ஒரே மலையில் 3 கோவில்கள்…

பொதுவாக இந்து கடவுள்களான சிவன், பெருமாள், முருகன் ஆகியோருக்கு தனித்தனி ஆலயங்கள் இருப்பதை கேள்விபட்டு இருப்போம். ஆனால் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கருநெல்லிநாதர்சுவாமி கோவில், நின்ற நாராயணபெருமாள் கோவில், முருகன் கோவில் ஆகியவை ஒரே மலையில் அருகருகே அமைந்துள்ளன.

இந்த கோவில்கள் ஒரே இடத்தில் சைவ – வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக உள்ளன.

இதில் கருநெல்லிநாதர் சுவாமி கோவில் கி.பி. 1223 முதல் பாண்டிய மன்னர்களால் சிறிது, சிறிதாக விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ளது. முன்பு கருநெல்லிபட்டிமேடு என்று திருத்தங்கல் அழைக்கப்பட்டதால் இந்த சுவாமிக்கு `கருநெல்லிநாதர்’ என பெயர் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கி இரு வாசல்கள் உள்ளதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதான வாயிலில் மீனாட்சி அம்மனும், மற்றொரு வாயிலில் பெரிய நடராஜர் தென்முகம் நோக்கி நாட்டியமாடியபடியும் அருள்பாலிக்கின்றனர்.

இந்த கோவிலில் இருந்து எளிதாக அருகே உள்ள நின்ற நாராயண பெருமாள் கோவிலுக்கு செல்வதற்கு வழியுள்ளது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் 45-வது தலமாகும். இங்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி, நீலாவதி, ஜாம்பவதி என்னும் 4 தேவிகளுடன் காட்சி தருகிறார்.

இந்த கோவிலில் பாண்டிய காலத்து பழமையான கல்வெட்டுகள், வட்ட எழுத்துகள் உள்ளன. மேலும் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

இந்த மலையில் அமைந்துள்ள 2 கோவில்களையும் ஒட்டி பழனியாண்டவர் என்ற முருகன் கோவில் உள்ளது.

இந்த கோவில் முன்னொரு காலத்தில் தம்பிரான் என்னும் முருக பக்தரால்அமைக்கப்பட்டது. தம்பிரான் வழக்கமாக பழனிக்கு ஆண்டு தோறும் காவடி எடுத்து சென்று முருகனை வழிபட்டு வருவார். ஆனால் முதுமையின் காரணமாக அவரால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டபோது, அவர் இங்கிருந்தபடியே முருகனை வழிபட்டார்.

அப்போது அவரது கனவில் தோன்றிய முருகன், “முடிந்தளவு நடந்து வா, முடியாத நிலையில் எங்கே தங்கி இருக்கிறாயே, அங்கேயே என்னை வணங்கு” என கூறினார். அதன்படி, தம்பிரான் முருகப்பெருமானை தரிசிக்க பயணமானார். முதுமையை பொருட்படுத்தாமல் நடந்தார்.

ஆனால் திருத்தங்கல் அருகே வழியில் வாய்க்கால் ஒன்று இருந்ததால் அதை கடக்க முடியாமல் போகவே முருகன் அருளியபடி அங்கே தங்கி முருகனை நினைத்து பூஜை செய்ய தொடங்கினார். அங்கு நெய்வேத்தியம் செய்ய அடுப்பு ட்டுவதற்காக மண்ணை தோண்டினார்.

அப்போது அங்கு அவருக்கு தங்க காசுகள் புதையலாக கிடைத்தன. இந்த காசுகள் முருகன் அருளால் கிடைத்ததாக கருதிய தம்பிரான், அதை கொண்டு பழனிகோவில் அமைப்பில் திருத்தங்கல் மலை மீது ஒரு கோவிலை கட்டினார். அதன்படி இங்கு எழுந்ததுதான் இன்றுள்ள முருகன்

கோவில்.இப்படி ஒரே மலையில் 3 கோவில்கள் அமைந்து இருப்பது தென் மாவட்டத்தில் வேறு எங்கும் இல்லை என்று கூறப்படுகிறது.

%d bloggers like this: