Daily Archives: மார்ச் 16th, 2010

கொசு இனத்தை அழிக்க புதிய வழி!

தண்ணீருக்கு அடுத்தபடியாக நோய் பரப்புவது கொசுக்களாகும். டெங்கு காய்ச்சல் மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற பயங்கர வியாதிகளை கொசுக்கள் பரப்புகின்றன. இது தவிர பலவித வைரஸ்களை பரப்புவதன் முலம் வேறு சில வியாதிகள் தொற்றவும் காரணமாக இருக்கின்றன.

இந்த கொசுக்களால் மனித இனம் அனுபவிக்கும் துன்பங்கள் கொஞ்சமல்ல. உலகில் 40 சதவீதம்பேருக்கு டெங்கு காய்ச்சல் கொசுக்கள் முலம் பரவுகிறது. ஆண்டு தோறும் 10 கோடி பேர் பாதிப்புக்குள்ளாவதில் 22 ஆயிரம் பேர், பாதிப்பு அதிகமாகி இறந்துவிடுகிறார்கள். ஏடிஸ் இன கொசுக்களே இதற்கு காரணமாகும்.

இந்தக் கொசுக்களை ஒழிக்க உலகமெங்கிலும் பல்வேறு வழிகளில் ஆய்வுகள் நடந்து வருகிறது. சமீபத்தில் செயற்கையாக கொசுக்களை உற்பத்தி செய்து, அவற்றுடன் இயற்கை கொசுக்கள் இனம்பெருக்கம் செய்தால் விரைவில் கொசு இனம் குறைந்துவிடும் என்று மெய்ப்பிக்கப்பட்டது. தற்போது இன்னொரு புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் கார்னெல் நகரில் நடந்த ஆய்வு முடிவுகள் ஒரு விஞ்ஞானப் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில், கொசுக்களில் இருக்கும் ஒருவித புரதத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவற்றை அழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது கொசுக்களில் உள்ள ஒரு வகைப் புரதம், அவற்றின் சிறுநீர் சுரப்பதற்கு பெரிதும் காரணமாக இருக்கிறது. கொசு நமது உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும்போது அந்தப் புரதத்தை கட்டுப்படுத்த முடிந்தால் அவற்றின் சிறுநீர் சுரப்பி பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டமும் தடைபடும். இதனால் கொசு மரணத்தைத் தழுவும். கொஞ்சம் கொஞ்சமாக கொசு இனமும் முடிவுக்கு வரும்.

மிகச் சிறியதும், மிக வேகமாக பறந்து நழுவிச் சென்றுவிடுவதுமான கொசு இனத்தை அழிக்க இதுவே சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள். குறிப்பிட்ட அந்த புரதத்தை கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட முயற்சியாக ஆய்வுகள் தொடருகின்றன.

மூக்கை சிந்தினால் ரத்தமா?-மூலிகை கட்டுரை

சுத்தமின்மை, சுகாதாரமின்மை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்களால் உண்டாகும் நுண்கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து, ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. இதனால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அழித்து, சளி, வாந்தி, கழிச்சல் மற்றும் சிறுநீர் வாயிலாக வெளியேறுகின்றன. இதனால் இருமும் பொழுது வெளிவரும் சளியில் ரத்தம், வாந்தி உண்டாகும் பொழுதும், எச்சிலை துப்பும் பொழுதும் வெளிவரும் செரியாத உணவுகளில் கலந்துள்ள ரத்தம், மலம், சிறுநீரை கழிக்கும்பொழுது கறுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் ரத்தம் என சிவப்பணுக்கள் பலவிதமாக உடம்பிலிருந்து வெளியேறுகின்றன.
காசநோய் போன்றவற்றில் ஏற்படும் ரத்தக்கசிவை நீக்க நீண்டநாட்கள் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற ரத்தக்கசிவை கட்டுப்படுத்தி, ரத்தப் போக்கை நிறுத்தி, அதற்கு காரணமான நுண்கிருமிகளை கொன்று, புண்களை ஆற்றும் அற்புத மூலிகை மயிர்சிகா, மதுசதா என்ற பல பெயர்களில் அழைக்கப்படும் மயிலாடும் சிகையாகும். இதன் இலைகள் பார்ப்பதற்கு மயில் தோகையைப் போல், விசிறியைப் போல் காணப்படுவதால் மயில்வால் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.
ஆக்டினியோப்டெரிஸ் டைக்கோடோமா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஏடியான்டியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுசெடிகள் மலைப்பகுதிகளில் அதிகம் வளருகின்றன. இதன் தண்டு மற்றும் வேர்களிலுள்ள ரூட்டின் என்னும் பொருள் ரத்தம் உறையும் தன்மையை அதிகப்படுத்தி, ரத்தக்கசிவை கட்டுப்படுத்துகின்றன. பாக்டீரியா போன்ற நுண்கிருமியால் தோன்றும் மார்புச்சளி, வயிற்று உபாதைகள் ஆகியவற்றை தொடர்ந்து சளியில் ரத்தக்கசிவு, இருமும்பொழுது ரத்தம், வாந்தி மற்றும் எச்சிலை துப்பும்பொழுது ரத்தம் போன்றவற்றை நீக்க இதன் வேர் பெருமளவு பயன்படுகிறது.
மயிலாடும் சிகை வேரை சிறு துண்டுகளாக வெட்டி, நிழலில் உலர்த்தி காயவைத்து, பொடித்து, சலித்து 1-2 கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனுடன் குழப்பி சாப்பிட்டுவர இருமும்பொழுது வெளியேறும் ரத்தம், மூக்கிலிருந்து வடியும் ரத்தம் ஆகியன நிற்கும். மலைப்பிரதேசங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் காயத்தை ஆற்றவும், ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் மயிலாடும் சிகையை அரைத்து தடவுகின்றனர்.

டைனோசரை வேட்டையாடிய அனகோண்டா

அனகோண்டா பாம்புகளும், டைனோசர்களும் பிரம்மாண்ட தோற்றம் உடையவை. டைனோசர்கள் மற்ற எல்லா உயிரினங்களையும் வேட்டையாடும் திறன் உடையவை என்பது நமக்குத் தெரியும். ஆனால் அனகோண்டா பாம்புகள், குட்டி டைனோசர்களையே வேட்டையாடி உள்ளன என்று இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே அதற்கான தடயங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்த தொல்லியல் நிபுணர் தனஞ்ஜெய் மொகாபே, 1980 முதல் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு புதை படிவங்களை சேகரித்து ஆய்வு செய்து வந்தார்.

இவருக்கு 1987-ம் ஆண்டு ஒரு மர்மமான புதைபடிமம் கிடைத்தது. முட்டை ஓடுகளும், சில எலும்புத் துண்டுகளுமாக அந்த படிமம் இருந்தது. நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு அதன் மர்மங்கள் சற்று விலகியது. 2001-ம் ஆண்டில் அயல்நாட்டு விஞ்ஞானிகள் இதைப் பார்வையிட்டு சில முடிவுகளை தெரிவித்து சென்றனர்.

மேற்கு இந்தியப் பகுதியான குஜராத் மாநிலத்தில் கிடைத்த இந்த புதைபடிமத்தின் மர்மம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விலகியது. அதாவது அந்த புதைபடிமம் அனகோண்டா பாம்பால் வேட்டையாடப்பட்ட டைனோசர் குட்டி என்று தெளிவாகி இருக்கிறது.

அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழக நிபுணர் குழு ஒன்று, இந்தியா வந்து சில புள்ளி விவரங்களை சேகரித்தது. அப்போது இந்த ஆய்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இது நமக்கு கிடைத்த மிக அரிய புதைபடிவம் என்று தொல்லியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

ஆய்வில் தெரியவந்த சில சுவாரசியமான தகவல்கள் வருமாறு:- டைனோசர் குட்டிகளை வேட்டையாடும் இந்த பாம்பு இனத்துக்கு சனாஜே இன்டிகஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இவை சாரோபாட் இன டைனோசர் குட்டிகளை வேட்டையாடி உணவாக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக முட்டையில் இருந்து வெளிவரும் டைனோசர் குட்டிகளை பிடித்து தின்பதில் மிகுந்த ஆர்வம் செலுத்தி இருக்கின்றன. இதற்காக சில நேரங்களில் டைனோசர் முட்டை களையே கடத்தி விடுகின்றன இந்த பாம்பு இனங்கள். மேலும் டைனோசர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள குகைகளில் அல்லது நீர்நிலைகளில் இந்த பாம்புகள் பதுங்கி வாழ்ந்திருக்கின்றன. அரை மீட்டர் வளர்ச்சி உள்ள டைனோசர் குட்டிகளைக்கூட, பாம்புகள் தமது வலிமையால் சுற்றி வளைத்து வேட்டையாடி உள்ளன. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த புதைபடிமம் சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்று தெரியவந்துள்ளது.

விண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ

விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்குபவர்கள், இதற்கான மைக்ரோசாப்ட் சிடியினை வைத்துப் பதிந்து இருக்கலாம். அல்லது கம்ப்யூட்டர் வழங்கியவர்கள் தங்கள் நிறுவன சிடி, நகல் எடுத்த சிடி என எதனையாவது தந்திருக்கலாம். நிறுவன சிடிக்களில் அதன் டப்பாக்களில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ப்ராடக்ட் கீ அச்சிடப்பட்டு தரப்பட்டிருக்கும். காலப் போக்கில் இந்த டப்பா காணாமல் போகும்; அல்லது வைத்த இடம் மறந்து போகும். என்றாவது சிஸ்டம் கிராஷ் ஆகி, ஹார்ட் டிஸ்க் ரீ பார்மட் செய்து, சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்திடுகையில் தான் ப்ராடக்ட் கீ இல்லையே என்ற நிலை வரும். அல்லது சிஸ்டம் சிடி கைவசம் இருக்கும். அதன் ப்ராடக்ட் கீ இல்லாமல் போகும்.
இந்த தொல்லையிலிருந்து எப்படி மீள்வது? ஒரிஜினல் சிடியோ அல்லது ஒரிஜினல் போல காப்பி எடுத்த, நிறுவனங்கள் வழங்கிய சிடியோ இருக்கும் வரை, இந்த ப்ராடக்ட் கீயை அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.
1. சிஸ்டம் சிடியை அதன் டிரைவில் செலுத்தவும்.
2. விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் சிடியின் டைரக்டரிகளுக்குள் நுழையவும். அதில் கிடைக்கும் போல்டர்களில் i386 folder என்ற போல்டரைத் திறக்கவும்.
3. அங்கு unattend.txt என்ற பைலைத் திறந்து அதன் இறுதி வரை செல்லவும்.
4. இறுதியில் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான விண்டோஸ் எக்ஸ்பி ப்ராடக்ட் கீ இருக்கும்.

எஸ்.ஐ.பி.’ பற்றி அறிவோம்!(சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்)

`எஸ்.ஐ.பி.’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்’ ஒரு நல்ல முதலீட்டு முறையாகும்.

இதைப் பற்றிய விவரங்களை அறியலாமா?

எஸ்.ஐ.பி.யின் சிறப்பம்சங்கள்:

1. `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான்’ ஆனது, `ரெகரிங் டெபாசிட்’ போன்றது. இது, `மிச்சுவல் பண்ட்’ திட்டங்களில் முதலீடு செய்வதில் ஓர் ஒழுங்கான அணுகுமுறையை ஏற்படுத்துகிறது.

2. ஒருவர் இதில், ஒவ்வொரு மாதமும் 500 ரூபாய் என்ற குறைந்த அளவுக்குக் கூட முதலீடு செய்யலாம்.

3. நமது வருடாந்திர நிதித் தேவைகளான பள்ளிக் கட்டணம், காப்பீட்டு பிரீமியங்கள், மெடிக்கிளைம் பிரீமியங்கள், தனிநபர் கடன், வாகன, வீட்டுக் கடன் ஆகியவற்றுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. உங்களுக்குப் பல்வேறு சுதந்திரங்கள் இருக்கின்றன. அதாவது, எவ்வளவு தொகையை முதலீடு செய்வது, முதலீட்டுக் காலம், திரும்ப எடுக்கும் தொகை போன்றவை.

எஸ்.ஐ.பி.யின் முக்கியமான அனுகூலங்கள்: கூட்டுச் சேர்வதன் சக்தி. உங்களின் லாபத்தைச் செலவழிக்காமல் மறுமுதலீடு செய்வது. அதன் மூலம், நீங்கள் மறுமுதலீடு செய்த லாபத்தின் எதிர்கால லாபத்தையும், உண்மையான முதலீட்டுக்கான லாபத்தையும் பெறலாம். விலைகள் குறைவாக இருக்கும்போது உங்களின் நிலையான மாதாந்திர முதலீட்டின் மூலம் ஒரு `மிச்சுவல் பண்டில்’ அதிக `யூனிட்கள்’ வாங்கப்படுகின்றன. விலைகள் கூடும்போது, முன்பு வாங்கிய `யூனிட்களின்’ மதிப்பு கூடும். மாதம் . 6360 முதலீடு செய்யுங்கள். உங்களின் கனவுக் காரை இன்றிலிருந்து 10 ஆண்டுகளில் வாங்குவதற்குத் திட்டமிடுங்கள். (12 சதவீத `ரிட்டர்ன்’ உடன் 10 ஆண்டு முதலீட்டில் 15 லட்ச ருபாய் மதிப்புள்ள காரை வாங்குங்கள்.) மாதம் . 7230 முதலீடு செய்யுங்கள். இன்றிலிருந்து 20 ஆண்டுகளில், நீங்கள் கனவு காணும் மலைவாசஸ்தல வீட்டைக் கட்டத் திட்டமிடுங்கள். (12 சதவீத `ரிட்டர்ன்’ உடன் 20 ஆண்டுகால முதலீட்டில் 70 லட்சம் மதிப்புள்ள வீட்டைக் கட்டலாம்.) மாதம் . 5860 முதலீடு செய்யுங்கள். இன்றிலிருந்து 5 ஆண்டுகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குத் திட்டமிடுங்கள். (12 சதவீத `ரிட்டர்ன்’ உடன் 5 ஆண்டுகால முதலீட்டில் 5 லட்ச ருபாய் மதிப்புக்கு உலகச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளலாம்.) மாதம் . 5860 முதலீடு செய்யுங்கள். இன்றிலிருந்து 20 ஆண்டுகளில் உங்கள் குழந்தைக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் சிறந்த கல்வியை வழங்குங்கள். (12 சதவீத `ரிட்டர்ன்’ 20 ஆண்டுகள் முதலீடு செய்தால் 45 லட்ச ருபாய் மதிப்புள்ள கல்வியை அளிக்கலாம்.) மாதம் . 2065 முதலீடு செய்யுங்கள். இன்றிலிருந்து 20 ஆண்டுகளில் உங்கள் குழந்தைக்கு அட்டகாசமாகத் திருமணத்தை நடத்துங்கள். (12 சதவீத `ரிட்டர்ன்’ உடன் 20 ஆண்டுகள் முதலீடு செய்தால், 20 லட்ச ருபாய் செலவில் திருமணத்தை நடத்தலாம்.) மாதம் . 6000 முதலீடு செய்யுங்கள். இன்றிலிருந்து 15 ஆண்டுகளில் உங்களுக்கு விருப்பமான தொழிலைச் செய்வதன் மூலம் பொருளாதார சுதந்திரத்தை அடையத் திட்டமிடுங்கள். (12 சதவீத `ரிட்டர்ன்’ உடன் 15 ஆண்டு கால முதலீட்டில் 30 லட்ச ருபாய் தொழில் முதலீட்டுத் தொகை திரட்டலாம்.)

இதயமும்… உணவும்..!

நமது உடம்பில் மூளையை தலைமை செயலகம் என்று கூறுவார்கள். ஆனால் உண்மையில் இதயமே நமது உடம்பின் தலைமை செயலகம் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள். இன்றைக்கு நாம் சாப்பிடும் துரித உணவின் தாக்கத்தால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுகிறது.

இதயத்தை பாதுகாக்க, தினமும் பாதாம் பருப்பு, இஞ்சி, முந்திரிப் பருப்பு, வெந்தயம், பருப்பு வகைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். இதில் இஞ்சியும், பாதாம் பருப்பும் மிக முக்கியமானவை. நம் உடலில் குரோமியம் என்ற தாது உப்பின் அளவு குறைந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை நிர்ணயிக்கும் பணி தாறுமாறாகி விடுகிறது. இதனால் சர்க்கரை எரிக்கப்படுவது குறைந்து நீரிழிவு நோய் ஏற்படு
கிறது.

இதயத் தசைகளுக்கு ஆக்ஸிஜனும், சத்துணவும் எடுத்துச் செல்ல உதவும் கரனரி நாளங் களிலும் தடைகளை ஏற்படுத்தி இதயநோய்களை உண்டாக்குகிறது. இரத்தத்தில் கொலஸ்டிரால் அளவு அதிகரித்தால் குரோமியம் உப்பு குறைந்துவிட்டது என்பதே அர்த்தம்.

1999-ல் பிரிட்டீஷ் ஆராய்ச்சியாளர்கள், ஒரு வயது முதல் 75 வயது வரை உள்ள 41 ஆயிரம் பேர்களின் இரத்தம், முடி, வியர்வை முதலியவற்றில் குரோமியம் அளவு எப்படி இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்தார்கள்.

வயது ஆக, ஆக குரோமியம் உப்பின் அளவு பாதியாகக் குறைந்துகொண்டே வந்தது. இதற்கு நன்கு சுத்திகரிக்கப்பட்ட (ரீபைன்ட்) உணவுப் பொருட்களையே அதிகம் சாப்பிடுவதே முக்கிய காரணம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட மாவுப்பொருள்களில் குரோமியம் உப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இதைத் தவிர்க்க விரும்பினால், கேழ்வரகு அல்லது பார்லி அரிசியை காலையில் சாப்பிடுங்கள். பகலில் காரட், முருங்கைக்கீரை, கொண்டைக்கடலை, பீட் ட், வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்வது நல்லது.

சீத்தாப்பழம், மாதுளம்பழம், பழுத்தத் தக்காளி, அன்னாசிப்பழம் முதலியவைகளில் இந்த உப்பு போதுமான அளவு உள்ளது. இஞ்சியும், பாதாம் பருப்பும், தினமும் தவறாமல் சேர்க்க வேண்டும். இதயக்கோளாறு மற்றும் நீரிழிவு நோயாளிகள் இந்தப் பட்டியல்படி சாப்பிட்டு வந்தால், குரோமியம் அளவு சரியாக இருக்கும்.

விருந்தின்போது கேக், மட்டன் மூலம் சேரும் கொழுப்பு, படியாமல் இருக்க வெற்றிலை போட்டுக் கெள்ள வேண்டும். இதில் இந்தக் குரோமியம் உப்பு நன்கு கிடைப்பதால், கொழுப்பால் இரத்தத்தை நிர்வகிப்பது தடைபடாமல் இருக்கும்.


பல நோய்களுக்கு இந்தத் தாதுஉப்பு குறைவே காரணமாக இருக்கிறது. எனவே, எல்லா வயதுக்காரர்களும் கொண்டைக்கடலை, முருங்கைக்கீரை, வெங்காயம் முதலியவற்றை அவ்வப்போது தவறாமல் உணவில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தினசரி அளவான 50 மைக்ரோ கிராம் முதல் 20 மைக்ரோ கிராம் வரை இந்த தாது உப்பு எளிதில் கிடைத்துவிடும். தினசரி பாதாம் பருப்பு சாப்பிடுவது மிகவும் நல்லது.

படங்களுக்கு மெருகூட்ட இமேஷ் டூல்ஸ்

படங்களை நம் கற்பனைத்திறனுக்கேற்ற வகையில் அமைக்க, இமேஜ்களைக் கையாளும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. இருப்பினும் இவற்றை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவது என்பது அனைவராலும் முடியாத ஒரு விஷயமாகும். தொழில் ரீதியாகவும், பயன்படுத்திப் பார்க்கும் ஆசையிலும் இலவச இமேஜ் டூல்ஸ்களை பலர் எதிர்பார்க்கின்றனர். இணையத்தில் இந்த நோக்கத்தில் தேடுகையில், ஒரு சில குறிப்பிட்ட வகையில் இமேஜ்களை எடிட் செய்திடும் வகையில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைப்பது தெரிய வந்தது. அவை குறித்த பட்டியல் இங்கு தரப்படுகிறது. இவற்றை இயக்கிப் பார்த்துப் பயன் பெறுவது உங்களின் திறமையைப் பொறுத்தது.

1. வாட்டர் மார்க் இமேஜ் (Water Mark Images): உங்கள் படங்களுக்கு வாட்டர் மார்க் அமைத்திட வேண்டுமா? மொத்தமாக 20 படங்கள் வரை இணைத்து அமைத்திட ஒரு புரோகிராம் உதவுகிறது. படங்களைத் தயார் செய்து, வரிசைப்படுத்தி, அவற்றுக்கான வாட்டர்மார்க்கில் இடம் பெற வேண்டிய எழுத்துக்களை ஒழுங்கு செய்து, அதன் இடத்தை வரையறை செய்து, அவற்றிற்கு விருப்பப்பட்டால், ஷேடோ எபக்ட் கொடுத்து அமைக்கலாம். இதன் பெயர் WatermarkImages. இதனை http://watermarkimages.com/என்ற முகவரியில் பெறலாம்.

2. பிக்ஸ் ரெட் ஐஸ் (Fix Red Eyes): டிஜிட்டல் போட்டோக்களை எடுக்கையில் நம் கண்களில் சிகப்பு புள்ளிகள் அமைவது தவிர்க்க முடியாததாக, சில டிஜிகேம்களில், அமைந்துவிடும். பல கேமராக்களில் இவற்றை நீக்குவதற்கான செட்டிங்ஸ் கொடுத்திருந்தாலும், சில வேளைகளில் கண்களில் சிகப்பு கோளங்கள் அமைந்துவிடுகின்றன. இந்த சிகப்பு வளையங்கள் அல்லது கோளங்களை நீக்கினால் தான் படங்கள் பார்க்கும் வகையில் அமையும். இதற்கான வசதியினை http://www.fixredeyes .com// என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இந்த தளத்திற்கு, இவ்வாறு சிகப்பு கோளங்கள் நீக்க வேண்டிய இமேஜ்களை அப்லோட் செய்திட வேண்டும். பின் அவற்றை சிகப்பு கோளங்களை அடையாளம் காட்டி, பிக்ஸ் (Fix) செய்திட கட்டளை கொடுத்தால், அவை நீக்கப்பட்டு போட்டோக்கள், நல்ல முகங்களுடன், சிறப்பாகக் கிடைக்கின்றன.

3. இமேஜ் ஸ்பிளிட்டர் (Image Splitter): படங்களைப் பிரித்து பல நெட்டு மற்றும் குறுக்கு வரிசைகளில் அமைக்க விரும்புகிறீர்களா? கவலையே பட வேண்டாம். உங்கள் படத்தை http://www.htmlkit.com/ services/is/ என்னும் தளத்திற்கு அப்லோட் செய்திடுங்கள். பின் எத்தனை நெட்டு மற்றும் படுக்கை வரிசை என்று தேர்ந்தெடுங்கள். எந்த இமேஜ் பார்மட்டில் படம் தேவை என்பதனையும், அதன் ரெசல்யூசன் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனையும் கொடுத்திட்டால், படம் நீங்கள் விரும்பிய வகையில் கிடைக்கும்.

4. இமேஜ் மெர்ஜர் (Image Merger): இரண்டு படங்களில் ஒன்றைப் பின்னணியிலும், மற்றொன்றை முன்பகுதிப் படமாகவும் அமைக்க விரும்புகிறீர்களா! இதற்கென ஒரு ஆன்லைன் டூல் கிடைக்கிறது. http://www.imagemerger.net/என்ற முகவரி உள்ள தளத்திற்கு இரண்டு படங்களையும் அப்லோட் செய்திடுங்கள். முதல் படம் பின்னணியிலும், அடுத்த படம் முன் இடத்திலும் இருக்கும்படி அமைக்கப்படும்.

5. மிரர் எபக்ட் (Mirror Effect): எந்தப் படத்திற்கும், அதன் வலது இடது பக்கங்களிலோ அல்லது மேல் கீழாகவோ, அச்சாக ஒரு கண்ணாடி பிம்பம் தோன்றும் வகையில் படத்தை மெருகூட்டி அமைக்கலாம் http://www.mirroreffect.net/ என்ற தளத்திற்கு படத்தை அப்லோட் செய்திடுங்கள். அடுத்து பிரதிபலிக்க வேண்டியதற்கான அளவைக் கொடுக்க வேண்டும். கீழ், மேல், இடது மற்றும் வலது என எந்த வகையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதனையும் அமைத்திட்டால், அழகான பிம்பத்துடன் கூடிய படமாக உங்கள் இமேஜ் அமைக்கப்பட்டுத் தரப்படும்.

6. டெஸ்ட் இமேஜ் (Text Image): போட்டோ ஒன்றை டெக்ஸ்ட் இமேஜ் ஆக மாற்றுவதற்கு ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://www.textimage.com/index.html HTML, ASCII or Matrix என்ற வகைகளில் எந்த வகையில் உங்களுக்கு வேண்டும் என தேர்ந்தெடுத்து தந்தால், இந்த தளம் அவ்வாறே அமைத்துத் தருகிறது.

7. ஸ்பீச் பப்பிள்ஸ் (Speech bubbles): சித்திரக் கதை பார்த்திருப்பீர்கள். குழந்தைகளாய் இருக்கும்போது இவற்றைப் படித்து ரசிக்காமல் இருந்திருக்க மாட்டோம். வளர்ந்த பின்னர் இந்த படங்களுக்குப் பதிலாக நம் போட்டோக்களை வைத்து ஏன் அமைக்கக்கூடாது என்ற ஆர்வம் வந்திருக்கும். நம் குழந்தைகளின் படங்களையே வைத்து அமைக்கலாமே என்று ஆசைப்பட்டிருக்கலாம். அப்படியானால் படங்களுக் கான வசனங்களை தயார் செய்து அவற்றை படங்களுக்கு மேலாகக் குமிழ்களை உருவாக்கி அமைக்க வேண்டுமே! உங்களின் இந்த ஆசைகளுக்காகவே ஒரு தளம் உள்ளது. http://speechable.com/ என்ற முகவரியில் உள்ள தளம் இந்த வசதியை அமைக்க உங்களுக்கு உதவுகிறது. அமைய இருக்கின்ற டெக்ஸ்ட் மற்றும் பப்பிள் சைஸ் ஆகியவற்றை வரையறை செய்து அமைத்தால் போதும். படம் மாற்றப்பட்டு கிடைக்கும்.

8. வாட்டர் எபக்ட் (Water Effect): சில அழகான நீர்நிலைக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அருகே இருக்கும் மரங்கள், பறவைகள், வானத்தில் உள்ள நிலா ஆகிய எல்லாம் அப்படியே பிம்பங்களாக நீர் அலைகளில் உருவத்தை ஒட்டி தலைகீழாகக் காட்டப்பட்டு அழகாக இருக்கும். நம் உருவங்களை இப்படிப் பார்க்க வேண்டுமே என்ற ஆவல் உள்ளதா? இதற்காக நாம் நீர்நிலைகளைத் தேடி, ஒளி சரியாகப்பட்டு, பிம்பங்கள் அசையாத நிலைக்குக் காத்திருந்து பின் போட்டோ எடுப்பது என்பது நிச்சயம் அனைவருக்கும் கை கூடாது. ஏற்கனவே எடுத்த போட்டோக்களுக்கு இந்த எபக்ட் தருவதற்கென ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி http://www.watereffect.net/. இந்த இணைய தளம் சென்று, எந்த படத்திற்கு இந்த தலைகீழ் தண்ணீர் உருவம் வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதனை அப்லோட் செய்திடவும். ஓரிரு நிமிடங்களில் நீர் அருகே படத்தில் உள்ளவர்கள் இருந்தால் எப்படி காட்சி இருக்குமோ, அந்த வகையில் போட்டோ கிடைக்கும். அந்த தளத்தில் போட்டோ இருக்கும் வரை, நீர் அசைவது போலவும், அதில் தெரியும் உருவப் பிம்பங்களும் அப்படியே அலை அலையாய் இருப்பது போலவும் காட்சி இருக்கும். அதை காப்பி செய்து நம் கம்ப்யூட்டரில் சேவ் செய்திட்டால் இந்த அனிமேஷன் இல்லாமல், பிம்பங்களுடன் போட்டோ இருக்கும்.

9. வளைவுகள் அமைக்க (Round Pic): உங்கள் படங்களின் மூலைகளில் அழகான வளைவுகள் அமைக்க வேண்டுமா? நீங்கள் எந்தப் படத்தை அப்லோட் செய்தாலும், அதன் ஓரங்களை வளைவுகளுடன் அமைத்துத் தருகிறது இந்த தளம்.வளைவுகள் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை செட் செய்து, படத்தை அப்லோட் செய்திட்டால், படத்தின் காட்சி பிரிவியூவாகக் கிடைக்கும். உங்களுக்குப் பிடித்திருந்தால் ஓகே கொடுத்து படத்தைப் பெறலாம். இந்த தளத்தின் முகவரி: http://www.roundpic.com/

10. வேடிக்கையான படம் (Be Funky): உங்கள் படங்களுக்கு டிஜிட்டல் பெயிண்ட் அடிக்க வேண்டுமா! அல்லது அவற்றைக் கார்ட்டூன் படங்களைப் போல அமைக்க வேண்டுமா! http://www.befunky.com/ என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். படத்தைத் திறந்து, எந்த மூலையையும் இழுக்கவும். பலவகை பின்னணி மற்றும் துணை சாதன வசதிகளைப் பயன்படுத்தி கார்ட்டூன் வகையில் படத்தை மாற்றவும். உங்கள் படங்களை மை, பென்சில் போன்றவற்றில் வரைந்தது போலவும் மாற்றலாம். இந்த தளத்தில் வீடியோக்களுக்கும் கார்ட்டூன் எபக்ட் தர முடியும்.

ஞானியாக இருக்க முடியுமா? (ஆன்மிகம்)

ஞானம், அஞ்ஞானம் என்று உள்ளது. ஞானம் முதிர்ந்த நிலையில் உள்ளவர் ஞானி; அது இல்லாதவர் அஞ்ஞானி. சரி, ஞானி எப்படிப்பட்ட குணமுள்ளவர்?
எதிலும் பற்றுதலின்றி சுக – துக்கங்களை சமமாக நினைத்து, தியானம் ஒன்றையே கைக்கொண்டிருப்பவர்களை ஞானி என்பர்.
எப்போதும் மாறுபாடற்ற நிலையிலுள்ள ஞானிக்கு இருளுமில்லை; ஒளியுமில்லை. லாப, நஷ்டமும் இல்லை. எப்போதும் பிரமானந்த நிலையிலேயே மூழ்கி இருப்பர். இவர்களுக்கு பயம் என்பதும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் இவர்களின் எண்ணத்தில் வருவதில்லை.
மனம் போன போக்கில் போய்க் கொண்டே இருப்பான். அஸ்தமனம் ஆனதும் எந்த இடத்தில் இருக்கிறானோ, அங்கேயே கிடைத்ததை புசித்து விட்டு படுத்து விடுவான். எது எப்படியிருந்தாலும் அவனுக்கு ஆனந்தமே தான்! சந்தேகம், மன உளைச்சல், மனமாற்றம் எதுவுமின்றி நிம்மதியாக இருப்பான்.
உலகிலுள்ள பொருட்களை மதிக்க மாட்டான்; விருப்பு, வெறுப்பற்ற ஞானிக்கு எல்லாமே இன்பமயம் தான். நேர்மை, சத்தியம், அன்பு இவை உள்ள ஞானிக்கு வேண்டுவது, வேண்டாதது என்பதே இல்லை. எல்லாம் ஒன்று தான்.
இப்படிப்பட்ட ஞானிகளுக்கு உதாரணமாக ஜடபரதரைச் சொல்லலாம். மெய்ஞானம் அடைந்த யோகியிடம் அஞ்ஞானம் வராது. திருப்தி நிறைந்தவனாக ஆத்மாவிலேயே இளைப்பாறிக் கொண்டிருப்பான். ஞானி தூங்கியும் தூங்காதவனே; விழித்திருந்தாலும் விழித்திராதவன்; கனவிலும் படுக்காதவன். எல்லா நிலைகளிலும் ஞானி திருப்தியுள்ளவன் தான். எல்லாவிதத்திலும் விடுபட்டு ஆத்ம சுகத்திலேயே ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பான்.
சரீர சுகம் என்பதைப் பற்றியே சிந்திக்க மாட்டான். தன்னைப் புகழ்ந்து பேசுபவர்களை பாராட்டமாட்டான்; நிந்திப்பவர்களிடம் கோபப்பட மாட்டான். கடமைகளும், இரட்டை எண்ணங்களும், கற்பனைகளும் ஒழிந்து போன நிலையே ஜீவன் முக்தியடைந்த நிலை.
உலக சுகங்களுக்காக அலைபவன் ஆத்ம சுகம் பெற முடியாது. ஞானம் எங்கேயிருந்தாலும் எப்படியிருந்தாலும் ஆத்மசொரூபத்திலேயே ஆழ்ந்து, அமைதியும், ஆனந்தமும் பெறுகிறான். அது சரி! எத்தனை பேர் இப்படி ஞானியாக இருக்க முடியும்? குடும்ப பாரம் தலையை அழுத்துகிறதே எனலாம்; விடுபடத்தான் வேண்டும்!