புகழ்ச்சியும், இகழ்ச்சியும்… (ஆன்மிகம்)

பிறரைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் தவறில்லை; அப்படி தெரிந்து கொள்வதும் நல்லது தான். ஒருவர் வந்து கடன் கேட்கிறார்; இவரைப் பற்றி நன்றாகத் தெரிந்து கொண்டிருந்தால் தான் அவர் கேட்கும் பணத்தை கடனாகக் கொடுக்கலாம்.
ஊரெல்லாம் கடன் வாங்கி, திருப்பித் தருவதே இல்லை என்கிற விஷயம் தெரிந்திருந்தால், அவர் கேட்கும் கடனை இல்லை என்று சொல்லி விடலாம். இதில் கவுரவமோ, தாட்சண்யமோ கிடையாது.
கடன் விஷயம் மட்டுமல்ல… மற்றவர்களின் குணங்களையும் தெரிந்து வைத்துக் கொள்வதும் நல்லது. அவன் நல்லவனா, கெட்டவனா, ஏமாற்றுக்காரனா என்பதையும் தெரிந்து வைத்துக் கொண்டால் தான் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்ய முடியும்.
பிறர் விஷயம் நமக்கு எதற்கு என்று அலட்சியம் செய்வது அவ்வளவு நல்லதல்ல. ஆனால், ஒன்று, பிறருடைய குறைபாடுகளை வெளியே சொல்லிக் கொள்வது நல்லதல்ல. இது மனதுக்குள்ளேயே இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், “இவனுக்கென்ன வேலை! யாரையாவது குற்றம் குறை, சொல்லிக் கொண்டே தான் இருப்பான்!’ என்று மட்டமாக நினைப்பர்.
அதே சமயம், பிறருடைய நல்ல குணங்களையும் தெரிந்து கொள்வதும் நல்லது. அவரைப் பற்றி புகழ்ச்சியாக நாலு பேரிடம் சொல்வதும் நல்லது; அதனால், நீங்கள் யாரைப் பற்றி உயர்வாகப் பேசினீர்களோ, அவருக்கு உங்களிடம் தனி மதிப்பும், மரியாதையும் இருக்கும். பிறருடைய பெருமையை மட்டும் சொல்லுங்கள்; குறைகளை சொல்லாமல் மறைத்து விடுங்களேன்.
ஈஸ்வரன் என்ன செய்தார்? குளிர்ச்சியும், பிரகாசமும் பெருமையும் கொண்ட சந்திரனை தன் தலையில் வைத்துக் கொண்டார். கொடுமையான ஆல கால விஷத்தை தன் நெஞ்சில் மறைத்து வைத்துக் கொண்டார். நல்லது நாலு பேருக்குத் தெரியலாம்; கெட்டது மறைவாக இருக்க வேண்டும்.
பிறரைப் பற்றி அவரது எதிரில் பேசக் கூடாது; அது, முகஸ்துதியாகி விடும். இவரைப் பற்றி வேறு யாரிடமாவது தான் சொல்ல வேண்டும். குருவையும், ஈஸ்வரனையும் அவர்கள் முன்னிலையிலேயே ஸ்தோத்ரம் செய்யலாம்; புகழ்ந்து பேசலாம்! குருவும், பகவானுக்கு சமம். அவர்களும் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர்.
வேலைக்காரர்களையும், தன்னை அண்டினவர்களையும், அவரவர் செய்ய வேண்டிய வேலைகளை சரி வர செய்தபின், புகழ்ந்து பேச வேண்டும். முன்னதாகவே புகழ ஆரம்பித்து விட்டால் அவர்களுக்கு ஒரு வித அகம்பாவமும், தற்பெருமையும் ஏற்பட்டு விடும். ஆனால், தன் சிஷ்யனையும், அவன் முன்னிலையிலோ, மறை விலோ புகழ்ந்து பேசக் கூடாது. தன்னைப் பற்றி இவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியக் கூடாது.
புகழ்ந்து பேசுவதாகத் தெரிந்தால், “அடடா! நாம் பெரிய புத்திசாலியல்லவா; அதைத் தான் அவர்கள் சொல்கின்றனர்…’ என்ற எண்ணம் ஏற்பட்டு விடும். அதன் பிறகு அவர்கள், தங்களது திறமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் குறையும்.
பிறர் பார்த்து, “இவன் உங்கள் பிள்ளையா சார், இவன் உங்கள் சிஷ்யனா சார், மகாபுத்திசாலி சார்… உங்களையே மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே…’ என்று தனிமையில் யாராவது பேச வேண்டும்! அப்போது தான் அந்த தகப்பனுக்கும், குருவுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்.

%d bloggers like this: