Advertisements

Daily Archives: மார்ச் 2nd, 2010

புத்தம் சரணம் கச்சாமி ! – மலேசியா ஸ்பெஷல்

மலேசிய மக்கள் தொகையில் இஸ்லாமியர்களுக்கு அடுத்த இடத்தில் பெரும்பான்மையாவர்களாக இருப்பவர்கள் பௌத்தர்கள்தான். இவர்களில் அதிகமானோர் சீனர்கள். ஸ்ரீலங்கா, தாய்லாந்து, மியான்மார் போன்ற நாடுகளிலிருந்து மலேசியாவில் வந்து குடியேறிய பௌத்தர்களும் உண்டு. மலேசிய பௌத்தர்களுக்குள் பல்வேறு உட்பிரிவுகள் இருந்தபோதிலும், அவர்கள் ஒன்றுபட்டுச் செயல்படுகிறார்கள்.

குறிப்பாக இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தொண்டு நிறுவனங்கள் அமைத்து சமூகப் பணியாற்றுவதுடன், இன்டர்நெட் குழுக்கள் மூலமாகத் தகவல் பரிமாற்றங்களும் செய்துகொள்கிறார்கள். ஞாயிறு அன்று,பௌத்த மடாலயங்களில் நடத்தப்படும் மதபோதனை வகுப்புகளில் சிறுவர்களும், இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். நாடெங்கும் வண்ணமயமான பௌத்தக் கோயில்கள் ஏராளம். கென்ட்டிங் மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான பௌத்த ஆலயத்துக்குச் சென்றோம். சுமார் முப்பது அடி உயரத்துக்கு நின்ற நிலையில் ஒன்றும், 20 அடி உயரத்துக்கு தியான நிலையில் ஒன்றுமாக இரண்டு புத்தர் சிலைகள். அச்சிலைகளை நான்கு பகுதிகளாச் செதுக்கி, அவற்றை ஒன்றின் மேல் ஒன்றாகப் பொருத்தி இணைத்திருக்கிறார்கள். ஆலயத்தின் சுவர் முழுக்க புத்தர் உருவம் பொறித்த டைல்ஸ். அங்குள்ள விக்ரகங்களுக்கு ஒரு பக்கத்தில் கட்டு கட்டாக ஊதுபத்திகள் வைத்திருக்கிறார்கள். பக்கத்திலேயே விளக்கு எரிகிறது.

புத்தர் சிலைக்கு எதிரில் தரையில் ஓர் அடி உயரத்துக்கு ஒரு குஷன் பொருத்தி இருக்கிறார்கள். பௌத்தர்களும் சரி, மற்றவர்களும் சரி கையில் ஏற்றிய ஊதுபத்தியோடு அந்தக் குஷனில் மண்டியிட்டு, கண்மூடி தியானித்து பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனையை முடித்து எழுந்து பிறகு, கரையும் ஊதுபத்திகளைப் போலவே மனத்தின் பாரமும் கரைந்திருக்கின்றது. மேகம் தவழும் அந்த வளாகத்தின் இயற்கையான எழிலும்,அமைதியும் மனசுக்கு அளித்த ஏகாந்தம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது !

Advertisements