உலக டிஜிட்டல் நூலகம்

இணையத்தில் இயங்கும் நூலகங்களில் இது ஒரு வியக்கத்தக்க பயனுள்ள டிஜிட்டல் மீடியா நூலகம். அது என்ன டிஜிட்டல் மீடியா நூலகம் என்று வியப்பாக இருக்கிறதா? ஆம், இதில் உலக சரித்திரத்தின் பதிவுகளை டிஜிட்டல் மீடியாவில் பதிந்து தருகிறது. நம் வீட்டில் நம் தாத்தா அல்லது அவருடைய தாத்தாவின் அந்தக் காலத்து சிதிலமடைந்த போட்டோக்களைப் பார்க்கும் போது, அப்போதே டிஜிட்டல் மீடியாவாக இருந்தால் சேதம் இல்லாமல் இருந்திருக்குமே என்ற எண்ணம் எழுகிறது. பின் எப்படியாவது அதனைச் சரி செய்து, ஸ்கேன் செய்து நம் கம்ப்யூட்டரில் போட்டு வைக்கிறோம். அதே போல உலகெங்கும் நம் நினைவிற்குச் சிக்காத நாட்களிலிருந்து கிடைத்த காட்சிகள், படங்கள், ஓசைகள், சரித்திர, கலாச்சாரக் குறிப்புகள் ஆகிய அனைத்தையும் டிஜிட்டல் மீடியாக்களாக இந்த ஆன்லைன் நூலகத்தில் பதிவுகளாகக் கிடைக்கின்றன. இந்த நூலகத்திற்கு உங்கள் கம்ப்யூட்டர் வழியே சென்று, உலகின் அனைத்து நாடுகள், கலாச்சாரம், சரித்திரம் குறித்தவற்றைத் தேடிப் பெற்று அறிந்து கொள்ளலாம். மொழிகள் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
இந்த தளத்தில் உலா வருவதற்கும் பல வழிகள், பிரிவுகள் உள்ளன. இடம், காலம், பொருள்,பொருள் வகை, அமைப்பு நிறுவனங்கள் என உலா வரலாம். ஆங்கிலம் மட்டுமின்றி வேறு பல மொழிகள் மூலமும் தேடலாம். சிறிய திரைப்பட வீடியோக்கள், ஒலிப் பதிவுகள், புகைப்படங்கள் வாரியாகவும் தேடித் தகவல்களைப் பெறலாம்.
ஒருமுறை தேடிப் பார்க்கத் தொடங்கினால் நம் முன்னோருக்கு முன்னோரான ஒரு தாத்தாவைச் சந்தித்த சந்தோஷம் கிடைக்கிறது. மதுரை என்று போட்டு தேடியதில், இரண்டு போட்டோக்கள் கிடைத்தன. அதிலும் சாதி குறித்த தகவல்கள் கிடைக்கின்றன.தமிழ் என்று போட்டு தேடிய போது, வெகு காலத்திற்கு முன் எப்படி யெல்லாம் தமிழ் எழுதப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது. போட்டோக்களின் கீழே, நூல்களின் முன் அட்டையில் தமிழில் பெயர், குறிப்புகளை அந்தக் காலத்தில் நமக்காக எழுதி வைத்த அந்த பெரியவர் எப்படி இருந்திருப்பார் என்ற சுகமான கற்பனை ஓடுகிறது. அவசியம் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு தளம் இந்த உலக டிஜிட்டல் மீடியா இணைய தளம். இதன் முகவரி: http://www.wdl.org/en/

Follow

Get every new post delivered to your Inbox.

Join 4,055 other followers

%d bloggers like this: