வேரில்லா கொடியில் விந்தையிருக்கு!-அற்புத மூலிகை அமரவள்ளி

நமது உடலின் காவல்காரனாக இருக்கும் கல்லீரல், ரத்தத்தை உற்பத்தி செய்யும் மண்ணீரல், சிறுநீரை சுத்திகரிக்கும் சிறுநீரகம், சர்க்கரையை கட்டுப்படுத்தும் கணையம் போன்ற அனைத்து உறுப்புகளும் ஒன்றையொன்று சார்ந்தே உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு உறுப்பில் தொல்லை ஏற்பட்டாலும்கூட பிற உறுப்புகளும் பலஹீனமடைவதுண்டு. கல்லீரலில் ஏற்படும் பலஹீனத்தால் மண்ணீரல் வீக்கம், சிறுநீரக செயலிழப்பு போன்றவையும், கணையத்தின் குறைபாட்டால் சிறுநீரக பாதிப்பு மற்றும் கல்லீரல் வீக்கமும், சிறுநீரக செயலிழப்பால் கணையம் மற்றும் கல்லீரல் பாதிப்பும் மாறி மாறி உண்டாகி, ஆரோக்கியமான உடல்நிலை கெட ஆரம்பிக்கிறது. கல்லீரல் தனது பாதுகாப்பு வளையத்தை தளர்த்திக் கொண்டால் அனைத்து உறுப்புகளும் சிறிது சிறிதாக செயலிழக்கத் தொடங்கிவிடும். எனவே கல்லீரலை பாதுகாப்பது அவசியமாகும்.
கல்லீரல் மற்றும் மண்ணீரலில் தோன்றும் பலவகையான குறைபாடுகள், அதனால் தோன்றும் சிறுநீர் தொற்று ஆகியவற்றை நீக்கி கல்லீரலை வலுப்படுத்தும் அற்புத மூலிகை அமரவள்ளி, ஆகாசக்கொடி, நீலாதாரம் என்ற பல பெயர்களால் அழைக்கப்படும் ஆகாசவள்ளி கொடியாகும். வேர், குளோரோபில் மற்றும் சுவாச தண்டுகள் ஏதுமில்லாமலேயே பிற மரம், செடிகளின் மேல் படர்ந்து, அவற்றின் சத்துக்களை உறிஞ்சிவளரும் இந்தக் கொடிகளுக்கு வேர்கள் இல்லாததால் மரம் மற்றும் செடிகளின் மேற்பகுதிகளில் போர்வை போல் படர்ந்து வாழ்கின்றன.
கஸ்குட்டா எபிதைமம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட கன்வால்வுலேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தக் கொடிகள் தான் சார்ந்திருக்கும் மரங்களின் மருத்துவ குணங்களையே பெற்றுள்ளன. ஆனால் இந்த கொடிகளுக்கென தனித் தன்மையாக அமைந்திருக்கும் கஸ்குட்டாலின், கஸ்குட்டின், அமார்வெலின், லூட்டியோலின், பெர்ஜெனின், குயிர்சட்டின் போன்ற வேதிப்பொருட்கள் கல் லீரலை பாதுகாக்கின்றன. உலர்ந்த ஆகாசவள்ளி கொடிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி 30 கிராமளவு எடுத்து 500 மிலி நீரில் போட்டுகொதிக்கவைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, அதிகாலை வெறும் வயிற்றில் குடித்துவர கல்லீரல் வீக்கம் தணியும். உலர்ந்த ஆகாசவள்ளி கொடிகளை இடித்து, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் தேனுடன் குழப்பி சாப்பிட மண்ணீரல் வீக்கம் நீங்கும்.

%d bloggers like this: