிறது. அதனால், இதயத்தின் செயலிழப்பு நேர்கிறது.
சமீபத்தில் சென்னை, மும்பை உட்பட ஒன்பது நகரங்களில் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ள தகவல்கள் வேதனையானவை.
* இதய பாதிப்பு என்றாலே, மாரடைப்பு என்று தான் பலரும் நினைக்கின்றனர். கொலஸ்ட்ரால் மூலம் ஏற்படும் பாதிப்பு என்ற அளவில் தான் தெரிந்துள்ளது.
* இதய செயலிழப்பு தொடர்பான கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவில் இல்லை.
* இதய சிகிச்சை பெறவோ, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவோ நகரங்களில் உள்ள, படித்தவர்கள் கூட ஆர்வம் காட்டுவதில்லை.
* பெரும்பாலோர் மருத் துவ காப்பீடு வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவதில்லை. இதனால், இதய சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெறும் 11 சதவீதமாக உள்ளது.
* இதய வால்வுகள் செயலிழந்து ரத்தம் செலுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டவுடன் டாக்டரிடம் போவோர் எண்ணிக்கை குறைவு. இதய பம்ப் பாதி அளவில் மட்டும் வேலை செய்யும் போது தான் டாக்டரிடமே போகின்றனர்.
* இப்படி முற்றிய நிலையில் போவதால், செலவுக்கு பயப்பட வேண்டியிருக்கிறது.
* இதயம் செயலிழப்பு என்பது தான் மோசமானது; இது பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகப்படுத்த வேண்டும்.
“நாற்பது வயதை தாண்டியவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தால், இதய வால்வு பிரச்னை எழும். அதனால், நாற்பதை தாண்டியவுடனே, முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அப்போது தான் முன்னெச்சரிக்கையாக இருக்க முடியும்’ என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நகரங்களில் உள்ளவர்களுக்கு மருத்துவ காப்பீடு என்பது பற்றிய பெரிய அளவில் விழிப்புணர்வு இன்னும் ஏற்படாததும் அவர்கள், நோய் வந்தால் பரிதவிப்பதற்கு காரணம்.
மருத்துவகாப்பீடு என்பது, மிகவும் அவசியமானது. கண்டிப்பாக ஒவ்வொருவரும் குடும்பம் முழுவதுமே காப்பீடு செய்து கொள்வது நல்லது. நீங்கள் இதுவரை காப்பீடு எடுக்கவில்லை என்றால் உடனே செய்யுங்கள்.
உடல் நிலை பாதிக்கப்பட வேண்டாம்; ஆனால், வந்து விட்டால்…? காப்பீட்டு “ஸ்மார்ட் கார்டை’ காட்டினால் போதும்; மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டு எல்லா சிகிச்சையையும் பெற்று வீடு திரும்பிவிடலாமே.

Advertisements

காஸ்மோ போபியா!

போபியா என்றால் என்ன தெரியுமா? பயம்! ஆம், எதைக்கண்டாலும் காரணமே இல்லாமல் வருகிறதே… அந்த பயம் தான், போபியா. ஆயிரக்கணக்கான போபியாக்கள் உள்ளன என்று மருத்துவ நிபுணர்கள் பட்டியலிட்டு வருகின்றனர்.
சமீபத்தில், இந்த பட்டியலில் சேர்க்கப்பட்ட போபியா தான், “காஸ்மோ போபியா!’ கரப்பான் பூச்சியை பார்த்தால் பயம், சத்தம் போட்டால் பயம், அதிகமான அறைகள் உள்ள வீட்டில் இருக்க பயம், ரயிலை பார்த்தால் பயம், பல்லியை பார்த்தால் பயம் என்பது போல, “உலகமே அழிந்து விடப்போகிறது’ என்று, அடிக்கடி சிலருக்கு பயம் வரும்; அது தான், “காஸ்மோ போபியா!’
கடந்த 2000 ம் ஆண்டின் ஆரம்பத்தில், சிலருக்கு இந்த வகை போபியா தாக்கியது. “புதிய நூற்றாண்டு ஆரம்பமாகிறது; பழைய நூற்றாண்டு முடிகிறது; அதனால், எந்த நேரத்திலும் உலகம் அழிந்து விடும்’ என்று இவர்கள் பயப்பட்டனர்.
இதனால், சரியாக சாப்பிட, தூங்க மாட்டார்கள். எப்போதும் பயத்துடன் தான் வலம் வந்தனர். மனோதத்துவ நிபுணர்கள் மூலம் தான் இவர்களுக்கு சிகிச்சை தர முடிந்தது.
இதுபோல, சமீபத்தில் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தால் பல நாடுகளில் சிலருக்கு, “காஸ்மோபோபியா’ வந்து, ஆட்டிப்படைத்தது. “மாயன் காலண்டரில் சொல்லி விட்டனர். அதனால், உலகம் டிசம்பர் 21, 2012ல் அழிந்து விடும்’ என்று இவர்களுக்கு உச்சகட்ட பயம் வந்துவிட்டது.
ஹாலிவுட் படம், “2012 – தி எண்ட் ஆப் தி வேர்ல்டு’ வெளிவரும் முன்பே, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. மாயன் காலண்டரில் சொன்னபடி உலகம் 2012 டிசம்பர் 21 ம் தேதியுடன் முடிந்து விடும் என்ற கருத்துப்படி அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முதல் பல நாடுகள் அழியும் கோரக்காட்சிகள் தான் படம் முழுவதும். இந்த படம் இந்தியாவிலும் சக்கை போடு போட்டது.
படம் வெளியானதும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கான பேருக்கு, “காஸ்மோ போபியா’ பாதிப்பு ஏற்பட்டது. பிரபஞ்சம் அழிந்து விடப்போகிறது; உலகம் முடிவுக்கு வந்து விட்டதாகவே இவர்கள் திடமாக நம்பினர்.
இதைத்தொடர்ந்து தான், சர்வதேச மனோதத்துவ நிபுணர்கள், வானியியல் விஞ்ஞானிகள் கூடி ஆலோசித்து, இதற்கு விளக்கம் அளித்தனர்…
“கி.பி.,300 ல் கொலம்பியாவில், மாசோ அமெரிக்க நாகரிகம் இருந்தபோது, உருவானது இந்த காலண்டர். அந்த காலண்டர் மெக்சிகோ, ஹாண்டூராஸ் போன்ற சில மத்திய அமெரிக்க நாடுகளிலும் பின்பற்றப்பட்டு வந்தது. மாயன் இனத்தவர் வழி வந்தவர்கள் சிலர் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர்.
“மாயன் காலண்டர் என்பது 2012 டிசம்பர் 21 ம் தேதியுடன் முடிந்து விடுகிறது. வானியியல் சாஸ்திரப்படி நிர்ணயிக்கப்பட்ட இந்த காலண்டர், இதற்கு மேல் எழுதி வைக்கப்படவில்லை என்பதே உண்மை. மற்றபடி, இந்த தேதியில் காலண்டர் முடிவதால் அத்துடன் உலகம் அழிகிறது என்று பொருள் கொள்ள வேண்டாம்; உலகத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை’ என்று கூட்டறிக்கை விட்டபின்பும் கூட பயம் போகவில்லை. மனோதத்துவ நிபுணர்கள் இவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே சிலருக்கு, “காஸ்மோ போபியா’ இருந்து வருகிறது. இந்த படம் வந்ததும், இவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமானது. மேலும், சிலருக்கு இந்த பயம் தொற்றிக்கொண்டது.
பொதுவாகவே, மனதில் எழும் பிரமை தான்போபியா. சாதாரணமாக எழும் பயத்தை ஆரம்பத்திலேயே போக்கி விட வேண்டும்; பகுத்தறிவை பயன்படுத்தி, எந்த விஷயத்தையும் ஆராய்ந்து அறிந்து பயத்தை போக்கி, தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்; தைரியம் இல்லாதவர்களுக்குத் தான் இந்த போபியா எல்லாம்.
பாம்பு, பல்லி போன்றவற்றை பார்த்து பயப்படும் போபியா , சமுதாய சூழலை பார்த்து எழும் போபியா, குறிப்பிட்ட இடம், சூழ்நிலையில் எழும் போபியா என்று மூன்று வகை உள்ளன. ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கில் போபியா வகைகள் உள்ளன. இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அப்படி சேர்க்கப்பட்டது தான், “காஸ்மோ போபியா!’
— இப்படி போபியா பற்றி நிபுணர்கள் கூறுகின்றனர்.

0.025 மில்லி கிராம் எமன் !-கொசுக்கள்

பூனையைவிட புலிகள் வலிமையானவை என்பதை எலிகள் ஏற்றுக் கொள்வது இல்லை. ஆனால், கொசுக்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை உலகமே ஒப்புக் கொள்ளும் ! “”கொசுக்களைக் கட்டுப்படுத்த கருணாநிதியின் அரசு தவறி விட்டது” என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியதும், “”ஜெயலலிதா தான் இருப்பதாகக் காட்டிக் கொள்ள கொசுதான் கிடைத்ததா ?” என்று கிண்டலடித்தார் முதல்வர் கருணாநிதி. “”எதற்கெல்லாமோ போராட்டங்கள் நடத்திப்பார்த்து ஓய்ந்து விட்டு கொசுவுக்காகப் போராடுகிறார்” என்று துணை முதல்வர் ஸ்டாலின் நக்கலடிக்கிறார். அவர்கள் வேண்டுமானால், கொசுக்கடியில் இருந்து தப்பி இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்களை மரணபயத்தின் பக்கம் கொசுக்கள் மெள்ள நகர்த்திக்கொண்டு இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

எங்கே பார்த்தாலும் மர்மக் காய்ச்சல். சிலர் மலேரியா என்கிறார்கள். பலர் சிக்கன்குனியா என்கிறார்கள். டெங்குவில் இது ஒருவகை எனச் சொல்லப்படுகிறது. யானைக்கால் வியாதியில் கொண்டு போய் விடும் என்ற பயம் இருக்கிறது. நடையைத் தளர்த்தி காய்ச்சல் வந்தவரின் வாழ்க்கையை ஓரத்தில் இருத்தி உட்கார வைக்கிறது. குழந்தை, பெரியவர் என வயது வித்தியாசம் இல்லை. ஆண்,பெண் பேதம் இல்லை. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் சிறு கிளினிக் வாசல்களிலும் திருவிழாக் கூட்டம்தான். மலேரியா, சிக்கன்குனியா, மூளைக்காய்ச்சல், டெங்கு, யானைக்கால் நோய் என என்ன பெயரிட்டு அழைத்தாலும் அவை ஐந்தும் கொசுக்களால் வருபவைதான்.

பொதுநல மருத்துவர் சிவந்தி பாஸ்கரிடம் இதுபற்றிக் கேட்டபோது, “”மலேரியாவில் நான்கு வகை உள்ளன. மலேரியா என்பது ஒட்டுண்ணி. ஆலோபீலஸ் என்ற பெண் கொசு மூலமாகப் பரவுகிறது. பிளாஸ்மோடியம் மலேரியா, பிளாஸ்மோடியம் பால்சிபேரம், ஓவேல், வைவாக்ஸ் என்ற வகைககள் உள்ளன. இதில் எது வேண்டுமானாலும் வரலாம். வைவாக்ஸூம், பால்சிபேரமும் திரும்பத் திரும்ப வரக்கூடியவை. இவை கல்லீரலில் நிரந்தரமாக இருந்து கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, ஆறுமாதங்களுக்கு ஒருமுறை என்று திரும்பத் திரும்ப வரும். ஆரம்ப காலத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், மூளையைப் பாதிக்கும் செரிபெரல் மலேரியாவாக மாறக்கூடும். இது மிக சீரயஸான கண்டிஷன். மூளைக்காய்ச்சலாக மாறி உயிருக்கே ஆபத்தாகி விடும். எனவே, ஆரம்பத்திலேயே கண்டறிந்து பிடித்துச் சரிபடுத்திவிட்டால், வீக்கங்கள் வராது. இல்லையென்றால், கை, கால்களைப் பாதிக்கலாம். ஆண்களுக்கு விரைவீக்கம் எனப்படும் ஹைட்ரோசில் பாதிப்பு இந்தக் கொசு கடிப்பதால்தான் ஏற்படுகிறது.பெண்களுக்கு மார்பகம் பாதிக்கப்படலாம்.

டெங்கு காய்ச்சலானது ஏடிஸ் கொசுக்களால் பரவாது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடியாகப் பரவுவது இல்லை. ஆனால், நோய் பாதித்தவரைக் கடித்த கொசு மற்றொருவரைக் கடிக்கும் போது இந்த நோய் பரவும். டயர், தொட்டி போன்ற இடங்களில் தேங்கும் நல்ல தண்ணீரில்தான் இந்தக் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கொசு கடித்த 18 மணி நேரத்தில் இந்த வைரஸ் தனது வேலையைத் தொடங்கிவிடும். பெரும்பாலும் கோடைக்காலத்தில்தான் அதிகமாக இருக்கும். வெயில் சீஸன் முடியும் நேரத்திலும் அதிகம் இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிக்குன்குனியா தாக்குதல் அதிகமாக இருந்தது. பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்கள் அவை.

தற்போது பரவலாகப் பாதிப்புக்களை ஏற்படுத்தி வரும் ஆஸ்திரேலியன் ரோஸ்வரிவர் பற்றி சரியான தகவல் இல்லை. இதுவும் கொசுக்கள் மூலமாகப் பரவும் ஒரு வைரஸ் நோய். ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிக்குன்குனியா நோய் போன்ற பாதிப்பு இதிலும் உண்டு. இதுபற்றிஆராய்ந்து வருகிறார்கள். இந்த நோயின் மிகப்பெரிய பாதிப்பு மூட்டுதான்” என்றார். இந்தக் காய்ச்சல் வந்தவர்கள் ஒரு வாரத்தில் காய்ச்சல் குணமானாலும் இயல்பாக நடமாடுவதற்கு அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை ஆகும். “”சாதாரணக் காய்ச்சலாக இது வந்து அது மர்மக் காய்ச்சலாக மாறி… அதன் பிறகு ஒருவரை மொத்தமாக முடமாக்கி விடும் ஆபத்தை ஒருவர் எப்படி எதிர் கொள்வது ?” என்று கேட்டபோது…

“”இப்போது பரவி வருவது ரோஸ்ரிவர் காய்ச்சலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோமே தவிர, இன்னும் உறுதிப்படுத்தவில்லை.கொசு மூலம் பரவும் இந்தக் காய்ச்சல் வந்தால், இரண்டு மூன்று நாட்களுக்குக் கடுமையான காய்ச்சல் இருக்கும். இந்த மாதிரியான காய்ச்சல்தான் வந்திருக்கிறது என்பதைக் கண்டறியும்,நிரூபிக்கும் பரிசோதனைகள் எதுவும் தற்போது இல்லை. இரவு படுக்கும்போது சாதாரணமாக இருந்த ஒருவருக்கு காலையில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு இருந்தால் இந்த சீரியஸான வகையாகக் கருதலாம். கால்கள் இரண்டையும் தரையில் ஊன்ற முடியாத நிலை இருந்தால் அந்த அனுபவத்தை வைத்தும் இந்த நோயைக் கண்டறிந்து விடலாம்.

இந்தக் காய்ச்சல் வந்த பிறகு தோலில் அரிப்பு, ஒவ்வாமை, வாய்ப்புண் ஏற்படும். இதன் மிகப் பெரிய பாதிப்பு அதிகமாக இருக்கும். ஒரு சிலருக்கு மூன்று நான்கு மாதங்கள் வரை இந்தப் பாதிப்பு இருக்கும். உடல் வலி காரணமாக கை, காலை அசைக்காமல் இருந்துவிடக்கூடாது. வீட்டுக்குள் நடப்பது, காலை மடக்கி விரிப்பது என வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

இந்த நோய் வந்தால் மாத்திரைகளை டாக்டரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும். அலர்ஜி, வாய்ப்புண், மூட்டுவலி ஆகியவற்றுக்கும் டாக்டர்கள் பரிந்துரைப்படி மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்களாக எந்த மருந்தையும் வாங்கி உட்கொள்ளக் கூடாது. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு மிக வேகமாகப் பரவுவதில்லை. ஒட்டுவாரொட்டி கிடையாது. சாதாரணக் காய்ச்சலின்போது எடுத்துக்கொள்ளும் உணவு முறைகள் இதற்கும் பொருந்தும், நீராகாரமாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கென்று உணவுக்கட்டுப்பாடுகளோ, பத்திய முறைகளோ இல்லை!” சொல்கிறார். பொதுநல மருத்துவர் டாக்டர் நிரஞ்சனா, “”கொசுக்களை விரட்ட காயில்,மேட், லிக்விட்,ஜெல் அல்லது க்ரீம் என்று நிறைய உள்ளன. இவற்றைப் பயன்படுத்துவதால் சிலருக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும், தோல் அலர்ஜியும் ஏற்படுவது உண்டு. செயற்கையான கொசு விரட்டிகளுக்குப் பதில் வேப்பிலையைக் காயவைத்து அதை புகை போட்டால் கொசுக்கள் வரத்து குறையும். வீட்டு ஜன்னல்களில் கொசு வலை அடித்துவிடுவது சீப் அண்ட் பெஸ்ட். அனைத்துக்கும் மேலாக சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பது மிக முக்கியம் !” என்றார்.

ஒரு கொசுவின் எடை 0.025 மில்லிகிராமாக இருந்தாலும், ஒரு பெண் கொசு தன்னுடைய ஆயுளில் 3 ஆயிரம் முட்டைகள் இடுமாம். அதை 3 ஆயிரத்தால் பெருக்கினால் என்னவாகும் ? எனவே, உருவான கொசுவைக் கட்டுப்படுத்துவதை விட, கொசு உருவாகாமல் தடுப்பதுதான் முக்கியமானது. இதற்கான ஆராய்ச்சியே இன்னமும் முடியவில்லை. எனவே, அதற்கு முன் அரசாங்கம் கொசுஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “”கடந்த டிசம்பர் மாதம் இந்தக் காய்ச்சலால் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டது உண்மை. சுகாதாரத்துறை எடுத்து கொசு ஒழிப்பு மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் ஜனவரி மாதம் காய்ச்சல் குறைந்துள்ளது. கொசு ஒழிப்புப் பணியைத் தீவிரப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.கொசுக்களை ஒழிக்க குறுகிய காலத்திட்டமும், நீண்ட காலத்திட்டமும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். அதன்படி விரைந்து செயல்பட்டு கொசுக்களை ஒழிப்போம்” என்கிறார்கள். இவை சீக்கிரமே நடக்கட்டும் என்று மக்கள் பிரார்த்திக்கிறார்கள் !
நன்றி -ஆனந்த விகடன்

கம்ப்யூட்டர் பராமரிப்பு

நம் சாலைகளில் ஓடும் பெரிய லாரிகளைக் கவனித்தால், அதன் நீளமான பேட்டரி பெட்டிகளில் “”தினமும் என்னைக் கவனி” என்று எழுதப் பட்டிருக்கும். அதில் உள்ள டிஸ்டில்ட் வாட்டர் மாற்றுவது, சேர்ந்திருக்கும் தூசு மற்றும் துருவினை நீக்குவது போன்ற வேலைகளை அன்றாடம் கவனிக்க வேண்டும். அது போல லாரி மட்டுமின்றி, ஆட்டோ மொபைல் வாகனம் ஒவ்வொன்றையும் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அது ஓடாத மோட்டார் வாகனமாக மாறிவிடும். அதே போல கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவற்றைப் பார்க்கலாமா!
1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.
2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.
3. கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக் (Defrag) செய்வது மிக அவசியம். இதற்கான கால அவகாசம் நீங்கள் புரோகிராம்களை இன்ஸ்டால் மற்றும் அன் இன்ஸ்டால் செய்வதனைப் பொறுத்துள்ளது. இருப்பினும் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்வது நல்லது.
4. சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்துவார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.
5.இன்னொரு வழியும் உள்ளது. Start மெனு சென்று அங்கு கிடைக்கும் ரன் பாக்ஸ் (Start>Run) செல்லுங்கள். %temp% என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடுங்கள். உடனே தற்காலிக பைல்கள் உள்ள போல்டர்கள் அனைத்தும் கிடைக்கும். வேறு எந்த தயக்கமும் இன்றி அனைத்தும் டெலீட் செய்திடுங்கள். ஒரு சில பைல்கள் அல்லது போல்டர்கள் அழிக்கப்பட முடியவில்லை என்று செய்திகள் வரலாம். எவ்வளவு அழிக்க முடியுமோ அவ்வளவையும் அழித்திடுங்கள்.
6. விண்டோஸ் தரும் ஆட்/ரிமூவ் புரோகிராம் மூலம் புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்தால், அது அந்த புரோகிராம் சார்ந்த பைல்களை முழுமையாக நீக்குவதில்லை. எனவே இதற்கென உள்ள சில புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தவும். http://www.revouninstaller.com/revo_ uninstaller_free_download.html என்ற தளத்தில் இந்த புரோகிராம் ஒன்று கிடைக்கிறது.
7. நீங்கள் வைத்து அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.
8. கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரும்.
9. ரிஜிஸ்ட்ரி யை கிளீன் செய்திடுங்கள் என்று சில கட்டுரைகளில் படிக்கலாம். கம்ப்யூட்டர் களுக்குப் புதியவரா நீங்கள்? அப்படியானால் இந்த வேலையை மேற்கொள்ள வேண்டாம். என் கம்ப்யூட்டர் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித ரெஜிஸ்ட்ரி கிளீனிங் செய்திடாமல் நன்றாக இயங்கிக் கொண்டு தான் உள்ளது.

விக்கிபீடியாவிற்கு கூகுள் நன்கொடை

இணையத்தில் இயங்கி வரும் கலைக் களஞ்சியமான விக்கிபீடியா வளர்ச்சிக்கு கூகுள் நிறுவனம் அண்மையில் 20 லட்சம் டாலர் நன்கொடை வழங்கியுள்ளது. விக்கிபீடியாவை அமைத்து இயக்கி வரும் விக்கிமீடியா பவுண்டேஷன் அமைப்பிடம் இது வழங்கப்பட்டது. இந்த நிதி, விக்கிபீடியாவின் தொழில் நுட்ப கட்டமைப்பிற்குப் பயன்படுத்தப்படும். பயன்படுத்து வதற்கு எளிமையான தாகவும், ஒரே நேரத்தில் பலருக்கு விரைவில் கிடைப்பதாகவும் விக்கிபீடியா வினை மாற்ற இந்த நிதி உதவும் என்று இந்த அமைப்பின் செயல் குழு உறுப்பினர் ஜிம்மி வேல்ஸ் தெரிவித்தார்.
இன்டர்நெட்டின் மிகப் பெரிய வெற்றி என்று ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் நம் கண்களின் முன் தெரிவது விக்கிபீடியா கலைக் களஞ்சியம் தான். மக்களால் உருவாக்கப்பட்டு இதில் கிடைக்கும் தகவல்கள் இந்த உலகில் நமக்கும் நம் சந்ததியினருக்கும் ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும் என கூகுள் நிறுவனர்களில் ஒருவரான செர்ஜி பிரையன் அறிவித்தார்.
விக்கிமீடியா பெரும்பாலும் தனி நபர்களால் வழங்கப்படும் நன்கொடை களைக் கொண்டே செயல்படுத்தப்படுகிறது. சென்ற 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் 80 லட்சம் டாலருக்கு மேல் நிதி அளித்துள்ளனர். இது விக்கிமீடியாவின் பட்ஜெட்டில் நான்கில் மூன்று பங்காகும்.
விக்கிமீடியா பிற திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.விக்கிபுக்ஸ் (http://www.wikibooks.org/) விக்ஷனரி (http://www.wiktionary.org/) விக்கிமீடியா காமன்ஸ் (http://commons.wikimedia.org/) ஆகிய தளங்களும் இந்த அமைப்பினால் நடத்தப்பட்டு வருகின்றன.

ஜாவாவில் 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்து கோவில் கண்டுபிடிப்பு

இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றான ஜாவாவில், 1,100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவில், அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில், முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில் ஒன்றாக தற்போது இந்தோனேசியா இருக்கிறது. ஆனால், அதன் தீவுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் புத்த மதமும், இந்து மதமும் இருந்தன என்பது வரலாறு.
அதற்குச் சான்றாக இந்தோனேசியாவின் பல இடங்களில் இரு மதங்களின் கோவில்கள் இன்றும் இருக்கின்றன. சில அகழ்வாய்வில் வெளிப்பட்டிருக்கின்றன.
ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரன், மலேசியாவிலுள்ள கடாரத்தை வென்று, “கடாரம் கொண்டான்’ என்ற பட்டத்தைச் சூட்டிக் கொண்டான்; மேலும் அவன் முன்னேறி, இந்தோனேசியாவிலுள்ள சில தீவுகளையும் வென்றான் என்பது வரலாறு. புத்த மதம் வந்து 300 ஆண்டுகளுக்குப் பின், கி.பி., 5ம் நூற்றாண்டில் இந்து மதம் இந்தோனேசியாவில் பரவியது. பின், வந்த இந்தோனேசிய மன்னர்கள் இருமதங்களையும் தழுவியவர்களாகவே இருந்திருக்கின்றனர். கடைசியாக கி.பி., 15ம் நூற்றாண்டில் இஸ்லாம் வந்தது. தற்போது இந்தோனேசியாவில் 90 சதவீதம் முஸ்லிம்களும், 10 சதவீதம் பவுத்தர்கள், இந்துக்களும் வாழ்கின்றனர்.
ஜாவாவில், யோக்யகர்த்தா என்ற இடத்தில் “இந்தோனேசிய இஸ்லாமியப் பல்கலைக் கழகம்’ இருக்கிறது. இந்த வளாகத்தில் ஒரு பிரம்மாண்டமான மசூதியும் உள்ளது. இதன் அருகில் உள்ள இடத்தில் நூலகம் அமைப்பதற்காக, 2009 டிசம்பர் மாதம் வேலைகள் துவங்கின. அஸ்திவாரத்துக்காக மண் தோண்டும் போது, கல் சுவர் தென்பட்டது. அரசு தொல்பொருள் துறையினர் இதைக் கேள்விப்பட்டு நேரில் வந்து களப்பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து 35 நாட்களாக நடந்த அகழ்வாய்வில், 1,100 ஆண்டுகளுக்கு முந்தைய இரண்டு கோவில்கள் வெளிப் பட்டன. முதல் கோவில் ஆறு மீட்டர் நீள உயரத்துக்கு அமைந்துள்ளது.
இதில் ஒரு விநாயகர் சிலை, ஒரு லிங்கம், ஒரு யோனி பீடம் (இது சக்தி வழிபாட்டைக் குறிப்பது) ஆகியவை இருந்தன. இந்தக் கோவிலின் அருகில் அமைந் துள்ள, ஆறு மீட்டர் நீளமும் நான்கு மீட்டர் உயரமும் கொண்ட மற்றொரு கோவிலில் ஒரு லிங்கமும், யோனி பீடமும், இரண்டு பலி பீடங்களும், இரண்டு நந்திகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் தொல் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளன. கோவிலைச் சுற்றி வேலி போடப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளது. “இக்கோவில் எல்லாரும் பார்க் கும்படியாக கண்காட் சிக்கு அமைக்கப் படும்’ என்று பல்கலையின் அதிகாரியான சுவர்சோனோ முகமது தெரிவித்தார்.
இந்தக் கோவிலின் அருகில் ஒரு நதி ஓடுகிறது. கோவிலுக்கு வடக்கில், 12 கி.மீ., தூரத்தில் மெரபி என்ற எரிமலை இருக் கிறது. இந்தக் கோவில் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்குள் இந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்ட தீக்குழம்பு, அருகிலுள்ள நதியின் வழியாக வந்து இந்தக் கோவிலை மூடியிருக்கலாம்; அதனால் தான் இந்தக்கோவில் பெருமளவில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருக்கிறது என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தொல்பொருள் ஆய்வாளரான இன்டுங் பஞ்ச புத்ரா என்பவர், “இந்தக் கோவிலில் கிடைத்துள்ள விவரங்கள் இதுவரை நடந்த அகழாய்வுகளில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’ என்கிறார்.
“கி.பி., 15ம் நூற்றாண்டில் இங்கு அடியெடுத்து வைத்த இஸ்லாம், இங்கு ஏற்கனவே இருந்த புத்த, இந்து மதக் கலாசாரங்களை உள்வாங்கித்தான் வளர்ந்தது’ என்று கதீஜா மாதா பல்கலைக் கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரும் தெற்காசியாவில் இந்துமத ஆய்வில் சிறந்த நிபுணருமான திம்புல் ஹர்யோனா தெரிவித்தார். மேலும் அவர், “இந்தோனேசியா மூன்று மதங்களும் கலந்த கலவையாக இன்று வரை இருக் கிறது. அகழாய்வில் வெளிப்பட்ட சிலகோவில்கள், பாதி இந்துக் கோவில் அமைப்பிலும், பாதி புத்தக் கோவில் அமைப் பிலும் இருக் கின்றன.
சில நூற்றாண்டுப் பழமையான மசூதிகளின் கூரைகள், இந்துக் கோவில் களைப் போலவே இருக்கின்றன. அதேபோல் அவை மெக் காவை நோக்கி அமைக் கப்படாமல் இந்துக் கோவில்களைப் போலவே கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைக்கப் பட்டுள்ளன. இந்தோனேசியக் கலைகள், முஸ்லிம் களின் வாழ்க்கை முறை, உணவு, உடை, சடங்குகள் ஆகியவை முந்தைய இந்து, புத்தக் கலாசாரத்தின் அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. இந்து மதம் 1,000 ஆண்டுகளாக இங்கு இருந்துள்ளது. அதன் தாக்கமும் ஆழமாகத் தான் இருக்கும்’ என்கிறார்.

தினமும் முட்டை சாப்பிடலாமா?

`முட்டை சைவமா..? அசைவமா?’ என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். சரி அதை விட்டுவிடுவோம். தினந்தோறும் முட்டைகள் சாப்பிடலாமா?

அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில், 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணபடுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை.

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில்தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை! ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடு தலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது. `சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடு கிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொலஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, தீய கொலஸ்ட்ரால் ரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்கு பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் `பி’ கு வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன’ என்கிறார் டாக்டர் டெனால்ட் மெக்மைரா.

1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கபட்டு குறிப்புகள் சேர்க்கபட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.

1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் டாக்டர்கள், கண் டாக்டர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறி
ப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான்.

நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். டாக்டர் யோசனைபடி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.

கண்ணே நலமா?


முதுமையில் வர வேண்டிய பார்வைக் குறைபாடு இன்று இளம் வயதிலேயே ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொண்டு வந்தால் இந்த பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.

பொதுவாக ஒருவரது தெளிவான பார்வைக்கு… தினசரி மல்டி வைட்டமின் 500 மில்லிகிராம் வைட்டமின் சி 400 வைட்டமின் இ சர்வதேச யூனிட்கள் 15 மில்லிகிராம் பீட்டா கரோடீன் 80 மில்லிகிராம் துத்தநாகம் 2 மில்லிகிராம் செம்பு பி காம்ளெக்ஸ் மற்றும் 400 மைக்ரோகிராம் போலிக் அமிலம் 2500 மில்லிகிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

– இவையெல்லாம் தேவைபடுகிறது.

கண் பார்வைக்கு வெளிச்சம் அத்தியாவசியம் என்றாலும், நீண்ட நேரம் வெளிச்சத்தில் இருந்தால் கண் பார்வை பாதிக்கபடும் என்பதும் உண்மையே. வைட்டமின் சி, வைட்டமின் இ, கரோடீனாயிட் உள்ளிட்ட உயிர்வளியேற்ற எதிர்ப்பி ஊட்டச் சத்துக்கள் சூரிய வெளிச்சத்தில் இருந்து கண்களை பாதுகாக்கும்.

விழித்திரையை பாதுகாப்பதில் கரோடீனாயிட்களுக்கு பெரும் பங்கு உண்டு. தினசரி 10 மில்லிகிராம் அளவு இயற்கையாக உருவாகும் 600-க்கும் அதிகமான கரோடீனாயிட்களுள் லூடீன் குறிப்பிடத்தக்கது. காரட்களுக்கு ஆரஞ்சு வண்ணத்தைத் தருவது கரோடீனாயிட்கள் தான்.

சிகப்பு, மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களில் உள்ள பழங்கள், காய்கள், மற்றும் இலை தழைடன் கூடிய பசுமைக் காய்கள், கீரைகள் ஆகியவற்றில் இதனைக் காணலாம். பருப்பு வகைகள் ஸ்வீட் கார்ன், பட்டாணி, ரோகோலி (காலி பிளவர் வகை) ஆகியவற்றிலும் லூடீன் அதிகம் உள்ளது.

கரோடீனாயிட் வகைகளுள் மற்றொன்று லைகோபீன். இது தக்காளியில் காணப்படுகிறது. இதுவும் க பாதுகாப்பிற்கு ஏற்றதாகும்.

1995-ம் ஆண்டு முதலே லூடீன் பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. வர்த்தக ரீதியாக இது மேரிகோல்ட் மலரின் இதழ்களில் இருந்து எடுக்கபடுகிறது. நீல நிறக் கண்கள் உடையவர்களின் விழித்திரைகளில் பாதுகாப்பு நிறமிகள் மிகக் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு இந்த லூடீன் அதிக அளவில் தேவைபடும். இந்த ஊட்டச்சத்து கடுகு, கீரை, ஸ்பைநாச், கோலார்ட் உள்ளிட்ட கருமை, பசுமை, இலையுடன் கூடிய காய்களிலும், முட்டைகளிலும் கிடைக்கிறது.

கொழுப்பு அமிலங்களும் ஆரோக்கியமான கண் பார்வையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வகை கொழுப்பு அமிலங்கள், ப்ளாக்ஸ் விதைகள், பருப்பு வகைகள், மீன்கள் ஆகியவற்றில் கிடைக்கும்.

தினசரி 500 மில்லிகிராம் தண்ணீரில் கரையும் தன்மை கொண்ட வைட்டமின் சி, சராசரியான கண் ஆரோக்கியத்துக்கு தேவையானதாகும். அதிக அளவு வைட்டமின் சி கண்புரை நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. இது, விழித்திரை பொட்டு திசு அழிவைத் தாமதபடுத்துகிறது.

இந்த வைட்டமின் சி ஆரஞ்சுச்சாறு மற்றும் சிட்ரஸ் பழங்களில் அதிக அளவில் கிடைக்கும்.

தினசரி 400 மில்லிகிராம் உயிர்வளியேற்ற எதிரப்பிகள் மற்றும் கரையும் தன்மை கொண்ட 8 வைட்டமின்களின் கூட்டு பெயர் வைட்டமின் இ ஆகும். கண்புரை மற்றும் விழித்திரை பொட்டு திசு அழிவைத் தடுக்கும் ஆற்றல் இதற்கும் உண்டு. இதை சில ஆய்வுகள் வெளிபடுத்துகின்றன.

கொட்டை, சாலட், பட்டாணி, வெண்ணெய், பருப்பு வகைகள், இனிப்பு உருளை மற்றும் கொழுப்பில் இருந்து தயாரிக்கபடும் செயற்கை வெண்ணை ஆகியவற்றில் `வைட்டமின் இ’ கிடைக்கிறது. நமக்கு தினமும் அத்தியாவசியத் தேவையான துத்தநாகம், உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் காணப்படுகிறது. இதன் நோய் எதிர்ப்பு சக்தி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். வெட்டுக்காயங்கள் எளிதில் குணமடையும். சுவை, நுகர்தன்மைக்கும் இது மிகவும் அவசியமாகும். துத்தநாகம் சிவப்பு இறைச்சி, கோழி, ஆயிஸ்டர் மீன், பருப்பு வகைகள், வேக வைத்த பீன்ஸ் ஆகியவற்றில் கிடைக்கிறது.

அதிக அளவு சோடியம் கண்புரைக்கு வழிவகுக்கும். தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய அதிகபட்ச சோடியம் 2000 மில்லிகிராம் மட்டுமே. முடிந்தவரை அன்றைக்கு சமைத்த உணவை உட்கொள்ளவும்.

ஆரோக்கிய உணவுக் கட்டுபாடு, கால்சியம் தேவைக்காக கொழுப்பு நீக்கபட்ட பால் பொருட்கள், 100 சதவீத காய்கறிச் சாறுகள், பழச்சாறுகள், முலிகைத் தேநீர், தண்ணீர் ஆகியவை அவசியம். அதிக அளவு நீராகாரம் பருகுவது கண் எரிச்சலை கணிசமாகக் குறைக்கும்.