ஒரே கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு

ஈரோட்டின் எல்லைக்கோட்டை இயற்கையாக வரைந்திருக்கும் காவிரி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது கொடுமுடி. இங்கிருந்துதான் காவிரி கிழக்கு நோக்கி திரும்புகிறது.

கொடுமுடி என்றால் `மலையின் உச்சி’ என்று பொருள். இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 482 அடிக்கு மேல் உள்ளது. இங்கு மலை உச்சியே தெய்வமாகக் கருதி வணங்கப்படுகிறது.

தேவாரத்தில் பாடப்பட்டுள்ள கொங்கு மண்ணின் 7 தலங்களில் கொடுமுடி 6-வது தலமாக பாடப்பட்டு உள்ளது. அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் 3 பேரும் கொடுமுடியை பாடி உள்ளனர்.

இங்கு பிரம்மா வழிபட்டதால் `பிரம்மபுரி’ என்றும், திருமால் பூஜை செய்ததால் `அரிகரபுரம்’ என்றும் மேலும் பெயர்கள் உண்டு.

கருடன் இங்கு பூஜை செய்த பிறகே தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததாக ஐதீகம். அந்த அடிப்படையில் கொடுமுடிக்கு `அமுதபுரி’ என்ற பெயரும் உண்டு.

மேலும் கன்மாடபுரம், திருப்பாண்டி கொடுமுடி, பரத்வாசசேத்திரம் என்ற பெயர்களும் கொடுமுடிக்கு வழங்கப்படுகிறது.

மேரு மலையில் இருந்து ஒரு துண்டு வைரமணியாக கொடுமுடியில் விழுந்து பெரும் சிகரமாக அமைந்தது என்றும், அந்த சிகரமே மூல லிங்கமாகவும் அமைந்து இருப்பதால் தென் கயிலாயம் என்றும் கொடுமுடி அழைக்கப்படுவதாக கொடுமுடியின் தலவரலாறு கூறுகிறது.

இங்கு அருள்பாலிக்கும் சிவபெருமான் மகுடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு திருமாலுக்கு என்று தனியாக கோவில் உள்ளது. அங்கே மகாவிஷ்ணு, பள்ளிகொண்ட கோலத்தில் வீரநாராயண பெருமாள் என்ற பெயரில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

அதுபோல் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வன்னி மரம் கோவில் தல விருட்சமாக உள்ளது. இந்த வன்னிமரம் பிரம்மாவின் அடையாளமாக உள்ளது.

– இப்படி ஒரே கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய 3 கடவுளுக்கும் சன்னதிகள் அமையப்பெற்று இருப்பது மிகவும் சிறப்பாகும்.

கொடுமுடி சிறந்த பரிகார தலமாக உள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நவகிரகங்களால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கொடுமுடியை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

இதற்காக கோவில் வளாகத்தில் பரிகார மண்டபம் தனியாக அமைக்கப்பட்டு உள்ளது. குரு பிரீதி தோஷம், பிரம்மஹத்தி தோஷம், திருமணத்தடை, பூர்வ ஜென்ம சாப தோஷம் உள்பட பல்வேறு தோஷங்களுக்கும் இங்கு பரிகாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு மறுமொழி

%d bloggers like this: