உடல் ஆரோக்கியம் காக்கும் பேல்பூரி

நோ ஆயில், நோ பாயில் என்பதே மெட்ராஸ் பேல் பூரி யின் சாப்பாட்டு மந்திரம். வயிறு முட்ட வடித்து வைத்த அரிசி உணவுகளை சாப்பிட்டே பழகிய நமக்கு அதிசயிக்கும் வகையில் பச்சை காய்கறிகளை பதமாய் படையல் வைக்கிறார்கள் இவர்கள். பளபளக்கும் பழ வகைகளை பக்குவமாய் ருசி பார்க்க சொல்லி தருகிறார்கள் இவர்கள்.
சென்னை பாண்டிபஜாரில் 34 ஆண்டுகளுக்கு முன்னால் சாதரண தள்ளுவண்டியில் லிங்கம் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புட் இன்றைய உடல் ஆரோக்கியத்திற்கு போட வைக்கும் பெயர் வெரிகுட்.
தஞ்சைக்காரர் லிங்கம் சாதாரண ஒரு விவசாயி.பிழைப்பு  தேடி  வந்தவர். பரபரப்பாக இயங்கும் சென்னை வாழ்க்கையில் சாப்பாடு என்பதே நஞ்சாக மாறுவதை நினைத்து மனம் பதைபதைத்தார். நாலு பேருக்கு நல்ல சாப்பாட்டை செய்து கொடுத்தால் என்ன? என்று ஒரு க்ரீன் பல்ப் எரிந்திருக்கிறது இவரது மூளையில். உடனே உள்ளூர் காய்கறிகளையே உணவாய் உட்கொள்ளும் பழக்கத்தை பரப்ப ஆரம்பித்தார். உள்ளூர் வாசிகள் இவரது உணவே மருந்தாக திட்டத்திற்கு சரியாக தீனி போட ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நல்ல செய்தி மூன்று தலைமுறை வாடிக்கையாளர்களை சம்பாதித்து கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. அப்புறம் என்ன? அமோக பிஸினெஸ். சூடு கிளப்ப தொடங்கி விட்டது. இன்று இந்த கடையை அவரது மகன் ராஜா இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்து சென்று கேட்டரிங் படித்த மாணவர்களை வைத்து அதிரடி அந்தஸ்துக்கு உயர்த்தி இருக்கிறார்.
மெட்ராஸ் பேல் பூரியின் பெருமையை உணர்ந்து பல ஆங்கிப பத்திரிகைகள் பளீச் வெளிச்சம் வழங்கி இருக்கின்றன. ஆந்திர பத்திரிகைகள் கூட இதை அறிமுகப்படுத்தி எழுதிஇருக்கின்றன. இன்று ஏரியா தாண்டி ஏகப்பட்ட கஸ்டமர்கள் காத்து நிற்கிறார்கள். கடைக்கு முன்னால். கோவை பழத்தோட்டங்களிலிருந்து நாங்களே காய்கறி பழங்களை நேரடி கொள்முதல் செய்கிறோம் என்றார் ராஜா.
பழங்களையும், காய்கறிகளையும் வைத்து இவர்கள் செய்யும் உணவு வகைகள் ஏறக்குறைய அறுபதை தாண்டுகிறது. எந்த பண்டமும் அதிகபட்சமாக 24 ரூபாய் தான். இவர்களின் ஸ்பெஷல் ஐட்டம் என்று பார்த்தால் பேல்பூரி. அதற்கு அடுத்து அதிகமாக மூவ் ஆவது வெஜ் சாலட் எல்லாமே யூஸ் அண்ட் த்ரோ வடிவில் பேக் செய்து பரிமாறப்படுவதால் இன்னொருவர் தட்டை இன்னொருவர் தொடக்கூட வாய்ப்பில்லை. சுத்தம், சகாதாரம் என்பது ஒட்டிப்பிறந்த ரெட்டை குழந்தைகள் என்பதால் இவரது கடைக்கு தனுஷ், சரத்குமார், அர்ஜுன், விசு, டான்ஸ் மாஸ்டர் கலா, விஜயகாந்த், எஸ்.வி.சேகர் என்று பல சினிமா பட்டாளங்கள் படை எடுத்து வந்து போகிறார்கள்.
பேல்பூரி செய்முறை: கேரட், வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, கொத்தமல்லி தழை இவற்றை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின் எலுமிச்சை சாறு, உப்பு, குறுமிளகுத்துள், பொதினா சட்னி, பேரீச்சை சட்னி, ஓமப்பொடி, பொரி, மிக்ஸர் இவற்றை எல்லாம் தேவைக்கு ஏற்ப ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்தால் பேல் பூரி தயார். பச்சை பழங்களையும் காய்கறிகளையும் ருசியாக சாப்பிட இந்த வழியே சிறந்தது என்பதால் இந்த ஐட்டத்திற்கு ஏகப்பட்ட மவுசு.

%d bloggers like this: