வானில் பறக்கும் ஓட்டல்!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பு நிறுவனம், வான்வெளியில் மிதக்கும்
ஓட்டல் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

`ஏர்குருய்ஸ்’ என்ற அந்த ஓட்டல், ஒரு வான்வெளிக் கப்பலாகவும் பயணிகளை வெவ்வேறு நாடுகளுக்கு அழைத்துச் செல்லும். அதிநவீனமும், ஆடம்பரமும் இணைந்த ஆச்சரியமாக இந்த ஓட்டல் `பிளஸ்’ கப்பல் இருக்கும் என்று இதை உருவாக்குபவர்கள் கூறுகின்றனர்.

இந்த வான்வெளி ஓட்டலில் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவாகவும், அவர் களுக்கான இடவசதி அதிகமாகவும் இருக்கும். வாடிக்கையாளர்கள் இங்கு தங்கலாம், உணவருந்தலாம், `ரிலாக்ஸ்’ செய்துகொள்ளலாம்.

செய்மோர்பவல் என்ற நிறுவனம் வடிவமைக்கும் இந்த வான்வெளி ஓட்டலில், வரவேற்பு பகுதி, `பார்’, 4 இரட்டை அடுக்கு வசிப்பிடங்கள், 5 சிறிய வசிப்பிடங்கள், ஓர் உச்சிக் குடியிருப்பு ஆகியவை அமைந்திருக்கும்.

இதற்கான வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு இயக்குநர் நிக் டால்போட் கூறுகை யில், “எதிர்காலத்தில் விமான பயணம் நெருக்கடி இல்லாததாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த வான்வெளிக் கப்பல் மற்றும் ஓட்டல் உருவாக்கபடுகிறது. அமைதியான பயணத்தை நாடுவோருக்கு ஏற்ற வகையில் இதன் செங்குத்து வடிவ அமைப்பு இருக்கும்” என்கிறார்.

அவர் மேலும் விளக்கிச் சொல்கையில், “இந்த ஓட்டலை வானில் பறக்க வைப்பதற்கு மிக அதிகளவு வாயு தேவை படுகிறது. வாயுவே அதிக இடத்தை அடைத்துக்கொள்வதால், குறைந்த நபர்களையே இதனுள்ளே அனுமதிக்க முடியும். ஆக இதற்குள் வரும் எவரையும் இது ஆடம்பரமாகவே உணர வைக்கும்” என்கிறார்.

`ஹைட்ரஜன்’ வாயுவால் பறக்க வைக்கபடும் இந்த வான்வெளி ஓட்டல், சூரிய ஒளியிலிருந்து தேவையான மின்சக்தியை பெறும். மேலும் இந்த ஓட்டல், சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதாகவும் இருக்கும் என்கிறார்கள்.

இதன் வடிவமைப்பாளர்களில் ஒருவரான சிங் மின் கிம், “பொதுவாக இன்றைய கட்டிட வடிவமைப்பில் சுற்றுச்சூழலுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நாங்கள் அதைக் கருத்தில் கொண்டு உருவாக்கும் விஷயங்களின் அருமை, 2015-ம் ஆண்டு வாக்கில் உணரபடும்” என்று கூறுகிறார்.

வானில் பறக்கும்போது சேதம் அடைந்து வாயு கசிந்து அதனால் விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு அமைப்புகளும் பக்காவாகச் செய்யபட்டுள்ளன.

மேலும் ஓட்டல் ஆட்டம் காணாமல் இருக்க வைக்கும் நுட்பம், பறக்கும் உயரத்தைத் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதி போன்றவை வாடிக்கையாளர்களுக்குச் சீரான, சொகுசான பயண அனுபவத்தைத் தரும் என்கிறார்கள். புயல், மோசமான வானிலை போன்றவற்றின்போது இந்த ஓட்டல் பறப்பது கடினம் என்றாலும், இதில் அமைக்கபடும் வானிலை `ரேடாரால்’ பெரும்பாலான பிரச்சினைகளைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று உறுதியளிக்கின்றனர்.

மேக நீர்த்திவலைகளைத் திரட்டியே ஓட்டலுக்குத் தேவையான குடிநீர் தயாரிக்கப்படும்.

சாதாரணமாக இந்த ஓட்டல் 12 ஆயிரம் அடி உயரத்தில் மிதந்து செல்லும். தேவைபடும் இடங்களில் பூமிக்கு அருகே சில நுறு அடி உயரத்துக்கும் இது கீழிறக்கபடும்.

இந்த ஓட்டலின் பயண வேகம் மணிக்கு 100 முதல் 150 கிலோமீட்டர்களாக இருக்கும்.

இரண்டு `பிளைட் என்ஜினீயர்கள்’ உட்பட 6 பேர் அடங்கிய குழுவினர் மாறி மாறி இந்த ஓட்டலை ஓட்டுவர்.

அமைதி மற்றும் வசதியை பயன்படுத்தியபடி பயணிக்க இந்த `ஏர்குருய்ஸ்’ ஏற்றதாக இருக்கும் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்கள், இதை வடிவமைப்பவர்கள்!

One response

%d bloggers like this: