திருவோட்டின் மகிமையை தெரிஞ்சுக்கோங்க! -திருவோட்டுக்காயின் மருத்துவ குணங்கள்

உணவை பதப்படுத்தவும், சமைக்கவும், பக்குவப்படுத்தவும் மண், சிரட்டை, மூங்கில், மட்டை, இலைகள் ஆகியவற்றால் செய்யப்பட்ட பாத்திரங்களை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசடைவது தவிர்க்கப்படுகிறது. மேலும் இயற்கையாய் கிடைக்கும் இந்த பாத்திரங்களால் உடலுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் எந்தவிதமான கேடும் ஏற்படுவதில்லை. அதுமட்டுமின்றி எந்ததாவர இயற்கை பொருளால் நாம் உணவு உட்கொள்ளும் பாத்திரம் செய்யப்பட்டுள்ளதோ அந்தப் பொருளின் மருத்துவத்தன்மையும் நமது உடலில் சேர்ந்து பல நோய்கள் நம்மை அணுகாமல் பாதுகாக்கின்றது.
மண் பாத்திரங்களை கொண்டு சமைத்தும், மூங்கில் தப்பை, மரக்குச்சி கரண்டிகளால் இலைகளில் உணவை
பரிமாறி சாப்பிட்டும் வந்த நமது பண்டைய பாரம்பரிய உணவு முறையை தற்சமயம் வெளிநாட்டினர் பலரும் விரும்புகின்றனர். ஆரோக்கியமான உணவிற்கும், இயற்கையோடு இயைந்த வாழ்விற்கும் உணவு மட்டமல்ல, அதனை உட்கொள்ள உதவும் பாத்திரங்களும் முக்கியப்பங்கு வகிக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
நமது பாரம்பரிய மருத்துவத்தையும், பழக்க வழக்கங்களையும் அனைவரும் விரும்பத் தொடங்குவதே நமது
கலாசாரத்தின் வெற்றியாகும். கிரசன்ஸ்சியா குஜேட் என்ற தாவரவியல் பெயர் கொண்ட பிக்னோனியேசியே குடும்பத்தைச் சார்ந்த பெரிய மரங்களின் காயாக வழங்கப்படும் பிச்சைப்பாத்திரம் என்றழைக்கப்படும் திருவோட்டுக்காயின் மருத்துவ குணங்கள் ஆச்சரியப்பட செய்கின்றன.
இதன் உலர்ந்த பழங்கள் மற்றும் ஓட்டின் உட்புறம் தங்கியுள்ள கிரிசன்டின், கிரிசன்டோசைடு, அஜுகால், கிரிசன்டிக் அமிலம், டார்டாரிக் அமிலம், டானிக் அமிலம், பீட்டா சைட்டோஸ்டீரால், பாலிமிட்டிக் அமிலம், எபிஜெனின், அக்காந்தோசைடு போன்ற ஏராளமான வேதிப்பொருட்கள் வயிற்று உபாதைகளை நீக்குதல், கழிச்சலை கட்டுப்படுத்துதல், நுரையீரல் மற்றும் சிறுநீர் தொற்றை நீக்குதல், உணவுப் பொருட்களில் நுண்கிருமி வளர்ச்சி மற்றும் புழுக்களின் பெருக்கத்தை அழித்தல், ரத்தக்கசிவை தடுத்தல், உணவுப் பாதையில் தோன்றும் சூட்டை தணித்து குளிர்ச்சியை உண்டாக்குதல், வயிறு மற்றும் குடல் புண்களை ஆற்றுதல் போன்ற பலவிதமான மருத்துவ செய்கைகளை செய்கின்றன.
ஈ.கோலை, எஸ்.ஆலியஸ் போன்ற நுண்கிருமி வளர்ச்சிகளையும் கட்டுப்படுத் துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருவோட்டில் காணப்படும் சோடியம், கால்சியம், தையமின் ஆகியன நல்ல ஊட்டச்சத்து காரணிகளாகவும் விளங்குகின்றன.
நமது வீட்டில் பயன்படுத்தும் தானியங்களையும், பழங்களையும் திருவோட்டில் சேமித்து வைப்பது நல்லது. அது மட்டுமின்றி திருவோட்டில் நீர் ஊற்றி அருந்தி வர தாகம் தணிந்து, உடல் குளிர்ச்சியடையும். நாகரிக மோகம் இல்லாதவர்கள் திருவோட்டில் உணவையும் உட்கொள்ளலாம்.

2 responses

  1. thanks nice

  2. பயனுள்ள தகவல்.
    இந்தியாவில் எங்கே ஒரிஸினல் திருவோடு கிடைக்கும் ? , விலை என்ன ?
    கூறினால் மேலும் சிறப்பாக இருக்கும்

%d bloggers like this: