Daily Archives: மார்ச் 2nd, 2010

உடல் ஆரோக்கியம் காக்கும் பேல்பூரி

நோ ஆயில், நோ பாயில் என்பதே மெட்ராஸ் பேல் பூரி யின் சாப்பாட்டு மந்திரம். வயிறு முட்ட வடித்து வைத்த அரிசி உணவுகளை சாப்பிட்டே பழகிய நமக்கு அதிசயிக்கும் வகையில் பச்சை காய்கறிகளை பதமாய் படையல் வைக்கிறார்கள் இவர்கள். பளபளக்கும் பழ வகைகளை பக்குவமாய் ருசி பார்க்க சொல்லி தருகிறார்கள் இவர்கள்.
சென்னை பாண்டிபஜாரில் 34 ஆண்டுகளுக்கு முன்னால் சாதரண தள்ளுவண்டியில் லிங்கம் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புட் இன்றைய உடல் ஆரோக்கியத்திற்கு போட வைக்கும் பெயர் வெரிகுட்.
தஞ்சைக்காரர் லிங்கம் சாதாரண ஒரு விவசாயி.பிழைப்பு  தேடி  வந்தவர். பரபரப்பாக இயங்கும் சென்னை வாழ்க்கையில் சாப்பாடு என்பதே நஞ்சாக மாறுவதை நினைத்து மனம் பதைபதைத்தார். நாலு பேருக்கு நல்ல சாப்பாட்டை செய்து கொடுத்தால் என்ன? என்று ஒரு க்ரீன் பல்ப் எரிந்திருக்கிறது இவரது மூளையில். உடனே உள்ளூர் காய்கறிகளையே உணவாய் உட்கொள்ளும் பழக்கத்தை பரப்ப ஆரம்பித்தார். உள்ளூர் வாசிகள் இவரது உணவே மருந்தாக திட்டத்திற்கு சரியாக தீனி போட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நல்ல செய்தி மூன்று தலைமுறை வாடிக்கையாளர்களை சம்பாதித்து கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. அப்புறம் என்ன? அமோக பிஸினெஸ். சூடு கிளப்ப தொடங்கி விட்டது. இன்று இந்த கடையை அவரது மகன் ராஜா இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்து சென்று கேட்டரிங் படித்த மாணவர்களை வைத்து அதிரடி அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறார்.
மெட்ராஸ் பேல் பூரியின் பெருமையை உணர்ந்து பல ஆங்கிப பத்திரிகைகள் பளீச் வெளிச்சம் வழங்கி இருக்கின்றன. ஆந்திர பத்திரிகைகள் கூட இதை அறிமுகப்படுத்தி எழுதிஇருக்கின்றன. இன்று ஏரியா தாண்டி ஏகப்பட்ட கஸ்டமர்கள் காத்து நிற்கிறார்கள். கடைக்கு முன்னால். கோவை பழத்தோட்டங்களிலிருந்து நாங்களே காய்கறி பழங்களை நேரடி கொள்முதல் செய்கிறோம் என்றார் ராஜா.
பழங்களையும், காய்கறிகளையும் வைத்து இவர்கள் செய்யும் உணவு வகைகள் ஏறக்குறைய அறுபதை தாண்டுகிறது. எந்த பண்டமும் அதிகபட்சமாக 24 ரூபாய் தான். இவர்களின் ஸ்பெஷல் ஐட்டம் என்று பார்த்தால் பேல்பூரி. அதற்கு அடுத்து அதிகமாக மூவ் ஆவது வெஜ் சாலட் எல்லாமே யூஸ் அண்ட் த்ரோ வடிவில் பேக் செய்து பரிமாறப்படுவதால் இன்னொருவர் தட்டை இன்னொருவர் தொடக்கூட வாய்ப்பில்லை. சுத்தம், சகாதாரம் என்பது ஒட்டிப்பிறந்த ரெட்டை குழந்தைகள் என்பதால் இவரது கடைக்கு தனுஷ், சரத்குமார், அர்ஜுன், விசு, டான்ஸ் மாஸ்டர் கலா, விஜயகாந்த், எஸ்.வி.சேகர் என்று பல சினிமா பட்டாளங்கள் படை எடுத்து வந்து போகிறார்கள்.
பேல்பூரி செய்முறை: கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி தழை இவற்றை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின் எலுமிச்சை சாறு, உப்பு, குறுமிளகுத்துள், பொதினா சட்னி, பேரீச்சை சட்னி, ஓமப்பொடி, பொரி, மிக்ஸர் இவற்றை எல்லாம் தேவைக்கு ஏற்ப ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்தால் பேல் பூரி தயார். பச்சை பழங்களையும் காய்கறிகளையும் ருசியாக சாப்பிட இந்த வழியே சிறந்தது என்பதால் இந்த ஐட்டத்திற்கு ஏகப்பட்ட மவுசு.

டிஸ்க்கில் காலி இட அளவு

டிஸ்க்கில் காலி இட அளவு
உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கின் பிரிவுகளில் எவ்வளவு இடம் இன்னும் மீதம் உள்ளது என்று பார்க்க ஒவ்வொரு முறையும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று அல்லது மை கம்ப்யூட்டர் சென்று, டிரைவ் எழுத்தில் கிளிக் செய்து பார்க்கிறீர்களா? அல்லது டிரைவ் எழுத்தில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்துப் பார்க்கிறீர்களா?
இந்த சுற்றி வளைத்துப் பார்க்கும் வேலையை ஒரு சிறிய புரோகிராம் எளிதாக மேற்கொண்டு எப்போதும் உங்கள் டிரைவின் இட அளவை கண் முன்னே காட்டுகிறது. என்று அழைக்கப்படும் ஒரு சிறிய புரோகிராம் இந்த வகையில் உங்களுக்கு உதவும். இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து வைத்தால் உங்கள் கம்ப்யூட்டரின் சிஸ்டம் ட்ரேயில் டிஸ்க்கின் டிரைவ்களில் உள்ள காலி இடத்தைக் காட்டும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://traydiskfree.sourceforge.net/. ஒரு சின்ன எச்சரிக்கை. இந்த புரோகிராம் விண்டோஸ் விஸ்டாவில் செயல்படாது. ஆனால் விண்டோஸ் 2000, எக்ஸ்பி போன்ற மற்ற 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படும்.

ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகள்

“ஆண்களைவிட பெண்களே புத்திசாலிகளாக உள்ளனர்’ என்று லண்டனில் ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்ட பந்தயத்தில் தெரியவந்துள்ளது. பிரிட்டன், லண்டனை சேர்ந்த ஒரு அறிவுப்பூர்வ பந்தய அமைப்பு, ஆண், பெண் இரு பாலரில் யார் புத்திசாலிகள், அறிவுக்கூர்மையானவர்கள் என்பதை அறிய வித்தியாசமான பந்தயம் ஒன்றை ஆன்-லைனில் நடத்தியது. பந்தய முடிவில் ஆண்களுக்கு கசப்பான செய்தியே கிடைத்தது. ஆண்களைவிட பெண்கள் தான் புத்திசாலிகள் என்று முடிவு வெளியாயின.
லண்டனை சேர்ந்த இந்த அமைப்பு ஆன்-லைனில் இந்த பந்தயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், டச்சு, பின்லாந்து, நார்வே, சுவீடன், டானிஸ் ஆகிய ஒன்பது மொழிகளில் இந்த போட்டித் தேர்வை நடத்தியது. இயற்கை, அறிவியல், வரலாறு, புவியியல், கலை, இலக்கியம், விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சம், மக்கள், முக்கிய இடங்கள் இவை சம்பந்தமாக விஞ்ஞானபூர்வமற்ற முறையில் பொழுதுபோக்கான கேள்விகளை தயாரித்தது. மொத்தம் ஒன்றரை லட்சம் கேள்விகளை தயார் செய்திருந்தது. ஆன்-லைன் மூலம் பதிலளிக்க ஒவ்வொரு கேள்விக்கும் தலா 20 வினாடிகள் ஒதுக்கியது.
பதிலளித்த ஆண்கள், பெண் இரு பாலரும் மாறி மாறி கூடுதலாகவும் குறைச்சலாகவும் பதிலளித்தனர். முடிவில் ஆண்களைவிட பெண்கள் தான் அதிக கேள்விகளுக்கு பதிலளித்திருந்தனர். பெண்கள் 40,88,139 கேள்விகளுக்கும், ஆண்கள் 40,77,596 கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர். பெண்கள் பொழுதுபோக்கு பிரிவில் 57 சதவீத கேள்விகளும், இயற்கை மற்றும் அறிவியல் பிரிவில் 55 சதவீத கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தனர். மக்கள், முக்கிய இடங்கள் பிரிவில் 42 சதவீத கேள்விகளே சரியான பதிலை அளித்திருந்தனர். ஆண்கள் இயற்கை, பொழுது போக்கு, அறிவியல், விளையாட்டு போன்ற துறையில் சிறப்பாக பதிலளித்திருந்தனர்.

மிதக்கும் நகரம்!

உலகின் பெரும் கப்பல்கள் பற்றி படித்திருப்போம். ஆனால் அவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில், `மிதக்கும் நகரமாய்’ ஒரு கப்பல் உருவாக போகிறது.

அப்படியென்ன அது பிரமாதம் என்கிறீர்களா? ஒரு மைல் தூரத்துக்கு 25 மாடிக் கட்டிடங்கள் அமைந்திருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அதுதான் `பிரீடம் ஷிப்’ என்ற மிதக்கும் நகரம்!

இதன் நீளம் ஆயிரத்து 317 மீட்டர்கள். அகலம் 221 மீட்டர்கள். உயரம் 103 மீட்டர்கள். இந்தக் கப்பல் ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட உயரமானது. இரண்டு கால்பந்து மைதானங்கள் சேர்ந்த அகலம் கொண்டது. இவ்வளவு பெரிய `மெகா’ கப்பல் கடலில் மிதப்பது மட்டுமல்ல, உலகைச் சுற்றிலும் வலம் வரவும் போகிறது.

`பிரீடம் ஷிப்’ பற்றிய எல்லா தகவல்களுமே பிரமிக்க வைக்கின்றன. இதில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் மொத்தம் 17 ஆயிரம் குடியிருப்பு பிரிவுகள் அமையும். இக்கப்பல் தொடர்ந்து உலகம் முழுவதும் பயணம் மேற் கொண்டபடி இருக்கும். இங்கு நிரந்தரமாகத் தங்கியிருந்தபடி உலகைச் சுற்றி பார்க்கலாம்.

இந்தக் கப்பல் தளங்களின் உச்சியில் சிறு விமானங்கள் இறங்கி ஏறும் வகையில், ஆயிரத்து 158 மீட்டர் நீளமுள்ள ஓர் ஓடுபாதையும், விமானங்களை நிறுத்துவதற்கான இடங்களும் அமைக்கபடும். உல்லாச படகுகளை நிறுத்தும் பகுதி, ஒரு மிக பெரிய வணிக வளாகம், பள்ளி, கல்லூரி, கோல்ப் மைதானம், சைக்கிள் ஓட்டும் பாதைகள், ஓய்வாய்க் கழிப்பதற்கு 200 திறந்த வெளி பகுதிகள் ஆகியவையும் அமையும்.

இம்மாபெரும் கப்பலில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. இதில் பல உணவகங்கள், திரையரங்குகள், விளையாட்டு அமைப்புகள் இருக்கும். விளையாட்டு பிரியர்களுக்கு ஏற்ற வசதிகளும் உண்டு. டென்னிஸ், கூடைபந்து, `பவுலிங்’ போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம். நீச்சல் குளம், பசும்புல்பரப்பு, `ஸ்கேட்டிங்’ வளையம், செயற்கைக் கடற்கரையில் அமர்ந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் வசதி போன்றவை உண்டு.

ஒவ்வொரு குடியிருப்பிலும் 100 உலக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், கப்பல் செல்லும் கடலை ஒட்டிய நாடுகளின் தொலைக்காட்சி அலைவரிசை நிகழ்ச்சிகளையும் காணலாம். இணைய வசதியும் உண்டு.

இந்த மிதக்கும் நகரத்துக்கு என்று ஒரு தனி பாதுகாப்பு படைம் உண்டு. தவிர, கப்பலின் நுற்றுக்கணக்கான பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு பயிற்சி அளிக்கபடும். இக்கப்பலின் மற்றொரு சிறப்பம்சமாக இது இயற்கைக்கு உகந்ததாக இருக்கும். இதன் கழிவுகளால் கடல் பாதிக்கபடாமல் அவை மறுசுழற்சி செய்யபடும் அல்லது பாதுகாப்பான முறையில் எரித்து அழிக்கபடும்.

இவ்வளவு பெரிய கப்பலை கடலில் நகர்த்துவது என்பது எளிதான விஷயமல்ல. அதற்கென்று, தலா 3 ஆயிரத்து 700 குதிரைசக்தி திறன் கொண்ட 100 டீசல் இயந்திரங்கள் பயன்படுத்தபடும். கற்பனைக்கு அப்பாற்பட்ட இக்கப்பலை கட்டி முடிக்க முன்றாண்டுகளும், பல்லாயிரம் கோடி ருபாயும் ஆகும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

ஆதங்கமான ஒரே விஷயம், இக்கப்பலில் நிரந்தரக் குடியிருப்பு பெறவும், பயணம் செய்யவும் கோடீசுவரர்களால் மட்டுமே முடியும்!

நிலவில் பனிக்கட்டிகள் ; கண்டுபிடிப்பில் மேலும் ஒரு புதிய சாதனை படைத்தது இந்தியா

நிலவில் தண்ணீர் இருக்கிறது என கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்- 1 ஆள் இல்லா விண்கலம் கண்டு பிடித்து கொடுத்தது. இது போல் தற்போது இந்த சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகள் இருப்பதும் கண்டு பிடித்து கொடுத்துள்ளது. இத்தகவலை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இந்த தகவல் இந்தியாவின் ஆராய்ச்சிக்கு மேலும் ஒரு சிறப்பை தந்திருக்கிறது.

கடந்த 2008 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் இந்தியாவில் இஸ்ரோ மூலம் தயாரித்து உருவாக்கப்பட்ட சந்திரயான் – 1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இடையில் அது செயல் இழந்து விட்டதாக கூறப்பட்டாலும். ஏறக்குறைய 90 சத பணிகளை அது முடித்து விட்டது என விஞ்ஞானிகள் கூறினர்.

உலக அளவில் இந்தியாவுக்கு 6 வது இடம் : உலக அளவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய விண்வெளி ஆகியன மட்டுமே ஆள் இல்லா விணகலத்தை அனுப்பி வந்தது. இந்த வரிசையில் இந்தியா 6 வது நாடு என்ற பெருமையை படைத்தது. நிலவில் உள்ள மூலப்பொருள், தண்ணீர் மற்றும் அங்கு வாழும் தன்மை குறித்து ஆய்வு நடத்த சந்திரயான் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தின் மூலம் மூன் மினரலாஜி மேப்பர் என்ற கருவி மூலம் நிலவின் தெற்கு துருவத்தில் ண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது 40 ஆண்டுகால சந்தேகத்திற்கு முடிவாக அமைந்தது. இதனை நாசாவும் ஒத்துக்கொண்டது. உலக அளவில் நிலவில் தண்ணீர் இருப்பது இந்தியாவின் மூலம் வெளி கொண்டு வரப்பட்டது. இது உலக அளவில் அனைவரும் திரும்பி பார்க்கும்படியாக அமைந்தது என்பது நினைவிருக்கலாம்.

15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகள் : தற்போது இந்த சந்திரயானில் நாசா உதவியுடன் பொருத்தப்பட்டிருந்த எஸ்.ஏ.ஆர்., என்ற ரேடார் கருவி மூலம் இங்கு நிலவின் வடக்கு துருவத்திலல் ஐஸ்கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள 40 குழிகளில் பனிக்கட்டிகள் உறைந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தக்குழிகள் 2 கி.மீட்டர் முதல் 15 கி.மீட்டர் வரையிலான குறுக்கு விட்டம் கொண்ட குழிகளாக உள்ளது. இதில் இருந்து 600 மில்லியன் மெட்ரிக் டன் தண்ணீர் வரை கிடைக்கும் என்றும் நாசா கூறியுள்ளது. சந்திரயான் மூலம் நிலவில் பனிக்கட்டிகளும் இருக்கிறது என்பது உலகிற்கு பெரும் வரப்பிரசாதமான தகவல். இந்த விஷயத்திற்கு இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. அப்போ நிலவுக்கு போய் வசிக்க துவங்கிடலாமா ?

கறையை ஓவியமாக்கும் மேஜிக் மேஜை விரிப்பு!

மேஜை விரிப்புகளில் ஏற்படும் கறை, ஓவியமாக மாறினால் எப்படி இருக்கும். நினைக்கவே அழகாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறதல்லவா! உண்மையில் கறைகளை ஓவியமாக மாற்றும் ஒரு அற்புத மேஜை விரிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

மேஜை விரிப்புகள் வீட்டின் அழகை பிரதிபலிக்கும். வீடுமட்டுமல்லாமல் அலுவலகம் மற்றும் பொதுமேடைகளிலும் மேஜை விரிப்புகள் அலங்கரிக்கும்.

அடிக்கடி புழங்குவதால் விரிப்புகளில் கறைகள் ஏற்படுவதும் சகஜமாகிவிடுகிறது. இதை சலவை செய்து பயன்படுத்துவதற்குள் இல்லத்தரசிகளுக்கு போதும் போதுமென்றாகிவிடும்.

ஆனால் இந்த மந்திர மேஜை விரிப்பு வாங்கினால் கறை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இது எந்தவிதமான திரவ கறையானாலும் உருமாற்றிவிடும். திரவம் விரைவில் ஆவியாகிவிடும். கறை உருமாறி வண்ணம் மாற்றப்பட்டு புதிய புதிய டிசைன் ஓவியம்போல மாறிவிடும்.

இந்த அற்புத மேஜை விரிப்பை தயாரித்தவர் நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரைச் சேர்ந்த 29 வயது பெண் ஆவார். அவரது பெயர் கிறிஸ்டின் பிஜாடல்.

இல்லத்தரசியான பிஜாடல், “விருந்தினருக்கு உபசரிக்கும் கூல்டிரிங்ஸ், காபி, தண்ணீர், ஒயின் போன்ற எந்த திரவ பானத்தைக் கொட்டினாலும் ஒரு (பூப்போல) வண்ண ஓவியமாக மாற்றிவிடும் இந்த விரிப்பு. இல்லத்தரசிகளின் சலவைச் சிரமத்தை கருத்தில் கொண்டு இதை வடிவமைத்துள்ளேன். எனது இந்த தயாரிப்பு, கறை ஒவ்வொன்றும் பூவாக மலரும்போதும் நீண்ட காலத்துக்கு என்னை நினைவுபடுத்தும் என்று நம்புகிறேன்” என்கிறார் உற்சாகமாக.

எஸ்கிமோ மனிதனை மீண்டும் உருவாக்கலாம்?

விஞ்ஞானம் வியக்க வைக்கும் அளவில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதன் இன்னொரு மைல்கல்லாக மறைந்து போன பழங்கால மனிதர்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி மனித இனத்தில் 4 பிரிவுகள் இருந்துள்ளன. அவை பரவலாக அறியப்பட்ட எஸ்கிமோக்கள் மற்றும் நகனாசான்ஸ், கோர்யாக்ஸ், சக்சிஸ். இந்த இனங்கள் அனைத்தும் இப்போது இல்லை.

ஹோபன்கேகன் பல்கலைக்கழக நிபுணர்குழு, கிரீன்லாந்தின் பெர்மாபிராஸ்ட் பகுதியில் ஒரு எஸ்கிமோ மனிதனின் சடைபிடித்த கெட்டியான ரோமத் துண்டை தோண்டி எடுத்துள்ளனர். இதனை தீவிரமாக ஆராய்ந்ததில் பல்வேறு வியப்பூட்டும் உண்மைகள் வெளிவந்துள்ளன.

இவர்கள் வாழ்ந்த காலம் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த மனித இனத்தின் கண்களும், ரோமங்களும் பழுப்பும், காவியும் கலந்த நிறமாக இருந்திருக்கிறது. உடல் தோற்பரப்பின் நிறமும் அறியப்பட்டு உள்ளது. ரோமங்கள் அடர்த்தியாக இருந்துள்ளது. அப்போதைய காலத்தில் தலை வழுக்கை இருந்திருக்காது என்று அறிய முடிகிறது.

இதுவரை நமக்கு கிடைத்துள்ள படிமங்களைவிட கூடுதல் சிறப்பம்சமாக இதன் டி.என்.ஏ. வடிவமைப்பை வரைய முடிந்துள்ளது. இதனை வைத்து அப்போதைய மனிதர்களின் பழக்கவழக்கம் முதல் பல முக்கிய உண்மைகளை அறிய முடியும்.

இதை அடிப்படையாக வைத்து கணினியில் வரைபடம் வரையப்பட்டது. இதற்கு `இனங்க்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதன் மரபணு குறியீடு வரையறுக்கப்பட்டு எஸ்.என்.பி. என்னும் நவீன தொழில்ட்பம் முலம் அந்த நாட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள 3.5 லட்சம் பேரின் மரபணுவோடு ஒப்பிட்டு ஆய்வு நடந்து வருகிறது.

கம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கணக்கில் பணத்தை சேருங்க வந்திருச்சி லேட்டஸ்ட்

“செக்’ கையெழுத்து போட்டு, அதை வங்கிக்குச் சென்று நேரில் கொடுத்து பணம் எடுக்கும் வழக்கம் காணாமல் போய்விடும். ஆம். வீட்டிலிருந்தபடியே உங்கள் “செக்’கை கம்ப்யூட்டரில் அனுப்பினால், பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். நவீன தொழில்நுட்பம், காலத்தையும் இடத்தையும் சுருக்கும் புதிய ஆயுதமாக வடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் மூலம் இருந்த இடத்தில் இருந்தபடியே வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதி வந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில், அமெரிக்க சேஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கி இரண்டும் புதுமையான ஒரு நடவடிக்கையை விரைவில் தொடங்க இருக்கின்றன. இதன்படி, நீங்கள் வீட்டிலிருந்தபடியே, உங்கள் “செக்’ கை அனுப்பி பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். எப்படி? உங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் நீங்கள் கையெழுத்திட்ட, “செக்’கை ஸ்கேன் செய்து வங்கிக்கு அனுப்ப வேண்டும். வங்கியிலுள்ள கம்ப்யூட்டர் உங்கள் வங்கிக் கணக்கு, கையெழுத்து, தொகை, யாருக்கு அனுப்ப வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களோ அவரது வங்கிக் கணக்கு இவற்றை நிமிடத்தில் சரி பார்த்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அவரது வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிவிடும்.
இந்த நடைமுறை மூலம் நேரம் மிச்சமாகிறது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், தொடர்ந்து அமெரிக்காவில் வங்கி நடைமுறைகள் குறிப்பாக, “செக்’ பரிமாற்றம் மிகவும் சிக்கலான நிலைக்கு உள்ளானது. அதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, 2003ல் அமெரிக்க செனட் சபையில், “செக்’ பரிமாற்றம் குறித்த விதியில் சில மாற்றங்கள் செய்து, “செக் 21′ என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. அது, போட்டோ வடிவிலான “செக்’கை ஏற்றுக் கொள்ள வழி வகை செய்தது.
இதன் பிறகு, பல நிறுவனங்கள், ஸ்கேனிங் கருவிகளை நிறுவ ஆரம்பித்தன. இருந்தாலும் இந்த புதிய தொழில்நுட்பத்தை மொபைல் போனில் கொண்டு வருவதற்கு சில தடைகள் உள்ளன. குறிப்பாக கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் போது, நெட் திருடர்கள் லவட்டி விடுவார்களோ என்ற அச்சம் இருக்கிறது. அதேபோல், மொபைலிலும் நெட் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி விட வாய்ப்புகள் இருப்பதால், அதைத் தடுக்க, புதிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

கூகுள் BUZZ சில டிப்ஸ்கள்

வெகு சுவராஸ்யமாக இருப்பதால் ஜிமெயில் பயன்படுத்தி வருகிற பலரும் BUZZ பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். லேட்டஸ்ட் சோஷியல் தளமாக இந்த BUZZ முயற்சி பேசப்படுகிறது. உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இது நிச்சயம் மாறப் போகிறது. இதனைப் பயன்படுத்தத் தொடங்கி, புதிய அனுபவம் பெற்று வரும் உங்களை, அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்ல கீழ்க்காணும் டிப்ஸ்கள் தரப்படுகின்றன. இதன் மூலம் உங்களுடைய BUZZ களை இன்னும் எளிதாக உங்களால் கையாள முடியும்.
ஜிமெயில் BUZZகள் தனி இடம் : BUZZ பயன்படுத்தும் என் மாணவர்கள் சிலர், BUZZ இன்பாக்ஸில் இருப்பது, அதன் முக்கியத்துவத்தினைக் குறைக்கிறது. மேலும் ஜிமெயில் இன்பாக்ஸில் மற்ற மெயில்களுடன் BUZZ கலந்திருப்பது, இன்பாக்ஸ் தன்மையையும் மாற்றுகிறது என்று கூறினார்கள். அது ஓரளவிற்கு உண்மை என்றே பட்டது. மெயில் மற்றும் BUZZ குணாதிசயங்கள் வெவ்வேறாக இருக்கும் போது, ஏன் இரண்டும் கலந்து வர வேண்டும் என்ற எண்ணத்துடன் ஜிமெயில் கட்டமைப்பில் தேடிய போது இதற்கு ஒரு வழி கிடைத்தது.
ஜிமெயில் இன்பாக்ஸில் பல பிரிவுகளை உண்டாக்கும் வசதி உள்ளது. இந்த பிரிவுகளை உண்டாக்கி நாம் மெயில்களை அனுப்பியவர்கள் வாரியாக, தன்மை வாரியாகப் பிரித்து வைக்கலாம். இதைப் பார்த்த பின் BUZZ களுக்கென இரண்டு பிரிவுகளை உண்டாக்கலாம் என்று தோன்றியது. ஒன்று நீங்கள் அமைக்கும் BUZZகளுக்காக; மற்றொன்று பிறரிடம் இருந்து கிடைக்கும் BUZZகளுக்காக. இதனை எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட மெயில்பாக்ஸ்களை எப்படி அமைப்பது என்றும் அறிந்து கொள்ளலாம்.
1. முதலில் ஜிமெயில் லேப்ஸ் (Gmail Labs) திறந்து கொள்ளுங்கள். வலது மேல் மூலையில் பச்சை நிறத்தில் சிறிய பீக்கர் உருவம் ஒன்று இருக்கிறதா? அதுதான் லேப்ஸ் தரும் உருவமாகும். கிடைக்கும் பிரிவில் Multiple Inboxes என்று இருப்பதனை இயக்கவும். பின் அந்தப் பக்கத்தின் கீழாகச் சென்று “save changes”என்று இருப்பதில் அழுத்தவும்.
2. மீண்டும் இன்பாக்ஸ் (Inbox) வந்து அதில் லேப்ஸ் ஐகானுக்கு அருகே உள்ள Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு “Multiple Inboxes” என்று இருப்பதைப் பார்க்கலாம்.
3. இதில் “Pane 0” என்று இருப்பதில் is: My Buzzes என டைப் செய்திடவும். பின் “Panel title (optional)” என்று இருக்கும் இடத்தில் “My Buzzes” என டைப் செய்திடவும்.
4.பின் “Pane 1” என்று இருப்பதில் “My Buzzes” என டைப் செய்திடவும். பின் “Panel title (optional)” என்று இருக்கும் இடத்தில் “ஆதத்த்ஞுண்” என டைப் செய்திடவும்.
5. இனி ஒவ்வொரு பாக்ஸிலும் கான்வர்சேஷன் (மெயில் மெசேஜ்) எத்தனை இருக்க வேண்டும் எனத் தரவும். மொத்த இன்பாக்ஸில் இந்த பிரிவு எங்கு இருக்க வேண்டும் என்பதனையும் காட்டவும்.
6. அடுத்து “save changes” என்பதனை அழுத்தவும். இனி உங்களுக்கு வரும் Buzzகள் இன்பாக்ஸின் தனிப்பிரிவில் வருவதனைப் பார்க்கலாம். இவை உங்களுடைய மொத்த பொதுவான இன்பாக்ஸை மறிக்காமல் இருப்பதனையும் காணலாம்.
லேபிள்கள்: ஜிமெயில் இன்பாக்ஸில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் அமைப்பதாக இருந்தால் மட்டுமே இது உங்களுக்குப் பயன்படும். (ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகள் எப்படி அமைப்பது என்பது குறித்து மேலே விளக்கக் குறிப்புகள் தரப்பட்டுள்ளன).
இங்கு என்ன என்ன லேபிள்கள் உருவாக்க வேண்டும் என்று பார்க்கலாம். My Buzzes மற்றும் Buzzes என இரண்டு லேபிள்கள் உருவாக்கவும். இவற்றை உருவாக்க, உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் மேலாக Labels என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின் Manage Labels என்பதைத் தேர்ந்தெடுக் கவும். பின் கீழாகச் சென்று டெக்ஸ்ட் என்டர் செய்வதற்கான பாக்ஸ் ஒன்று Create a New Label என்று இருப்பதைக் காணவும். இங்கு ஒன்றன் பின் ஒன்றாக மேலே சொன்ன இரு லேபிள்களையும் டைப் செய்திடவும். பின் Create என்பதில் கிளிக் செய்திடவும். இனி உங்கள் இன்பாக்ஸுக்குச் செல்லவும். இனி அடுத்த இரண்டாம் கட்ட நடவடிக்கையில் இறங்கலாம்.
ஜிமெயில் இன்பாக்ஸில் Buzz வேண்டாமா? மூன்று வகையான Buzzகள் உங்கள் ஜிமெயில் இன்பாஸ்க்குத் தானாக அனுப்பப்படும். முதலாவதாக, நீங்கள் உருவாக்கிய Buzz கள். இரண்டாவதாக நீங்கள் உருவாக்கிய மெசேஜ் குறித்து இன்னொருவர் கமெண்ட் அமைக்கும் போது. மூன்றாவதாக நீங்கள் கமெண்ட் அமைத்த Buzz மீது இன்னொருவர் கமெண்ட் அமைக்கும் போது அல்லது யாரேனும் ஒருவர் ரிப்ளை சிஸ்டம் மூலம் உங்களை குறித்து இழுக்கும்போது.
கூகுள் இவற்றை எல்லாம் ஏன் உங்களின் இமெயிலுக்கு அனுப்புகிறது என்றால், நீங்கள் உருவாக்கிய அல்லது கலந்து கொண்ட ஆதத்த்கள் குறித்து புதிய செய்திகள் தரப்படும்போது, நீங்கள் அவற்றை அறிய விரும்புவீர்கள் என்று கூகுள் எண்ணுகிறது. ஆனால் இந்த அறிவிப்புகள் உங்களுக்கு எரிச்சலைத் தருவதாக உணர்ந்தால், கூகுள் அனுப்பாமல் இருக்க எந்தவித ஆப்ஷனையும் தரவில்லை. நீங்களே ஜிமெயில் பில்டர் அல்லது லேபிள் பயன்படுத்தி இவற்றைத் தள்ளி வைக்கலாம்.
உங்கள் Buzz களை வடிகட்டலாம்: உங்களுக்கு வரும் Buzzகளில் எவை உங்களுக்குத் தேவை என, வரும்போதே வடிகட்டி வைக்கும் வசதியை கூகுள் தருகிறது. உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குச் செல்லுங்கள். அந்தப் பக்கத்தின் மேலாக, “Search the Web” பட்டனை அடுத்து Create a Filter என்று ஒரு வரி இருக்கும். இதில் டபுள் கிளிக் செய்திடுங்கள். இதில் “From” பிரிவில் உங்களுடைய பெயரை டைப் செய்திடவும். அடுத்து “Has the words” என்ற பாக்ஸில் “label:buzz” என டைப் செய்திடவும். அடுத்து “Next step” என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ஒருவேளை ஒரு எச்சரிக்கை வரலாம். இது வழக்கத்திற்கு மாறானது (unusual step) என்ற செய்தி கிடைக்கலாம். அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஓகே கிளிக் செய்திடவும்.
இதே பக்கத்தில் Apply the label என்ற ட்ராப் டவுண் மெனுவில் “My Buzzes” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து இத்தகைய ஆதத்த் அறிவிப்புகளை ஜிமெயில் என்ன செய்திட வேண்டும் என நீங்கள் முடிவெடுத்து செயல்படலாம். Skip the inbox A�x Mark as read என்பது போன்ற எதனை வேண்டுமென்றாலும் தேர்ந்தெடுக்கலாம். என்னைக் கேட்டால் Skip the inbox தான் இதற்குச் சரி. இவற்றைப் படிக்க வேண்டும் என்றால் ஜிமெயிலின் இடது பக்கம் உள்ள “All mail” என்பதில் கிளிக் செய்து படித்துக் கொள்ளலாம்.
அடுத்து “Also apply filter to…” என்பதில் செக் செய்திடவும். பின் “Create filter” பட்டனை அழுத்தவும். அவ்வளவுதான், உங்கள் வடிகட்டி இனி BUZZ மெயில்களை நீங்கள் குறிப்பிட்டுள்ள வகையில் ஓரம் கட்டி வைக்கும்.
மற்றவர்களின் Buzz களை வடிகட்ட: இந்த இரண்டாவது பில்டருக்கு, ஏற்கனவே மேலே ஐந்தில் முதல் பத்தியில் கூறியுள்ளபடி செய்திடவும். ஆனால் உங்கள் பெயருக்கு முன் ஒரு மைனஸ் (–) அடையாளம் ஏற்படுத்தவும். அடுத்தபடியாக “Buzzes” என்னும் லேபிளை அடையாளம் காட்டவும். பின் ஏற்கனவே காட்டியபடி பில்டர் ஆப்ஷன்ஸ் ஏற்படுத்தவும். அவ்வளவுதான்! உங்கள் விருப்பப்படி “Buzzes” எல்லாம் வகை செய்யப்பட்டு உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் ஒதுங்கி பதுங்கிக் கொள்ளும்.

இலவச ‘சூரிய’ மின் சக்தி : தயாராகுமா தமிழகம்

இயற்கை இலவசமாக வழங்கும் அபரிமிதமான சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்திக்கொள்ள, மத்திய மற்றும் மாநில அரசுகள், அடிப்படையாக உள்ள பிரச்னைகளைகளைய வேண்டும் என்று தடையில்லா மின்சாரம் பெற விரும்புவோர் தெரிவிக்கின்றனர்.

நேஷனல் சோலார் மிஷன் : கடந்த ஆண்டு, நவம்பரில், ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தை, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைத்தார். இத்திட்டம், மூன்று கட்டமாக அமல் செய்யப்படும். முதல் கட்டமாக, 2010 – 2013 ஆண்டுகளில் 1000 மெ.வா., மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த இலக்கில், தமிழகம் தனக்குரிய பங்கினை பெற, சூரியஒளி மின் உற்பத்தியில் முதலீடு செய்ய விரும்பு வோருக்கு, தடையாக உள்ள அம்சங்களை நீக்க தமிழக அரசு முன் வர வேண்டும். ஜவகர்லால் நேரு நேஷனல் சோலார் மிஷன் கொள்கையின்படி, தேசிய அனல் மின் உற்பத்தி கழக, வியாபார அங்கமான என்.வி.வி.என்., (என்.பி.டி.சி., வித்யூத் வியாபார் நிகாம் லிமிடெட்) எனும் அமைப்புதான் தற்போது, சூரிய ஒளி மின் உற்பத்தியை விலை கொடுத்து வாங்கவும், அதை மாநில அரசுகளுக்கு, விற்கவும் உள்ள அதிகாரப்பூர்வ ஏஜன்சியாக செயல் படுகிறது.

இந்த அமைப்புதான், சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்களின் தகுதிகளை முடிவு செய்து, அவர்களிடம், 25 ஆண்டு மின்சாரம் பெற்றுக்கொள்ள ஒப்பந்தம் செய்து கொள்ளும். அத்துடன், மின் உற்பத்திக்கு ஏற்ப பணத்தையும் நேரடியாக வழங்கும்.தற்போது, மாநிலங்களில் உள்ள, மின் உற்பத்தி தொடர்பான எந்த துறைக்கும், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் உள்ள பங்கு தெரிவிக்கப்படவில்லை.சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தனியாரிடம் பெற்றுக் கொள்ளும் என்.வி.வி.என்., அதை தன்னிடம் உள்ள, ஒதுக்கப்படாத அனல் மின்சார தொகுப்பிலிருந்து மின்சாரத்தை இணைத்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும், ஒரு யூனிட்டுக்கு 5.50 ரூபாய் விலையில் வினியோகிக்க திட்டமிட்டுள்ளது. 5.50 ரூபாய்க்கு ஒரு யூனிட் மின்சாரம் பெற்றுக் கொள்வது எளிதானது என்பதால், மாநில அரசுகள் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வதில் கண்டிப்பாக ஆர்வம் காட்டும்.

3 சதவீத கட்டாயம் : ஒவ்வொரு மாநிலமும், அம் மாநிலங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் மொத்த அளவில் மரபு சாரா மின் சக்தியை குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே மாநில அரசுகளுடன் மத்திய மின்சார ஒழுங்கு முறை கமிஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு ஆர்.பி.ஓ., (ரெனியூவல் பர்ச்சேஸ் ஆப்ளிகேஷன்) என்று பெயர்.தமிழகத்தில் ஏற்கனவே, 4,500 மெ.வா., மின்சாரம், காற்றாலை மூலம் கிடைப்பதால், நிர்ணயிக்கப்பட்ட ஆர்.பி.ஓ., எளிதாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.ஆனால் இந்நிலை இனிமேலும் தொடராது. நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின்படி 2010ல், ஒவ்வொரு மாநிலமும், தான் பயன்படுத்தும், மொத்த மின்சாரத்தில், 0.25 சதவீதம் சூரிய ஒளி மின்சாரமாக ஆக இருப்பது கட்டாய மாக்கப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும் 0.25 சதவீதம் அதிகரித்து, 2022ல் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 3 சதவீத அளவுக்கு சூரிய ஒளி மின்சாரமாக இருக்க வேண்டும் என்று ஆர்.பி.ஓ., நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் காற்றாலை உள்ளிட்ட மற்ற மரபுசாரா மின் உற்பத்தி கணக்கில் வராது.தமிழக அரசின், தற்போதைய மின் பயன்பாட்டின்படி, குறைந்தது 50 மெ.வா., மின்சாரமாவது 2010ல் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே மூன்று இடங்களில் அனல் மின்நிலையங்களின் விரிவாக்கப் பணிகள், நடைபெற்று வருகின்றன. அவற்றையும் சேர்த்தால் 2011ல் மேலும் 50 மெ.வா., மின்சாரம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஆர்.பி.ஓ., வரையறையின்படி சூரிய ஒளி மின் உற்பத்தியை மாநில அரசுகள் செய்யாவிட்டால், மத்திய அரசு எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்பது கேள்விக்குறியே. எனினும், மத்திய அரசின் சலுகைகள் பறிபோகும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.

கோபன்ஹேகன் சுற்றுச்சூழல் மாநாட்டில் தனி ஆவர்த்தனம் பாடிவிட்டு வந்துள்ள இந்தியா, சில கட்டுப் பாடுகளை, உறுதியாக எடுக்க வாக்குறுதி கொடுத்திருக்கிறது. அதன்படி 2020ம் ஆண்டில், ஒவ்வொரு மாநிலமும் மொத்த மின்சார பயன்பாட்டில் 3 சதவீதம் சூரிய ஒளி மூலம் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தின் படி, சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க விண்ணப்பங்கள் இன்னும் கோரப்படவில்லை. எனினும் விண்ணப்ப தாரர்கள் தகுதி நிர்ணயித்து, என்.வி.வி.என்., பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, முதலாவதாக, சூரியஒளி மின் திட்டத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 33 கே.வி., திறன் கொண்ட மின்கிரிடுகள் மூலமாகத் தான் கொண்டு செல்ல வேண்டும். இரண்டாவதாக, விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது அதன் இயக்குனர்களின் மதிப்பு (நெட் வொர்த்), ஒரு மெகா வாட்டுக்கு குறைந்தது மூன்று முதல் ஐந்து கோடி ரூபாய் கொண்டிருக்க வேண்டும்.மூன்றாவதாக, “சோலார் போட்டோ வோல்டிக்’ முறையில் மின் உற்பத்தி செய்ய இந்தியாவில் தயாரிக்கப்படும் பேனல் களையே உபயோகிக்க வேண்டும்.இவற்றில், முதல் மற்றும் மூன்றாவது விதிமுறைகள் சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களுக்கு முட்டுக்கட்டை களாக அமைந்துள்ளன.


தமிழக அரசு செய்யுமா?தமிழகத்தில், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் மாவட்டங்கள் தான் சூரிய ஒளி மின் உற்பத் திக்கு ஏற்ற மாவட்டங்கள் என்று கருதப் படுகின்றன.ஒரு மெ.வா., சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க, குறைந்தது 4.5 ஏக்கர் தேவைப்படும். நகருக்கு வெளியே கிராமங்களில்தான் இந்த இடம் கிடைக்கும். அங்கு தான் இட மதிப்பு குறைவாக இருப்பதால், திட்டம் வர வாய்ப்புள்ளது. தமிழகத்தில், சில இடங்களைத் தவிர, கிராமப்பகுதியில் 33 கே.வி., திறன் கொண்ட மின் கிரிடுகளோ அல்லது அதற்கேற்ற துணை மின்நிலையங்களோ இல்லை. இவை அதிகமாக, 11 (22/11) அல்லது 22 கே.வி., (110/22) துணை மின் நிலையங்களில் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் பெறும் கிரிடுகளை, 110/33 கே.வி., அல்லது அதற்கு அதிக திறன் கொண்ட துணை மின் நிலையங்களாக மாற்ற தமிழக அரசு முன் வர வேண்டும். குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் மேற்கூறிய திறன் கொண்ட ஒரு துணை மின் நிலையம் கூட இல்லை. இவ்விஷயத்தை, போர்க்கால அடிப்படையில், செய்தால்தான் தேசிய திட்டத் தின் பயனை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மற்ற மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், குறிப்பாக, குஜராத், கர்நாடகா மாநிலங் களை சேர்ந்த மின் உயர் அதிகாரிகள், நேஷனல் சோலார் மிஷன் திட்டத்தில் அதிகப் பங்குகளை கொண்டு வர டில்லியில் முயற்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் மின்துறை உயர் அதிகாரிகள் அதிக ஆர்வம் கொண்டிருந் தாலும், தமிழக அரசு சூரிய ஒளி மின் சக்தி குறித்து, கொள்கை ரீதியாக தெளிவான முடிவை இன்னும் எடுக்காததால், தமிழக அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன.காற்றாலை திட்டத்தில், பல மட்டத்தில் அதிகாரிகள் உதவி செய்வதில்லை. காற்றாலையிலிருந்து மின்சாரத்தை கொண்டு செல்லும் கிரிடுகளை உற்பத்தி யாளர்களே அமைக்க வேண்டும் என்றும், கட்டுமான வளர்ச்சிக் கட்டணம் என்ற தொகையை கட்டவேண்டும் என்றும் மின் வாரியம் வலியுறுத்தி வந்தது.

இதுதொடர்பான வழக்கில் மின்சாரத் துறைக்கு சாதக மாக தீர்ப்பானது. இதன் பலனாக, தமிழக மின் வாரியத்துக்கு 300 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்துள்ளது. அதே போல், சூரிய ஒளி மின் உற்பத்தி யாளர்கள், மின்கிரிடுகள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மின் துறை யிலுள்ள சில அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் மின் வாரியம் செலவு செய்ய வேண்டாம் என்று பார்க் கிறார்களே தவிர, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க காற்றாலையை விட மூன்று பங்கு அதிக முதலீடு செய்ய வேண்டி யுள்ளது என்பதை யோசிக்க மறுக்கிறார்கள். நீண்டகால முதலீடு கொண்ட இத் தொழிலில், நிறைய முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் அதிகாரிகள் திட்டமிட வேண்டும். 365 நாட்களிலும் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சூரிய ஒளி மின் திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும்.

அத்துடன், சூரிய ஒளி மின் திட்டங்கள் மட்டுமே, அனைத்துப் பகுதியிலிருந்தும் மின்சாரம் தயாரிக்க முடியும் வாய்ப்பைக் கொண்டிருக்கிறது. அனல், புனல், அணு மின் நிலையங்களை எல்லா இடத்திலும் அமைக்க முடியாது. பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தித் திட்டம் சூரிய ஒளி மின் திட்டத்தில் மட்டுமே சாத்தியம். எனவே, எதிர்காலத்தில் தமிழகத்தில் அனைத்து பஞ்சாயத்துகளுமே, சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப் புள்ளது. அவ்வாறு அமையும் பட்சத்தில் மின் வினியோகத்தில், உள்ள இழப்பை தவிர்க்க முடியும். தமிழகத்தில் பற்றாக்குறை 10-12 சதவீதமும், மின் வினியோக இழப்பு 18-20 சதவீதமும் உள்ளது. காற்றாலைகளைப்போல் மின் கிரிடுகளை முதலீட்டாளர்களே அமைத்துக் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தினால், இந்த திட்டம் ஆரம்பித்ததன் நோக்கமே போய்விடும். அத்துடன், பிற திட்டங்களைப் போல் இத்திட்டமும், வெற்றியடையாமல் வெறும் காகிதத்திலேயே முடிந்துவிடும்.

சூரிய ஒளி மின்உற்பத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, துணை மின் நிலையங்களின் மின் திறனை, 33 கே.வி.,யாக திறன் உயர்த்த தமிழக அரசு உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகளைப் போல், என்.வி. வி.என் விதித்துள்ள இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று தமிழக அரசும் கோரிக்கை வைக்க வேண்டும்.ஏற்கனவே தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, தமிழகத்தில் 100 மெ.வா. சூரிய ஒளி மின் உற்பத்தியை ஆரம்பிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத் திருந்தார். கடந்த வாரம், தமிழக அரசின் சார்பாக மின்துறை செயலாளர், தேசிய சோலார் மிஷனில் தமிழகத்துக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கடிதம் எழுதி யுள்ளார். ஆகவே சூரிய ஒளி மின் உற்பத்தி அவசியம் என்று தமிழக அரசு கருதுகிறது. அது பாராட்டுக்குரியது. அதற்கான அடிப்படை கட்டுமான தேவையை பூர்த்தி செய்யும் பணியிலும், காற்றாலைக்கு சில அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை போல்இதற்கும் போடுவதை தவிர்க்கவும், தமிழக அரசு, முழுமூச்சில் முயற்சி செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால், நேஷனல் சோலார் மிஷனை விடுத்து, குஜராத் போல், தமிழக அரசும், தங்களுக்கென்ற தனி சூரிய ஒளி மின் உற்பத்தி கொள்முதல் திட்டத்தை வகுக்க வேண்டும். தமிழக மின்வாரியமே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். வெண்ணெய் இருக்க, நெய்க்கு அலைந்த கதையாய், இலவசமாக கிடைக்கும், சூரிய ஒளியை பயன்படுத் தாமல், மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய அவதிப்படக்கூடாது. தமிழகத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும், தடையில்லா மின்சாரம் கிடைக்கக்கூடிய தமிழகத்தை ஒளிரச் செய்ய தமிழக அரசும், அதிகாரிகளும் உடனே களத்தில் இறங்க வேண்டும்.

கோடைகாலம்… வரப்போகிறது தேர்தல்…:நம் வாக்காளர்கள், கடைசி நேரத்தில் எடுக்கும் முடிவுகளால் ஆட்சியை மாற்றி விடுவார்கள் என்பது நாம் பழைய தேர்தல் களிலிருந்து படித்த பாடம். அடுத்த ஆண்டு, தமிழக சட்டசபை தேர்தல் கோடை காலத் தில் தான் வரப்போகிறது. அப்படியானால், மின்வெட்டின் போது, மக்கள் ஓட்டுப் போடப்போகிறார்கள் என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.கோடை காலத்தில் 10 ரூபாய் அதிகம் கொடுத்து, டீசல் மின் உற்பத்தியாளர் களிடமிருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை வாங்கிச் சமாளித்துக் கொள்ளலாம் என்று, பழைய பாணியில் அதிகாரிகள் அரசுக்கு யோசனை தெரிவித்து வருகின்றனர். ஆனால், அது சமயத்தில் வீடு களுக்கு மட்டுமே மின்சாரம் வினியோகிக்க முடியும்.

தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்க முடியாது.கடந்த பார்லிமென்ட் தேர்தலின் போது, தொழில் மாவட்டங்களான கரூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய பகுதி களில் தி.மு.க.,வுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு வர இருக்கும் தேர்தலுக்குள் பெரிய மின் திட்டத்தை கொண்டு வருவது கடினம். எந்த ஒரு மின்திட்டத்தையும் அமைக்க குறைந்தது 5-7 ஆண்டுகள் ஆகும். ஆனால் சூரிய ஒளி மின்திட்டத்தை மட்டுமே ஓர் ஆண்டுக்குள் அமைத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்துக்கு பிற மாநிலங்களைப்போல் தமிழகமும், 13-16 ரூபாய் வரை அளித்து 10 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்தால், ஒரு பஞ்சாயத்துக்கு 2 மெ.வா., வீதம் 600 மெ.வா., உற்பத்தி செய்யலாம். இல்லா விட்டால் தேர்தல் நேரத்தில் எழும் மின் வெட்டுப் பிரச்னையின் போது, வாக்காளர் களின் கோபத்தை சந்திக்க நேரிடும். அண்ணா சாலையில் சட்டசபை வளாகத்தை கட்டியதாலோ, அண்ணா பல்கலை., நூலகம் அமைத்ததையோ மக்கள் சாதனையாக ஏற்க மாட்டார்கள். அதை கடமையாகவே கருதுவார்கள். மின் பற்றாக் குறையை உணர்ந்து, உடனடியாக நிறுவக் கூடிய சூரிய ஒளி மின் திட்டத்துக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

எது சிக்கனம்…சிந்திக்குமா அரசு…: தமிழகத்தில் இன்னும் இரு ஆண்டு களில், அனல் மின்நிலைய விரிவாக்கத்தில் 3 ஆயிரம் மெ.வா., மின் உற்பத்தி செய்ய, மின் வாரிய அதிகாரிகளும் நிதித்துறை அதிகாரி களும் திட்டமிட்டு வருவதால், சூரிய ஒளி மின் திட்டத்துக்கு உள்கட்டமைப்புக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கருதுகிறார்கள்.இந்த மின் உற்பத்தியால், தமிழகத்தில் மின் தேவையை சமாளிக்க முடியும் என்று கருதும் அவர்கள், சூரிய ஒளி மின் திட்ட உள்கட்டமைப்புப் பணிகளை மின்சார வாரியம் செய்ய வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.அவர்களின் கணக்குப்படி, 4 ரூபாய்க்கு அனல் மின் நிலையம் மூலம் ஒரு யூனிட் மின்உற்பத்தி செய்ய முடியும். ஆனால், 3 ஆயிரம் மெ.வா., மின்சாரத்துக்கு இதுவரை அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும். அதுமட்டுமல்ல, இந்த கணக்கில் வராத செலவினங்களும் உண்டு. இம்மின்சாரத்தை கொண்டு செல்லும் பாதையில் உள்ள கிரிடு மற்றும் துணை மின் நிலைய திறன் கூட்டுவதற்கான செலவை உற்பத்தியில் சேர்ப்பதில்லை. இவையெல்லாம் அரசின் பட்ஜெட் செலவினங்களில் மட்டுமே வருகின்றன.

மேலும், தற்போது கிடைக்கும், நிலக்கரி, தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள தனியார் சுரங் கங்கள் அதிக விலை கொடுப்பவர்களுக்கு நிலக்கரியை விற்பதால், நமக்கு தொடர்ந்து நிலக்கரி கிடைப்பது நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. இதனால் தேவைக்கு அதிகமாக, நிலக்கரியை சேமித்து வைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த செலவினங்கள் எல்லாம் அவர்கள் உற்பத்தி செலவில் கணக்கில் சேர்த்துப் பார்ப்பதில்லை.மேலும், தரமான நிலக்கரி இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பின் கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. நிலைமை இவ்வாறு இருக்க, முதலீடு செய்ய வருபவர்களை பிற மாநிலங்கள் போல், ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். தனியாரே முதலீடு செய்து மின் உற்பத்தி செய்ய வழிவகுப் பதே எந்த புத்திசாலி அரசும் செய்யும் பணியாகும்.

தனி வழியில் செல்லுமா தமிழகம்…:சோலார் நேஷனல் மிஷன் திட்டத்தின் படி, தற்போது 2010-13ம் ஆண்டுக்குள் 1000 மெ.வா., சூரிய ஒளி மின் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் 500 மெ.வா., சோலார் போட்டோ வோல்டிக் வழியா கவும், 500 மெ.வா., சோலார் தெர்மல் வழியா கவும் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப் பட்டுள்ளது.உலக அளவில்,சூரிய ஒளி மின் உற்பத்தியில் சோலார் தெர்மல் வழி உற்பத்தி 1 சதவீதம் மட்டுமே. இதற்கு ஏன் 50 சதவீத பகுதியை ஒதுக்கீடு செய்தார்கள் என்பது தெரியவில்லை. இதனால்தான் என்னவோ, குஜராத் அரசு அவர்களுக்கு என்று தனியாக திட்டத்தை வகுத்துக் கொண்டார்கள். சூரிய ஒளி மூலம் மின் சக்தி உற்பத்தி செய்பவர்களுக்கு குஜராத் அரசு நேரடியாக ஒப்பந்தம் செய்து 25 ஆண்டுக்கு மின்சாரம் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது.தமிழக அரசும் இதேபோல் ஒரு திட்டத்தை வகுத்தால்தான், இலவசமாக கிடைக்கும் சக்தியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.தமிழகத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமையில் (டெடா) இவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பம் செய்துள்ள நிறுவனங்களில் பல சூரிய ஒளி மின் உற்பத்தி பற்றி அறிந்திருக்கிறார்களா என்றே தெரியவில்லை.

இந்தியாவில் சூரிய ஒளி மின் உற்பத்தி துவங்கி இன்னும் 2 மாதம் கூட ஆகவில்லை. இதன்மூலம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் உற்பத்தி செய்யமுடியுமா? இந்தியாவில் உள்ள சூழ்நிலையில் சோலார் பேனல்கள் எத்தனை ஆண்டு உழைக்கும். தேய்மானத் தால் எத்தனை சதவீத உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதையெல்லாம் இந்திய சூழ்நிலையில் யாரும் அறிந்திருக்கவில்லை. இதைப்பற்றி அறியாமல், அரசு தருகிறது என்று இறங்கினால், கோடிக்கணக்கில் செய்யும் முதலீடு கேள்விக்குறி ஆகிவிடும். இந்தியாவில் இந்த தொழில்நுட்பம் அனுபவம் உள்ளவர்கள், டெக்னீசியன் உள்ளிட்டோர் விரல் விட்டு எண்ணும் அளவில்தான் உள்ளனர். வெறும் பத்திரிகை செய்தியை நம்பி இறங்குவோருக்கு இத்துறை பெரிய சவாலாக அமையும். புதிதாக துவங்க விரும்பும் நிறுவனங்கள் ஒரு சில ஆண்டுகள் காத்திருந்து துவங்குவதே அறிவுப்பூர்வமான செயல்.