மகா சிவராத்திரி விழா சிறப்புகள்

ஹெலிகாப்டரில் மலர் அர்ச்சனை!
பெங்களூரிலிருந்து, கோலார் தங்க வயல் செல்லும் வழியில் உள்ள ஊர் பேத்த மங்கலம். இதன் அருகே, கம்ம சமுத்திரம் எனும் ஊரில் கோடிலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்குள்ள 108 அடி உயர சிவ பெருமானுக்கு, மகா சிவராத்திரி அன்று அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது, ஹெலிகாப்டர் மூலம், சிவபெருமானுக்கு பூமாரி பொழிந்து பூஜை நடைபெறுவது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
***
நாள் முழுவதும் பூஜை!
திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் உள்ள அன்னை பெரிய நாயகி அம்மன் கோவிலுக்கு அருகில் சிறிய மலை ஒன்றில் எழுந்தருளியுள்ளார், கனககிரீசுவரர். இவருக்கு தினமும் வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இம்மலை மீது சிவலிங்க பூஜை நிகழ்த்தி தவம் இருந்தாராம் பார்வதி தேவி. அதனால், மகிழ்ந்து சுயம்பு லிங்கமாகக் காட்சி தந்து, பார்வதி தேவியை தன் இடது பக்கத்தில் இணைத்துக் கொண்டாராம் சிவ பெருமான்.
அந்த புண்ணிய திருநாளே மகா சிவராத்திரி நன்னாள் என்பதால், இங்கு மகாசிவராத்திரியில் மட்டும் நாள் முழுவதும் பூஜை நடைபெறும். மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை பூஜை நடைபெறும்.
***

\எட்டு தல விருட்சங்கள்!
பொதுவாக கோவில்களில், ஒரே தல விருட்சம் மட்டும் இருக்கும். சில கோவில்களில், அபூர்வமாக, இரண்டு, மூன்று கூட இருக்கும். ஆனால், கும்பகோணம் அருகில் உள்ள திருவிச நல்லூர், சிவயோக நாதர் திருக்கோவிலில் மட்டும், எட்டு தல விருட்சங்கள் உள்ளன. அலை, வன்னி, உந்துவில்வம், புன்னை, மகிழம், ஆல், அரசு, நெல்லி, பரசுவில்வம்.
இங்கு நந்தி முதலில் இருக்கிறது. அதன் பின் கொடிமரம் உள்ளது. கருவறையில் உள்ள லிங்கத் திருமேனியின் மேல்பகுதியில், ஏழு சடை கள் உள்ளன.
***
சிவராத்திரி – அபிஷேக ஆராதனைகள்!
முதல் யாமம்: பஞ்ச கவ்ய அபிஷேகம், சந்தனப் பூச்சு, வில்வம், தாமரை அலங்காரம், அர்ச்சனை, பச்சைப் பயறுப் பொங்கல் நிவேதனம், ரிக்வேத பாராயணம்.
இரண்டாம் யாமம்: சர்க்கரை, பால், தயிர், நெய் கலந்த ரவை, பஞ்சாமிர்த அபிஷேகம், பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்துச் சாத்துதல், துளசி அலங்காரம், வில்வம் அர்ச்சனை, பாயசம் நிவேதனம், யஜூர் வேத பாராயணம்.
மூன்றாம் யாமம்: தேன் அபிஷேகம், பச்சைக் கற்பூரம் சாத்துதல், மல்லிகை அலங்காரம், வில்வம் அர்ச்சனை, எள் அன்னம் நிவேதனம், சாமவேத பாராயணம்.
நான்காம் யாமம்: கருப்பஞ்சாறு அபிஷேகம், நந்தியா வட்டை மலர் சாத்துதல், அல்லி, நீலோற்பவம், நந்தியா வர்த்தம் அலங்காரம், அர்ச்சனை, சுத்தான்னம் நிவேதனம், அதர்வண வேத பாராயணம்.
***
ஜோதிர்லிங்கம்!
ஜோதி வடிவமானவர் சிவபெருமான். அவர், அகண்ட நெருப்பு பிழம்பாய் இருந்து குளிர்ந்தவர். அந்த வடிவங் களே லிங்கமாகி உள்ளன. அவற்றை, “ஜ்யோதிர் லிங்கம்’ என்பர். பேச்சு வழக்கில், “ஜோதிர்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 12 இடங்களில், ஜோதிர்லிங்க தலங்கள் உள்ளன. அவை பீம சங்கரம், திரியம்பகம், குங்கும ணேஸ்வரம், நாக நாதம், வைத்திய நாதம், சோமநாதபுரம், ஓங்காரம், ஸ்ரீசைலம், கேதார்நாத், உஜ்ஜயினி, காசி மற்றும் ராமேஸ்வரம்.

%d bloggers like this: