Daily Archives: மார்ச் 10th, 2010

இதை சாப்பிடாதே… அதை சாப்பிடாதே… எதைத் தான் சாப்பிடறதுன்னு குழப்பமா?

* எதைத் தான் சாப்பிடறதுன்னு குழப்பமா?
* புதிது புதிதா ஏதாவது வாங்கி சாப்பிடாதீங்க
* குண்டாக இருந்தால், ஒபிசிட்டி…ன்னு சொல்லிடறாங்க; ஒல்லியாக இருந்தால் அனிமிக்’குன்னு சொல்றாங்க.
* “புல் கட்டு’ கட்டினா சாப்பாட்டு ராமன்னு பட்டம் தந்திடறாங்க; சாப்பிடாமலே இருந்தா “டயட்’டான்னு கேட்கறாங்க…
* இதைச் சாப்பிடாதே… அதைச் சாப்பிடாதே…ன்னு ஆளாளுக்கு ஒரு ஐடியா தர்றாங்க.
இப்படி எல்லாம் ஒரு “மண்டை காய் வைக்கிற’ குழப்பம், பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. போதுமான சுகாதார விழிப்புணர்வு இப்போது தான் வரத் துவங்கி இருக்கிறது. அதிலும், சிலர் அதிக விழிப்புணர்வுடன், தாங்களே டாக்டராகி விடுவதும் உண்டு. அப்படிப்பட்டவர்கள், அவர்கள் மட்டுமின்றி, அடுத்தவர்களுக்கும் தவறான தகவல் தந்து , கடைசியில் தவிக்க வைக்கின்றனர்.
எதைத்தின்னால்…
ஏகப்பட்ட மருத்துவ ஆராய்ச்சி தகவல்கள், துறை வாரியாக நிபுணர்களின் “டிவி’ பேட்டிகள், அடிக்கடி எச்சரிக்கை தகவல்கள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. “மால்’களில் உடனடி ரசம், குழம்பு பொடி போய், இட்லி பவுடர் வரை வந்து விட்டது; இன்னொரு பக்கம், காய்கறி, பழங்களுக்கும் கிராக்கி அதிகரித்து வருகிறது.
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக சாலட் கள் முதல் கார்ன் பாட்டில்கள் வரை வாங்கி வேறு சாப்பிடுகின்றனர் சிலர்; இன்னும் சிலர், காலில் “நிக்’ ஷூ, அரை நிஜார், டீ ஷர்ட் அணிந்து, காதில் “வாக்மென்’ மாட்டிக் கொண்டு வியர்க்காமல் நடந்து, டயர் தேய்ந்த தள்ளு வண்டியில் கிடைக்கும் அருகம் புல் ஜூஸ் குடிப்பதும் நகர வாழ்க்கையின் கொடுமை. மொத் தத்தில் எதைத் தின்னால் பித்தம் தெளியும் என் பது போல பலருக்கும், சாப்பிடும் விஷயத்தில் குழப்பமே மிஞ்சுகிறது.
ஆரோக்கிய உணவு எது?
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இல்லாத பட்சத்தில், உடல் பெருக்காத நிலையில் வழக்கமான உணவு சாப்பிட்டு வந்தாலே போதுமானது. சத்தான உணவுகள் என்று பார்த்து காய்கறி, பழங்களை சேர்ப்பது மிக நல்லது.
அசைவ விரும்பியாக இருந்தால், தரமான, ஆரோக்கிய சூழலில் உள்ள அயிட்டங்களை வாங்கி, துல்லியமாக சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் தரம் குறைந்தால் தான் ஆரோக்கிய கேடு வருகிறது.
* உணவுகளில், கொழுப்பு, எண்ணெய் சமாச்சாரங் களை நாற்பதுடன் குறைத்து கொள்ள வேண்டும். அதுபோல, நொறுக் குத்தீனிகளையும் மறந்திட வேண்டும் என் பது டாக்டர்களின் பொதுவான அட்வைஸ்.
காதை பொத்துங்க
மருத்துவ, சுகாதார குறிப்புகள் மட்டுமின்றி, ஆராய்ச்சி தகவல்களும் இப்போது குவிந்து வருகின்றன. பற் பசை , சோப்பு, முக பவுடர்கள், லோஷன்கள் மட்டுமல்ல, உணவுப் பொருள் டப்பாக்களிலும் புரியாத மருத்துவ குறிப்புகளுடன் தான் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
“ஓஹோ ஏதோ நல்ல பொருள் போலிருக்கிறது ‘ என்று போலி விளம்பரங்களை பார்த்து சாப்பிடுவோர் அதிகம். இந்த விஷயங்களில் சிலர், டாக்டரின் ஆலோசனை பெறாமல், தங்கள் உணவு முறையை மாற்றக்கூடாது; மருந்துகளையும் விழுங் கக்கூடாது. இதுபோல, புதிதாக எந்த டானிக், சத்தான உணவு பொருள் வந்தாலும் அதை வாங்கி குழந்தைகளுக்கு சாப்பிட வைப்பதும் சில பெற்றோருக்கு வாடிக்கையாகி விட்டது.
“கட்’ பண்ணா “நோ’
நகர வாழ்க்கையில் வழக்கமான சமையல் வேலைகளை கூட செய்ய முடியாத அளவுக்கு பலரும் “பிசி’யாகி விட்டனர். காய்கறிகளை நறுக்கி , சுத்தம் செய்து சமைப்பதற் கும் கூட இப்போது ஆபத்து வந்து விட் டது. காரணம், “கட்’ செய்த காய்கறிகளும், பழங்களும் விற்பனை செய்ய ஆரம் பித்து விட்டனர் பலரும்.
எந்த ஒரு காய்கறியையும், பழத்தையும் துண்டுகளாக வைத்தால், அதில் உள்ள சத்துக்கள் குறைந்து விடுகின்றன என்பது தான் மருத்துவ உண்மை. “கட்’ செய்யப்பட்ட பழங்களை கண்டிப்பாக சாப்பிடக்கூடாது; முழுப்பழத்தை வாங்கி, அதை நன்றாக சுத்தம் செய்து , நறுக்கி சாப்பிடலாம்.
மாத்திரை போபியா
சிலருக்கு எப்போது பார்த்தாலும் ஏதாவது மாத்திரையை விழுங்கிக்கொண்டே இருக்க வேண்டும்; சிலர் கையில் “பாம்’ வைத்துக்கொண்டு அதை தடவிக் கொண்டே இருப்பர். உண்மையில், இவர்களுக்கு எந்த கோளாறும், வலியும் இருக்காது.
உணவு சாப்பிட்டபின், ஜீரணத்துக்கு என ஒரு மாத் திரை வாயில் போட்டுக்கொள்வர்; தலைவலி வராமலேயே டப்பாவை பாக்கெட்டில் இருந்து எடுத்து தடவிக்கொள்வர். இதுவும் ஒரு வகையில் “போபியா’ தான்.
இப்படி சாப்பிட்டு வருவதால், உடலில் எதிர் மறை விளைவுகளை ஏற்படுத்தியும் விடலாம் என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.

பிரசவத்துக்குப் பின்னர்… தழும்புகள்

குழந்தை பெற்ற பின்பு எல்லா பெண்களுக்கும் ஏற்படக் கூடிய மிகப் பெரிய பிரச்சனை தழும்புகள் தான்! இந்த தழும்புகளை முற்றிலும் வராமல் தடுக்க முடியாது. ஆனால் நிச்சயம் அதை குறைக்க முடியும்? அது போல் முதுகு மற்றும் கால் வலி, வயிறு விரிதல் என்று பல பிரச்சனைகளும் ஏற்படும்.

குழந்தையை பத்து மாதம் வயிற்றில் சுமந்து அது வெளிவரும் பொழுது வயிற்று பகுதிகளின் தசைகள் மற்றும் இடுப்பு எலும்புகள் விரிந்து பிரசவம் சுலபமாக இருக்கும்? இதனால் மேல் சொன்ன பாதிப்புகள் வருவது இயல்பு தான்.

அதற்கு குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே, அதாவது 7வது மாதத்தில் இருந்து ஆலிவ் ஆயிலை அடி வயிறு, கால், தொடைகளில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரை ஊற்றி குளிக்கவும். (மருத்துவரின் ஆலோசனையின் படி இதை செய்ய வேண்டும்.)

இதோடு குழந்தை பிறந்த பின்பும் அப்படியே முன்று மாதம் தொடர்ந்து செய்யுங்கள். தண்ணீர் ஊற்றும் பொழுது கட்டாயம் நல்ல சூடாக இருப்பது நல்லது. தினமும் அடிவயிறை குறைக்க கூடிய உடல் பயிற்சியினை தவறாமல் செய்யவும். இடுப்புக்கு பெல்ட் கட்டாயம் போடவும். இதன் முலம் வயிற்று பகுதி சுருங்கி பழைய தோற்றம் கிடைக்கும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதால் உங்கள் ஆரோக்கியம் அதிகமாகும்.

பயமில்லாமல் சுவாசிக்கலாம்!

கட்டுக்கடங்காத வாகன பெருக்கத்தால் காற்றில் குறிப்பிட்ட அளவில் மாசுகளும், புகையும் கலக்கின்றன. இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பது அரிதாகி வருகிறது. தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் அனைவருக்கும் விரைவில் நோய் தொற்றும் நிலை ஏற்படும்.

இப்படி மாசு அதிகரித்து வரும் நிலையில் காற்றை சுத்தப்படுத்தி சுவாசிக்க உதவுகிறது இந்த புதிய சாதனம். `பயர்ஸ்கூபா’ எனப்படும் இந்தக் கருவி காற்றிலுள்ள கார்பனை வடிகட்டி சுத்தமாக்கித் தரும். நீரில் மூழ்கி ஆய்வு செய்வர்கள் அணிந்து கொள்ளும் வாட்டர் ஸ்கூபா போன்று இது செயல்படும். இதனை மாஸ்க் போல அணிந்து கொண்டால் வாய்- மூக்கு இரு வழிகளிலும் உட்புகும் காற்றை சுத்தமாக்கி அனுப்பும். தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு இந்தக் கருவி பெரிதும் பயன்படும்.

இன்டர்நெட் தொடக்கம்

இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது என்று பார்ப்போமா? பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள் என்பது உறுதி. எனவே இன்டர்நெட் குறித்த சில கேள்விகள் முதலில் தரப்பட்டுள்ளன. அவற்றிற்கு பதிலை எண்ணிப் பார்த்துவிட்டு பின் கீழே தரப்பட்டுள்ள பதிலுடன் உங்களுடைய பதிலை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த இன்டர்நெட் கேள்விகளுக்கிடையே ஒரு எலி ஓடி வந்துவிட்டது. மன்னிக்கவும்.
கேள்விகள்
1. World Wide Web என்ற சொல் தொடரை உருவாக்கியவர் யார்?
2. இன்டர்நெட் எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டது?
3. லிக்லைடர் (J.C.R. Licklider) என்பவர் இன்டர்நெட் டுடன் எந்த வகையில் தொடர்பு கொண்டிருந்தார்?
4. ARPANET என்பது என்ன?
5. முதன்முதல் வெகு தொலைவில் அனுப்பப்பட்ட தகவல் தொடர்பு எங்கு நிகழ்ந்தது?
6. லியோனார்ட் கிளெய்ன் ராக் (Leonard Kleinrock) என்பவர் யார்?
7. ஈதர் நெட் (Ethernet) என்பது என்ன?
8. மவுஸ் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?
9. இன்டர்நெட் எப்போது மிகவும் பிரபலமானது?
10. எவ்வளவு வேகமாக இன்டர்நெட் பயன்பாடு பரவியது?
11. மிக அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்து பவர்கள் உள்ள நாடு எது?
12. ISP என்பது என்ன?
பதில்கள்
1.டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) 1990 ஆம் ஆண்டு இந்த சொற்றொடரை உருவாக்கிப் பயன்படுத்தினார்.
2. 1960ஆம் ஆண்டு வாக்கில், அமெரிக்காவின் டார்ட்மவுத் மற்றும் பெர்க்லீ பல்கலைக் கழகங்களில் ஐ.பி.எம். கம்ப்யூட்டர்களைப் பகிர்ந்து பயன்படுத்த எண்ணியபோது இன்டர்நெட் உருவானது. இந்த கட்டமைப்பை மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டது. இந்த கட்டமைப்பு ரஷ்யா 1957ல் ஏவிய ஸ்புட்னிக் சாட்டலைட்டையும் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் ARPA என்னும் நெட்வொர்க் அமைப்பை கம்ப்யூட்டர் நெட்வொர்க்கிற்காகவும், தகவல் தொழில் நுட்ப தொடர்புகளுக்காகவும் உருவாக்கினார்.
3. இன்டர்நெட் தொடங்குவதற்கான கருத்துரு வாக்கத்திற்கு அடி கோலியவர் லிக்லைடர். இதனாலேயே இவர் இன்டர்நெட்டின் தந்தை என அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு கம்ப்யூட்டரும் தொடர்பு கொண்டு ஒன்றுக்கொன்று மற்றதற்காகச் செயல்படக் கூடும் என்ற செயல்முறையைக் கொண்டு வந்தவர் இவர். அவர் அத்தகைய இணைப்பை காலக்டிக் நெட்வொர்க் (“Galactic Network”) என அழைத்தார். அவருடைய திட்டம் 1962ல் DARPA, (Defense Advanced Research Projects Agency) என்ற அமைப்பாக உருவானது. அதன் பின் இதனுடன் ARPANET இணைய, இன்டர்நெட் உருவானது.
4. ஆர்பா நெட் என்பது ‘Advanced Research Projects Agency Network’ ஐக் குறிக்கும். இராணுவ ரகசிய தகவல் தொடர்புகளுக்கான நெட்வொர்க்காக இது அமைக்கப்பட்டது.
5. 1965 ஆம் ஆண்டு, மிக மெதுவாக இயங்கும் தொலைபேசியைப் பயன்படுத்தி, எம்.ஐ.டி. பல்கலையின் பேராசிரியர் லாரன்ஸ் ராபர்ட்ஸ் (Lawrence G. Roberts) தாமஸ் மெரில் (Thomas Merrill) என்பவருடன் இணைந்து மாசசுசட்ஸ் என்னும் இடத்தில் இயங்கிய TX2 கம்ப்யூட்டரை கலிபோர்னி யாவில் இயங்கிய கி32 என்ற கம்ப்யூட்டருடன் இணைத்தார். அப்போது தொலைபேசி இணைப்புகள் இத்தகைய இணைப்புகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
6. இன்டர்நெட் தொடர்பில் தகவல்களை அனுப்ப பாக்கெட் ஸ்விட்சிங் (Packet Switching) என்னும் வழிமுறை கையாளப்படுகிறது. பைல்களில் உள்ள தகவல்கள் பொட்டலம் பொட்டலமாக சேர வேண்டிய சர்வர் கம்ப்யூட்டருக்கு அனுப்பப்பட்டு அங்கு இணைக்கப்படுகின்றன. லியோனார்ட் கிளெயின்ராக் இந்த முறையைக் கண்டுபிடித்தார். அக்டோபர் 29, 1969ல் மாணவர்கள் பலருடன் இணைந்து இதனை இயக்கினார். இயக்கத் தொடங்கியவுடனேயே சிஸ்டம் கிராஷ் ஆனது வேறு ஒரு நிகழ்ச்சி.
7. லோக்கல் நெட்வொர்க்குகளில் தகவல் பரிமாறப்படும் வழிகளில் இதுவும் ஒன்று. இதற்கான மூலம் “Packet Networks” என்ற பெயரில் Bob Metcalfe என்பவர் மேற் கொண்ட மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து வந்தது. இன்னொரு செய்தியும் இதில் உண்டு. ஈதர்நெட் என்பதற்கான காப்புரிமை செராக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது.
8. கம்ப்யூட்டருக்கான முதல் மவுஸ் 1968ல், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கம்ப்யூட்டர் கண்காட்சியில் Douglas Engelbart என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
9. இன்டர்நெட் 90களில் பிரபலமானது. 1993 ஆம் ஆண்டில் மிக வேகமாக இதன் பயன்பாடு பரவியது.
10. சூறாவளி வேகத்தில் என்று சொல்லலாம். 5 கோடிப் பேரை ரேடியோ சென்றடைய 38 ஆண்டுகள் ஆனது. தொலைக்காட்சி அதே அளவில் சென்றடைய 13 ஆண்டுகள் ஆனது. இன்டர்நெட் இந்த இலக்கை அடைய 5 ஆண்டுகளே ஆனது.
11. அமெரிக்கா என்று தானே எண்ணுகிறீர்கள். தவறு. ஸ்வீடன். இங்குள்ள மக்களில் 80 சதவிகிதத்தினர் இன்டர் நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சதவிகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
12. ISP(Internet Service Provider) என்பது நமக்கு, நம்மிடம் கட்டணம் பெற்றுக் கொண்டோ, பெறாமலோ, இன்டர்நெட் இணைப்பு வசதியை வழங்குபவர்.
ஒரு சின்ன சிந்தனை. இன்டர்நெட் இப்போது சாகா வரம் பெற்றதாக மாறிவிட்டது. இதனை யாரும் அழிக்க முடியாது. இன்னும் 100, ஏன் 1000, ஆண்டுகளில் இன்டர்நெட் எப்படி இயங்கும் என்று எண்ணி உங்கள் கற்பனையை ஓடவிடுங்களேன்.

உணவு வகைகள் டிப்ஸ்

குழந்தைப்பருவம் வரை, எப்படியாவது பால் குடிக்க வைக்க முடிகிறது; அதை தாண்டி விட்டால்போதும், பள்ளிக்கு போகும் போதே, “எனக்கு ஒரு கோக்’ என்று குரல் வருகிறது. அந்த அளவுக்கு குட்டீஸ் மாற காரணம், பெற்றோர் தான். நாற்பது வயது வரை, பால், தயிர் கண்டிப்பாக தேவை; எந்த கோளாறும் இல்லாத பட்சத்தில் கால்சியம் சத்துக்களை தருவது இவை தான்.

ஆறு “சின்ன’ சாப்பாடு
உண்மையில், ஒரு நாளைக்கு ஆறு பிரிவாக பிரித்துத்தான் சாப்பிட வேண்டும் என்று தான் நிபுணர்கள் கருத்து. நம் வசதிக்காக , எப்போது பார்த்தாலும் “புல் கட்டு’ கட்டி விடுகிறோம். டிபனில் இருந்து சாப்பாடு வரை ஆறு பிரிவாக பிரித்து சாப்பிட்டால், ஜீரணமும் எளிதாகும். இந்த ஆறில், ஜங்க் புட், கூல் டிரிங்ஸ், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களுக்கு இடமில்லை.

வெள்ளை டேஞ்சர்
நாற்பது வரை தான் அரிசி சாதம் போட்டு, கண்மண் தெரியாமல் சாப்பிடலாம்; அதற்கு பின் குறைத்துக்கொள்ள வேண்டும். காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரிசி சாதம் எவ்வளவு தான் சாப்பிட்டாலும், அடுத்த சில மணி நேரத்தில் பசிக்க ஆரம்பிக்கும்; ஆனால், சப்பாத்தி சாப்பிட்டுப் பாருங்க; மணிக்கணக்கில் பசிக்காது. சாதத்தில், கார்போஹைட்ரேட் இருக்கிறது. அது அதிகம் சேர்வது நல்லதல்ல; ஆனால், சாதம் இல்லாமலும் இருக்கக் கூடாது. அதில் உள்ள மாவுப்பொருளில் வைட்டமின், கனிம சத்துக்கள் உள்ளன.

புழுங்கல் நல்லதுங்க
நகரங்களில் பெரும்பாலோர் கண்பசி கொண்டவர்கள். பார்க்க பிடித்தமாக இருந்தால் தான் சோற்றை ருசிப்பர்; புழுங்கல் அரிசி சாதம் என்றாலே இவர்களுக்கு அலர்ஜி; அதனால் தான், பச்சரிசியை கூட பாலிஷ் செய்து சமைக்கின்றனர். ஆனால், புழுங்கல் அரிசி சாதம் சாப்பிட்டு பழகினால், அவ்வளவு நல்லது. பச்சரிசி பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக்கொள்ளலாம்.

தண்ணி காட்டுங்க
மாடு துவண்டு போனால் தண்ணி காட்டுங்க என்று சொல்கிறோம். மனிதனுக்கும் அப்படித்தான்; சாப்பிடுவதற்கு இடையே, உடலில் நீர்ச்சத்து தங்கியிருக்க தேவை கண்டிப்பாக தண்ணீர் தான். லேசான நாக்கு வறட்சியே இதை காட்டிக் கொடுக்கும். ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் தண்ணீர் குடித்துப்பாருங்க; உங்களுக்கு சோர்வு வரவே வராது; தலைவலி போயேபோச்சு.

ஓவரா கழுவாதீங்க
அரிசியை களையும் போது, அதிகமாக கழுவி சுத்தம் செய்தால், அதில் உள்ள மாவுச்சத்துக்கள் நீங்கி விடும். அதனால், அதிகமாக கழுவ வேண்டாம். காய்கறிகளில், பழங்களில் உள்ள உரம், பூச்சி மருந்து துகள்கள் நீங்க வேண்டும் என்பதால், அவற்றை சுத்தமாக கழுவித்தான் ஆக வேண்டும். கழுவாமல் சாப்பிடக்கூடாது; சமைக்கக்கூடாது.

மலச்சிக்கலா
மலச்சிக்கல் இருக்கிறதா? இரவு நேரத்தில் சாப்பிடும்போது, பப்பாளி பழத்தை சாப்பிட்டுவிட்டு, பால் குடித்து படுக்கைக்கு போங்கள்; காலையில் மலச்சிக்கல் நீங்கி விடும். பப்பாளியும், பாலும் சேர்ந்து சாப்பிட்டால்,பேதி ஏற்படும் என்பது தவறான தகவல் என்பது டாக்டர்கள் கருத்து.

சாலட் தெரியுமா?
ஓட்டலில் வெஜிடபிள் சாலட் என்று 50 ரூபாய்க்கு வாங்கிச்சாப்பிட்டால் தான் சாலட் என்றால் என்ன என்று பலருக்கு தெரிகிறது. அதையே வீட்டில் செய்து சாப் பிட் டால் எவ்வளவு உடலுக்கு நல்லது என்று பார்ப்பதில்லை. சுத்தம் செய்த கேரட், வெங்காயம், வெள்ளரி, தக்காளி, கோஸ் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி சாப் பிட்டால், உடலில் வைட்டமின், கனிம சத்துக்கள் சேருவது மட்டுமல்ல, பற்கள் சுத்தமாக இருக்கவும் உதவும்.

ஊறிய பாதாம்
தீபாவளி, பொங்கல் தினங்களில் இனிப்பு வகைகளுடன் இப்போதெல்லாம் உலர்ந்த பழங்கள் பரிசாக கொடுப்பது வழக்கமாகிவிட்டது. இதில், பாதாம் பருப்பு பற்றி பலருக்கும் இப்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது.
பாதாம் பருப்பு, சாதா கடைகளில் விற்கப்படுகிறது. பத்துபாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் தோல் நீக்கி கடித்து சாப்பிட்டால் நல்லது. “பிபி’ எட்டிப்பார்க்காது.

புகழ்ச்சியும், இகழ்ச்சியும்… (ஆன்மிகம்)

பிறரைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் தவறில்லை; அப்படி தெரிந்து கொள்வதும் நல்லது தான். ஒருவர் வந்து கடன் கேட்கிறார்; இவரைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தால் தான் அவர் கேட்கும் பணத்தை கடனாகக் கொடுக்கலாம்.
ஊரெல்லாம் கடன் வாங்கி, திருப்பித் தருவதே இல்லை என்கிற விஷயம் தெரிந்திருந்தால், அவர் கேட்கும் கடனை இல்லை என்று சொல்லி விடலாம். இதில் கவுரவமோ, தாட்சண்யமோ கிடையாது.
கடன் விஷயம் மட்டுமல்ல… மற்றவர்களின் குணங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது. அவன் நல்லவனா, கெட்டவனா, ஏமாற்றுக்காரனா என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டால் தான் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய முடியும்.
பிறர் விஷயம் நமக்கு எதற்கு என்று அலட்சியம் செய்வது அவ்வளவு நல்லதல்ல. ஆனால், ஒன்று, பிறருடைய குறைபாடுகளை வெளியே சொல்லிக் கொள்வது நல்லதல்ல. இது மனதுக்குள்ளேயே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், “இவனுக்கென்ன வேலை! யாரையாவது குற்றம் குறை, சொல்லிக் கொண்டே தான் இருப்பான்!’ என்று மட்டமாக நினைப்பர்.
அதே சமயம், பிறருடைய நல்ல குணங்களையும் தெரிந்து கொள்வதும் நல்லது. அவரைப் பற்றி புகழ்ச்சியாக நாலு பேரிடம் சொல்வதும் நல்லது; அதனால், நீங்கள் யாரைப் பற்றி உயர்வாகப் பேசினீர்களோ, அவருக்கு உங்களிடம் தனி மதிப்பும், மரியாதையும் இருக்கும். பிறருடைய பெருமையை மட்டும் சொல்லுங்கள்; குறைகளை சொல்லாமல் மறைத்து விடுங்களேன்.
ஈஸ்வரன் என்ன செய்தார்? குளிர்ச்சியும், பிரகாசமும் பெருமையும் கொண்ட சந்திரனை தன் தலையில் வைத்துக் கொண்டார். கொடுமையான ஆல கால விஷத்தை தன் நெஞ்சில் மறைத்து வைத்துக் கொண்டார். நல்லது நாலு பேருக்குத் தெரியலாம்; கெட்டது மறைவாக இருக்க வேண்டும்.
பிறரைப் பற்றி அவரது எதிரில் பேசக் கூடாது; அது, முகஸ்துதியாகி விடும். இவரைப் பற்றி வேறு யாரிடமாவது தான் சொல்ல வேண்டும். குருவையும், ஈஸ்வரனையும் அவர்கள் முன்னிலையிலேயே ஸ்தோத்ரம் செய்யலாம்; புகழ்ந்து பேசலாம்! குருவும், பகவானுக்கு சமம். அவர்களும் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர்.
வேலைக்காரர்களையும், தன்னை அண்டினவர்களையும், அவரவர் செய்ய வேண்டிய வேலைகளை சரி வர செய்தபின், புகழ்ந்து பேச வேண்டும். முன்னதாகவே புகழ ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு ஒரு வித அகம்பாவமும், தற்பெருமையும் ஏற்பட்டு விடும். ஆனால், தன் சிஷ்யனையும், அவன் முன்னிலையிலோ, மறை விலோ புகழ்ந்து பேசக் கூடாது. தன்னைப் பற்றி இவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியக் கூடாது.
புகழ்ந்து பேசுவதாகத் தெரிந்தால், “அடடா! நாம் பெரிய புத்திசாலியல்லவா; அதைத் தான் அவர்கள் சொல்கின்றனர்…’ என்ற எண்ணம் ஏற்பட்டு விடும். அதன் பிறகு அவர்கள், தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் குறையும்.
பிறர் பார்த்து, “இவன் உங்கள் பிள்ளையா சார், இவன் உங்கள் சிஷ்யனா சார், மகாபுத்திசாலி சார்… உங்களையே மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே…’ என்று தனிமையில் யாராவது பேச வேண்டும்! அப்போது தான் அந்த தகப்பனுக்கும், குருவுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்.