Daily Archives: மார்ச் 6th, 2010

ஆன்லைன் கேம் மயக்கம்; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தென்கொரிய பெற்றோர்கள்

ஆன்லைனில் தன்னை மறந்து ஆட்டம் போட்ட பெற்றோர்கள் தங்களது குழந்தைக்கு பால், புகட்டாமல் கொன்று விட்டனர். ஆன்லைன் மயக்கம் இந்த அளவுக்கு மோகமாக மாறிப்போனதே என்பது தற்போதைய சமூக ஆர்வலர்களின் கேள்வி. தென்கொரியாவில் இந்த 3 மாத குழந்தை சாவுக்கு காரணமான தாய் – தந்தையரை போலீசார் கைது செய்துள்ளனர். தென் கொரியாவை சேர்ந்த ஒரு தம்பதி இன்டர் நெட்டில் ஆர்வத்துடன் விளையாடும் பழக்கத்தை வைத்திருந்தனர். இவர்களுக்கு 3 மாத குழந்தை இருந்தது. அதுவும் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை. தினமும் இவர்கள் இன்டர் நெட் மையத்துக்கு சென்று ஆன் லைனில் விளையாடுது வழக்கம் . விளையாடும் போது தங்களையே மறந்து விடுவார்களாம். சாப்பாடு, தண்ணீர் இன்றி தங்களின் அன்றாட பணிகளை கூட மறந்து விடுவது உண்டு.

தன்னை மறந்தவர் பெற்ற குழந்தையை மறந்து விட்டனர். அக் குழந்தைக்கு பால் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்தனர். இது அடிக்கடி நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக அந்த குழந்தை இறந்து விட்டது. இதனால் குழந்தை பால் மற்றும் தண்ணீர் இன்றி நாக்கு வறண்டு, பசியால் இறந்தது. இச்சம்பவம் குறித்து கவிபோன் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் பசி, பட்டினியால் குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதனையடுத்து தம்பதியினர் கைது செய்யப்பட்டனர் இச்சம்பவம் தென் கொரியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதில் ஒரு ‌‌ஹைலைட் என்ன தெரியுமா 41 வயது கொண்ட கணவனும், 25 வயது கொண்ட மனைவியும் சாட்டிங் மூலம் காதலித்து கல்யாணம் செய்து கொண்டவர்களாம்.

ஒரே மலையில் 3 கோவில்கள்…

பொதுவாக இந்து கடவுள்களான சிவன், பெருமாள், முருகன் ஆகியோருக்கு தனித்தனி ஆலயங்கள் இருப்பதை கேள்விபட்டு இருப்போம். ஆனால் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கருநெல்லிநாதர்சுவாமி கோவில், நின்ற நாராயணபெருமாள் கோவில், முருகன் கோவில் ஆகியவை ஒரே மலையில் அருகருகே அமைந்துள்ளன.

இந்த கோவில்கள் ஒரே இடத்தில் சைவ – வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக உள்ளன.

இதில் கருநெல்லிநாதர் சுவாமி கோவில் கி.பி. 1223 முதல் பாண்டிய மன்னர்களால் சிறிது, சிறிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது. முன்பு கருநெல்லிபட்டிமேடு என்று திருத்தங்கல் அழைக்கப்பட்டதால் இந்த சுவாமிக்கு `கருநெல்லிநாதர்’ என பெயர் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கி இரு வாசல்கள் உள்ளதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான வாயிலில் மீனாட்சி அம்மனும், மற்றொரு வாயிலில் பெரிய நடராஜர் தென்முகம் நோக்கி நாட்டியமாடியபடியும் அருள்பாலிக்கின்றனர்.

இந்த கோவிலில் இருந்து எளிதாக அருகே உள்ள நின்ற நாராயண பெருமாள் கோவிலுக்கு செல்வதற்கு வழியுள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 45-வது தலமாகும். இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, நீலாவதி, ஜாம்பவதி என்னும் 4 தேவிகளுடன் காட்சி தருகிறார்.

இந்த கோவிலில் பாண்டிய காலத்து பழமையான கல்வெட்டுகள், வட்ட எழுத்துகள் உள்ளன. மேலும் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

இந்த மலையில் அமைந்துள்ள 2 கோவில்களையும் ஒட்டி பழனியாண்டவர் என்ற முருகன் கோவில் உள்ளது.

இந்த கோவில் முன்னொரு காலத்தில் தம்பிரான் என்னும் முருக பக்தரால்அமைக்கப்பட்டது. தம்பிரான் வழக்கமாக பழனிக்கு ஆண்டு தோறும் காவடி எடுத்து சென்று முருகனை வழிபட்டு வருவார். ஆனால் முதுமையின் காரணமாக அவரால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது, அவர் இங்கிருந்தபடியே முருகனை வழிபட்டார்.

அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன், “முடிந்தளவு நடந்து வா, முடியாத நிலையில் எங்கே தங்கி இருக்கிறாயே, அங்கேயே என்னை வணங்கு” என கூறினார். அதன்படி, தம்பிரான் முருகப்பெருமானை தரிசிக்க பயணமானார். முதுமையை பொருட்படுத்தாமல் நடந்தார்.

ஆனால் திருத்தங்கல் அருகே வழியில் வாய்க்கால் ஒன்று இருந்ததால் அதை கடக்க முடியாமல் போகவே முருகன் அருளியபடி அங்கே தங்கி முருகனை நினைத்து பூஜை செய்ய தொடங்கினார். அங்கு நெய்வேத்தியம் செய்ய அடுப்பு ட்டுவதற்காக மண்ணை தோண்டினார்.

அப்போது அங்கு அவருக்கு தங்க காசுகள் புதையலாக கிடைத்தன. இந்த காசுகள் முருகன் அருளால் கிடைத்ததாக கருதிய தம்பிரான், அதை கொண்டு பழனிகோவில் அமைப்பில் திருத்தங்கல் மலை மீது ஒரு கோவிலை கட்டினார். அதன்படி இங்கு எழுந்ததுதான் இன்றுள்ள முருகன்

கோவில்.இப்படி ஒரே மலையில் 3 கோவில்கள் அமைந்து இருப்பது தென் மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை என்று கூறப்படுகிறது.

சேமிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்!

மார்க்கெட்டுக்கு போய்விட்டு வரும்போதுதான் விலைவாசி அதிகரித்துவிட்டது என்பதும், செலவுகளைக் குறைக்க வேண்டும், சேமிக்க வேண்டும் என்பதும் நமக்குள் ஓடுகிறது.

ஆனால் அதன்பின் வழக்கம்போல் செலவுகள் ஓட ஆரம்பிக்கிறது, நிதி நிலைமை மாதக் கடைசியில் கையைக் கடிக்கிறது.

சேமிப்பதற்கு எல்லோருக்கும் ஆர்வம்தான். ஆனால் எப்படிச் சேமிப்பது?

`ஒரு காசு சேமிப்பது, ஒரு காசு சம்பாதிப்பதற்குச் சமம்’ என்ற பழமொழியை ஞாபகத்தில் வையுங்கள். கையில் கிடைக்கும் சிறுசிறு தொகையையும் சேமிப்பது, பிற்காலத்தில் பெரிதாகக் கை கொடுக்கும்.

சேமிப்பிலிருந்து அதிக `ரிட்டர்ன்’ பெறுவதற்கு, உங்களின் `டெபாசிட்’டை எல்லாம் ஒரே வங்கியில் மேற்கொள்ளுங்கள். அதிகத் தொகை முதலீட்டாளர்களுக்கு வங்கிகள் கட்டணச் சலுகைகளையோ, அதிக வட்டி விகிதத்தையோ வழங்குகின்றன என்பதை ஞாபகத்தில் வையுங்கள். எனவே உங்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை சேரும்போது, அதை நல்ல டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதில் கவனம் செலுத்துங்கள்.

உங்களின் சேமிப்பு அதிகரிக்க சில யோசனைகள்: ஒவ்வொரு மாதமும் என்னென்ன செலவுகள், எந்தளவு செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியல் தயாரித்துக்கொள்ளுங்கள். ஒரு மாதாந்திர `பில்’லுக்கு கட்டணம் செலுத்துவதைப் போல அந்தச் செலவுகளை மேற்கொள்ளுங்கள். `கரண்ட் அக்கவுண்ட்’டில் இருக்கும் தொகையைக் குறையுங்கள். `ஓவர் டிராப்ட்’ நிலைமைக்கு அதைத் தள்ளாதீர்கள். காரணம் அது அதிகச் செலவுள்ளதாக மாறிவருகிறது. குறைவான வட்டி அல்லது வட்டியே அளிக்காத `அக்கவுண்டில்’ அதிகப் பணத்தை இருக்க விடாதீர்கள். சேமிப்புக் கணக்குகளில் எது சிறந்தது, அதிக வட்டி அளிப்பது என்று அறிய இணையத்தில் தேடிப் பாருங்கள். உங்களிடம் அதிகமான பணம் இருந்தால், பெரிய `டெபாசிட்’டுக்கு சிறப்புச் சலுகைகளை அளிக்கும் திட்டங்களைப் பாருங்கள். `ஆசை’யால் `ஷாப்பிங்’ செய்யாதீர்கள். சலுகைகள், தள்ளுபடி விளம்பரங்கள், அறிவிப்புகளைப் பார்த்து `ஷாப்பிங்’ செய்யாதீர்கள். இன்று சூப்பர் மார்க்கெட்டுகள் அதிகரித்துவிட்டன. அவற்றுக்கு இடையிலான போட்டியில் பல சலுகை அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. அதில் விழுந்துவிடாதீர்கள். ஆசையின் காரணமாகத் திடீரென்று ஒன்றை வாங்குவதைத் தவிருங்கள். அந்தப் பணத்தை நீங்கள் உங்களின் சேமிப்புக் கணக்கில் செலுத்தலாம்.

குளிர்ந்த நீரில் குளியுங்கள்!

பூமியில், பெரும்பாலும் தண்ணீர்தான் முன்று பக்கமும் சுற்றிப் பரவியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.

இதற்காகப் பத்து அங்குல ஆழமுள்ள தொட்டியில், `ஜில்’லென்று குளிர்ந்த தண்ணீர் நிரப்பிக் கொண்டு தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் முழ்கிக் கொண்டு உடலை ஆங்காங்கே தேய்த்து விடவும். ஒரு நிமிடம் முதல் முன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது. குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணிநேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம். வெளிர் சென்று திரும்பியதும் உடனே அலுவலகம் செல்ல வேண்டும் எனில், பிரிட்ஜில் உள்ள ஐஸ்கட்டிகளை தொட்டியில் போட்டு, குளிர்ந்த நீராக மாற்றி குளிக்கலாம்.

கொள்ளுப்பால்

இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.

முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.

பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.

வயர் இல்லாமல் மின்சாரம்!

வயர் இணைப்பு இல்லாமலே இனி மின்சாரத்தை கடத்த முடியும்.

மின்சாரம், அத்தியாவசிய தேவையான தண்ணீரைவிட அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலான சாதனங்கள் மின்சாரத்தில்தான் இயங்குகின்றன. மின்சாரத்தைக் கடத்த தாமிர வயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு வயர்களை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும். சில வேளைகளில் வயர்கள் சேதம் அடைந்தால் மின்கசிவு ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இந்த இரு பிரச்சினைகளும் இல்லாமல், வயர் இல்லாமல் மின்சாரத்தை கடத்த முடியும் என்று தற்போது தெரியவந்துள்ளது.

இந்த முறையில் வயர்களுக்குப் பதிலாக ரேடியோ அலைகள் முலம் மின்சாரம் கடத்தப்படுகிறது. விளக்கு களை ஆன், ஆப் செய்யவும் சுவிட்சுகள் தேவையில்லை. ரிமோட் கண்ட்ரோல் போதும். இதனால் வீட்டில் எந்த இடத்தில் இருந்தும், எந்த அறையில் உள்ள விளக்கையும் இயக்க முடியும். 300 அடி தூரத்திற்குள்ளாக விளக்கை இயக்கும் வகையில் ரிமோட் தயாரிக்கப்பட்டுள்ளது.

வயர் இல்லாத இந்த லைட்டிங் சிஸ்டத்திற்கு வெர்வ் என்று பெயரிட்டுள்ளார் இதைக் கண்டுபிடித்த ஜான் பி. கார்னெட். இவர் ஒரு அமெரிக்க விஞ்ஞானப் பத்திரிகையாளர் ஆவார்.

ஜான் தனது திட்டம் குறித்து கூறுகையில், “சிறிய அளவிலான வீடாக இருந்தாலும் பல மீட்டர் அளவுக்கு வயர்கள் தேவைப்படும். மேலும் இதற்காக வயரிங் செய்து சுவரை துளையிடுவது, சுவிட்ச் பெட்டிகள் அமைப்பது என கணிசமான அளவில் செலவாகும். குறிப்பிட்ட காலத்திற்கொருமுறை பராமரிப்பு செலவு செய்ய வேண்டி இருக்கும். இதற்கெல்லாம் விடை தருகிறது எனது வெர்வ் சிஸ்டம். கண்ட்ரோலர் லம் இயக்க முடியும். இதுவே பிஸ் பாக்சாகவும் செயல்படும். சுற்றுச் சூழலுக்கும் உகந்தது” என்றார்

புருவ அழகு

நீள்வட்ட முகம்: இவர்கள் புருவம் இலேசாக மேலேற வெளிப்புறம் கொஞ்சமாகவே கீழிறங்க வேண்டும். பார்ப்பதற்கு, தூரத்தில் பறக்கும் பறவை மாதிரி இருக்கும். வெளிப்புறமாக இருக்கும் தேவையற்ற முடியை அகற்றி விடுங்கள். முடியுமிடத்தில் மிகவும் மெலிதாக இருக்கட்டும்.

சதுர முகம்: புருவ வளைவு அகன்று இருக்க வேண்டும். புருவ முடிகளின் வரிசையில் உள்பக்கமாக இருப்பவற்றைத்தான் அகற்ற வேண்டும். அதுதான் முகத்தின் சதுரத் தன்மையைத் குறைத்துக் காட்டும்.

வட்ட முகம்: புருவம் மிகவும் நீளம் குறைந்ததாய் இருக்க வேண்டும். பருமனாக ஆரம்பித்து, அடுத்தடுத்துக் குறுகிக் கொண்டே இருக்க வேண்டும். வெளிப்புற முடிவில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றி விடுங்கள்.

நீளமான முகம்: எவ்வளவுக்கெவ்வளவு நேராக, வளையாமல் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு நல்லது. புருவத்தின் ஓரத்தில் மட்டும் மிகச்சிறு அளவு வளைந்து விடுங்கள்.

புருவம் தீட்டப் பொதுவாக ஐப்ரோ பென்சில்களைப் பயன்படுத்துவதே நல்லது. விரல் நுனியில் மை தொட்டு இழுக்கும் பழக்கத்தைத் தவிர்த்துவிடவும். ஐப்ரோ பென்சிலை எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்தவும். உட்புறமிருந்து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் ‘செயற்கை’ என்று காட்டிக் கொடுத்துவிடும்.

பிரஷ் செய்யத் தொடங்கும்போது முதலில் வெளிப்புறமிருந்து உட்புறமாகப் பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக்கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன்றவை நீங்கும். பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிருந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்.

காலையில் உற்சாகம்… ஏன்?

ஒரு பானத்தையோ அல்லது விருப்பமான உணவையோ சாப்பிட்டு விட்டால் உடம்பிலும், மனத்திலும் உற்சாகம் கொப்பளித்துவிடும். குறிப்பாக ஏதாவது ஒரு குறிப்பிட்ட பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதை செய்யாவிட்டால் எதையோ இழந்தது போல் பரிதவிப்பார்கள். அதே நேரத்தில் அந்த பழக்கத்தை செய்தவுடன் உற்சாகம் கொப்பளிக்க தமது பணியில் விரைவாக செயல்படுவார்கள்.

இப்படி சாப்பிடும் உணவுகள் உண்மையில் உற்சாகத்தை கொடுக்கின்றனவா? ஆம்… என்று கூறுகின்றனர் உணவு ஆராய்ச்சியாளர்கள்.

தினமும் காலையில் எழுந்தவுடன் அனை வருமே சுறுசுறுப்பாக இருப்பதில்லை. தூக்கத் தின் காரணமாக கொஞ்சம் மந்தமாக இருப்போம். ஒரு கப் காபியோ அல்லது டீயோ சாப்பிட்டவுடன் உற்சாகம் ஊற்றெடுக்கிறது. அதேபோல், மதியம் கொழுப்பு நிறைந்த பிரியாணி அல்லது தயிரோ அல்லது தயிர் சாதமோ சாப்பிட்டால் மூளை மந்தமாக இருக்கும். ஒரு கப் காபி சாப்பிட்டால் இரண்டு நிமிடங் களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். நாம் உண்ணும் உணவு நம் மனநிலையில் இம்மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

உணவு ஜீரணமாகும்போது பல ரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது மூளையை தாக்கி மன நிலையை மாற்றுகிறது. இந்த ரசாயனப் பொருட்களுக்கு `நியூரோ டிரான்ஸ்மீட்டர்ஸ்’ என்று பெயர். நம் உணவில் இருந்து தயாரிக்கப்படும் முக்கியமான மூன்று ரசாயனப் பொருட்கள் செரோட்டோனின், டோபோமின், நார் எபினெபெரின் ஆகியவை.

உறுதியான உடலும், சுறுசுறுப்பான மனமும் இருக்க உணவு அவசியமாகிறது. ஆனால் அந்த உணவில் மாவுப் பொருள், புரதம், கொழுப்பு ஊட்டச் சத்துகள், தாதுப் பொருள்கள் அளவான நிலையில் சமச்சீர் உணவாக இருக்க வேண்டும்.

தக்காளி, சுரைக்காய், அன்னாசிப்பழம், சீதாப்பழம், முந்திரிப் பருப்பு, எறா, முட்டை போன்ற உணவுகள் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றன. இதனால் மூக்கில் தண்ணீர் வடிதல், கண்ணில் நீர் வடிதல், உதடுகள் எரிச்சல், மூச்சு தடைப்படுதல், வயிற்றுப் போக்கு, வாந்தி முதலிய தொந்தரவுகள் ஏற்படும். இந்தப் பாதிப்பால் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு சோர்வடைவார்கள். ஒவ்வாமையில் சிலருக்கு தோலில் நமைச்சல் ஏற்படும்.

வேலைப்பளு அதிகரிக்கும்போது ஒரு கப் சூடான காபி அல்லது டீ சாப்பிட்டால் உடலுக்கும், மனதுக்கும் இதமாக இருக்கும். குறிப்பாக காபியில் உள்ள காபின் மற்றும் சூடான நிலை புத்துணர்ச்சியை உண்டாக்கும்.

சூடான காபியில் ஒரு மதுரமான வாசனை உண்டு. அதே காபி சூடு குறைந்தால் ருசி இருக்காது. இந்த மதுரமான வாசனையை மூக்கு அனுபவித்து மூளைக்குத் தெரிவிக்கிறது. இந்த மூளையின் தாக்கம் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. ஆனால் அதிகமாக குடித்தால் மனச் சோர்வு ஏற்படும்.

சமச்சீர் உணவு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய நரம்புப் பாதைகளை ஊக்குவித்து உடலுக்கும், மனதிற்கும் இன்பமளிக்கிறது. பட்டாணி, அவரையில் கிடைக்கும் வைட்டமின் பி குறைந்தால் மனச் சோர்வு, நரம்புத் தளர்ச்சி ஏற்படும். கீரை வகைகளில் கிடைக்கும் இரும்புச்சத்து குறைந்தால் ஞாபக மறதி, உடல் சோர்வு, மனச்சோர்வு உண்டாகும்.

சோயாபீன்ஸ் போன்ற பொருட்களில் கிடைக்கும் தையாமின் மன அமைதி, நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும். குறைந்தால் மனத் தளர்ச்சி ஏற்படும். அரிசி, கோதுமை மற்றும் இனிப்புகளில் உள்ள மாவுப் பொருள் சக்தியைக் கொடுத்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக மனமும் இதில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. இதை அனைத்து வகை மருத்துவ முறைகளும் உறுதிப்படுத்துகின்றன என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்