கம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கணக்கில் பணத்தை சேருங்க வந்திருச்சி லேட்டஸ்ட்

“செக்’ கையெழுத்து போட்டு, அதை வங்கிக்குச் சென்று நேரில் கொடுத்து பணம் எடுக்கும் வழக்கம் காணாமல் போய்விடும். ஆம். வீட்டிலிருந்தபடியே உங்கள் “செக்’கை கம்ப்யூட்டரில் அனுப்பினால், பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். நவீன தொழில்நுட்பம், காலத்தையும் இடத்தையும் சுருக்கும் புதிய ஆயுதமாக வடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் மூலம் இருந்த இடத்தில் இருந்தபடியே வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதி வந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில், அமெரிக்க சேஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கி இரண்டும் புதுமையான ஒரு நடவடிக்கையை விரைவில் தொடங்க இருக்கின்றன. இதன்படி, நீங்கள் வீட்டிலிருந்தபடியே, உங்கள் “செக்’ கை அனுப்பி பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். எப்படி? உங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் நீங்கள் கையெழுத்திட்ட, “செக்’கை ஸ்கேன் செய்து வங்கிக்கு அனுப்ப வேண்டும். வங்கியிலுள்ள கம்ப்யூட்டர் உங்கள் வங்கிக் கணக்கு, கையெழுத்து, தொகை, யாருக்கு அனுப்ப வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களோ அவரது வங்கிக் கணக்கு இவற்றை நிமிடத்தில் சரி பார்த்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அவரது வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிவிடும்.
இந்த நடைமுறை மூலம் நேரம் மிச்சமாகிறது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், தொடர்ந்து அமெரிக்காவில் வங்கி நடைமுறைகள் குறிப்பாக, “செக்’ பரிமாற்றம் மிகவும் சிக்கலான நிலைக்கு உள்ளானது. அதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, 2003ல் அமெரிக்க செனட் சபையில், “செக்’ பரிமாற்றம் குறித்த விதியில் சில மாற்றங்கள் செய்து, “செக் 21′ என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. அது, போட்டோ வடிவிலான “செக்’கை ஏற்றுக் கொள்ள வழி வகை செய்தது.
இதன் பிறகு, பல நிறுவனங்கள், ஸ்கேனிங் கருவிகளை நிறுவ ஆரம்பித்தன. இருந்தாலும் இந்த புதிய தொழில்நுட்பத்தை மொபைல் போனில் கொண்டு வருவதற்கு சில தடைகள் உள்ளன. குறிப்பாக கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் போது, நெட் திருடர்கள் லவட்டி விடுவார்களோ என்ற அச்சம் இருக்கிறது. அதேபோல், மொபைலிலும் நெட் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி விட வாய்ப்புகள் இருப்பதால், அதைத் தடுக்க, புதிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

%d bloggers like this: