தண்ணீரைப் பாதுகாப்போம்! (ஆன்மிகம்)

“நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. இன்று, தமிழகத்திலுள்ள பெரிய நதிகள் பெரும்பாலும் வறண்டு கிடக்கின்றன. பல நதிகள், குப்பைத் தொட்டியாக்கப்பட்டு விட்டன; சில ஆக்ரமிப்பில் சிக்கி தங்கள் அகலத்தை இழந்துவிட்டன. இதன் காரணமாக, பாட்டிலில் கிடைக்கும் தண்ணீரை குடிக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகி, இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் கிடைக்குமா என்ற அபாய நிலைக்கு சென்று கொண்டிருக்கிறோம்.
இந்த நதிகள் உருவாக நம் முன்னோர் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல… குறிப்பாக, தமிழகத்துக்கு வளம் சேர்க்கும் காவிரி நதியை இங்கு கொண்டு வருவதற்காக உயிர் தியாகம் செய்தவர்களை மாசிமகத் திருவிழா காலத்தில் நினைத்துப் பார்க்க வேண்டும்.
கும்பகோணம் அருகிலுள்ள ஊர் கொட்டையூர். இங்கே, “ஹேரண்டகர்’ என்ற ரிஷி இருந்தார். அப்போது, காவிரி நதி குடகு மலையில் உற்பத்தியாகி, சில மைல் தூரமே ஓடியது. இந்த நதியின் தண்ணீர் வீணாகப்போகிறதே… இதை சோழநாட்டுக்கு கொண்டு வந்தால் நாடு வளமாகுமே என, அன்றைய சோழ ராஜாவான காந்தமன் திட்டமிட்டான். அகத்தியரின் தயவால் தான் அது நடக்குமெனத் தெரிந்து, குடகுமலையில் தவமிருந்த அவரைத் தேடிச் சென்றான். விஷயத்தைச் சொன்னதும், சம்மதித்தார் அகத்தியர்.
ஒரு காலத்தில் லோபாமுத்திரை என்ற பெண்மணி அகத்தியரின் மனைவியாக இருந்தாள். அவளையே தீர்த்தமாக்கி தன் கமண்டலத்தில் வைத்திருந்தார் அகத்தியர். விநாயகர் காகம் வடிவெடுத்து, அதை தட்டிவிட, அந்த நீர் நதியாக ஓடியது. காகம் தட்டி விரிந்த ஆறு என்பதால், “காவிரி’ என்று பெயர் வந்ததாகக் கூடச் சொல்வதுண்டு. லோபா முத்திரை மீது கொண்ட பாசத்தால், அகத்தியர் அவளை குறைந்த தூரமே ஓடச்செய்து, தன் கண்காணிப்பில் வைத்துக் கொண்டார். அப்போது சோழராஜா, மக்கள் நலன் கருதி தண்ணீர் வேண்டவே, மனைவியை நீண்ட தூரத்துக்கு அனுப்ப வேண்டிய நிலைக்கு ஆளானார்.
ஒருவழியாக காவிரி, கொட்டையூர் வரை வந்துவிட்டது. திடீரென ஒரு இடத்தில் ஒரு குகை போன்ற துவாரத்துக்குள் பாய்ந்து, மறைந்து விட்டது. கொட்டையூரையும் தாண்டி இன்னும் நாற்பது ஐம்பது மைல் தூரம் வரை போனால், காவிரிபூம்பட்டினம் வரை எட்டுமே என்று ராஜாவுக்கு ஆசை. அவன், இதுபற்றி ஹேரண்டகரிடம் முறையிட்டான்.
ஹேரண்டகர் அவனிடம், “எந்த நாட்டில் மக்கள் பாவம் செய்கின்றனரோ, அதன் பலனாக, நதிகள் இவ்வாறு தங்களை மறைத்துக் கொள்கின்றன. நதி மீண்டும் வெளிப்பட்டு ஓடவேண்டுமானால், மக்களின் பாவத்துக்கு பொறுப்பாளனான ராஜாவோ அல்லது ஒரு துறவியோ தன் உயிரைக் கொடுக்க வேண்டுமென சாஸ்திரம் சொல்கிறது…’ என்றார்,
மக்களுக்காக உயிர் கொடுக்க முன் வந்தான் ராஜா. துறவியோ அதை மறுத்து, “நீ நாடாள வேண்டியவன். போர் சமயங்களில் மக்களுக்காக உயிர் கொடுக்க ஒரு சந்தர்ப்பம் வரலாம். ஆனால், எனக்கு இதுதான் சந்தர்ப்பம். இறைவன் கொடுத்த இந்த சந்தர்ப்பத்தை வீணாக்க மாட்டேன்…’ எனச் சொல்லி, அந்த துவாரத்தில் புகுந்து உயிர்விட்டார். நதியும் துவாரத்தில் இருந்து வெளிப்பட்டு, சோழநாட்டின் எல்லை வரை சென்றது.
மாசிமகத்தன்று காவிரியிலும், காவிரி நீர் நிரம்பிய மகாமக குளத்திலும் நீராடி, நம் பாவங்களையும் போக்கிக் கொள்வது ஐதிகம். நதிகளுக்காக தம் உயிரையே கொடுத்தனர் நம் முன்னோர்; நாமோ அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இனியேனும், நதிகளைப் பாதுகாத்து, நாடெங்கும் சுத்தமான நீர் கிடைக்க, மாசிமக நன்னாளில் உறுதியெடுப்போம்.

%d bloggers like this: