ஞானியாக இருக்க முடியுமா? (ஆன்மிகம்)

ஞானம், அஞ்ஞானம் என்று உள்ளது. ஞானம் முதிர்ந்த நிலையில் உள்ளவர் ஞானி; அது இல்லாதவர் அஞ்ஞானி. சரி, ஞானி எப்படிப்பட்ட குணமுள்ளவர்?
எதிலும் பற்றுதலின்றி சுக – துக்கங்களை சமமாக நினைத்து, தியானம் ஒன்றையே கைக்கொண்டிருப்பவர்களை ஞானி என்பர்.
எப்போதும் மாறுபாடற்ற நிலையிலுள்ள ஞானிக்கு இருளுமில்லை; ஒளியுமில்லை. லாப, நஷ்டமும் இல்லை. எப்போதும் பிரமானந்த நிலையிலேயே மூழ்கி இருப்பர். இவர்களுக்கு பயம் என்பதும் இல்லை. சொர்க்கம், நரகம் என்பதெல்லாம் இவர்களின் எண்ணத்தில் வருவதில்லை.
மனம் போன போக்கில் போய்க் கொண்டே இருப்பான். அஸ்தமனம் ஆனதும் எந்த இடத்தில் இருக்கிறானோ, அங்கேயே கிடைத்ததை புசித்து விட்டு படுத்து விடுவான். எது எப்படியிருந்தாலும் அவனுக்கு ஆனந்தமே தான்! சந்தேகம், மன உளைச்சல், மனமாற்றம் எதுவுமின்றி நிம்மதியாக இருப்பான்.
உலகிலுள்ள பொருட்களை மதிக்க மாட்டான்; விருப்பு, வெறுப்பற்ற ஞானிக்கு எல்லாமே இன்பமயம் தான். நேர்மை, சத்தியம், அன்பு இவை உள்ள ஞானிக்கு வேண்டுவது, வேண்டாதது என்பதே இல்லை. எல்லாம் ஒன்று தான்.
இப்படிப்பட்ட ஞானிகளுக்கு உதாரணமாக ஜடபரதரைச் சொல்லலாம். மெய்ஞானம் அடைந்த யோகியிடம் அஞ்ஞானம் வராது. திருப்தி நிறைந்தவனாக ஆத்மாவிலேயே இளைப்பாறிக் கொண்டிருப்பான். ஞானி தூங்கியும் தூங்காதவனே; விழித்திருந்தாலும் விழித்திராதவன்; கனவிலும் படுக்காதவன். எல்லா நிலைகளிலும் ஞானி திருப்தியுள்ளவன் தான். எல்லாவிதத்திலும் விடுபட்டு ஆத்ம சுகத்திலேயே ஆனந்தப்பட்டுக் கொண்டிருப்பான்.
சரீர சுகம் என்பதைப் பற்றியே சிந்திக்க மாட்டான். தன்னைப் புகழ்ந்து பேசுபவர்களை பாராட்டமாட்டான்; நிந்திப்பவர்களிடம் கோபப்பட மாட்டான். கடமைகளும், இரட்டை எண்ணங்களும், கற்பனைகளும் ஒழிந்து போன நிலையே ஜீவன் முக்தியடைந்த நிலை.
உலக சுகங்களுக்காக அலைபவன் ஆத்ம சுகம் பெற முடியாது. ஞானம் எங்கேயிருந்தாலும் எப்படியிருந்தாலும் ஆத்மசொரூபத்திலேயே ஆழ்ந்து, அமைதியும், ஆனந்தமும் பெறுகிறான். அது சரி! எத்தனை பேர் இப்படி ஞானியாக இருக்க முடியும்? குடும்ப பாரம் தலையை அழுத்துகிறதே எனலாம்; விடுபடத்தான் வேண்டும்!

%d bloggers like this: