`அடைகாத்த’ பூனை!

மனிதர்களுக்குத்தான் தாங்கள் யார் என்ற அடையாளக் குழப்பம் ஏற்படும் என்பதில்லை. விலங்குகளுக்கும் கூட அந்நிலை ஏற்படும் என்பதற்கு உதாரணம், ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பூனை.

`புஷ்டோபர்’ என்ற அந்த நான்கு வயது ஆண் பூனை, தன்னை ஒரு `கோழி’யாக நினைத்து அப்படியே நடந்துகொள்ள ஆரம்பித்தது. அதன் உச்சமாக கோழி முட்டைகளை `அடை காக்கவும்’ செய்தது.

“அது, தான் ஒரு பூனை என்பதை அறிந்திருக்கிறதா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. அப்படி அது நடப்பதேயில்லை” என்கிறார், பண்ணையாளரும், பூனையின் எஜமானிமான நவோமி ஆலிவர்.

“புஷ்டோபர் அடிக்கடி கோழிக்கூடு பக்கம் போகும். அவற்றில் ஒன்றாக, விளையாடும். பிற உயிரினங்களை வேட்டையாடித் தின்னும் பிராணி தான் என்பதையே அது மறந்துவிட்டது” என்கிறார் இவர்.

இவரது கோழிகள் சில, சமீபத்தில் கூடுக்கு வெளியே சில முட்டைகளை இட்டன. ஆனால் அவற்றை அடைகாப்பதில் அவை ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அந்த `பொறுபை’ பூனை புஷ்டோபர் ஏற்றுக் கொண்டது.

அப்போதுதான், கோழிகளுடனான பூனையின் பழக்கத்தின் தாக்கம் தனக்கு புரிந்ததாகக் கூறுகிறார் நவோமி.

“முட்டைகளின் மீது புஷ்டோபர் அமர்ந்திருப்பதை பார்த்த நான் அது அடைகாக்கிறது என்பதை உணர்ந்தேன். முன்று நாட்கள் அவ்வாறு அடைகாப்பதைத் தொடர்ந்தது அது. அப்போது அதன் மனதில் என்ன ஓடியிருக்கும் என்று நான் வியந்தேன். பரிதாபமாக, முன்று நாட்களுக்கு பின், முட்டை பொரிக்கவில்லை என்று கீழே இறங்கிவிட்டது. வழக்கம்போல் தனது கோழி தோழிகளுடன் விளையாட ஆரம்பித்தது. ஆனால் எனக்கு இன்று வரை வியப்பு மாறவில்லை” என்கிறார் ஆச்சரியம் மாறாத நவோமி.

%d bloggers like this: